தனியா-வர்த்தனம் 3

அதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் – மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல பேச்சுத்துணைவர் கிட்டினார். அவர் ஒரு ரயில்வே சிப்பந்தி.

முதல் இரண்டாம் மூன்றாம் ஏசி வகுப்புகளில் முப்பது வருடங்களாக வசித்து வருபவரான அவர், முதல் வகுப்பில் தாம் சந்தித்த சில மறக்கவொண்ணா மனிதர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதிலொன்று அரசியல்வாதிகளைப் பற்றியது. ரயிலில் பயணம் செய்யும் அரசியல்வாதிகள்.

முதல் வகுப்பில் பயணம் செய்யும் அரசியல்வாதிகளிலேயே மிக மோசமானவர் மாயாவதி என்று நண்பர் சொன்னார். மாயாவதி, ஒருபோதும் தன் பயணத்திட்டத்தை முன்கூட்டி ரயில்வேக்குத் தெரிவித்து டிக்கெட் புக் செய்வதில்லை. புறப்படுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னர்தான் தகவல் வருமாம். முதல் வகுப்பில் ஒரு முழு கேபினை அவருக்கு ஒதுக்கியாகவேண்டும். யாராவது ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அவரை இடம்பெயரச் சொல்லவேண்டும்.

வேறு கேபின்களில் இடமில்லாவிட்டால் அன்னார் வேறு கம்பார்ட்மெண்டுக்குப் போகவேண்டியதுதான். மாயாவதி மேடம், மாயாவதி மேடம், நீங்கள் ரிசர்வ் செய்யாதபடியால் உங்களுக்கு இருக்கை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதுவும் குறிப்பாக அவர் கேபின் ‘பி’யைத்தான் கேட்பாராம்.

இது முதல்கட்டம். அடுத்தது இன்னும் விசேஷம். மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி. கதவுக்கு வெளியே இரண்டுபேர் நிற்பார்கள். இந்த மூவரும் அவருக்குக் கால், கை பிடித்து விடுவதற்காக வருபவர்களாம். பொதுவாக அந்த மூவருக்கும் டிக்கெட் வாங்குவதில்லை என்று நண்பர் சொன்னார். ஒரு டிக்கெட்டில் நான்கு பேர் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்கிற புதிய கலாசாரத்தைப் பிற அரசியல்வாதிகளுக்குக் கற்றுத்தந்தவர் மாயாவதி அம்மையார்தான் என்றும் சொன்னார்.

மாயாவதி ரயிலில் ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெட்டியில் உள்ள பணியாளர்களுள் உயர்ந்த க்ரேடு உள்ளவர் யார் என்று கேட்பதுதான். க்ளீனர்கள், மெக்கானிக்குகள், சூபர்வைசர்கள் என்று மூன்று கிரேடுகள் இதில் உண்டு போலிருக்கிறது. இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை.

மாயாவதி ரயிலில் ஏறிவிட்டால் க்ளீனர்கள் சந்தோஷமாகிவிடுவார்கள். அவர்களுக்கு வேலையே இருக்காது என்பது தவிர, சமயத்தில் அம்மையார் கொஞ்சம் பணமும் கொடுப்பார் போலிருக்கிறது. பாவப்பட்ட உயர்ந்த கிரேடு சூபர்வைசர்கள், மாயாவதியின் கேபினை சுத்தமாகப் பெருக்கித் துடைப்பது, கதவு, சன்னல்களில் படிந்துள்ள புழுதியை அகற்றுவது, சிறு கிறுக்கல்கள், கறைகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றைத் துடைப்பது, ஜன்னல் ஸ்கிரீன்களை மாற்றுவது போன்ற திருப்பணிகளை முணு முணுத்தவாறே செய்யக் கடமைப்பட்டவர்கள். தவிரவும் அம்மையாரின் கால்பிடிக்க வந்துள்ள முப்பெரும் தேவியர் என்ன கேட்டாலும் உடனுக்குடன் வாங்கித் தரவேண்டியதும் அவர்கள் பொறுப்பே.

‘அந்தப் பொம்பள ஏறினாலே சனியன் ஏறுதுன்னுதான் சார் சொல்லுவோம்’ என்று அந்த அதிகாரத்தை முடித்தார் நண்பர்.

அடுத்தவர் லாலு. [ரயில்வே ஊழியர்கள் ஒரே ரயிலில் தொடர்ந்து பயணம் செய்வதில்லை. தேசமெங்கும் ரூட் மாற்றி மாற்றித்தான் அனுப்புகிறார்கள்.]

மாயாவதியின் குணாதிசயங்களில் இருந்து சற்றே மாறுபட்டவர் லாலு. லாலு, தாமாக எதையும் பேசமாட்டார், உத்தரவிடமாட்டார். ஆனால் அவருடன் வரும் அடிப்பொடிகள் சுமார் பத்துப்பேர் ரயில்வே ஊழியர்களை வறுத்து எடுத்துவிடுவார்களாம். ஒருமுறை போர்த்திக்கொள்ளக் கொடுத்த கம்பளி குத்துகிறது என்று லாலு சொல்ல, அந்தக் கணமே கம்பளியின் இருபுறமும் வெல்வெட் துணி வைத்துத் தைத்துத் தரச்சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டியிருக்கிறார்கள்.

ஓடுகிற ரயிலில் வெல்வெட் துணிக்கு எங்கே போவது? எப்படியோ சமாளித்து அடுத்த ஸ்டேஷனில் சொல்லிவைத்து, குத்தாத வேறு கம்பளி வாங்கிக்கொடுத்து சமாளித்திருக்கிறார்கள்.

மாதவராவ் சிந்தியா குடும்பத்தில் யாராயிருந்தாலும் முறைப்படி ரிசர்வ் செய்வது வழக்கம். சிந்தியா [இருந்தபோது]வே வந்தாலும் சரி, அவரது உறவினர்கள் யாராயிருந்தாலும் சரி. ஒருபோதும் பிற அரசியல்வாதிகள்போல் கடைசி நேரப் படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லையாம்.

என்ன ஒரே ஒரு விஷயம், அமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட ஆயத்தங்கள் செய்து தயாராக இருப்பார்கள் ஊழியர்கள். ஆனால் ஒருபோதும் ரிசர்வ் செய்த நாளில், ரிசர்வ் செய்த வண்டியில் சிந்தியாக்கள் ஏறியதே கிடையாதாம்.

ரயிலில் குடிக்கக்கூடாது என்பது சட்டம். புகை பிடிக்கக்கூடாது என்பதும் சட்டம். ஆனால் சில பீகார், மத்திய பிரதேச எம்பிக்கள் ஏறும்போதே பெட்ரோல் கேன் அளவுக்கு சரக்கோடுதான் ஏறுவார்களாம். பெட்டியின் நடுவே துணி விரித்து சரக்கையும் சைட் டிஷ்களையும் பரப்பி, சீட்டுக்கட்டு பிரித்து இரவெல்லாம் கூத்தாடுவதில் அவர்களுக்குத் தனிப்பிரியம்.

கேட்கவும் முடியாது. ஏதும் சொல்லவும் முடியாது. எம்பிக்களைச் சுட்டிக்காட்டி மற்ற பயணிகள் தங்களையும் புகைபிடிக்க அனுமதிக்கச் சொல்லி மல்லுக்கட்டுவார்களாம். ‘அதிகாரம்னு ஒண்ணை எவன்சார் கண்டுபிடிச்சான்?’ என்றார் நண்பர்.

வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.

Share

10 comments

  • //இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை. // ஒரு வேளை சமூகத்தைப் புரட்டிப் போடுவதுன்றத அவங்க இப்படித்தான் செயல்படுத்தறாங்களோ என்னவோ? :)))

  • // வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். //

    மம்தா பேணர்ஜியா !! அல்லது அம்மாவா !! 🙂

  • >>வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.

    – This article is now going like the one in Kumudam reporter ;).

  • // வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். //

    மம்தா பேணர்ஜியா !! அல்லது அம்மாவா !!

    அம்மா என்னைக்குங்க ரயில போனாங்க…..?

  • நன்றாக இருந்தது. ரயில் பயணம் எப்பொழுதுமே புது அனுபவம் தான். நானும் மெட்ராஸ்-டில்லி பல முறை சென்றிருக்கிறேன். ராஜ்தானி தான் பெஸ்ட். கடைசியில் சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டீர்களே. நியாயமா?

  • காவியத் தலைவி யார்?

    க்ளூவாவது கொடுங்கள் நைனா.

  • இவ்வளவு மௌனம் காப்பாது பார்த்தால்… அன்னை சோனியா காந்தியாக இருக்குமோ !!

  • //மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி.//

    சார் நான் பயந்தே போயிட்டேன்! முழுசா படிக்காம 😀

    அரசியல்வாதியா இருந்தா எவ்வளோ அனுபவிக்கலாம்.. என்னமோ போங்க சார்!

  • ”வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்”

    இதில் என்ன நாகரீகம் /அநாகரீகம் இருக்கு? நீங்க எழுத்தாளர்தானே, கேட்டதை சொல்கின்றீர்கள். நீங்கள் கேட்டதை எழுதுவதில் எந்த வித அநாகரீகமும் இல்லை, பெயரை வேண்டுமானால் கொடுக்க வேண்டாம் (அடிப்பொடிகள் ஹிம்சையை கருதி)

    Vijayaraghavan

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி