முன்குறிப்பு :- இது ஒரு போஸ்ட் மார்டனிச, போஸ்ட் கலோனியலிச, (செமி) மேஜிக்கல் ரியலிச, கமர்ஷியல் கலைப்படைப்பு.
பாயிரம் அல்லது அத்தியாயம் ஒன்று
இந்தக் கதையின் நாயகனுக்கு முதலில் ஒரு பெயர் வைக்க வேண்டும். ராமு அல்லது சுரேஷ் என்று வைப்போமா?
சரி. ராமு அல்லது சுரேஷ்.
ராமு அல்லது சுரேஷ் தனது பதினைந்தாவது வயதில் முதல் முதலாக ஒரு சிகரெட் பிடித்துப் பார்த்தாலென்ன என்று எண்ணினான். அதற்கு அவனுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. தன்னைப் பெரியவனாக உணரச் செய்ய சிகரெட் உதவும் என்பது அவனது நம்பிக்கை. இரண்டாவது காரணம்தான் மிகவும் கவித்துவமானது.
ராமு அல்லது சுரேஷின் வகுப்பில் அப்போது நிரஞ்சனா என்று ஒரு பெண்ணும் படித்துக்கொண்டிருந்தாள். நிரஞ்சனா ஓர் அழகி ஆவாள். பள்ளிக் கூடத்திலேயே அவள்தான் பெரிய அழகி என்று ராமு அல்லது சுரேஷ் நினைத்தான். இல்லை இல்லை, ஊரிலேயே நிரஞ்சனாதான் பேரழகி என்று அவனது சக வகுப்பர்களில் சிலர் சொல்லப் போக, ராமு அல்லது சுரேஷுக்கு பயம் பிடித்துக்கொண்டது. தனக்கு முன்னால் வேறு யாராவது நிரஞ்சனாவிடம் “ஐ லவ் யூ நிரஞ்சனா” என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம்.
ஆ! நான் நிரஞ்சனாவைக் காதலிக்கிறேனா என்ன? – இப்படியும் ராமு அல்லது சுரேஷுக்கு அவ்வப்போது தோன்றும். ஏனென்றால் அவன் தன்னை ஒரு நல்ல பிள்ளையாக வீட்டாரிடம் பதினைந்து வருடங்களாக அறிமுகம் செய்து வந்திருக்கிறான். நல்ல பிள்ளைகள் பொதுவில் காதல் வயப்பட மாட்டார்கள்.
ராமு அல்லது சுரேஷுக்கு என்றைக்கு இரட்டை மனம் உண்டானதோ, அன்று முதல் அவனது நிம்மதி பறிபோனது. நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப மனத்துக்குள் சொல்லிக்கொண்டே எப்போதும் நிரஞ்சனாவை நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான். குறிப்பாகக் குளிக்கப் போகிறபோது அவளைக் குறித்த ஞாபகங்கள் அதிகரித்துவிடும். சோப்பைத் தேய்த்துக்கொண்டிருக்கும்போது சடாரென ஒரு கணத்தில் தேய்ப்பதை நிறுத்திவிட்டு நிரஞ்சனாவைக் குறித்து யோசிக்க ஆரம்பித்துவிடுவான்.
நினைப்பது என்றால் நினைப்பதுதான். கண், மூக்கு, உதடுகள், கன்னம், தலைமுடி, பின்னல், ஜிமிக்கி, யூனிஃபார்ம் உள்ளிட்ட உறுப்புகளை மனத்துக்குள் ஒருங்கிணைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பதன் பெயர் தான் நினைப்பது. அது ராமு அல்லது சுரேஷுக்கு மிகவும் பிடித்தது. எத்தனை நேரம் அப்படியே நினைத்துக்கொண்டிருப்பானோ சொல்ல முடியாது. “ஏண்டா சனியனே.. உள்ள போய் எவ்ளோ நேரமாகுது? வெளிய வர்ற எண்ணமே இல்லியா? இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்குப் போகலியா?” என்று பெற்றவள் குரல் கொடுக்கும்வரை நினைத்துக்கொண்டே இருப்பான். அதற்குள் உடலமெங்கும் தடவிய சோப்பு காய்ந்து போய் வறவறவென்றாகியிருக்கும். தலையெழுத்தா இது? கட்டை விரலால் சுரண்டிச் சுரண்டித் தண்ணீர் ஊற்றிக் குளித்து முடித்து வெளியே வருவான்.
“தரித்திரம் புடிச்ச மூதேவி! என்னிக்காவது இவ்ளோ நேரம் பொறுமையா உக்காந்து படிச்சிருக்கியா நீ? ஜலக்ரீடை நடத்துறான் பேமானி” என்று தந்தையானவர் ஒரு வரி சொல்லிவிட்டு நகர்ந்து செல்வார்.
ராமு அல்லது சுரேஷின் தலையாய பிரச்னையே இதுதான். அவனது எந்தையும் தாயும் என்றைக்குமே அவனது படிப்பைக் குறித்துப் பேசாதிருந்ததில்லை. இந்தக் குளியல் விவகாரம்தான் என்றில்லை. பிடித்த சினிமா பாடல் வரி எதையாவது எப்போதாவது அவன் முணுமுணுத்தால்கூட அவர்களுக்குப் பொறுக்காது. “புத்தி எங்க போவுது பாரு.. பாட்டெல்லாம் மனப்பாடம் ஆகுது.. பாடத்துல ஒண்ணும் காணம்” என்றுவிடுவார்கள்.
பாடமெல்லாம் பாடல் போல் அத்தனை எளிதாகவா இருக்கிறது? இது “அந்தக்காலத்து பிஏ” படித்த அப்பாவுக்கும் புரிவதில்லை; எந்தக் காலத்திலும் எதுவும் படித்திராத அம்மாவுக்கும் புரிவதில்லை.
ஆகவே ராமு என்கிற சுரேஷின் இருப்பியல் பிரச்னை என்பதாகப்பட்டது அவனது பெற்றோரின் மனோலயத்தில் உதயமாகிறது.
தனது வீட்டார் குறித்த எரிச்சல் கலந்த நினைவின்மூலம் நிரஞ்சனா குறித்த இனிமை கலந்த நினைவைச் சற்றே மறந்து அவன் ஒரு நாள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சியைக் காண நேரிட்டது. ஒரு சாலையோர சினிமா போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். முந்தைய கணமே உதட்டை விட்டு விழுந்திருக்க வேண்டுமே? இது எப்படி இன்னும் அங்கே தொற்றி நிற்கிறது? என்று எண்ணச் செய்யும் விதத்தில் இருந்தது அந்த ஸ்டைல்.
ராமு அல்லது சுரேஷுக்கு அந்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்டர் ஒரு பொருட்டல்ல. (அவன் காதல் இளவரசன் கமலகாசன் ரசிகன். காசன்தான். ஹாசன் அல்ல.) ஆனால் அவனது பெரும்பாலான நேரத்தைக் களவாடிக்கொண்டிருந்த கன்னிகையான நிரஞ்சனா, தோளில் சுமந்த புத்தகப் பையின் கனம் மறந்து அந்த போஸ்டரை நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ராமு அல்லது சுரேஷுக்கு இக்காட்சி பெரும் கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது. உடனே அவன் நிரஞ்சனாவை நோக்கி “பின்னங்கால் பிடறியில் பட” ஓடினான். மூச்சிறைக்க நின்று, “நிரஞ்சனா.. நீ ரஜினி ரசிகையா?” என்று கேட்டான்.
“இல்லியே, ஏன் கேக்கற?” என்று அவள் கேட்ட தோரணையே ரஜினி கேட்பது போலத்தான் இருந்தது.
“இல்ல.. இவ்ளோ நேரமா இங்கயே நின்னு பாத்துட்டிருக்கியேன்னு கேட்டேன்.”
“ப்ச். நான் ரஜினிய பாக்கல. அந்த சிகரெட்ட பாத்துட்டிருந்தேன்” என்று சொல்லிவிட்டு நிரஞ்சனா பள்ளிக்கூட மணியடித்துவிடும் என்று ஓடியே போய்விட்டாள்.
ஆக, நிரஞ்சனாவுக்கு சிகரெட் பிடித்தால் பிடிக்கும் என்று ராமு அல்லது சுரேஷ் முடிவுக்கு வந்தான் என்று சொல்ல வேண்டாம் அல்லவா?
“உன் எதிர்காலத்த நெனச்சா ரொம்ப கவலையா இருக்குடா” என்று தந்தையானவர் அவ்வப்போது சொன்னதை ராமு அல்லது சுரேஷ் நினைத்துப் பார்த்தான். அவனுக்குமே கொஞ்சம் போல் அப்படித்தான் இருந்தது அப்போது. சரி மற்றக் கவலைகளுடன் இதையும் சேர்த்துக்கொண்டால் தப்பில்லை என்று ஏதோ ஒரு கணத்தில் தோன்றிவிட்டது.
உடனே பள்ளிக்கூடத்தின் பின்புறம் இருந்த நாடார் கடைக்குச் சென்று முகத்தை அறுபத்தியேழு டிகிரி கோணலாகத் திருப்பி வைத்துக்கொண்டு “நாடார்.. சார்மினாராம் ஒண்ணு குடுங்க” என்று கேட்டான். அதாவது யாருக்காகவோ வாங்கிச் செல்வது போன்ற ஒரு பாவனை. (இதே நாடார் கடையில்தான் ராமு அல்லது சுரேஷின் அப்பா அவ்வப்போது வெற்றிலை பாக்கு வாங்குவார். இது கதையின் முக்கியத் திருப்பமாகப் பின்னால் ஒருவேளை வரலாம்.)
நாடார் என்னவாவது சொல்லிவிடுவாரோ, கேட்டுவிடுவாரோ என்று ஒரு உதைப்பு இருந்தது அவனுக்கு. ஆனால் அப்படியேதும் அசம்பாவிதம் நிகழவில்லை. “அறுவது காசு சில்றையா குடு” என்று சொல்லி பணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டு நாடார் சார்மினாரைக் கொடுத்தே விட்டார்.
அதுவரை பெரிய பதற்றமேதும் இல்லாதிருந்த ராமு அல்லது சுரேஷுக்கு அந்த சார்மினாரை வாங்கி பாக்கெட்டில் வைத்ததும் உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. சட்டென்று தொண்டை வறண்டுவிட்டது போன்றதொரு உணர்வு. காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க என்று சொல்லிக்கொண்டே (அடுத்த வரி தெரியாது) மூச்சையடக்கி ஓடத் தொடங்கினான். வகுப்பு வந்து சேரும் வரை அவன் நிற்கவில்லை.
நல்லவேளை அவன் போவதற்குள் முதல் பீரியட் சார் வந்திருக்கவில்லை. அவர் வரும்போது அவர் என்ன சப்ஜெக்ட் சார் என்று சொல்லிக்கொள்ளலாம். ராமு அல்லது சுரேஷ் தன் இடத்தில் அமர்ந்து பரபரப்பாக புத்தகங்களை எடுத்து வெளியே வைத்தான். ஒரு வாய் தண்ணீர் குடித்தால் நல்லது என்று தோன்றியது. உடனே ஒரு யோசனையும் உண்டானது.
“நிரஞ்சனா கொஞ்சம் தண்ணி குடேன்” என்று பக்கத்து, பெண்கள் வரிசையில் இருந்தவளிடம் உரிமையுடன் கேட்டான்.
“எதுக்கு? பாய்ஸுக்கெல்லாம் தரமுடியாது” என்றுவிட்டாள்.
அந்தக் கணத்தில் ராமு அல்லது சுரேஷுக்கு சுறுசுறுவென்று கோபமும் ஆண்மையும் வீரமும் மேலோங்க, தடாலென்று எழுந்து நின்றான். பாக்கெட்டில் இருந்து சார்மினாரை எடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போலவே உதட்டில் தொங்கவிட்டபடி, “பாய்ஸுக்கு அப்ப வேற என்ன தருவ?” என்று கேட்டான்.
இவ்வாறாக ராமு அல்லது சுரேஷின் பள்ளிப் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.
(அநேகமாகத் தொடரலாம்.)
அந்த ராமு அல்லது சுரேஷ் பாரா அல்லது ராகவனா?! அப்போ அந்த நிரஞ்சனா?! அய்யரே, கதை படிக்க வெகு சுவாரஸ்யமாக இருந்தது. எந்த இடத்திலும் நம்மை நிறுத்தவில்லை.
பலான கதை – 01 http://t.co/rSOsgUTwZJ