தேவனுக்காக ஒரு மாலை

தேவன் பிறந்த நாள் விழா – அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

தேவனின் ரசிகர்கள் – வாசகர்கள் சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். தேவன் அறக்கட்டளை சார்பில் சாருகேசி வரவேற்புரை நிகழ்த்தினார். அசோகமித்திரன் நூல்களை [கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி. சந்துரு, லக்ஷ்மி கடாட்சம்] வெளியிட்டுப் பேசினார். வண்ணநிலவன் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார். பத்ரியின் நன்றியுரைக்குப் பிறகு நாடக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அசோகமித்திரனின் நேற்றைய பேச்சு அநேகமாக அவருக்கே புதிய அனுபவமாக இருந்திருக்கும். அரைமணிநேரமெல்லாம் அவர் நின்று பேசி நான் கண்டதில்லை. அரை நிமிடம் பேசுவார். அல்லது அரை வினாடி. நேற்று என்ன தோன்றியதோ, தேவனைப் பற்றி, அவர் எழுத வந்த காலகட்டம் பற்றி, ஆனந்த விகடன் பற்றி, [எழுத்தாளர்] கல்கி பற்றி, கல்கியிடம் தேவன் பணியாற்றியது பற்றி, இருவருக்குமான உறவு பற்றி, கல்கி விகடனிலிருந்து வெளியேறிய சூழல் பற்றி, எஸ்.எஸ். வாசனின் குணநலன்கள் பற்றி, தேவனது நூல்கள் எதுவும் அவர் உயிருடன் இருந்தபோது வெளிவராததன் காரணம் பற்றி – இன்னும் ஏராளமான தகவல்கள் அவரது பேச்சில் வெளிப்பட்டன.

தேவன் வாசனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் அசோகமித்திரன் அதே வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியிருக்கிறார். எனவே அனைத்துச் சம்பவங்களுக்கும் அவர் நேரடி சாட்சி. அனைவரும் வாசனை ‘பாஸ்’ என்று அழைத்துக்கொண்டிருந்தபோது தேவன் மட்டும் ‘எஜமான்’ என்று அழைப்பார் போன்ற தகவல்கள் புதிது.

தேவன் உயிருடன் இருந்தபோது அவருடைய ஒரு புத்தகம் கூட வெளிவராததற்கு இன்றளவும் விகடனைக் குறை சொல்லும் பெருங்கூட்டம் ஒன்றுண்டு. அசோகமித்திரன் நேற்று பேசியபோது சொன்ன சில தகவல்கள் ஆச்சர்யமளித்தன. தேவன் வாசனிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம். நிச்சயம் அவர் மறுத்திருக்க மாட்டார். அவரது சுபாவம் அதுவல்ல என்று அசோகமித்திரன் சொன்னார். கல்கி விகடனில் இருந்தபோதே அவருடைய ‘கணையாழியின் கனவு’ போன்ற நூல்கள் வெளிவந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நிறுவனம் சார்ந்த எழுத்தாளராக இருப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து அசோகமித்திரன் தொட்டுக்காட்டிய விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. யாருக்கும் வலிக்காமல், யாரையும் குற்றம் சொல்லாமல், யார் மீதும் பழி சுமத்தாமல் சரித்திரத்தின் சில பக்கங்களைத் தப்பர்த்தம் தராமல் எடுத்துக் காட்டுவது பெரிய கஷ்டமான காரியம். அசோகமித்திரன் நேற்று அதை மிக அநாயாசமாகச் செய்தார்.

கல்கியில் பணியாற்றியவன் என்கிற வகையில் அசோகமித்திரன் சொன்ன பல தகவல்கள் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனாலும் தெரிந்த தகவல்கள் பலவற்றின் மறுபக்கத்தை நேற்று கேட்க அல்லது உணர முடிந்தது.

விழாவுக்கு வலை உலக நண்பர்கள் சிலரும் வந்திருந்தார்கள். ஆனால் அதிகம் பேச முடியவில்லை. ஒரு அவசர காரியமாகப் பாதியில் நாடக வாசிப்பு நிகழ்ச்சியின்போது கிளம்பும்படி ஆகிவிட்டது. ஒரு மாதம் திட்டமிட்டு அமர்ந்து தேவனின் அனைத்து நூல்களையும் மொத்தமாகப் படிக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். தேவனைப் பற்றி ஒரு நல்ல நூல் எழுதவும் ஆள் தேடவேண்டும்.

Share

7 comments

 • விழா அருமையாக நடந்திருக்கும் என எண்ணுகிறேன். இன்னும் விபரமாக அசோகமித்ரனின் பேச்சைப் பற்றி எழுதுங்கள். நண்பர் ஒருவரை அனுப்பி எல்லா புத்தகங்களையும் வாங்கச் சொல்லி இருந்தேன். அவரால் முடிந்ததா எனத் தெரியவில்லை.

  என்னளவில் தேவன் போன்று நகைச்சுவையைக் கையாண்ட தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இல்லை. சென்னை வந்திருந்த பொழுது துப்பறியும் சாம்பு மற்றும் கோமதியின் காதலன் மட்டும் கிடைத்தது, வாங்கினேன். அவைகளைப் பல முறை படித்தாயிற்று.

  இந்தப் புத்தகங்களை இங்கு கொண்டு வர ஒரு வழி தேட வேண்டும்.

 • விழாவுக்கு நானும் வந்திருந்தேன். மிக எளிமையாக, அழகாக நடந்தது. கிழக்குப் பதிப்பகத்தின் ஒரு பேனரைக் கூடக் காணோமே? (உங்களையும்தான். தேடி வெறுத்துப்போய் திரும்பிவிட்டேன்)

 • இலவசம், தேவனின் மாஸ்டர் பீஸ் “மிஸ்டர் வேதாந்தம்” தான். வாழ்வின் யதார்த்தமும், அல்ப மனுஷ தன்மையையும் சோகத்தின் ஊடே நகைச்சுவையாய் சொல்லியிருப்பார்.

 • வாழ்த்துகள்!

  நீங்களே எழுதுங்கள்! துணைக்கு ஜீவா எழுதிய முத்துக்குமார்! பத்ரி எழுதிய தேவன் முன்னுரை ஆர்வத்தை தூண்டியது. ஆர்தர் ஹைலி பற்றியும் யாராவது எழுதலாம்!

 • அசோகமித்திரன் பேச்சை முழுமையாக கேட்க ஆவல் உண்டாகிறது. அதன் ஒலித்துண்டு இருந்தால் வலையேற்றுங்களேன்.

 • உஷாக்கா

  நீங்க மிஸ்டர் வேதாந்தம் அப்படின்னு சொல்லுவீங்க. உங்க யாநண்பர் கோமதியின் காதலன் அப்படின்னு பெனாத்துவாரு. ஆனா எனக்கு தேவன் எழுதினது எல்லாமே பிடிக்கும்! 🙂 இப்போ போட்டு இருக்கும் புத்தகங்கள் எல்லாம் ஒரு செட் வாங்கியாச்சு. இங்க வர ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்! 🙂

 • தேவனைப் பற்றி ஒரு நூலா !!! பேஷ் ..பேஷ் …தாராளமாக எழுதலாமே ; தேவனின் சில நூல்களை குறிப்பாக “லக்ஷ்மி கடாட்சம் ” மூன்று பாகங்களும் வாசித்த அனுபவம் இருப்பதால் தேவன் பற்றி எழுத ஆள் தேடினால் எனக்கும் தெரிவியுங்கள் . என்னால் முடிந்தவரை உதவ ஆர்வமாக உள்ளேன் .
  கோமதியின் காதலன்
  ஸ்ரீமான் சுதர்சனம்
  ராதையின் மனோரதம் ( இது தேவன் எழுதியதா என்று சின்னதாக சந்தேகம்)
  மொத்தத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளரைப் பற்றி ஒரு நூல் வருமாயின் அதில் பங்கேற்கும் ஆர்வத்தில் இந்த செய்தியை அனுப்புகிறேன் .
  நன்றி
  கயல்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter