பதினான்கு சொற்கள் (சிறுகதை)

அந்தப் பெண்ணை முதல் முதலில் பார்த்தபோது பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறவளாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் இருபத்தைந்து வயது என்று சொன்னாள். அலுவலகத்தில் சில சிறிய, செப்பனிடும் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. எளிய அலங்காரங்கள் கொஞ்சம். நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். பகுதி நேரமாகத்தான் செய்வாள்; ஆனால், வேலை ஒழுங்காக இருக்கும் என்றார்.

அவள் நேரில் வந்தபோது, பெயரென்ன என்று கேட்டேன். சொன்னாள். எனக்கு அது சரியாகக் காதில் விழவில்லை. கேட்கவில்லை என்று சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு தலையாட்டி வைத்தேன். செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சொன்னேன். மாதிரி வடிவம் தயாரித்துக்கொண்டு, தோராயச் செலவுக் கணக்குடன் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். அதாவது, அவள் அதைத்தான் சொல்கிறாள் என்பதாகப் புரிந்துகொண்டேன். உண்மையில் அவள் பேசுவது அவளுக்கே கேட்க வாய்ப்பில்லை. தவிர, அந்தச் சன்னமான குரலில் அவ்வளவு நடுக்கமும் இருந்தது. அசோகமித்திரன் பெண்ணாகப் பிறந்திருந்தால் எப்படிப் பேசியிருப்பாரோ அப்படி.

மூன்று தினங்களில் அலங்கார மாதிரிகளைச் செய்து எடுத்துக்கொண்டு வந்தாள். சில நன்றாக இருந்தன. சிலவற்றில் மாற்றங்கள் சொன்னேன். ஏற்றுக்கொண்டு மறு நாள் வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

மறு நாள், இன்னொரு இளைஞனை அழைத்து வந்தாள். அவன் தோளில் உபகரண மூட்டை இருந்தது. அவள் இரண்டு மூட்டைகள் வைத்திருந்தாள். ஒன்றில் உள் அலங்காரப் பணிக்கான உபகரணங்கள். இன்னொன்றில் மடினி, செல்பேசி, குறிப்பேடு உள்ளிட்ட அவளது அலுவலகப் பயன்பாட்டுக்குத் தேவையான சாதனங்கள். வந்ததும் ப்ளக் பாயிண்ட் எங்கே இருக்கிறது என்று பார்த்து, அதனருகே தனது மடினியைத் திறந்து வைத்து, ப்ளக்கைச் சொருகினாள். அலுவலக மென்பொருளில் லாகின் செய்து பரபரவென்று ஏதோ சில வேலைகளைச் செய்துவிட்டு எழுந்து வந்து அலங்காரப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தாள். அவளது திட்டங்களுள் ஒன்று, என்னுடைய புத்தகங்களின் அட்டைப் படங்களைக் கொண்டு ஒரு சுவர்க் கடிகாரம் வடிவமைப்பது. அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலத்தில் நிலைத்திருக்கிறேனோ இல்லையோ. இக்காலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை எனக்கே எடுத்துக் காட்டிக்கொள்ள ஓர் உபாயம். தவிரவும், அலுவலகத்துக்கு வருபவர்கள் அந்த வடிவமைப்பை மிகவும் ரசிப்பார்கள் என்று தோன்றியது.

உள் அலங்கார இயல் படித்திருக்கிறாளா என்று கேட்டேன். இல்லை. ஆர்வத்தால் செய்வதுதான் என்று அவளுடன் வந்திருந்த இளைஞன் சொன்னான். அவனுமே படித்தது வேறு. இதுவரை எவ்வளவு இடங்களில் இப்படி உள் அலங்கார வேலைகள் செய்திருக்கிறார்கள் என்று கேட்டேன். ‘உங்களுக்கு எங்களைப் பற்றிச் சொன்ன நண்பருக்குத்தான் முதலில் செய்தோம். நீங்கள் இரண்டாவது’ என்று இப்போதும் அந்த இளைஞன்தான் பதில் சொன்னான்.

கலகலப்பு 2 திரைப்படத்தில் ‘கூட இருந்த குமாரு’ என்று ஒரு கதாபாத்திரம் வரும். அந்தப் படம் பார்த்திருக்கிறாயா என்று கேட்டேன். அவள் பார்த்ததாகச் சொன்னாளா, இல்லை என்று சொன்னாளா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோ சொன்னாள். பிறகு வேலையில் ஆழ்ந்துவிட்டாள். நான் ஏன் அதைக் கேட்டேன் என்றாவது யோசித்திருப்பாள். குறும்பாகவேனும் முறைப்பாள் என்று எதிர்பார்த்தேன். இல்லை.

அரை மணி நேரம் மும்முரமாக வேலை பார்ப்பாள். சட்டென்று எழுந்து சென்று மடினி அருகே அமர்ந்து சில நிமிடங்கள் அலுவலக வேலை பார்ப்பாள். யாரிடம் இருந்தாவது போன் வந்தால் அதே யாருக்கும் கேட்காத குரலில் ஒன்றிரண்டு சொற்கள். மீண்டும் பணியில் ஆழ்ந்துவிடுவாள். நடுநடுவே அவளது தொழில் தோழனுடன் ஓரிரு சொற்கள் பேசினாள் என்பதைக் கண்டேன். ஆனால் நிச்சயமாக எதுவுமே கேட்கவில்லை. அவள் பேசுவதை அவன் எப்படிப் புரிந்துகொண்டு பதில் சொல்கிறான் என்றும் தெரியவில்லை. அவனிடமே கேட்டேன். ‘இவள் பேசுவது உண்மையிலேயே உனக்குக் கேட்கிறதா?’

‘பழகிடுச்சி சார்’ என்று அவன் சொன்னான்.

ஒரு நாளில் மொத்தமாக அவள் பத்து அல்லது பதினைந்து சொற்களுக்கு மேல் பேசவில்லை. வேலை தொடர்பான ஆலோசனைகளை, திட்டங்களை, தனது கருத்துகளைக் கூட கையால் காற்றில் எழுதிக் காட்டி, சைகை மொழியில்தான் தெரிவித்தாள். தொலைபேசியில் பேசும்போதும் ‘ம். ம். ஓகே’ என்பதற்கு அப்பால் ஒன்றுமில்லை. வடிவமைப்பு சார்ந்து எனக்குத் தோன்றுகிறவற்றைப் பத்து நிமிடங்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளக்கி முடிப்பேன். அதற்கு ‘ம்’ என்று கூடச் சொல்ல மாட்டாள். நகர்ந்து சென்று விடுவாள். ஆனால் சொன்னதைச் செய்திருப்பாள். பதில் சொல்வது, உரையாடுவது, குறைந்தபட்சம் குரலை வெளிப்படுத்துவது என்பதே மனித வாழ்வில் அநாவசியமானது என்று கருதுகிறாளா? கோபம் வந்தால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கும் பதில் சொல்லவில்லை.

திக்கு வாய் உள்ள சிலர் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பேச வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது பதற்றமடைந்துவிடுவார்கள். திக்கித் திக்கி இரண்டொரு சொற்களைச் சொல்லி முடிப்பார்கள். இந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட பிரச்னையும் இல்லை. நன்றாகப் பேச முடிந்த பெண்தான். குரலும்கூட மென்மையாக, நன்றாகவே இருந்தது. முயற்சி செய்து, கொஞ்சம் வாயைத் திறந்தால் பாடக்கூட முடியும். ஆனால் ஏன் தேவையானவற்றைக் கூடப் பேச மறுக்கிறாள்?

‘நேரம் ஆகுதேம்மா. பசிக்கலியா? என்ன வேணும்னு சொன்னா ஆர்டர் பண்ணிடுவேன். இப்ப சொன்னாலே வர அரை மணி ஆகும்.’

அவள் அமைதியாகவே இருப்பாள். அந்தப் பையன்தான் சொல்லுவான். ‘ரெண்டு பேருக்கும் சாம்பார் சாதம் மட்டும போதும் சார்.’

சாப்பிடும்போது, ‘சாப்பாடு நல்லாருக்கா?’ என்று கேட்டேன்.

‘ம்.’

‘இது போதுமா? ரொம்ப கம்மியா சாப்பிடறிங்க.’

பதில் கிடையாது.

‘வேல எப்ப முடியும்?’

அவள் தன் நண்பனைப் பார்த்தாள்.

‘நாளைக்கு ஈவ்னிங் முடிஞ்சிரும் சார்’ என்று அவன் சொன்னான்.

‘ஏன் அத நீ சொல்ல மாட்டியா?’

சிறிது சிரித்துவிட்டு அமைதியாகச் சாப்பிட்டு முடித்து, எழுந்து சென்றாள்.

ஒரு புராதனமான டைப் ரைட்டரை வைத்து ஒரு டிசைன் செய்து வந்திருந்தாள். பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் என் அலுவலகத்தில் அந்த டிசைனைப் பொருத்துவதற்கு வாகாக ஓர் இடம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அறையின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அந்த டிசைனை அங்கே பொருத்த முடியுமா என்று திரும்பத் திரும்ப ஆராய்ந்தாள். கழிவறைக்கும் சமையல் அறைக்கும் இடைப்பட்ட வழியில் உள்ள ஒரு சுவர் தோதாக இருக்கும் என்று நினைத்து, வேகமாக என்னிடம் வந்தாள்.

‘இங்க ஓகேவா?’

‘எது?’

‘டைப் ரைட்டர்.’

‘பாத்ரூம் வாசலுக்கு எதுக்கும்மா டைப் ரைட்டர்?’

அவளுக்கே அந்த எண்ணம் முதலில் தோன்றியிருக்க வேண்டும். சிறிது சங்கடப்பட்டு சிரித்துக்கொண்டு நகர்ந்துவிட்டாள். ஆனால் அந்த டிசைனைப் பயன்படுத்த முடியாதது குறித்து அவளுக்கு மிகவும் வருத்தம். அது புரிந்தது.

ஒரு மூங்கில் ஏணி வாங்கி, இரண்டாக உடைத்து நான் உட்காரும் இடத்தில் மேசைக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு, அதில் அலங்கார விளக்கு பொருத்தலாம் என்று சொன்னாள். இதைக் கூட அவளது சிநேகிதனிடம் சொல்லி, அவன் மூலமாகத்தான் என்னிடம் தெரிவித்தாள்.

‘இது என்ன சினிமா கம்பெனியா? அதெல்லாம் வேண்டாம்மா.’

‘இல்ல. மணி ப்ளாண்ட் மாதிரி கட்டித் தொங்கவிட்டாலும் அழகா இருக்கும்.’

நான் என்னைப் பராமரிப்பதிலேயே செய் நேர்த்தி இல்லாதவன். செடி கொடிகளை எப்படிப் பராமரிப்பேன்?

‘இல்ல. ஆர்ட்டிஃபிஷியல்..’

‘வேண்டாம்மா.’

பதில் சொல்லவில்லை. போய்விட்டாள்.

அந்த புத்தகக் கடிகாரம், சில எளிய மர வேலைப்பாடுகள் செய்து முடித்து, எனக்குப் பிடித்த ஒரு யானை ஓவியத்தை ஒரு பக்கச் சுவரில் ஒட்டி, நிறுவனத்தின் பெயர்ப் பலகையைப் பொருத்திக் கொடுத்துவிட்டு, ‘வேலை முடிந்தது’ என்று கிளம்ப ஆயத்தமானாள். பயன்படுத்த வழியில்லாத இரண்டு அலமாரித் தட்டுகள் மட்டும் துருத்திக்கொண்டு தெரிந்தன. அதில் ஏதேனும் கலைப் பொருள்களை வைக்கலாம் என்று அந்தப் பையன் சொன்னான். உடனே அவள், அவனுக்கு மட்டும் கேட்கிற விதத்தில் ‘டெரகோட்டா வண்ணம் அடித்து எளிய கோடுகளில் சிறிய படங்கள் வரையலாம் என்று தெரிவித்தாள்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பிரஷ் எடுத்து சுவரில் வரையும் வேலை மட்டும் வேண்டாம் என்று முன்னதாக அவர்களிடம் சொல்லியிருந்தேன். உண்மையில் அவளுக்கு அது பெரிய வருத்தம். எனக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்த நண்பரின் அலுவலகத்தில் அவள் சுவர் சுவராக வரைந்து தள்ளியிருந்தாள். படங்கள் மோசமில்லை. ஆனால் அந்த வண்ணங்களின் அடர்த்தி என் இயல்புக்கும் விருப்பத்துக்கும் பொருந்தாதவை. அதனால்தான் வரையக் கூடாது என்று சொல்லியிருந்தேன். இருப்பினும் இறுதி முயற்சியாக, அந்தச் சிறிய இடத்தில் மட்டும் வரைந்து கொள்ள அனுமதி கேட்டாள்.

அந்த ஆர்வத்தை மதிக்க வேண்டும் என்று தோன்றியது. ‘ஆகக் குறைவான கோடுகளில் நிறைய இடைவெளி விட்டு வரைந்துகொள். ஆனால் வெண்மை தவிர வேறு வண்ணம் கூடாது’ என்று சொன்னேன்.

சரியாக ஒரு மணி நேரம். பயன்படுத்த வழியே இல்லாத அந்த இரண்டு அடுக்கு அலமாரித் தட்டுகளை ஒரு பெண்ணின் பல்வேறு கொண்டாட்டத் தருணங்களைச் சித்திரிக்கும் பதினான்கு சிறிய ஓவியங்களின் மூலம் பேரழகு செய்திருந்தாள்.

பிரமித்துப் போனேன். அது நான் எதிர்பாராதது. மிகத் தரமாக வந்திருந்தது. மனம் திறந்து சில நிமிடங்கள் இடைவிடாமல் பாராட்டினேன். நன்றி சொல்வாள் என்று நினைத்தேன். சிறிது புன்னகை மட்டும் செய்தாள். ‘கிளம்பலாம்’ என்பது போலத் தனது சிநேகிதனுக்குச் சைகை செய்தாள். மொத்தப் பணிகளுக்குமாக மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னேன். அப்போதும் பதில் இல்லை. வெறும் தலை அசைப்பு. போய்விட்டாள்.

அந்த ஓவியங்களை நெடுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். மொத்த அறையுமே அவற்றுக்குள் ஒடுங்கிவிட்டாற்போலத் தோன்றியது. பிரமைதான். மீண்டு, நகர்ந்து சென்றேன். நண்பருக்கு போன் செய்து வேலை சிறப்பாக முடிந்துவிட்டதைத் தெரிவித்தேன்.

‘அதெல்லாம் நன்றாகச் செய்திருப்பாள். சந்தேகமே இல்லை. ஆனால் பேசினாளா?’

‘ஆம். பதினான்கு சொற்கள்.’

(புரவி மே 2022 இதழில் வெளியானது.)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி