சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் லட்சணம் எவ்வாறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதற்காக நாலு உதாரணங்கள் எடுத்துப் போடப்போக, நீ ரொம்ப யோக்கியமா, அது ரொம்ப யோக்கியமா, இது ரொம்ப யோக்கியமா என்று நல்லவர்கள் பலர் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். சமச்சீர் கல்வித் திட்டம் தேவையா இல்லையா என்பதில் என்னுடைய நிலைபாடு என்ன என்று வெளிப்படையாக அறிவித்தாக வேண்டும் என்று சிலர் கேட்டிருந்தார்கள். ஃபேஸ்புக்கில் யாரோ இன்னும் நல்லவர் நானொரு பாப்பான், அதனால்தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கிறேன் என்று எழுதியிருப்பதாக ஹரன் பிரசன்னா சொன்னார். பூமி சரியாக அதன் அச்சில் சுழலவேண்டுமென்றால் இதெல்லாம் இப்படி இப்படி இருந்தால்தான் சாத்தியம். ஆகவே, வருத்தமில்லை.
ஆனால் வேறொரு வருத்தம் உண்டு. பள்ளி நாள்களில் எந்த வகுப்பிலும் ஒழுங்காகப் படித்தறியாத வெறும் மக்குப் பையனாக இருந்தவன் நான். கல்லூரிக்குச் சென்றபோது ஒரு சிறு பரிமாண வளர்ச்சி மட்டும் இருந்தது. வெறும் மக்காக இருந்தவன், பொறுக்கி மக்காக அங்கே மலர்ந்தேன். அப்போதெல்லாம் பாடங்கள் எத்தனை அற்புதமாக இருந்தன தெரியுமா என்று எடுத்துக்காட்ட எனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. எப்போதும் பாடப்புத்தகங்களை ஒழுங்காகப் படிக்காதவனாகவே இருந்திருக்கிறேன். என்னையும் பொருட்படுத்தி சமச்சீர் கல்வித் திட்டம் குறித்துப் பேசினால்தான் ஆச்சு என்று நண்பர்கள் இங்கே கேட்பது கொஞ்சம் குற்ற உணர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் கேட்டுவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் நான் என்ன எதிர்பார்த்து ஏமாந்தேன் என்பதை நினைவுகூர்வதன்மூலம் கல்வி சார்ந்த என் விருப்பம் மற்றும் நிலைபாட்டை எடுத்துக்காட்ட முடியும் என்று நினைக்கிறேன். இது சற்று பெரிய சப்ஜெக்ட். கட்டுரை நீண்டுவிடக்கூடிய அபாயத்தை இப்போதே உணர்கிறேன். தேவைப்பட்டால் சில பகுதிகளாகவும் பிரித்து எழுதுவேன். போரடித்தால் சொல்லுங்கள், சுருக்கிக்கொள்ளப் பார்க்கிறேன்.
ஒரு விஷயம். சமச்சீரில்தான் இது ஆரம்பித்தது. ஆனால் அந்த விஷயத்தை இந்தக் கட்டுரை தொடக் கொஞ்சம் தாமதமாகலாம். பொறுத்துக்கொள்ளுங்கள். இனி விஷயம்:
என் முதல் விருப்பம், பள்ளிப்படிப்பு என்பது அச்சமூட்டுவதாக இருக்கக்கூடாது என்பதுதான். காலத்துக்குப் புறம்பான பாடங்கள் கூடவேகூடாது என்பது இரண்டாவது. வாழ்க்கைக்கு உதவாத எதுவும் வேண்டாம் என்பது மூன்றாவது. வாசித்து முடித்ததும் குறைந்தது ஒரு நிமிடமாவது தன்னியல்பாகச் சிந்திக்கத் தூண்டாத எந்தப் பாடமும் இருக்கலாகாது என்பது நான்காவது. உயிரோடு இருக்கும் எந்த மதத்தலைவர், அரசியல் தலைவர், மக்கள் தலைவரைப் பற்றியும் ஒருவரியும் வேண்டாம் என்பது ஐந்தாவது.
அச்சமூட்டும் பாடம் என்பது என்ன?
எழுதப்பட்டிருக்கும் மொழி அச்சமூட்டுவதாக இருக்கலாம். எழுதப்பட்ட விஷயம் மாணவர்களின் புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். அவர்களது ஆர்வத்தை அறவே வெட்டி எறியத்தக்கதாக இருக்கலாம். தலையெழுத்தே என்று படித்துத் தொலைக்கவேண்டியதாக இருக்கலாம்.
ஏழாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ எனக்குத் தமிழ்ப்பாடம் ஒன்று அப்படி இருந்தது நினைவுக்கு வருகிறது. அழகு என்றால் என்ன என்பது பற்றி திருவிக எழுதிய ஒரு கட்டுரை.
அழகு என்பது நிறத்திலோ, மூக்குக் கண்ணாடியிலோ, கழுத்துச் சுருக்கிலோ, பட்டுடையிலோ, பிற அணிகலன்களிலோ அமைவதன்று. மூளை இதயம் நுரையீரல் கல்லீரல் போன்ற பேருறுப்புகள் செழீஇய நிலையில் நின்று ஒழுங்குபெறக் கடனாற்றலால், நரம்புக் கட்டினின்றும் தடைபடாக் குருதியோட்டத்தினின்றும் முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகாம்.
என்பது அக்கட்டுரையில் ஒரு பத்தி. [இடையே ஓரிரு வரிகள் விடுபட்டிருக்கலாம். மறந்துவிட்டது.] ஒரு மாதிரி குத்து மதிப்பாகப் புரிந்துவிடுவதில் பிரச்னை இல்லையே என்று தோன்றலாம். அது இப்போது. ஏழாம் வகுப்பில் இருந்தபோது இந்தப் பத்தியைப் புரிந்துகொள்ள நான் பட்டபாடு இன்னும் நினைவில் இருக்கிறது. செழீஇய நிலை என்றால் என்னவென்று தெரியவில்லை. பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே என்று தருமிக்கு சிவபெருமான் எழுதிக்கொடுத்ததை ஓகே செய்த ஏ.பி. நாகராஜனுக்கே புரிந்திருக்க வாய்ப்பில்லாதபோது என் தமிழாசிரியர் பழனி ஐயாவுக்குப் புரிந்திருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்த்திருக்கக்கூடாது. அவர் திரும்பத் திரும்பப் பத்தியைப் படித்து போர்டில் எழுதினாரே தவிர, பதம் பிரித்துப் பொருள் சொல்லவேயில்லை. மனப்பாடம் பண்ணிக்கங்கடா, பரீட்சைல கண்டிப்பா வரும் என்று மட்டும் சொன்னார்.
இந்த கெழீஇய, செழீஇயவெல்லாம் செத்து பத்து நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பிறகும் எதற்குக் கட்டிக்கொண்டு அழவேண்டும்? சரி திருவிக பெரியவர். தனித்தமிழ் ஆர்வலர். அவர் வழி அவருக்கு. அதை எதற்காக ஏழாவது, எட்டாவது மாணவர்களுக்கு கொண்டுவந்து திணிக்கவேண்டும்? தமிழ் என்றால் ஓடு காததூரம் என்று மறைமுகமாகப் பிரசாரம் செய்வதற்கு ஒப்பானதல்லவா இது?
பள்ளி நாள்களில் திருவிக என்பவர் ஒரு பெரும் வன்முறையாளர் எனக்கு. அவரைப் போலவே பரிதிமாற்கலைஞர், விபுலானந்த அடிகள் என்று வேறு சிலரும் இருந்தார்கள். இவர்களெல்லாம் பாடப்புத்தகங்களில் கட்டுரை எழுதவென்றே அவதரித்து வந்து, காரியம் முடிந்ததும் தலைமறைவாகிவிட்டார்கள் என்று நினைத்தேன்.
இப்போது யோசித்துப் பார்த்தால் வெட்கமாக இருக்கிறது. என்ன அழகான தமிழ்! சங்கத் தமிழில் சிங்கிள் டீ போட்டாற்போல! அந்த வயதில் அந்த எழுத்து எனக்கு அதிகமாக இருந்தது. அவ்வளவுதான். எனக்கு என்றால், என்னைப் போன்ற மாணவர்களுக்கு. அதெல்லாம் கிடையாது, படித்துத்தான் தீரவேண்டும் என்பார்களேயானால், பொறுப்பு ஆசிரியர்களுடையதாகும். அவர்கள் என்ன செய்திருக்கலாம்?
சாதாரணக் கட்டுரைகளுக்கும் தனித்தமிழ் ஆர்வலர்களின் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் விளக்கியிருக்கவேண்டும். நல்ல தமிழின் அவசியத்தைப் புரியவைத்திருக்கவேண்டும். நமது தமிழ், நாம்தான் வாழவைக்கவேண்டும் என்று பேசியிருக்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும் காலம்தோறும் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று உதாரணங்கள் காட்டியிருக்கவேண்டும். மொழியின்மீதும் அதன் கட்டமைப்பின்மீதும் உறுதிப்பாட்டின்மீதும் பிள்ளைகளுக்குப் பற்றுதலும் ஆர்வமும் மரியாதையும் ஏற்படும்படிச் செய்திருக்கவேண்டும். செத்துப் போய்விட்ட ஹீப்ரூவை மறுகட்டுமானம் செய்து, சற்றே எளிமைப்படுத்தி ஒரு தேசமே அம்மொழிக்கு மறு பிறப்பு கொடுத்து வாழவைத்த கதையைச் சொல்லியிருக்கவேண்டும். பழனி வாத்தியார்கள் இதைச் செய்திருந்தால் பையன்களுக்குத் திருவிக செழீஇய நிலையில் நிற்கும்போது முகம் சுளிக்கத் தோன்றியிருக்காது.
தமிழ்ப்பாடங்களில் மொழி சார்ந்த பிரச்னைதான் அதிகம். வரலாறு, புவியியல், அறிவியல் போன்ற பாடங்களில் தகவல் போதாமை அல்லது தகவல் குறைபாட்டினால் உண்டாகும் இடைவெளிகள் பிரதானமானவை.
உதாரணத்துக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். அசோகர் என்று சொன்னதும் உங்கள் மனத்தில் தோன்றும் பிம்பம் என்ன? எனக்கு, கிரீடத்தைக் கழட்டி தூர வைத்துவிட்டு, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு குளம் வெட்டுகிற ஒரு சித்தாள் தோற்றம்தான் மனத்தில் முதலில் வரும். நாலு மரத்தை நட்டு ஒரு குளத்தை வெட்டினால் சரித்திரத்தில் இடம் பிடித்துவிடலாம். எத்தனை தேசத்தை சூறையாடியிருந்தாலும் சரி. எத்தனை உயிர்களை பலிகொண்டாலும் சரி. இறுதியில் சாகப்போகுமுன் திருந்திவிட்டால் போதும். சரித்திரத்தில் துண்டு போட்டுவிடுவார்கள்.
தோன்றுமா தோன்றாதா? எனக்குத் தோன்றியிருக்கிறது. அசோகனைக் கெட்டவனாகவும் ஔரங்கசீப்பை நல்லவனாகவும் எனக்கு என் சரித்திரப் புத்தகம்தான் சொல்லிக்கொடுத்தது. குல்லா தைத்து விற்று சம்பாதித்து சொந்த செலவைப் பார்த்துக்கொள்ளும் ஔரங்கசீப். குரான் எழுதி விற்று சம்பாதித்த ராஜா. எளிமையின் திருவுருவம். ஏதோ ஆத்திரத்தில் சீக்கிய குரு தேஜ் பகதூரைக் கொன்றுவிட்டார். வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர நிலுவைக்குப் போயிருக்கிறது. மற்றபடி ரொம்ப நல்லவன். உத்தமோத்தமன்.
இன்னொன்றும் கண்டுபிடித்தேன். சரித்திரப் பாடநூலாசிரியர்களின் புரிதலின்படி வெறும் படையெடுப்பாளர்கள் கெட்டவர்கள். அவர்களே டெல்லியில் தங்கி ஆட்சி புரிந்துவிட்டால் நல்லவர்கள். கஜினியும் கோரியும் கெட்டவர்கள். அக்பர் நல்லவர். ஔரங்கசீப் நல்லவர். ஷாஜஹான் சிறந்த காதலர் – ஆனால் மகனே நீ காதல் கீதல் என்றால் தோலை உரித்துவிடுவேன் – துக்ளக் நல்லவர். ஆனால் என்ன, அடிக்கடி தலைநகரத்தை மாற்றுவார்.
ஒரு காமெடி, இந்த முகலாய ஆக்கிரமிப்பாளர்களெல்லாம் எப்படியோ நமது சரித்திர ஆசிரியர்களுக்கு நல்லவர்களாகப் போய்விட்டார்கள். இதே காரியத்தைத்தான் பின்னாளில் பிரிட்டிஷ்காரர்கள் செய்தார்கள். அவர்கள் மட்டும் ஏன் கெட்டவர்கள்? அதெல்லாம் கேட்கப்படாது. ஏனென்றால் அங்கே நல்லவர்கள் கேடகரிக்கு காந்தி இருக்கிறார். நேரு இருக்கிறார். படேல் இருக்கிறார். ஒரு பெரும் படையே இருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் சந்தேகமில்லாமல் கெட்டவர்கள்தாம். அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் அல்லவா? அதுதான் காரணம். ஆனாலும் விக்டோரியா மகாராணியார் மாட்சிமை பொருந்தியவர். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. அவர்தான் இந்தியாவுக்கு முதல் முதலில் ரயில் வண்டியைக் கொண்டுவந்தவர்.
சென்ற வருடம் – அதற்கும் முன்பா என்று சரியாக நினைவில்லை. இந்த சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இருந்த என் நண்பரான பெண்மணி ஒருவருடன் இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். வேறு வழியே இல்லை. நாநூறு, ஐந்நூறு சொற்களுக்குள் ஒரு பாடம் எழுதப்பட்டாக வேண்டும். எத்தனை தகவல்களைக் கொடுக்க முடியும்? அதில் எவற்றை முழுமையாகக் கொடுப்பது? அதனால்தான் பாடங்கள் இப்படி ஆகிவிடுகின்றன.
எனவே பாடங்கள் பிரச்னை. சொல்லித்தருபவர்கள் அடுத்த பிரச்னை. பாடத்திட்டத்தை வகுப்பவர்கள் ஒரு பிரச்னை. அவர்களுக்கு வழி காட்டி, எல்லை வகுத்துக் கொடுப்போர் அடுத்த பிரச்னை. அனைத்துக்கும் மேலே ஆதிபகவனான அரசாங்கம். அது திமுகவா அதிமுகவா என்பது உச்சக்கட்டப் பிரச்னை.
பெரும்பாலான பெற்றோர் சிபிஎஸி சிலபஸுக்குள் பிள்ளைகளை நுழைத்துவிட விரும்புவதன் அடிப்படை இங்கே இருக்கிறது. தேசப்பொதுவான பாடத்திட்டம். நினைத்த மாத்திரத்தில் புத்தகத்தை யாரும் தூக்கிக் கடாசிவிட்டுப் புதிய பாடம் எழுத வரிந்துகட்ட மாட்டார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்து ஆயிரத்தெட்டு பிழைகள் சேர்க்க மாட்டார்கள். தரத்தில் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம் அவசியம் இருக்கும். என்ன கொஞ்சம் செலவு கூடுதல். ஒழியட்டும்.
கல்வி ஒரு விளையாட்டல்ல என்பது நமது ஆட்சியாளர்களுக்கு முதலில் புரியவேண்டும்.
[வேறு வழியில்லாமல், தொடரும்.]
எனக்கு இது புரிய கொஞ்சம் சிரமமாக தான் உள்ளது…??????
ஆட்சியாளர்களுக்கல்ல, முதலில் நமக்கே இவ்விஷயத்தில் தெளிவும் தீர்மானமும் தேவை, என்ன, எவ்வளவு, எப்படி வேண்டும் என்று.
ஆகவே, விரிவாகவே எழுதுங்கள் பாரா.
நன்றிகள் பல.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
சமச்சீர் கொலை பதிவை படித்து நானும் சமச்சீர் புத்தகம் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. நீங்கள் விரிவாக எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன். நீங்கள் ஏமாற்றவில்லை. தயவு செய்து இன்னமும் எழுதுங்கள் அதை பற்றி. குருடர்கள் யானையை தடவியது போலவே பலரும் எழுதி வருகிறார்கள். ஒன்றும் விளங்கவில்லை. சமுதாயத்திற்கு தேவையான கருத்து தயவுசெய்து முழுவதும் முடித்து விடுங்கள்.
சூப்பரு!
பாரா சார், கட்டுரை நன்றாக வந்துள்ளது. தொடருங்கள். அதே சமயத்தில் எனக்கு ஒரு சந்தேகம். தீர்த்து வைக்க உங்களால் முடியுமா? நான் 10 வது வகுப்பு படிக்கும் போது 400 மார்க்கு மேல் வாங்குவது என்பதே குதிரைக்கொம்பு. எங்கள் பள்ளியிலேயே மொத்தம் 5 பேர் தான் வாங்கினோம். திருச்சியில் ஒரு 20 பேர் இருந்திருக்கலாம். நினைவில்லை. அதேபோல் +2வில் 1000க்கு மேல் எடுப்பதும் கடினம். ஆனால், இப்போது பாருங்கள், 10வதில் 496 எடுத்த மாணவர்கள் மட்டும் 5 பேர். யாரைக்கேட்டாலும் 450க்கு மேல் மார்க் என்கிறார்கள். +2வில் மெடிக்கல் கட் ஆஃப் போனவருடம் 195 என்று நினைக்கிறேன். இந்த வருடம் கட் ஆப் 197 வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 3350 சீட்டுக்கு 30000 ஆயிரம் விண்ணப்பங்கள். வெகு சிலருக்குத்தான் சீட் கிடைக்கப்போகிறது. முன்பெல்லாம் இன்ஜினியருக்கு என்று ஒரு மதிப்பு இருந்தது. இப்போது அப்படி இருப்பது போல் தெரியவில்லை. காரணம் அத்தனை காலேஜ்கள் இருக்கின்றன. மொத்தம் 140,000 சீட்டுகள், இப்போது என்னுடைய கேள்விக்கு வருகிறேன்: 01. கடந்த இருபது வருடத்தில் நம் மாணவர்கள் அனைவரும் மிகப் புத்திசாலியாக மாறிவிட்டார்களா? அதனால் தான் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கின்றார்களா? இது உண்மை என்றால் இருபது வருடத்திற்கு முன்பு படித்தவர்கள் எல்லாம் அந்த அளவு புத்தி போதாதவர்களா? 02. முதல் கேள்விக்கு பதில் “இல்லை” என்றால், நமது பாடத்திட்டத்தில்தான் கோளாறா? உலகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நம் பாடத்திட்டத்தை கடுமையாக்க வில்லையா? என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?
நன்றி பாரா
மிக முக்கியாமான விஷயத்தை மிக லாவகமாக தொட்டு துவக்கியிருக்கிறீர்கள்.
துலங்கும் நிச்சயமாக.
பத்த வச்ச பரட்டைக்கு ஏதாவது செய்தாக வேண்டும்.
உங்கள் சொல் பிரயோகங்களின் வீச்சரிவளால் ரெண்டு சாத்துங்கள்.
கல்வித் தெய்வம் கலைவாணி உங்கள் சொற்களின் கட்டுமானத்தில தனி நடம் புரிய பிரார்த்திக்கிறேன்.
நன்றி.
வாழ்க வளர்க.
கட்டுரையின் நீளம் குறித்து எந்தக் குறையொன்றுமில்லை.
உங்களுக்கும் அப்படியே ஆகுக.
ஆவலோடு முழுதும் பூரணமாக படித்து கிரஹித்துக்கொள்ளவும், எல்லோரும் புரிந்து கொள்ளும் அந்த நல்ல காலம் சீக்கிரமே விடியவும் காத்திருக்கிறேன்.
பாராட்ட வயதில்லை பாரா.
வணங்கி மகிழ்கிறேன்.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.V.
எத்தனை அழகாகவும், எளிதாகவும் சொல்லியிருக்கிறீர்கள்! என்னுடைய எண்ணமும் அனுபவமும் இதே தான் (நான் 1965ல் 10ஆவது முடித்தேன்). அப்போதெல்லாம், திரு உலகநாதன் சொல்வது போன்ற நிலை தான். மேலும் தொடர்ந்து எழுதுங்கள், தயவு செய்து. 🙂
//என் முதல் விருப்பம், பள்ளிப்படிப்பு என்பது அச்சமூட்டுவதாக இருக்கக்கூடாது என்பதுதான். காலத்துக்குப் புறம்பான பாடங்கள் கூடவேகூடாது என்பது இரண்டாவது. வாழ்க்கைக்கு உதவாத எதுவும் வேண்டாம் என்பது மூன்றாவது. வாசித்து முடித்ததும் குறைந்தது ஒரு நிமிடமாவது தன்னியல்பாகச் சிந்திக்கத் தூண்டாத எந்தப் பாடமும் இருக்கலாகாது என்பது நான்காவது. உயிரோடு இருக்கும் எந்த மதத்தலைவர், அரசியல் தலைவர், மக்கள் தலைவரைப் பற்றியும் ஒருவரியும் வேண்டாம் என்பது ஐந்தாவது.//
நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் என்ன செய்வேன் என்றால் வாத்தியார் நல்லா சொல்லித் தந்தா கவனிப்பேன். ஓரளவு ஞாபகத்தில் இருந்தத அப்படியே சொந்த நடையில தேர்வில எழுதுவேன். இதுல காமெடி என்னன்னா நான் எதை எழுதினாலும் மதிப்பெண்கள் போடுவார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சுதந்திரம். வாத்தியார் சரியா சொல்லித் தரலையா முக்கியமானத மட்டும் படிச்சிட்டுப் போவேன். தேர்வைச் சமாளிப்பேன். இன்னொரு பெரிய விஷயம் யாரும் மதிப்பெண்கள் வாங்குவதைப் பற்றி கவலையே படமாட்டார்கள். வீட்டிலயும் கேட்க மாட்டார்கள். இந்த மிகப்பெரிய சுதந்திரத்தால படிப்பில ஒரு வெறுப்பு வரவேயில்லை. ஒன்பாதாவது படிக்க ஆரம்பிக்கும்போது தன்னால ஆர்வம் வந்திடுச்சு. இதுபோன்ற ஒரு சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இந்த ஆங்கிலப் பள்ளிகள் எல்லாம் சும்மா படி படின்னா வெறுப்புதான் வரும். ஆர்வம் வராது.
சபாஷ் பாரா – சரியான பதிவு
நல்ல பகிர்வு, தொடருங்கள். ஒரு விவாதமாவது தொடங்கட்டும்.கல்வி ஒரு விளையாட்டு அல்ல என்பதை புரிய வைப்போம்
அன்புடன்
ராமசந்திரன்
Abu Dhabhi
சூப்பர் சார் …….
திரு.உலகநாதன் அவர்கள், கேட்டத்தோட இதையும் சேத்துக்கோங்க சார்,
இப்போ கடைசியா நாளஞ்சி வருஷமா பாஸ் ஆகறவங்க பர்செண்டேஜும் அதிகமா இருக்கே, அப்போ எல்லாரும் இப்போ நல்ல படிக்க ஆரம்பிச்சிட்டாங்களா, அதுக்கு முன்னாடி படிச்ச என்னமாதிரி ஆளுங்கெல்லாம் ஒழுங்க படிக்கலையா.
Interesting prologue for a long serial. The topic demands it. I obtained 377 out of 600, and still came second in the class for SSLC exam. As Mr Ulaganathan stated, I am also amazed at the high scores the current generation gets, however, no aspersion towards this generation, who, in my opinion, are far more intelligent than the earlier ones. A pat for this beautiful expression – //சரித்திரத்தில் துண்டு போட்டுவிடுவார்கள்//
நமது பாடத் திட்டம் மெகாலே கல்வித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் புரிந்து படித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.மனப்பாடம் செய்தால் போதும். பாடத்திட்டம் மாணவனின் அறிவுத் திறனை மேம்படுத்துகிறதா, வாழ்க்கையில் உதவுகிறதா என்ற கவலை எல்லாம் கிடையாது. இந்தக் கேள்விக்கு இந்தப் பதில். அதைச் சரியாக மனப்பாடம் செய்து எழுதினால் போதும். படிக்கும் மாணவர்கள் லிஸ்டில் சேர்ந்துவிடலாம். மாணவர்கள் படித்ததைப் புரிந்துகொண்டு, தன்னுடைய புரிதலில் பதில் அளித்தால் அது சரியாக இருந்தாலும் மதிப்பெண்கள் கிடையாது. புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை இங்கே அப்படியே காபி செய்துவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவுரைகளில் இதுவும் ஒன்று. பத்தாம் வகுப்பில் பள்ளி நூறு சதம் தேர்ச்சி விகிதம் பெற வேண்டும், மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கில், பத்தாம் வகுப்பு ஆரம்பமாகும் முன்பே விடுமுறைகளில் ஓராண்டு பாடத்தையும் நடத்திவிடுகிறார்கள். பள்ளி திறந்ததில் இருந்து ரிவிஷன்தான். உருப்போட்டு உருப்போட்டு மண்டையில் ஏற்றி விடுவதால் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
முதலில் பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும். ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். எல்லோருக்கும் பொதுவான கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். சட்டென்று மாற்றி, இவற்றை நடைமுறைப் படுத்திவிட முடியாது. அரசாங்கம் முதல் கல்வியாளர்கள் வரை மனநிலை முதலில் மாற வேண்டும்.
Nuffield Foundation ukயில் செய்வது போல இங்கும் ஓர் அமைப்பை ஆரம்பித்து, கல்வி தொடர்பான விஷயங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். அதில் இருந்து கிடைக்கும் விஷயங்களைப் பாடத்திட்டங்களில் அமல்படுத்தலாம்.
அருமையான விவாதத்தை தொடங்கி உள்ளீர்கள். சமச்சீர் கல்வியில் அப்படி என்னதான் புதிதாக உள்ளது என புரியவில்லை. உலக நாதன் கேட்டு விட்டார். அத்தோடு “மனபாட” பகுதி என ஓன்று இருக்குமே.. “உயர்வர உயர்நலம் உடையவன் எவனவன், மயர்வறு மதிநலம் அருளினான் எவனவன்..”னு இதிலும் இருக்குமா..! சி பீ எஸ் சி யில் இந்த தொந்திரவு கிடையாதாம். அடுத்த பகுதியையும் படித்து விடுகிறேன்.
அசோகனைக் கெட்டவனாகவும் ஔரங்கசீப்பை நல்லவனாகவும் எனக்கு என் சரித்திரப் புத்தகம்தான் சொல்லிக்கொடுத்தது.//
தலைகீழாக எழுதப்பட்டிருக்கிறதோ?
அற்புதம்! எக்ஸலன்ட். வாழ்த்த வயதில்லை தலைவணங்குகிறேன்!
Thanks for the nice article. I was expecting this from you.
பா.ரா.சார் எனது மகள் +2 வில் 1160 வாங்கியவள்.ஆனால் இன்னும் சரியாக மனியாடர் பாரம் பில் பண்ண தெரியவில்லை! சமச்சீர் கல்வி இக்குறையை போக்குமா ?
நூத்துல ஒரு வார்த்தை சூத்துல அடிச்சா மாதிரி!
அசிங்கமா எழுதிட்டேனோ? பரவாஇல்லை. என்னை மாதிரி, உங்கள மாதிரி புத்திசாலிகளை முட்டாள் போல் தோற்றம் அளிக்க செய்த பாட திட்டத்தை என்ன திட்டினாலும் தகும்.
//வாழ்க்கைக்கு உதவாத எதுவும்/
சிந்திக்கும் போது கூட கன்ஸுமரிசம் ? (consumerism)
கல்விக்கு நோக்கம் பயன் இல்லை (அதுவும் இருக்கலாம் வாழ்க்கை கல்வி என்று ஒரு பகுதியாக ) கற்று தெளிவதே !
ரொம்ப வருஷத்துக்கு முன்னால் என்னுடய தமிழாசிரியர் வெண்பாவுக்கு சொல்லிக் கொடுத்தது நினைவு வருகிறது.
“நாச்சீர் முச்சீர் நடுவே தனிச் சீர்
நாச்சீர் முச்சீர் நடப்பது வெண்பா”
நாங்கள் சீர், தளை பிரிக்கப் போராடியது இருக்கட்டும். இதென்ன சமச் சீர்? எங்கிருந்து வந்தது?
என் வளர்ந்த பையன் சொன்னான் “Appa, it’s creating level playing field”.
இந்த சமச் சீர் கல்வி இங்கேயே படிபவர்களுக்கு இத்தனை பிரச்சினை கொடுக்கலாம் என்றால், இங்கும் அங்கும் (வெளி நாடு என்று பெயர் கொள்க) படிக்க நேரும் அப்பாவி மாணவர்களின் கதி என்ன?
மேலே சொன்ன அதே பையன் நாலாம் வகுப்பு மும்பயில் படித்து விட்டு என்னுடைய வேலை மாற்றலில் இங்கிலாந்தில் படிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படியே உல்டா! வீட்டுப் பாடம் கிடையாது. முதலில் ப்ராச்டிகல். அப்புறம் அதை விளக்கும் தியரி. மாணவர்கள் வகுப்பில் செய்த வேலைகளை அப்ப அம்மாவுக்கு பெருமையுடன் காண்பிக்கும் ஆசிரியப் பெருமக்கள்.
எட்டாம் வகுப்பில் திரும்பி மும்பை வந்தால், திரும்ப உல்டா! எல்லாம் மனப் பாடம். இதில் மீண்டு வர ஒரு வருஷம் பிடித்தது. பல வருஷஙகள் சென்ற பின்னும் அவன் இன்னும் என்னை கடும் பார்வை பார்க்கிரான்.
ஆகவே எல்லா பார்வைகளிலும் எழுதுங்கள். முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
||ஒரு காமெடி, இந்த முகலாய ஆக்கிரமிப்பாளர்களெல்லாம் எப்படியோ நமது சரித்திர ஆசிரியர்களுக்கு நல்லவர்களாகப் போய்விட்டார்கள். இதே காரியத்தைத்தான் பின்னாளில் பிரிட்டிஷ்காரர்கள் செய்தார்கள். அவர்கள் மட்டும் ஏன் கெட்டவர்கள்? அதெல்லாம் கேட்கப்படாது. ஏனென்றால் அங்கே நல்லவர்கள் கேடகரிக்கு காந்தி இருக்கிறார். நேரு இருக்கிறார். படேல் இருக்கிறார். ஒரு பெரும் படையே இருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் சந்தேகமில்லாமல் கெட்டவர்கள்தாம். அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் அல்லவா? அதுதான் காரணம்.||
பாரா,எவ்வளவு பெரும்போக்கான-ஸ்வீப்பிங்- ஒரு வாக்கியம்.
தில்லியில் ஆண்ட முகலாயர்கள் இந்திய செல்வங்களைக் கொள்ளையடித்து வேறு நாட்டுக்குச் சென்று விடவில்லை..ஆனால் கஜினி முகமதுவோ அல்லது பிரிட்டிஷ் காரர்களோ இந்தியாவின் செல்வங்களைக் கொள்ளையடித்து தத்தமது நாடுகளைக்குக் கடத்தியவர்கள்..
பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான பருத்தி போன்ற மூலப் பொருள்களை நாட்டிலிருந்து ஆட்சியாளர் என்ற முறையில் திருடியது;இங்கிலாந்தில் தயாரிக்கப் பட்ட துணிவகைகளை திரும்பவும் இந்தியா போன்ற காலனி நாடுகளில் விற்று அதன் மூலம் இலாபம் சம்பாதித்தது…இருவழிக் கொள்ளை!
ஔவரங்கசீப் இந்தியாவைக் கொள்ளையடித்து வேறு நாட்டுக்கு மூட்டை கட்டினாரா என்ன?
அக்பர் செய்தாரா என்ன?
ஆங்கிலேயர் ரயில் வண்டி கொண்டு வந்ததெல்லாம் அவர்களது வணிக முயற்சிகளுக்கு உதவியாக இருக்க,வேறு வழியற்று கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை இருந்ததினால் அல்லவா?
||பெரும்பாலான பெற்றோர் சிபிஎஸி சிலபஸுக்குள் பிள்ளைகளை நுழைத்துவிட விரும்புவதன் அடிப்படை இங்கே இருக்கிறது. தேசப்பொதுவான பாடத்திட்டம்.||
சமச்சீர் பாடத்திட்டத்தின் நோக்கமும் அதுதானே…அனைவருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம்…ஏன் வசதி இருப்பவர்களும்,நகரப் பிரமுகர்களைம் மட்டும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பலனை அனுபவிக்க வேண்டும்?
சமச்சீர் பாடத்திட்டத்தின் தரம் சீர்ப்படுத்தப் படவேண்டும் என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்..ஜெயும் இப்போது அந்த நோக்கத்தில்தான் இவ்வருடம் நிறுத்தி வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்..
முந்தைய ஜெ.க்கும் இப்போதைய ஜெ.க்கும் சிற் சில நல்ல வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது..நிலைக்குமா என்று தெரியவில்லை!
migavum unmai and Sathyam.
மிகவும் நல்ல மக்களுக்கு தேவையான கருத்துகளையுடைய ஒரு படைப்பு.நன்று வாழ்க வளமுடன்