நம் நாட்டில் சாமியார்கள் பலர் உண்டு. பரதேசி முதல் ராஜகுரு வரை… மக்கள் மனங்களை எத்தனை விதமாகப் பிரிக்க முடியுமோ, அத்தனை விதமான சாமியார்களும் உண்டு.
ஆனால் வெகுஜனங்களின் மனத்தில் சாமியார் பற்றிய பிம்பம் ஒரே மாதிரி தான். அவர் உணவு விருப்பம் துறந்தவராக இருக்க வேண்டும். பகட்டு துறந்தவராக இருக்க வேண்டும். சைவ பட்சிணியாக இருக்க வேண்டும். முக்கியமாக அவர் காமம் துறந்தவராக இருக்க வேண்டும்.
அத்தனை நினைப்புகளையும் நொறுக்கிப் போட்டிருக்கிறது யதி. சாமியார்கள் பலவிதமாயினும் அவர்கள் நான்கு பிரிவுக்குள் அடங்கிவிடுகிறார்கள் என்பதை நான்கு சன்யாசிகளை வைத்து சற்று ஆழமாகவே விளக்கியிருக்கிறார்.
பராசரர் எனும் துறவி சத்தியவதியைச் சேர்ந்ததால்தான் வேத வியாசர் எனும் மஹான் கிடைத்தார் என்றும் , அவரால்தான் புராணங்களும், மகாபாரதமும் நமக்குக் கிடைத்தன என்றும் படித்துணர்ந்த சராசரி மனிதன், இன்றைய சந்நியாசி பெண்ணில் வீழ்ந்தால் மனதாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். ஆனால் யதி, பல சந்யாசிகள் காமத்தை அடக்காமல் இறக்கி வைத்தே, காமத்தைக் கடக்கிறார்கள் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்தார் போல் சொல்கிறது.
பாராவின் புனைவுலகம் முற்றிலும் வேறுபட்டது. விட்ட கதை தொட்ட கதையாகப் பல உண்மைச் சம்பவங்களையும் தனது சொந்த அனுபவங்களையும் கதை நெடுகத் தூவி சுவாரசியப்படுத்துகிறார். பொதுவாக இது போன்ற சில உண்மைச் சம்பவங்களைக் கதைக்குள் திணிக்கும் போது, காலக்கணக்கின் துல்லியம் மிக அவசியமாகிறது. ஏனெனில் சமகாலத்தில் அந்தச் சம்பவத்தை அறிந்தவர் பலர் இருப்பர். ஆசிரியர் மிக மிக கவனமாகத் தனது புனைவில் இந்த நிஜப் பூக்களைத் துல்லியமாக கோத்திருக்கிறார். இந்த சம்பவங்களில் சில, வாசகர்களை ‘அட’ போடவும் வைக்கலாம், சில அதிர்ச்சி அடையவும் வைக்கலாம்.
முற்றும் துறந்தவர் யாருமில்லை எனச் சொல்லாமல் சொல்ல ஆசிரியர் ‘துறவி’ என்ற பதத்தைத் துறந்து, பெரும்பாலும் பிற வார்த்தைகளில் சன்யாசிகளை விளிக்கிறார்.
ஒரு அரசியல் துறவியின் பார்வையில் ஆரம்பிக்கும் கதை, அவரது பார்வையிலேயே முடிகிறது.
சித்தனாக முயன்று காமத்தினால் சிறிது சறுக்கிய மூத்த சந்நியாசி, தானே இறுதி வேள்விக்கான அக்னியாகிப் பரிகாரம் தேடுகிறார்.
இரண்டாமவர் நல்ல குருவிடம் இருந்து விலகியதில் இருந்து தடம் மாறி, தடுமாறிப் போய், கடைசியில் எதிர்பாராத வேறு ஒருவரால் கடைத்தேறுகிறார்.
முழுமையான பக்தி மார்க்கத்தில் நுழைந்து விடுகிறார் மூன்றாமவர்.
அரசியல் சன்யாசியான நான்காமவர் பார்வையில் நகரும் கதையில் அவரது சிந்தனை மற்றும் செயல்களை நியாயப்படுத்துவதற்கு ஆசிரியரின் மெனக்கெடல் நன்கு தெரிகிறது. சில மெனக்கெடல் சுவாரசியத்தையும், வெகு சில லேசான அயர்ச்சியையும் தருகிறது.
நான்கு சன்யாசிகளை மீறித் துறவறம் பூண்டவராகத் தெரிபவர், இல்லறத்தில் இருந்து கொண்டே பாசத்தை மட்டுமே தனது தியானப் பொருளாக கொண்ட தாய் மாமன் தான்.
ஆனால் முழுத் துறவியாகத் தன்னை உருக்கிக் கொண்ட வைராக்கியசாலியான அம்மா கதாபாத்திரமே உச்சத்தில் நிற்கிறது. துறவின் உச்ச நிலையின் இருப்பவரின் இறுதி யாகம், யோகத்தின் உச்ச நிலைக்கு முயல்பவரின் யோக சக்தியால் நடப்பது சாலப் பொருத்தமானது.
எங்கள் ஊரில் ஒரு மன நோயாளி இருந்தார். அவர் செல்வச் செழிப்புள்ள முருக பக்தரின் மகனாகப் பிறந்தவர். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அழுக்கு ஆடையும் மீசையும் தாடியுமாக சிக்குப் பிடித்தபடி திரிவார். தரையிலிருந்து அவர் பொறுக்கி வைத்துக்கொள்ளும் ஒரே பொருள் பலரால் தூக்கி வீசப்பட்ட பேனாக்கள்!
காரணமறியாத இந்தச் செய்கைக்கு யதி விடை கொடுக்க முயல்கிறது. எழுதாத பேனாக்களின் மூலம் அதை எறிந்த மனிதர்களின் தலை எழுத்தை மாற்றுகிறாரோ எனத் தோன்றுகிறது! இந்தக் கதையில் வரும் சொரிமுத்துச் சித்தனின் மறுவடிவமாக இன்று அவர் தெரிகிறார்!
சராசரி வாழ்வுக்கு அப்பால் பேசும் நாய்களும், இடாகினியும்,சம்சுதீன்களும், சொரிமுத்துக்களும், மாந்திரீகர்களும் நம் கண்முன்னே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் நாம் அறியாமல்.!
கேசவன் மாமாக்களும், பத்மா மாமிகளும், சித்ராக்களும் நிச்சயம் நம் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் பார்த்துக் கடந்து போயிருப்போம்.
மேற்கூறிய இரு பெரும் முனைகளை, நான்கு சன்யாசிகளை வைத்து முடிச்சிட்டு நம் கண்முன்னே படைக்கப்பட்ட யதி, நிச்சயம் என்றும் பேசு பொருளாயிருக்கும் .
யதி – நாளைய துறவிகளுக்குக் குறிப்பேடாக இருக்க சாத்தியமுண்டு.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.