பல்லே பல்லே…

09072008832.jpg

நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும்.

பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி போல ரொட்டிகளைச் சுட்டுப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அண்டாவில் பருப்பு இருக்கும். பரமாத்மா மாதிரி நீக்கமற எங்கும் உண்டு ஆலூ. அள்ளிப் போட்டுச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். மூச்சு முட்டியபிறகு எவ்ளோ ஆச்சு என்று கேட்டால், உலக உத்தமர்களான அந்த சர்தார்ஜிக்கள் பதினைந்து ரூபாய், இருபது ரூபாய் என்று சொல்லுவார்கள்.

அதன்பின் தாபாக்களுக்கு நான் செல்லும் வாய்ப்பு நேரவில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான தாபாக்களில் சைவ-அசைவப் பாகுபாடுகள் இல்லை என்பதும் ஒரு காரணம்.

மேற்படி செனடாஃப் ரோடு தாபாவில் இரண்டும் உண்டு என்றாலும் தனித்தனி. சைவ பஞ்சாபி மதிய உணவு ஒன்றின் விலை எழுபது ரூபாய். அன்லிமிடெட். பக்கவாட்டுக் குட்டிச் சுவரில் அனைத்தும் வரிசையாக அணிவகுக்க, நாமே எடுத்துப் போட்டுக்கொண்டு இஷ்டப்பட்ட அளவுக்குச் சாப்பிடவேண்டியதுதான். பஃபே சிஸ்டம்.

ரொட்டி ஒரு பக்கம். பரோட்டா ஒரு பக்கம் [பரோட்டாவை மைதாவில்தான் செய்கிறார்களா, மயிலிறகால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அத்தனை மென்மை, அத்தனை மிருது.] புலாவ் அல்லது எலுமிச்சம்பழ சாதம், சாம்பார் சாதம், ஏகாந்தமான தயிர் சாதம். ஆலூ உண்டு. காலிஃப்ளவர் ஃப்ரை உண்டு. பன்னீர் பட்டர் மசாலா உண்டு. இன்னொரு பருப்புக் கூட்டு உண்டு. ஆ, அந்தப் பச்சடி! நிகரே சொல்லமுடியாத வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடிகள். தவிரவும் வெள்ளரிக்காய், முள்ளங்கி, முளைகட்டிய பயிறு சாலட்கள். ஜிலேபி, மில்க் ஸ்வீட் என்று இரண்டு வித இனிப்புகள். தேவைப்பட்டால் கூடுதலாக இருபது ரூபாய் கொடுத்து லஸ்ஸி வாங்கிக்கொள்ளலாம். பத்து ரூபாய் கூடுதலுக்கு பஞ்சாபி பான்.

09072008831.jpgவிஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைத்த கவர்ச்சிக்கன்னி மேனகை மாதிரி என்னுடைய டயட்டைப் புரட்டிப் போட்டுவிட்டது இந்த தாபா. இரண்டு நாள்களாக ஏகப்பட்ட கலோரிகள்.

ஆனால் நான் பரவாயில்லை. அத்தனை மயக்கத்திலும் ஸ்வீட்டைத் தொடவில்லை. எண்ணெய் மினுங்கும் காலிஃப்ளவர் ஃப்ரையின் பக்கமே போகவில்லை. இன்றைக்கு ஒரு பெண்மணி அல்லது அம்மாள் நான் சாப்பிட்டு முடித்துக் கிளம்பிய சமயம் ஜிலேபி தாம்பாளத்திலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று எடுத்துத் தன் தட்டில் அடுக்கிக்கொண்டிருந்ததைக் கண்டேன். கடவுளே! அதுவே 1200 கலோரிகள் இருக்கும். எனில் மற்றவையின் கூட்டுத்தொகை?

தாபா எக்ஸ்பிரஸில் உணவு ருசியாக இருக்கிறது. அன்லிமிடெட் என்று சொல்லிவிட்டு உள்ளே சின்ன சைஸ் ஸ்டார் போட்டு கண்டிஷன் அப்ளை போடுகிற so called ஹோட்டல் திருட்டுத்தனங்கள் இல்லை. கூடுதல் அப்பளத்துக்கு இரண்டு ரூபாய் வசூலித்துவிடுகிற மாமி மெஸ் கெடுபிடிகள் இல்லை. இஷ்டப்படி சாப்பிடலாம். ஏகாந்தமாகச் சாப்பிடலாம். மூங்கில் கூரைக்கட்டடம் என்பதால் வெயில் தெரிவதில்லை. வெளியே மரத்தடி இருக்கைகளும் உண்டு.

நண்பர்கள் இட்லிவடை, நாராயணன், ஐகாரஸ் பிரகாஷ் உள்ளிட்ட நல்லுணவு ரசிகர் குழாத்துக்கு இந்த தாபாவை பலமாக சிபாரிசு செய்கிறேன். ஒரே ஒரு பிரச்னை.

அழகழகான பஞ்சாபிப் பெண்கள் நிறையப்பேர் வருகிறார்கள். கலோரி கான்ஷியஸ்னஸ் உள்ளவர்கள் அடிக்கடி போகாதிருப்பது நல்லது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி