வண்டி ரிப்பேர்

இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் அனுபவிக்கக்கூடிய நூதன அவஸ்தைகள் எதையும் எம்பெருமான் எனக்கு இதுநாள் வரை அளித்ததில்லை. ஓரிரு விபத்துகள், ஒரு சில சிராய்ப்புகள், வண்டிக்குச் சில பழுதுகள் என்னும் நியாயமான கஷ்டங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். 1993ம் வருடத்திலிருந்து நான் மொப்பெட், ஸ்கூட்டர் என்று ஓட்டி வந்திருக்கிறேன். சொல்லப்போனால் பஞ்சர்கூட நாலைந்து முறைக்குமேல் ஆகியிருக்காது. வண்டிக்கு நானும் எனக்கு என் வண்டியும் எப்போதும் விசுவாசமாகவே இருந்து வந்திருக்கிறோம்.

சமீப நாள்களாக ஒரு புதிய பிரச்னை. நானோ என் வண்டியோ எந்தத் தப்பும் செய்யாமலேயே தொடர்ந்து அடுத்தடுத்து சில பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறோம். எதன்பொருட்டும் யார் மீதும் அணுவளவு கோபமும் உண்டாகாதவன் என்னும் என் புராதன இருமாப்பை அசைத்து, ஒரு துர்வாசராக என்னை மனத்துக்குள் உருக்கொள்ளச் செய்யும் விதமான ஒரு சில்லறைப் பிரச்னை.

பத்து நாள்களுக்கு முன்னர் ஒரு சொந்தக் காரியமாக நந்தனம் வரை போயிருந்தேன். போன இடத்தில் வேலை முடிய அரை நாள் ஆனது. வெளியே வந்து வண்டியை எடுத்து, தன்னியல்பாக வலக்கை கட்டை விரலால் குயிக் ஸ்டார்ட்டரை அழுத்தினால் அது இயங்கவில்லை. பொருட்படுத்தாமல் காலால் உதைத்துக் கிளம்பிப் போய்விட்டேன்.

மறுநாள் மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போதுதான் அந்தப் பிரச்னையை முழுக்க கவனித்தேன். குயிக் ஸ்டார்ட்டர் பொத்தானை யானை ஏறி மிதித்தது மாதிரி அமுங்கி உள்ளே போய்விட்டிருந்தது. உடைத்து எடுத்து உள்ளே வைத்து அழுத்தினால்கூட அளவெடுத்த இடத்தில் சரியாகத்தானே நுழையும்? எந்த மகானுபாவனோ மெனக்கெட்டு உடைத்தெடுத்து, கோணலாக உள்ளே சொருகி அசைக்கமுடியாதபடி செய்திருந்தார்.

சம்பவம் நடந்து சரியாக நான்கு நாள்கள் கழித்து, வழக்கம்போல் ஒருநாள் காலை அலுவலகத்துக்குப் புறப்பட்டபோது வண்டி ஸ்டார்ட் ஆனது, ஆனால் என்ன ரெய்ஸ் செய்தாலும் பத்து கிலோமீட்டர் வேகத்துக்குமேல் போக மறுத்தது. மெயின் ரோடில் பெருமாள் புறப்பாடு மாதிரி ஜவ்வு ஜவ்வென்று அது இழுத்து இழுத்து நடக்க, பின்னால் வந்தவர்கள் ஹாரன் அடித்து அடித்து காதைச் சுட்டெரித்தார்கள். காலை நேரம் மெக்கானிக் கடைகள் ஏதும் வழியில் திறந்திருக்கவில்லை. தட்டுத்தடுமாறி ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன்.

மதிய உணவு நேரத்தில் எஸ்.ஐ.ஈ.டி சாலையில் உள்ள ஒரு ஹோண்டா சர்வீஸ் செண்டருக்கு வண்டியை எடுத்துச் சென்று இரண்டு பிரச்னைகளையும் சொல்லி ரிப்பேர் பார்க்கச் சொன்னேன். ஒரு மணி நேரத்தில் வண்டி சரியாகிவிட்டது. யாரோ ரொம்ப மெனக்கெட்டு குயிக் ஸ்டார்ட்டரை நோண்டியெடுத்து கோணலாகச் சொருகி வைத்திருந்ததைச் சொன்ன மெக்கானிக்காகப்பட்டவர், வண்டி பத்து கிலோமீட்டர் வேகத்துக்குமேல் ஓடாததன் காரணத்தைச் சொன்னபோதுதான் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

குச்சி அல்லது கம்பியின் நுனியில் பொறுமையாக நிறைய பஞ்சை சுருட்டி, அதைப் புகைபோக்கியின் துவாரம் வழியே உள்ளே விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்!

இது எப்போது செய்யப்பட்டதோ தெரியவில்லை. புகை சரியாக வெளியேற வழியின்றி, கார்புரேட்டர் அடைப்பு ஏற்பட்டு வண்டி ஆஸ்துமா நோயாளி மாதிரி இழுத்துக்கொண்டுவிட்டது.

அடக்கஷ்டமே. நான் ஒரு கவிஞன் கூட இல்லையே? என்னை ஏன் பழிவாங்க நினைக்கவேண்டும்? இது யாருடைய வேலையாக இருக்கும்?

தெரியவில்லை. விட்டுவிட்டேன்.

இன்று அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்குப் புறப்பட்டு, கீழே இறங்கி வந்தேன். வண்டியை நெருங்கும்போதே அதிர்ச்சி காத்திருந்தது. ரியர் வியூ மிரர்களுள் ஒன்றின் நட்டை வேலை மெனக்கெட்டு யாரோ திருகி பாதி கழட்டிவிட்டு, கழட்டியது தெரியாமல் ரப்பர் உறையை ஒழுங்காக வைத்து மூடியிருந்தார்கள். ஒரு கண்ணாடி ஒழுங்காக இருந்தது. எதிர்ப்பக்கக் கண்ணாடியின்மீது யாரோ இந்தியன் தாத்தா நரம்படித் தாக்குதல் தொடுத்தது மாதிரி கோணிக்கொண்டு வ்வே என்று வானம் பார்த்திருந்தது. தொட்டதும் சொய்யாவென்று சுழன்று நின்றது கண்ணாடி.

எண்ணி பத்து நாள்கள். மூன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான நூதனத் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது என் வண்டி. இது, இதோடு முடியுமா இன்னும் தொடருமா என்று தெரியவில்லை. ப்ரூனோ, க.ர. அதியமான் போன்ற சோதிட வல்லுநர்கள் மே மாதம் வரை எனக்கு கிரகங்கள் பிரமாதமான பலன்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று புத்தகக் கண்காட்சி சமயம் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தார்கள். அப்படி ஏதாவது வரும்போது நாம் கவனிக்காமல் தூங்கிவிடக்கூடாதே என்று ராவெல்லாம் விழித்திருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பிரமாதம் ஏதும் இதுவரை வரவில்லையென்றாலும் இப்படிப்பட்ட இடைவிடா இம்சைகளுக்குக் குறைவே இல்லாமல்தான் இருக்கிறது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை உற்பாதங்களால் என்னை கவனிக்கும் கிரகங்களுக்கு என்னவாவது ஆகியிருக்கிறதோ தெரியவில்லை. ஏற்கெனவே ஜூன் மாதத்துக்குப் பிறகு கிரகங்கள் என்ன பாடு படுத்தப்போகின்றனவோ என்கிற கவலை வேறு வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. மே வரையிலாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. என்ன எழவெடுத்த கிரகங்கள் இவை!

கலைஞருக்குக் கூட சோதிடர்கள் கண்டிப்பாக இப்படித்தான் சொல்லியிருப்பார்கள். மே மாதம்வரை உங்களுக்கு கிரகங்கள் உச்சம். எந்தச் சிக்கலும் இருக்காது.

அவரும் என் ராசிதான். கடவுளே, இருவரில் ரொம்ப நல்லவரான ஒருவரையாவது நீ காப்பாற்றித்தான் ஆகவேண்டும்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

22 comments

  • வண்டின்னு ஒண்ணு வாங்கினா, மெயிண்டனன்ஸ்ன்னு ஒண்ணு பண்ணனும். அதை விட்டுட்டு ஜோசியம் ஜாதகம் மத்த பேர்னு குறை சொல்லிகிட்டே இருக்கீங்களே, இதையும் ட்ரை பண்ணிப்பாருங்க:

    இதே டூ வீலர் ஆந்திராவில் ஓடவில்லை, ஒரிஸ்ஸாவில் ஒடுங்கி இருக்கிறது, இங்கு ஓடவாவது செய்கிறதே.

    போன மெக்கானிக்கின் ஆட்சிக்காலத்தில் இன்னும் அதிக பிரச்சினை இருந்தது.

    அடுத்த வாரம் இதே பைக்குக்கு இலவச ரியர்வியூ மிரர் பொருத்துகிறேன்.

    இப்படியெல்லாம் சொன்னா, அட்லீஸ்ட் ராசி ஒண்ணுன்னாவது ஒத்துக்கலாம்!

  • விஷயம் சாதாரணம் போல் தோன்றினாலும், அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல இது. (இப்போ என்ன சொல்ல வர்ற அப்படிங்கறீங்களா 🙂
    கொஞ்சம் மன உளைச்சலை தரும் மேட்டர் தான் இது. அந்த துஷ்டனை சீக்கிரம் கண்டுபிடிக்க பிராப்திரஸ்து..

  • //இருவரில் ரொம்ப நல்லவரான ஒருவரையாவது நீ காப்பாற்றித்தான் ஆகவேண்டும்.//
    இந்த குசும்புத்தான் !!! அடுத்தது auto thaan

  • Ragavan sir,katturaiyai padithu vittu enakku adakka mudiyatha vedisiripputhan vanthathu.oru vaelai neengal bike-irkku pathilaga CAR vaithu irunthal?Ha Ha HA!

  • தூக்கத்திலே நடக்கிற வியாதி மாதிரி அந்த ‘ரெம்ப’ நல்லவருக்கு தூக்கத்திலே வண்டியை உடைக்கிற வியாதி இருக்குமோ?! #டவுட்டு

  • பொன்னியின் செல்வன் இல்க்கியம் என்றெல்லாம் அபாண்டமாக வாதிட்டால் இப்படித்தான் ஆகும். :-)))

  • //எனக்கு கிரகங்கள் பிரமாதமான பலன்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்//

    கரக்டுதானே? இத்தனை செய்கிற பிரகஸ்பதி, மொத்த வண்டியையும் ஆட்டைய போட எத்தனை நேரமாகும்? அப்படி ஆகாமல் இருப்பதே உங்க நல்ல நேரத்தைதானே காட்டுது? ச்சோச்சீயம் வாய்க

  • >ரொம்ப நல்லவரான ஒருவரையாவது நீ காப்பாற்றித்தான் ஆகவேண்டும்<

    நீர் ரக்ஷ்சிக்கப்படுவீர்.

    வந்தியதேவன் ஆர்டிகிள எழுதி அந்தப்பக்கமும் சண்ட, ஆஎஸ்எஸ் கத எழுதி இந்தப்பக்கமும் சண்டை, வெறும் நட்டு மட்டுமே கழட்டிய உம் எதிரிகள் நல்லவர்கள்!

    எல்டாம்ஸ் ரோடு எதிரிகளின் கூடாரமாகிவிட்டதா? 😉

    🙁

    .

  • நீங்கள் ‘பொன்னியின் செல்வன்’-ல் வந்தியத்தேவனாக நடிக்க இருப்பதால் பொறாமை கொண்ட ஒரு நடிகரின் செயல் என்று கோ. கோயிந்துவின் துப்பறிந்த ரிப்போர்ட் சொல்கிறது.

  • ”அடக்கஷ்டமே. நான் ஒரு கவிஞன் கூட இல்லையே? என்னை ஏன் பழிவாங்க நினைக்கவேண்டும்? இது யாருடைய வேலையாக இருக்கும்?”
    ஏன் இந்த் கொலை வெறி

  • உங்கள் நிலையை எண்ணி வேதனைப்படுவதா?அல்லது அதைக்கூட சிரிப்பு வரும்படி எழுதியதை எண்ணி சிரிப்பதா?என தெரியவில்லை,கட்டிடத்தில் வாட்ச்மேனிடம் பணம் கொடுத்து வண்டியை பார்த்துக்கொள்ளச்சொல்லுங்கள்.வேலைக்கு இடையில் அவ்வப்போழுது வண்டியை பார்த்துச் செல்லுங்கள்.அடுத்து அவன் ப்ரேக்கில் விளையாடப்போகிறான்.

  • உங்க அழகான வண்டியைப் பார்த்து தமிழ்நாட்டுக்கே பொறாமை சார்.

  • ஆழ்வார்க்கடியானை ஓத்த ஓர் ஒற்றனை நியமித்து இந்த அரசியல் சதியின் மூலத்தினை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான சதியாலோசனை கடம்பூர் மாளிகையில் நடைபெற்றிருக்கக் கூடும்.

  • ஆனாலும் கடவுளுக்கு இப்படி லிமிடேஷன் வைத்து சங்கடம் செய்யலாகாது பாரா சார்

  • //உங்க அழகான வண்டியைப் பார்த்து தமிழ்நாட்டுக்கே பொறாமை சார்.//

    ஒரே வரியிலே ஓராயிரம் உள்குத்துகள் வைத்து கமெண்ட் அடிக்க நம்மாளை அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா!

  • தமிழ் எழுத்தாளர் உலகமே பொங்கியேழு, கண்டனக் குரல் எழுப்பு, சிபிஐ விசாரணையும்,
    பாராவுக்கு ஒரு புதுக் காரும்,z பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டுமென போராடு :).

  • ஒருவேளை ஆதித்த கரிகாலனின் ஆவியா இருக்குமோ?

  • சந்தோஷ படுங்க பாரா!. சந்தோஷ படுங்க. உங்களையும் ஒரு பொருட்டா மதிச்சு உங்க கவனத்தை பெற என்ன என்ன செய்யுறானுக. ஒரு உலக அந்தஸ்தை பெற இன்னும் கொஞ்சம் தூரமே பாக்கி. காலரை தூக்கி விட்டு கிட்டு நடங்க.

  • //சந்தோஷ படுங்க பாரா!. சந்தோஷ படுங்க. உங்களையும் ஒரு பொருட்டா மதிச்சு உங்க கவனத்தை பெற என்ன என்ன செய்யுறானுக. ஒரு உலக அந்தஸ்தை பெற இன்னும் கொஞ்சம் தூரமே பாக்கி. காலரை தூக்கி விட்டு கிட்டு நடங்க.//

    அதனாலே அவர் புக்கை பப்ளிஷ் பண்ணிடுங்க உடனே!

  • //”அடக்கஷ்டமே. நான் ஒரு கவிஞன் கூட இல்லையே? என்னை ஏன் பழிவாங்க நினைக்கவேண்டும்?//
    இதைப் படித்த பிறகு வைரமுத்துவும் வாலியும் உடன்பிறப்புக்களை ஏவிவிட்டு உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

    //கடவுளே, இருவரில் ரொம்ப நல்லவரான ஒருவரையாவது நீ காப்பாற்றித்தான் ஆகவேண்டும்.//
    அது எப்படி உங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கடவுளிடம் வேண்டலாம் என்று மானமிகு பகுத்தறிவாளர் 63 நாயன்மார் புகழ் கலைஞர் கருணாநிதி உங்கள் மீது கோபமாக இருக்கிறாராம்.

    //கலைஞருக்குக் கூட சோதிடர்கள் கண்டிப்பாக இப்படித்தான் சொல்லியிருப்பார்கள். மே மாதம்வரை உங்களுக்கு கிரகங்கள் உச்சம். எந்தச் சிக்கலும் இருக்காது.//
    அப்படியானால் மே மாதத்திற்குப் பிறகு சிக்கல் தானா. இப்படி பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பேசுவதால் தி.க. வீரமணி உங்கள் மீது துர்பெரியார் (துர்வாசர் என்பதன் பகுத்தறிவுப் பெயராக்கம்) போலக் கோபம் கொண்டுள்ளாராம்.

    சற்றே எச்சரிக்கையாக இருங்கள்.

  • இதே நிலைமை எனக்கும் ஏற்பட்டது. பல விதமான தாக்குதல்கள். ஒரு சமயம் Rear Mirror இல் இருக்கும் ரப்பர் cosmetic ஐ எந்த புண்ணிய கேடியோ கழட்டி சென்று விட்டான். அதை மாட்டினால் அடுத்தது ரெண்டு Mirror ஐயே காணோம். ஒரு சமயம் ஏதோ ஒரு சாவி போட்டு திருட பார்த்து, கடைசியில் என் ஒரிஜினல் சாவி எ உள்ளே செல்ல வில்லை. பின்னால் பெட்ரோல் கி ஐ ஓபன் செய்து விட்டுசெல்வது என்று, பல வகையில் குடைச்சல் தான். கடைசியில் இப்ப நா ஆபீஸ் மாறி, பஸ் இல் செல்வதால், சமீப காலமாக தொந்தரவுகள் அவ்வளவாக இல்லை. ஆளை பிடிக்க முடியாவிட்டால், ஒரே வழி ‘பழமொழி சொன்ன அனுபவிக்கணும், ஆராய கூடாது’ என்பது போல இருக்க வேண்டியது தான். 🙂

  • இது மொசாத் அமைப்பின் சதி. நிலமெல்லாம் ரத்தம் தொடரில் அவர்களை பற்றிய உண்மைகளை எழுதியதால், தனது சென்னை முகவர்களை கொண்டு உங்கள் உந்துருளியை பழுது செய்கிறார்கள். கவனம்.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading