பரிநிர்வாணம்

ஏதோ ஒன்று ஙவை உறுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெருங்கதை. அல்லது ஒரு சிறு சம்பவம். ஒரு குற்ற உணர்ச்சி. பழிவாங்கும் உணர்ச்சி. அல்லது நிராசை. ஏதோ ஒன்று. அந்தச் சிடுக்கு விலகிவிட்டால் அவன் நிம்மதியாக இறந்துவிடுவான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் அது என்னவென்று எப்படி அறிய? அவன் பேச்சற்றுக் கிடந்தான்.

ஙவின் உறவினர்கள் படுக்கைக்கு அருகே வந்து நின்றுகொண்டு அவன் ஒரு பிறவிச் செவிடன் என்பதைப் போல உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். மனத்தில் ஏதாவது நிறைவேறாத விருப்பம் இருந்தால் அதனை அவன் சொல்ல வேண்டும். எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றிவிடலாம். சொல்ல முடியாவிட்டாலும் குறிப்பால் உணர்த்தினால் போதும்.

முட்டாள்கள். பேச மாட்டாதவன் எதைச் சொல்வான்? மூச்சு இருந்தது. உடைத்த நிலக் கடலைகளைப் போலக் கண்கள் திறந்திருந்தன. மற்றபடி சிறு அசைவும் அற்றிருந்தான். அவன் ஒரு கருணைக் கொலைக்குத் தயாராக இருப்பான்; அதைச் செய்துவிடுங்கள் என்று சொல்லத் தோன்றியது. ஒருவேளை அவன் மனைவிக்கும் மகனுக்கும்கூட அப்படித் தோன்றியிருக்கலாம். தோன்றுவதெல்லாமா துலங்கிவிடுகிறது?

ங என் நெடுங்கால நண்பன். அநேகமாக அவனைப் பற்றிய அனைத்து சங்கதிகளும் எனக்குத் தெரியும். நல்லதும் அல்லதும். சொல்லக் கூடியதும் கூடாததும். பிடித்ததும் வெறுத்ததும். வீட்டுக்குத் தெரியாமல் இளம் வயதில் அவன் செய்த பல நந்துருணித்தனங்களுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். சிலவற்றுக்குப் பங்குதாரனாகவும் இருந்திருக்கிறேன். எனக்கும் சொல்லாமல் அவன் ஒரு கள்ளச் செயல் செய்தான். அது நடந்தது அவனது திருமணத்துக்குச் சில காலம் முன்பு.

படித்து முடித்து, வேலை தேடிக்கொண்டு சம்பாதியம் செய்ய ஆரம்பித்திருந்த நேரம். திடீரென்று உண்டான பணப் புழக்கம் ஙவைச் சிறிது வேகமாக அசைத்தது. இயற்கையாகவே வசீகரமான தோற்றம் கொண்டவன் என்பதால் படிக்கும் காலத்திலேயே பெண்களுக்கு அவனைப் பிடிக்கும். மன்மத ராசி எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறதா? அவனுக்கும் பெண்களுடன் இருப்பது பிடிக்கும். வகுப்புகளைக் கூட மறந்து தோழிகளுடன் பேசிக்கொண்டிருப்பான். சிநேக பாவனையிலேயே அவர்களது கரங்களை மென்மையாகப் பற்றிக்கொண்டு பேசுவான். பேச்சும் நிற்காது. கைப்பிடியும் அகலாது. கைப்பற்றல் ஒரு கலை. ங ஒரு சிறந்த கலைஞன். அந்த வகையில் சக மாணவர்களின் அழுக்காறுப் பேச்சு அவன் விஷயத்தில் எப்போதும் மிகுதியாக இருக்கும். அவன் அதை மிகவும் விரும்புவான். தன்னைப் பற்றி யார் என்ன சொன்னார்கள் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவான்.

அப்போதெல்லாம் நான் தேவைப்பட்டேன். பின்னாளில், அதாவது ஙவுக்குத் திருமணம் நிச்சயமாவதற்குச் சில காலம் முன்னதாக ஒரு சங்கதி நடந்திருக்கிறது. பயல் அதை என்னிடம் சொல்லவில்லை. என்ன அக்கிரமம். இரண்டு பெண்களை ஏக காலத்தில் காதலித்திருக்கிறான். முறை வைத்துக்கொண்டு இரண்டு பேருடனும் ஊரெல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறான். இவளைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அவளைப் பற்றி இவளுக்குத் தெரியாது. இருவருக்கும் பொதுவான ங, இரு வேறு கதைகளை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறான். ஒருத்தியிடம் மூன்று மாதங்களில் தான் வெளிநாட்டுக்கு வேலை தேடிக்கொண்டு போய்விட இருப்பதாகவும் அங்கு சென்றதும் அவளை அழைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு, இன்னொருத்தியிடம் அதே மூன்று மாதங்களில் உன் வீட்டுக்குப் பெண் கேட்டு வருவேன் என்றும் சொல்லியிருக்கிறான். மூன்று என்பது ஆறு, ஒன்பது மாதங்களாகியும் சொன்னது நடக்காதது பற்றி அந்த இரண்டு தத்திகளுமே சிந்தித்துப் பார்க்கவில்லை. தனித்தனியே கைகோத்துக்கொண்டு அவனோடு ஊரெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார்கள்.

பிறகு ஒருநாள் ஙவின் குடும்பம் இடம் பெயர்ந்து தற்போது வசிக்கும் பிராந்தியத்துக்கு வந்து சேர்ந்தது. குடி மாறியதுமே அவன் வீட்டில் அவனுக்கு வரன் பார்த்து, நிச்சயித்து, திருமணம் செய்து வைத்தார்கள். பொறுப்பாக இருவரையும் தனித்தனியே சந்தித்து ஆளுக்கொரு சோகக் கதை சொல்லி அன்போடு விடை பெற்றுக்கொண்டதாகப் பின்னாளில் ஞ என்னிடம் சொன்னான். அடப்பாவி என்றதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்ல முடியவில்லை.

திருமணத்துக்குப் பிறகு அவன் ஒரு நல்ல கணவனாக இருந்தான். அவனது பெற்றோர் காலமான பின்பு ரேஷன் கார்டில் குடும்பத் தலைவனாகத் தன் பெயரை மாற்றிக்கொண்டு அலுவலகம், சம்பளம், வீடு, குழந்தை என்று ஒரு வட்டத்துக்குள் வந்து சேர்ந்தான். அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போதோ ஒரு சமயம் அவனது மனைவியும் மகனும் விடுமுறைக்கு அம்மா வீட்டுக்குப் போயிருந்தபோது அவனது பழைய இரட்டைக் குதிரைச் சவாரி குறித்துப் பேச்சு வந்தது. ‘அதெப்படி உன்னால் இரண்டு பேரையுமே கழட்டிவிட முடிந்தது?’ என்று கேட்டேன்.

‘நான் எங்கே விட்டேன்? அவர்கள் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறார்கள்’ என்று ங சொன்னான்.

‘ஐயோ, உன் மனைவிக்குத் தெரிந்தால் சிக்கலாகிவிடுமே.’

‘அதெப்படித் தெரியும்?’

‘சந்திக்கிறாயா?’

‘ஓ.’

அவன் மனைவியும் மகனும் அம்மா வீட்டுக்குப் போயிருந்த அதே போன்றதொரு சந்தர்ப்பத்தில் அந்த இரண்டு பேரில் ஒருத்தியை வீட்டுக்கே வரவழைத்ததாக ங சொன்னான். நெடுநாள் பாராமலும் தொடர்பில்லாமலும் இருந்த தாபத்தில் அன்று எல்லை மீறி விட்டிருக்கிறார்கள்.

‘கொடுமை என்ன தெரியுமா? அன்றைக்குப் பார்த்து வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட மறந்துவிட்டேன். எதிர் வீட்டுப் பெண் குழந்தை, ஆண்ட்டி என்று அழைத்துக்கொண்டு நேரே உள்ளே வந்துவிட்டது.’

‘சர்வ நாசம். பிறகு என்ன செய்தாய்?’

‘வேறென்ன செய்ய? அவளை அப்படியே விட்டுவிட்டு அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய் சாக்லெட் வாங்கிக் கொடுத்து வீட்டில் விட்டு வந்தேன்.’

மூன்று வயதுக் குழந்தைக்கு அதெல்லாம் ஒன்றும் புரிந்திருக்காது என்று ங சொன்னான். நீ உருப்பட மாட்டாய் என்று நான் சொன்னேன்.

அதை பலவீனம் என்பதா? அவனது வார்ப்பு அப்படித்தான் இருந்தது. ஆனால் தன் மனைவிக்கோ மகனுக்கோ அவன் எந்தக் குறையும் வைக்கவில்லை. இதோ, வாடகைக்கு இருந்த வீட்டை சொந்த வீடாக்கி மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருக்கிறான். சேமிப்பு முழுவதையும் மகனின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டான். கடன் கிடையாது. வேறு எதிலும் மிச்சம் மீதி வைத்திருக்கவில்லை. இன்னும் பத்திருபது வருடங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று யாருக்கும் தோன்றாமல் இராது. நோய்மையுற்றதற்கு அவனா பொறுப்பு? வயது அதிகமில்லை என்றாலும் நிறை வாழ்வுதான். சந்தேகமில்லை.

எழுந்துகொண்டேன். நான்கைந்து மணி நேரங்களாக அவன் வீட்டில்தான் இருந்தேன். சலிப்பாக இருந்தது. கிளம்பிப் போய்விட்டுப் பிறகு வரலாம் என்றால், அதற்குள் இறந்துவிடுவானோ என்றும் தோன்றியது. எனக்கொன்றும் மரணத்தின் முகூர்த்த கணத்தை தரிசிக்கும் விருப்பமெல்லாம் இல்லை. இருப்பினும் அவனை வழியனுப்பி வைக்க இருக்கலாம் என்று நினைத்தேன். பிற்பாடு எனக்கு அப்படி ஒரு நேரம் வரும்போது நினைவுகூர்ந்துகொள்ளலாம். அது சிறிது பதற்றத்தைத் தணிக்கக்கூடும்.

ஙவின் மனைவி என்னிடம் காப்பி சாப்பிடுகிறீர்களா என்று கேட்டாள். ஒரு காப்பி அப்போது எனக்குத் தேவையாகவும் இருந்தது. ஆனாலும் வேண்டாம் என்று சொன்னேன். அவளைத் தனியே அழைத்துச் சென்று, ‘எதற்கும் மருத்துவரிடம் ஒருமுறை பேசுங்கள்’ என்று சொன்னேன். என்ன பேசுவது என்று அவள் கேட்கவில்லை. எதற்குப் பேசுவது என்று நானும் சொல்லவில்லை. இந்த சமூக ஒழுக்கம் என்பதைப் போன்றதொரு வடிகட்டிய அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது. எவ்வளவு இம்சை.

அக்கம்பக்கத்து வீட்டார் வர ஆரம்பித்தார்கள். சும்மா ஙவின் அருகே வந்து ஓரிரு கணங்கள் நின்றுவிட்டு அவனது மனைவியிடம் ஆறுதலாகச் சில சொற்களைப் பேசிவிட்டுப் போனார்கள். சிலர் அவனது மகனை அழைத்துத் தனியே ஏதோ பேசினார்கள். எல்லாமே அவரவர் அக்கறை; அவரவர் கடமை. சரி, சிறிது நேரம் போய்விட்டு வரலாம் என்று நான் தீர்மானமாக முடிவு செய்து கிளம்பியபோது ரு, தனது அம்மாவோடு வந்தாள். எப்போதும் பார்க்கப் புத்துணர்ச்சியுடன், தூக்கி எறிந்த ஒரு கூழாங்கல்லைப் போலப் பறந்துகொண்டே இருப்பாள். பேச்சு, சிரிப்பு எல்லாமே பளிச்சென்று இருக்கும். எனக்கு ருவை மிகவும் பிடிக்கும். பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்குப் பையன்களும் பரீட்சையில் தோற்ற பிறகு அவளிடம் டியூஷனுக்குப் போவார்கள். ஏதோ தகிடுதத்தம் செய்து எப்படியோ அவர்களைத் தேர்ச்சியடைய வைத்துவிடுவாள். பெரிய சாமர்த்தியக்காரி. ருவுக்கு அவள் வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான்கூட ஓரிரு முறை ஙவிடம் அவன் மகனுக்கு ருவைக் கட்டி வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஙவின் மனைவிக்கும் அதில் சம்மதம்தான். ஆனாலும் அது அடுத்தக்கட்டப் பேச்சு வார்த்தைக்குப் போகாமலே இருந்தது.

ருவும் அவளது அம்மாவும் படுக்கையில் கிடந்த ஙவை அருகே வந்து பார்த்தார்கள். ருவின் அம்மா சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசினாள். ரு மட்டும் உள்ளார்ந்த அக்கறையுடன், ‘நீங்கள் ஏதாவது சாப்பிட்டீர்களா? சமைத்திருக்கக்கூட மாட்டீர்கள். என் வீட்டில் இருந்து எடுத்து வரவா?’ என்று ஙவின் மனைவியிடம் கேட்டாள். அதெல்லாம் சமைத்து சாப்பிட்டாகிவிட்டது என்று அவனது மகன் பதில் சொன்னான். மகனுக்கு இன்னும் திருமணமாகாததுகூட ஙவின் கவலையாக இருக்கலாம் என்று நினைத்தேன். வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கையோடு ஒரு திருமணத்தையும் நடத்திவிடும் வழக்கம் உண்டு என்பதை நான் ஜாடையாக ஙவின் மனைவிக்கு அப்போது தெரிவித்தேன். ‘எல்லோரும் போனபின்பு அவன் காதருகே சென்று இதைச் சொல்லுங்கள். ரு ஒரு பொருத்தமான பெண். அவன் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

அன்று நான் ஙவின் வீட்டிலிருந்து வெளியேறி என் சொந்த வேலைகள் சிலவற்றை முடித்துக்கொண்டு மாலை மீண்டும் அவன் வீட்டுக்குச் சென்றேன். அப்போதும் அவன் அப்படியேதான் படுத்துக் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் மட்டும்தான் அப்போது அருகில் இருந்தார்கள். மற்றவர்கள் போய்விட்டிருந்தார்கள். இரவு தாண்டாது என்று டாக்டர் உறுதியாகச் சொன்னதாக ஙவின் மகன் சொன்னான். நான் இருக்கிறேன் என்றபோது ஙவின் மனைவி கட்டாயப்படுத்தி என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாள். அரை மனத்துடன்தான் கிளம்பிப் போனேன். மறுநாள் பொழுது விடிந்ததும் அழுகைச் சத்தத்தை எதிர்பார்த்தபடியே வேக வேகமாக ஙவின் வீட்டுக்குப் போனால் அங்கே எந்த சூழ்நிலை மாறுதலும் நிகழ்ந்திருக்கவில்லை. ங அப்படியேதான் கண்ணைத் திறந்துகொண்டு படுத்திருந்தான். அவன் மனைவி ‘காப்பி சாப்பிடுகிறீர்களா?’ என்று என்னிடம் கேட்டாள். இம்முறை நான் மறுக்காமல் காப்பியை வாங்கிக் குடித்துவிட்டு ஙவின் அருகே வந்து அமர்ந்தேன்.

‘இதோ பார். இனி நீ பிழைக்கப் போவதில்லை. கடவுள் உன்னைக் கைவிட்டுவிட்டார். உன் மனைவியும் மகனும் மனத்தைத் தேற்றிக்கொண்டுவிட்டார்கள். நிம்மதியாக இறந்து விடு. ஏற்கெனவே உன் மகன் நான்கு நாள் லீவு போட்டுவிட்டான். நீ இறந்த பிறகு இன்னும் பத்து நாள் அவன் லீவு எடுக்க வேண்டியிருக்கும். எத்தனைக் கஷ்டம். ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய்?’ என்று கேட்டேன்.

ஙவின் மகன் வந்து, ‘அங்கிள் சிறிது வெளியே இருங்கள். அவரைத் துடைத்துவிட்டு உடை மாற்ற வேண்டும்’ என்று சொன்னான். நான் எழுந்து வெளியே சென்றேன். இப்போது ரு அவன் வீட்டுக்கு வந்தாள். ‘சிறிது நேரம் இங்கேயே இரு. உள்ளே ஙவின் மகன் அவனுக்கு உடை மாற்றப் போகிறான்’ என்று சொன்னேன்.

‘இரவுக்குள் நடந்துவிடும் என்று நேற்று ஆண்ட்டி சொன்னார்கள்.’

‘என்னிடமும் சொன்னாள். ஆனால் நடக்கவில்லை. ஏதோ ஒன்று அவன் உயிரை நெருடிக்கொண்டே இருக்கிறது. போக விடாமல் தடுக்கிறது.’

‘ஆம்.’

‘அவன் எதையோ நினைத்துக்கொண்டே இருக்கிறான். அந்நினைவில் இருந்து விடுபட்டால்தான் இது நடக்கும்.’

ரூ ஒரு வினாடி யோசித்தாள். பிறகு, ‘ஆண்ட்டி உள்ளே இருக்கிறார்களா?’ என்று கேட்டாள்.

‘குளிக்கப் போயிருக்கிறாள் என்று நினைக்கிறேன்.’

அவள் சட்டென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். ‘ஏய் ரூ. இரு, இரு. அவன் என்னையே வெளியே இருக்கச் சொன்னான்’ என்று குரல் கொடுத்தேன். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. சில வினாடிகள் நான் அங்கேயே இருந்தேன். ரு வெளியே வந்தாள்.

‘என்ன அவசரம்? அவன் தந்தைக்கு உடை மாற்றப் போவதாகச் சொன்னான்.’

‘ஆம். பார்த்தேன். கவலைப்படாதீர்கள். சிறிது நேரத்தில் அவர் இறந்துவிடுவார்’ என்று சொல்லிவிட்டு அவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். ஙவின் மகன் வெளியே வந்து, ‘அவளை ஏன் உள்ளே விட்டீர்கள்? நான் அப்பாவின் வேட்டி சட்டை எல்லாவற்றையும் களைந்து துடைத்துவிட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே வந்துவிட்டாள்’ என்று சொன்னான்.

‘நான் சொன்னேன். அவள் கேட்கவில்லை.’

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே உள்ளிருந்து அவனது தாயின் அழுகைக் குரல் கேட்டது. எதிர்பார்த்த மரணமென்றாலும் அழத்தானே வேண்டும்?

(நன்றி – உயிர்மை)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading