ஒளியும் ஒலியும் (கதை)

அவனுக்குக் கண் தெரியாது. அவளுக்குக் காது கேட்காது; பேசவும் முடியாது. பொருத்தம் சரியாக இருக்கிறது என முடிவு செய்து இரு தரப்புப் பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு செத்துப் போனார்கள்.

ஆரம்பத்தில் வாழ்க்கை சிறிது நன்றாக இருப்பது போலத்தான் இருந்தது. அவள் கருத்தரித்து, குழந்தை பெற்றாள். பிறகு இருவருக்கும் பிடிக்காமல் போனது. தொடர்ந்து அரூபமான உலகில் வாழ முடியவில்லை என்று இருவருமே நினைத்தார்கள். அவன் அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தான். உரத்த குரலில் பயங்கரமாகக் கத்தினான். அவளோடு சண்டை போட்டான். அவன் கோபப்படுவது அவளுக்குப் புரிந்தது. ஆனால் ஒலிகளற்ற கோபத்தை நாளடைவில் ரசிக்கத் தொடங்கிவிட்டாள். தனது கண்ணீரை அவன் ஒருபோதும் உணராத துயரத்தைக் காட்டிலும் அவன் கோபம் பெரிதல்ல என்று நினைத்தாள். என்றைக்காவது தான் அழும் நேரத்தில் அதை உணர்ந்து அவனது கரம் துடைக்க வருமானால் அப்போது அவன் கோபத்தைப் பொருட்படுத்தலாம் என்று நினைத்தாள். ஆனால் அது நடக்கவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் கொலை செய்ய அவரவர் மனத்துக்குள் திட்டம் தீட்டத் தொடங்கினார்கள். வாழ்வில் முதலும் முடிவுமான மகிழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும் என்று இருவரும் நினைத்தார்கள். இருவருமே தமது மகளிடம் இதனைத் தெரிவித்து, அழுதார்கள்.

கண், காது, மூக்கு, வாய் அனைத்தும் சரியாக இயங்கிய அந்தப் பெண், ‘டேக் கேர்’ என்று சொல்லிவிட்டு, வேலை கிடைத்து அமெரிக்காவுக்குச் சென்றாள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி