தனியா-வர்த்தனம் 2

விடிந்ததும் பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிட முடிவு செய்திருந்தேன். மாவோயிஸ்டுகளும் ரயில் கொள்ளையரும் காலைப் பொழுதை அநேகமாக எதற்கும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றொரு எண்ணம்.

அவ்வண்ணமே படுக்கையை விரித்து, இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தும் விட்டேன். ஒரு சில நிமிடங்களில் அந்த தடதட சத்தம் ஆரம்பித்துவிட்டது. புத்திக்குள் பல்ப் எரிந்தது. மகனே இது வடவர் தேசம். இங்கே ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட், அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட் என்கிற பேதமெல்லாம் இல்லை.

மெல்ல திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தால் சுமார் 101 பேர் நான் வசித்த கம்பார்ட்மெண்டின் கதவருகே நின்று தட்டு தட்டென்று தட்டிக்கொண்டிருந்தார்கள். கதவைத் திற. கலவரம் வரட்டும். ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த புலர்காலைப் பொழுதிலாவது ரயில்வே சிப்பந்திகள் யாராவது, முதல் வகுப்புச் சிறைவாசி உயிருடன் இருக்கிறானா என்று பார்க்க வந்திருக்கலாம். வரவில்லை. எனவே என் தனிப்பட்ட புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, சிக்கலேதும் உருவாகாதிருக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தேன்.

நடனமாடிப் பார்க்க ஆசைப்பட்டேன் என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒரு பகுதியாக, மூடிய கதவுக்குப் பின்னால் கண்ணாடி சன்னலின் அருகே பாதுகாப்பாக நின்றபடி அபிநயம் மட்டும் பிடிக்க ஆரம்பித்தேன். இது முதல் வகுப்புப் பெட்டி. நீங்கள் இடம் மாறி வந்து கதவைத் தட்டுகிறீர்கள். இது முதல் அபிநயம். அடுத்த அபிநயம், என்னால் கதவைத் திறக்க முடியவில்லை. எங்கோ சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதாகும்.

திறந்துவிட்டால்தான் என்ன என்றும் தோன்றியது. ஆனால் பன்னிரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய மூன்று கேபின்கள் கொண்ட தனி கோச். 101 பேரை நிச்சயம் தாங்காது. எப்படி ஒரே ஒரு நபரைத் தாங்கத் திணறுகிறதோ அதே போல. பேசாமல் நடைவழியாக அடுத்த கம்பார்ட்மெண்டுக்கே போய்விடலாமா என்றும் நினைத்தேன். இதற்குள் வெளியே கதவிடித்த கூட்டம் கோபம் கொண்டு வேகமாக இடிக்கவும் காலால் உதைக்கவும் தொடங்கிவிட்டது. ஒருவேளை அந்தத் தாக்குதலில் கதவு திறந்துகொண்டால் என்னை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே போட்டுவிட்டுத்தான் அவர்கள் கோட்டையைப் பிடிப்பார்கள் என்று தோன்றியது. பயமாக இருந்தது.

நல்ல வேளையாக ரயில் புறப்பட்டுவிட்டது. அதன்பிறகு போபால் வரை எனக்குத் தூக்கம் வரவில்லை. கேட்டரிங் கலைஞர்கள் உப்புமா மட்டும்தான் சைவத்தில் உண்டு என்று சொல்லி ஒரு பிளேட் கொண்டுவந்து வைத்துச் சென்றதைச் சாப்பிட்டு ஒரு மாதிரி கிறுகிறுத்துப் போயிருந்தேன். அந்த முக்கால் மயக்க நிலையை சமாதி யோகம் என்றும் சொல்வார்கள். உலகம் எத்தனை மாறினாலும் ரயில்வே கேட்டரிங் என்பது ஒருபோதும் மாறாது. நாக்கில் படமுடியாத அதன் அவருசி, வாழ்வின் ஏதோ ஒரு குறிப்பிட்ட கேடுகெட்ட அம்சத்தின் நிரந்தரக் குறியீடு.

அன்று மாலை வரை பரீட்சைக்குப் படிப்பவன்போல் படித்துக்கொண்டிருந்தேன். தனிமை தனியாகத் தெரிந்த சமயங்களில் வாய்விட்டு உரக்கவும் படித்தேன். அலுப்புண்டான சமயங்களில் நண்பர்களுக்கு போன் செய்தேன். இந்தப் பயணம் ஒரு நல்ல பாடம் கற்றுத் தந்தது. பல்லாண்டு காலமாக அப்படியொரு முழுத்தனிமைக்காக நான் ஏங்கியிருக்கிறேன். அப்படியொரு சந்தர்ப்பம் கிட்டுமானால் உலகத்தையே புரட்டிவிடலாம், என்னென்னவோ சாதித்து முடித்துவிடலாம் என்று எப்போதும் எண்ணுவேன்.

ஆனால் ஒரு முப்பத்தியெட்டு மணிநேரம் ஒருவார்த்தை கூடப் பேசுவதற்கு எதிராளி இல்லாமல், மனித வாசனையே இல்லாமல் இருக்க நேருமானால் விளைவு நிச்சயம் விபரீதம்தான். எளிய உதாரணம் – உபயோகமில்லாத இந்தக் கட்டுரை.

Share

7 comments

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி