நடந்த கதை

நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது.

சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக – எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது முடியாதிருந்தது.

நேற்றைக்குத் திட்டமிட்டு இதற்காகவே அலுவலகத்தில் இரவு தங்கி, இன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து மெரினாவுக்குச் சென்றேன். ஒருவார காலமாக எடைக்குறைப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என் அலுவலக மருதன், ச.ந. கண்ணன்நண்பன் ச.ந. கண்ணனும் விதி வசத்தில் எங்களுடன் மாட்டிக்கொண்ட மருதனும் உடன் வந்தார்கள். [எங்கள் அலுவலகத்தில் இப்போது ஆறு பேர் எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிவைத்தவன் என்கிற முறையில் இதுபற்றிய நியாயமான பெருமிதம் எனக்குண்டு.]

காலை நேர மெரினா குறித்து நிறைய கற்பனைகள் எனக்குண்டு. பார்த்ததில்லை. இன்று வாய்த்த சந்தர்ப்பம் அழகாகவே அமைந்தது. அரை டிராயரிலும் டிராக் சூட்டிலுமாக ஆண்களும் பெண்களும் அவரவர் நாய்க்குட்டிகளும் ஜிங்கு ஜிங்கென்று போய்க்கொண்டிருந்தார்கள். ஓரங்களை யோகா, உடற்பயிற்சி செய்வோர் ஆக்கிரமித்திருக்க, முன்னூறடிக்கு இரண்டு போலீஸ்காரர்கள் உயரமான குதிரைகளின்மீது அமர்ந்து காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். குதிரைச் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வந்துவிட்ட காலத்தில் எதற்கு குதிரைகள் என்று தெரியவில்லை. சும்மா உட்கார்ந்திருப்பதைத் தரையில் செய்யக்கூடாதோ? கழுதைகள்போல் சுமக்கின்றன குதிரைகள்.பொதி சுமக்கும் குதிரைகள்

சுமார் ஐந்நூறு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். சைக்கலாஜிக்கலாக என் பார்வையும் புத்தியும் என்னைக்காட்டிலும் யார் யார் குண்டு என்றே ஆராய்ந்துகொண்டிருந்ததை விழிப்புணர்வுடன் கவனித்தேன். மாபெரும் குண்டர்கள் முதல் மருதனைப் போல் ஈர்க்குச்சிகள் வரை விதவிதமான மனிதர்கள். இந்தக் காலை நேர உற்சாகிகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தோரும் உண்டு. நடந்து களைத்தவர்கள் புல்வெளியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அருகம்புல் ஜூஸ், தக்காளி சூப், வேகவைத்த வேர்க்கடலை, முளை கட்டிய பயிறு வியாபாரம் ஒரு பக்கம். கண்ட கடலெண்ணெயில் பொறித்த கார்ன் ஃப்ளேக் வற்றல்களைப் போட்டு தக்காளி சூப் குடிக்கும் ஜென்மங்களுக்கு வாக்கிங் எதற்கு என்று தெரியவில்லை.

என்னைக் கவர்ந்தது, ஒரு பெண்மணி, முருங்கைக்காய், கீரைகள், கேரட் போன்ற காய்கறிகளை ரெடி டு குக் ஸ்டைலில் நறுக்கி, கூறு கட்டி விற்றுக்கொண்டிருந்தது. நடந்து முடித்து, அவசரத்துடன் வீடு திரும்பும் பெண்மணிகள் [அல்லது அவர்களது கணவர்கள்] அப்படியே ஒரு கூறு அள்ளி எடுத்துப் போனால் அரை மணியில் சமையல் முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பிவிடலாம்.

கடற்கரையில் வாக் போகும் வி.ஐ.பிக்கள் குறித்து அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு என் கண்ணில் யாரும் தென்படவில்லை. மாநகர நெரிசலுக்கு இப்படியொரு இடம் இருப்பது உண்மையிலேயே பெரிய வரம்.

மெரினாவை மேயர் சமூகத்தினர் இன்னும் சற்று சுத்தமாக வைத்திருக்கப் பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது. போதிய டாய்லெட் வசதி இல்லாததால் நடக்கிறவர்கள் அப்படியே ஒதுங்கி, கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஸ்டாண்ட் அட் ஈஸி போஸில் நின்றுவிடுகிறார்கள்.

லைட் ஹவுஸிலிருந்து அண்ணா சமாதி வரை நடந்து திரும்ப நாற்பது நிமிடங்கள் ஆகின்றன. அதன்பின் அலை தொடும் தூரத்துக்கு ஒரு நடை போய் கொஞ்சம் இயற்கையை ரசித்துவிட்டுத் திரும்பி வந்து பஸ் ஏறி அலுவலகம் வர மேலும் நாற்பது நிமிடங்கள்.

இடையே அருந்திய அருகம்புல் ஜூஸ் எத்தனை கலோரி இருக்கும் என்று டயட்டீஷியன் அருணா ஷ்யாமுக்கு போன் செய்து கேட்கவேண்டும். குளித்து முழுகி மாமி மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்ட இட்டிலியைவிட ஒன்றும் அதிகம் இருந்துவிட முடியாது.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!