ஒரு வேதாளம் சாத்துக்குடி மரம் ஏறுகிறது

சரியாக ஒரு மண்டல காலம். என்னுடைய டயட் பயிற்சிகளை நிறுத்திவைத்திருந்தேன். தொண்ணூறிலிருந்து எழுபத்திமூன்று கிலோவுக்கு வந்து சேர்ந்ததைக் கொண்டாடலாம் என்று தேவதையோ சாத்தானோ காதோரம் வந்து சொன்னது. அது நடந்தது ஜூன் 13. சில உண்மைக் காரணங்களும் உண்டு. முதலாவது, சோர்வு. இந்தப் பக்கங்களில் முன்னரே எழுதியிருக்கிறேன். டயட் இருப்பது என்பது ஒரு வேலை. பிற வேலைகள் மிகும்போது இந்த வேலை அடிபடும்.

அலுவலகப் பணிகள், இரண்டு திரைப்படங்கள், ஒரு சீரியல், ரிப்போர்ட்டர் என்று முழி பிதுங்கும் நிலை உண்டானபோது எனது டயட் அவற்றுக்கு ஈடுகொடுக்க மறுத்தது. அதனாலும் அதற்கு விடுமுறை அளித்தேன். சரியாக ஒன்றரை மாதங்கள் பார்க்கலாம் என்று முடிவு செய்து டயட்டீஷியனிடம் விவரம் சொன்னேன். ‘நல்லா சாப்டுங்க. ஆனா சாப்பிடறோம்ன்ற குற்ற உணர்ச்சியோடவே சாப்பிடாதிங்க. எப்பவேணா திரும்பவும் எடை குறைக்கலாம்’ என்று சொன்னார்.

இன்னோரன்ன காரணங்களால் டயட்டிலிருந்து வெளியே வந்து பழையபடி கெட்டவனாக முடிவு செய்தேன். ஆனால் காலவரம்பு நிர்ணயித்துவிட்டுத்தான் ஆரம்பித்தேன். 45 நாள்கள்.

இந்த நாற்பத்தைந்து தினங்களில் நான் உட்கொண்ட கெட்ட வஸ்துக்களின் பட்டியல் வருமாறு:-

1. அரிசிச் சோறு (தினம் ஒரு வேளை. ஆனால் Full கட்டு.)
2. அப்பளம் (எப்படியும் 20 இருக்கும்)
3. வடை (13)
4. இனிப்பு வகைகள் (கணக்கில்லை. மொத்தமாக ஒரு கிலோ சாப்பிட்டிருக்கலாம்.)
5. இட்லி, தோசை, பூரி, பரோட்டா, நான் (தலா 6)
6. காப்பி (3 தம்ளர்)
7. கட்டித் தயிர் (10-12 கப்)
8. மாம்பழம் (1)
9. வாழைப்பழம் (3)
10. வெங்காய பக்கோடா (200 கிராம்)
11. வேர்க்கடலை பர்ஃபி (5 பாக்கெட்)
12. வெஜ். பஃப் (6)
13. சமூசா (4)
14. பேல்பூரி (ஒரு ப்ளேட்)
15. கோக், பெப்சி, ஸ்பிரைட் (மொத்தமாக ஒரு லிட்டர்)
16. கைமுறுக்கு (2)
17. சூர்யகலா (தஞ்சாவூர் ஸ்பெஷல் – 4)
18. Appy (8)

ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். கூடியவரை ஒவ்வொரு பொருளையும் சாப்பிடும்போது மனத்துக்குள் கணக்கு வைத்துக்கொண்டேதான் சாப்பிட்டேன். குற்ற உணர்ச்சி கூடாது என்று ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொண்டேவும் சாப்பிட்டேன். திருப்தியாக, ஆர்வமாக, ரசித்து ரசித்து.

ஸ்விம்மிங்கை நிறுத்திவிட்டு வாக்கிங் போகலாம் என்று தொடக்கத்தில் எண்ணியிருந்தேன். துரதிருஷ்டவசமாக தினசரி படுக்கச் செல்லவே அதிகாலைச் சமயம் ஆகிவிடுகிறது. சில நாள் அந்த ஒன்றிரண்டு மணி நேரமும் கிடைக்காமல் அப்படியே பல் துலக்கி மறு பொழுதைத் தொடங்கவேண்டிய நிலையும் உண்டானதில், நடைப்பயிற்சியும் செத்தது.

ஆக 45 தினங்களாக உடலுக்கு உழைப்பும் இல்லை, உணவுக்கட்டுப்பாடும் இல்லை. சுத்தம்.

வயிற்றில் பசியென்னும் உணர்வு பூரணமாக நிரம்பியிருக்கும்போது பெரிய காரியங்கள் செய்யமுடியாது போலிருக்கிறது. இந்த ஒன்றரை மாதங்களில் நான் செய்திருக்கும் வேலைகளை டயட்டில் இருந்து செய்திருக்கவே முடியாது என்று நினைக்கிறேன். இது ஓர் அனுபவம். விழிப்புணர்வுடன் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு தினத்தையும்.

அதே சமயம் அனைத்துக்கும் ஒரு விலையுமுண்டு. நான் அளித்த விலை நாலு கிலோ. இப்போது 77.

பாதகமில்லை. நாளை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் என் டயட் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. ஒரே மாறுதல், ஸ்விம்மிங்குக்கு பதில் வாக்கிங். மற்றபடி பழைய டயட். ஜெயமோகன் குறிப்பிட்டிருந்த பழ உணவு சமாசாரங்களைப் பரீட்சித்துப் பார்க்கலாமா என்று ஒரு சில சமயம் தோன்றியது. வீட்டுப்பக்கத்தில் உள்ள முகேஷ் அம்பானி காய்கறி சில்லறை அங்காடியில் விசாரித்துப் பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை வேரறுத்தேன். நமக்கு இது போதும்.

வேலைகள் எது ஒன்றிலும் குறைவில்லை. சொல்லப்போனால் மேலும் அதிகரிக்கும்போலிருக்கிறது. ஆனாலும் இந்த வேலையையும் சேர்த்து எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். டார்கெட் 60 கிலோவைத் தொடும்வரை இனி நிறுத்தப்போவதில்லை. வேண்டியது இன்னும் கொஞ்சம் கூடுதல் ப்ளானிங். மேலும் சற்று மன உறுதி. அவ்வளவே.

[பி.கு. நாராயணன் இனி தாபா எக்ஸ்பிரஸ் இல்லை. மாமி மெஸ்ஸும் இல்லை. ட்ரீட் அல்லது டிவிடி தர விருப்பமென்றால் சஞ்சீவனத்துக்கு மட்டும் வரத்தயார்.]
Share

13 comments

  • கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்… இதுவே உமக்குப் போதும்.

  • சஞ்சீவனம் பாதகமில்லை. மத்தியானம் போனால், ராஜஹம்ச உணவினை ஒதுக்கிவிட்டு, கொஞ்சமாய் காம்போ 2 சாப்பிடலாம். மூன்று சப்பாத்திகள் + காய்கறிகள் + ஒரு நல்ல சப்ஜி, முடிவில் கையில் தேனை வாங்கி ஒரு நக்கு நக்கிவிட்டால் எனக்கான உங்களுடைய ட்ரீட் முடிந்துவிடும்.

  • எம்கேடி ரெடி, சனிக்கிழமை லஞ்சு காம்போ 2 என்ன சொல்றீங்க ?

  • ஐயா,

    நீங்கள் ஏன் முகேஷ் அம்பானி கடைக்கு மட்டும் சென்று பார்க்கிறீர்கள்? தள்ளுவண்டிக்காரர்களிடம் பழங்கள் வாங்கலாமே?

  • //Oru naalaikku ithana item-aa?!//

    டிபிகல் மாயவரக் குசும்பு என்பது இதா?

  • மாம்பழம், வாழைப்பழம் எல்லாம் சைவம் என்றல்லவா நினைத்தேன்! சத்துணவில் இருந்து அதற்கும் தடாவா?

  • baba,

    சைவத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை.[அசைவத்துக்கும் வைணவத்துக்கும் கூட.] மாம்பழத்திலும் வாழையிலும் கலோரி அதிகம். அது டயட்டுக்கு எதிரானது.

  • Dear para, please tell us how to be in diet., me also wants to reduce my weight n tried but failed. please tell me your formula.,

  • சார் எனக்கும் நீங்கள் diet இருந்த பொது உட்கொண்ட உணவுகளை பட்டியலிடுங்கள் ப்ளீஸ்

  • நான் உங்களுக்கு எப்போவோ மெயிலினேன் பாரா. விவரம் சொல்றேன் என்று இப்படி ஒரு பட்டியலா நான் உங்களுக்கு எப்போவோ மெயிலினேன் பாரா. விவரம் சொல்றேன் என்று இப்படி ஒரு பட்டியலா :(.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி