மெல்லினம் – சில குறிப்புகள்

நேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து, செயலுக்கு வர குறைந்தது அரைமணி நேரம் பிடித்தது.

இயங்கிக்கொண்டிருந்த அனைத்து ப்ரோக்ராம்களையும் நிறுத்திவிட்டுப் பார்த்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. AntiVirus பிரச்னை.

Zone Alarm வைரஸ் எதிர்ப்பான், சிபியூவின் 99 சதவீதச் செயல்பாடுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. ஸ்கேனிங், ஸ்கேனிங் என்று காட்டியதே தவிர, என்ன ஸ்கேன், எதை ஸ்கேன் என்று தெரியவில்லை. நிறுத்தவும் முடியவில்லை.

அப்புறம் நாகராஜன் வந்து பார்த்துவிட்டு மைக்ரோசாஃப்டின் சமீபத்தைய விண்டோஸ் அப்டேட் ஒன்றுக்கும் ZoneAlarmக்கும் பங்காளிச் சண்டை என்று எடுத்துச் சொன்னார். ஆண்ட்டி வைரஸ் தளத்திலேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளும் தரப்பட்டிருந்தன.

அதையெல்லாம் பொறுமையுடன் செய்து பார்த்தும் பிரயோஜனமில்லை. என் உயிருக்கு நிகரான லேப்டாப் தன் இறுதி மூச்சை விட்டுவிடப்போகிறதோ என்று உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள், நான் எழுதிய புத்தகங்கள், அடுத்த நாவலுக்கான குறிப்புகள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், வசனப் பிரதிகள்,  இளையராஜாவின் சில அபூர்வமான பாடல்கள், பத்திரிகைத் தொடர் அத்தியாயங்கள் எல்லாமே இந்த ஓரடி நீள அகலமுள்ள பெட்டிக்குள்தான் இருக்கின்றன.

ஒழுங்காக Backup எடுத்துவைக்கிற வழக்கமெல்லாம் என்னிடம் எப்போதுமில்லை. எழுதுவது ஒன்றைத்தவிர வாழ்வில் வேறெந்தச் செயலையும் நேர்த்தியுடன் செய்பவனல்லன். எனவே வேண்டிய அளவுக்கு நன்றாகக் கவலைப்பட்டுத் தீர்த்தேன். ஒன்றிரண்டு முறை கண்ணீர்த்துளி மாதிரி ஏதோ எட்டிப்பார்த்த ஞாபகம்.

இறுதியில் எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் தங்கவேலுவின் யோசனையின்பேரில் அந்த பீமபுஷ்டி Zone Alarm மென்பொருளையே தூக்கிக் கடாசிவிட்டு, ஏவிஜி இலவசத்தை உள்ளே போட்டு ஒரு ஓட்டு ஓட்டியபிறகு என் லேப்டாப்புக்கு வந்த எமன் விலகிப்போனான். [Zone Alarmஐக் குறைசொல்லமாட்டேன். மைக்ரோசாஃப்ட் பிரச்னை தீர்ந்ததும் இதனால் எந்த சிக்கலும் வரவாய்ப்பில்லை. இத்தனை நாள் என் லேப்டாப்பைக் காவல் காத்த வீரன் என்கிற நன்றியுணர்ச்சி எப்போதுமுண்டு.]

அதன்பின் சுமார் ஒரு மணிநேரம் உள்ளே என்னென்ன இருக்கிறது என்று ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டு பார்த்தேன். தேவையற்ற பல குப்பைகள். பெரும்பாலும் சாஃப்ட்வேர்கள். எனக்கு எதற்கு ஆடியோ மென்பொருள்கள்? இருவத்தெட்டு டிவிடி ப்ளேயர்கள்? ஊர்ப்பட்ட தமிழ் சாஃப்ட்வேர்கள்? ஆயிரத்தெட்டு என்கோடிங்களுக்கான எழுத்துருக்கள், டூல் பார் கசுமாலங்கள்.

இண்டர்வல் ப்ளாக்குக்கு முந்தைய காட்சி விஜயகாந்த் மாதிரி கண்கள் சிவக்க, கன்னக்கதுப்புகள் துடிக்க வீறுகொண்டு எழுந்து அனைத்தையும் ஒரு கணத்தில் ஒழித்துத் தீர்த்தேன்.

தமிழுக்கு ஒரே ஒரு சாஃப்ட்வேர். NHM Writer. யுனிகோட் அல்லாத திராபை தளங்களைப் பார்வையிட என் நெருப்பு நரி மூணுக்கு ஓர் அதியன் இணைப்பு. பேசிப் பலகாலம் ஆகிவிட்ட யாஹு, எம்.எஸ்.என். மெசஞ்சர்களை அன் இன்ஸ்டால் செய்துவிட்டேன். புழக்கத்தில் உள்ள கூகுள் டாக் போதும். ஆடியோ, வீடியோ ஃபைல்களைக் கையாள வி.எல்.சி. இணையம் உலவ ஃபயர் ஃபாக்ஸ். அஞ்சல் படிக்க தண்டர்பேர்ட். இவைதாண்டி மிச்சமிருந்த அனைத்தையும் எடுத்துவிட்டேன்.

இன்னும் கொஞ்சநாளைக்காவது நல்ல பையனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். நேற்றைய கலவர உணர்வு அத்தனை சீக்கிரம் மறக்காது.

நமது பெரிய பிரச்னையே கிடைக்கிற அனைத்து மென்பொருள்களையும் குவித்துவைத்துக்கொள்வதுதான். குழந்தைகளின் பொம்மைக் குவியல்கள் போல. பயன்பாடு இருக்கிறதோ இல்லையோ, நம்மிடம் அது இருக்கவேண்டும். என்னைப் போல் ஞானமில்லாத கம்ப்யூட்டர்ஜீவிகள் கண்ட பரிந்துரைகளின்பேரில் மென்பொருள்களை நிறுவி, கையாண்டுபார்ப்பதைத் தவிர்க்க ஏதாவது ஒரு மென்பொருள் இருந்தால்கூடத் தேவலாம்.

நம்பகமான சில எளிய மென்பொருள்கள் போதும். கம்ப்யூட்டருக்கும் கையாள்வோருக்கும் ஊறு விளைவிக்காத வஸ்துக்கள். அதிக இடம் சாப்பிடாதவையாக அவை இருத்தல் நலம். ஓப்பன் சோர்ஸாக இருத்தல் [திறமூலம் என்று சொல்லமாட்டேன்.] சாலச்சிறந்தது.

என் நண்பர் கணேஷ் சந்திரா தனது வலைத்தளத்தில் இம்மாதிரியான சில நல்ல மென்பொருள்களைப் பட்டியலிட்டுப் பரிந்துரை செய்திருக்கிறார். உபயோகித்துப் பார்க்கலாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி