வேடிக்கை பார்த்தவர்கள் (கதை)

சி ப்ளாக் நான்காவது தளத்தில் வசிக்கும் சொக்கநாத முதலியார் லிஃப்ட் ஏற வரும்போது குரங்குகளைப் பார்த்தார். ஒன்று மிகப் பெரிதாக, புஷ்டியாக இருந்தது. இன்னொன்று குட்டிக் குரங்கு. இரண்டும் லிஃப்ட் அருகே அமர்ந்திருந்தன. சொக்கநாத முதலியாரைப் பார்த்ததும் ‘குர்ர்..’ என்றது பெரியது. அவர் பயந்துவிட்டார். அலறிக்கொண்டு பின்னால் வந்து, ‘யாராவது வாங்க. உடனே வாங்க’ என்று சத்தம் போடவும் கதவு திறந்து வைத்திருந்த சிலர் மட்டும் வெளியே வந்தார்கள். ‘ஏய் போ.. த.. சை.. க்ர்ர்.. பக்க்க்..’ என்று ஒவ்வொருவரும் குரங்குக்குப் புரியும் என்று நினைத்த மொழியில் குரலெழுப்பினார்கள். நாயைக் கண்டதும் கல்லை எடுக்கும் பாவனை செய்வது போல ஒருவர் குரங்குக்குச் செய்து பார்த்தார். அது அசையவில்லை.

முன்னூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில் எப்போதும் இல்லாத வழக்கமாக ஒரு குரங்கு எப்படி வரும் என்று செகரட்டரி கேட்டார். செக்யூரிடிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சத்தம் போட்டார். உடனே செக்யூரிடிகள் ஓடி வந்து குரங்கை வேடிக்கை பார்த்தார்கள். செகரட்டரி மீண்டும் கடிந்துகொண்டதும் பிரம்பை எடுத்து வந்து ‘போ, போ’ என்று விரட்டினார்கள். இரண்டு குரங்குகளும் தாவிக் குதித்து பி பிளாக்குக்குப் போய்விட்டன.

உடனே அங்குள்ளவர்கள் அலறத் தொடங்கினார்கள். பி பிளாக்கில் சில வீரர்களும் இருந்ததால் அவர்கள் குரங்குகளைப் பிடிப்பது போல முன்னால் பாயவும் செய்தார்கள். ஆனால் அவை சிக்கவில்லை. ‘கர்ர்..’ என்று தாய்க்குரங்கு ஒரு முறை முறைத்துவிட்டு வேறிடத்துக்குக் குட்டியைக் கட்டிக்கொண்டு போய் அமர்ந்துகொண்டது. மயிலப்பன் என்னும் மின்சார வாரிய ஊழியர், ஒரு சிறு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பாவனையில் ‘புடி.. புடி.. புடி… புடி..’ என்று பிடிக்கப் போவது போலக் கைகளை முன்னால் நீட்டிக்கொண்டு குட்டிக் குரங்கை நோக்கிப் போகவும், அதுவும் ஆசையுடன் அவர்மீது பாய்ந்துவிட்டது. ‘ஐயோ’ என்று அலறிக்கொண்டு மயிலப்பன் தடுமாறிக் கீழே விழுந்தார். பிறகு அவருக்கு முதலுதவி செய்து ஆசுவாசப்படுத்தினார்கள்.

சுமார் மூன்று மணி நேரம் நான்கைந்து பிளாக்குகளுக்கு இடம் மாறி மாறி இரண்டு குரங்குகளும் ஆட்டம் காட்டின. ‘ப்ளூ க்ராஸுக்கு போன் பண்ணுங்க சார்’ என்று யாரோ சொன்னார்கள். போனை அவர்கள் எடுக்கவில்லை என்று வேறு யாரோ சொன்னார்கள். நகராட்சிக்குத் தகவல் தெரிவித்தபோது, ‘விட்டுட்டு வேலைய பாருங்க. தானா போயிடும். இங்க குரங்கு பிடிக்கல்லாம் ஆள் இல்லை’ என்று சொன்னார்கள்.

இதற்குள் குடியிருப்பு வளாகத்துக் குழந்தைகள் குரங்குகளின்மீது பந்து வீசி விளையாட ஆரம்பித்தார்கள். ‘டேய் டேய்.. வேணாம்டா. கடிச்சி வெக்கப் போகுது’ என்று அவரவர் பெற்றோர் அவர்களை இழுத்துக்கொண்டு போய்க் கதவை அடைத்தார்கள். செக்யூரிடிகள் அவர்களால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்தும் இரண்டு மூன்று மணி நேரத்துக்குக் குரங்குகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிறகு அனைவருக்கும் கிருமி நினைவு வந்து, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதன் பொருட்டு அவரவர் வீட்டுக்குப் போய் கதவைச் சாத்திக்கொண்டு டிவி பார்க்கத் தொடங்கினார்கள்.

‘போலாம்’ என்றது குரங்கு.

‘இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்மா. ஜாலியா இருந்தது’ என்றது குட்டி.

‘அவ்ளதான். இன்னிக்கு மூடிட்டாங்க. நாளைக்கு வரலாம்.’

Share