தகவல்களைப் பற்றிய ஒரு தகவல்

முன்னொரு காலத்தில் மனோரமா இயர்புக் வாங்குவதும் படிப்பதும் எனக்கு மிகுந்த விருப்பத்துக்குரிய செயலாக இருந்தது. எந்த அரசுத் தேர்வோ, வேலை வாய்ப்போ எனக்கு நோக்கமாக இருந்ததில்லை. அதற்குத்தான் அந்தப் புத்தகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் என் பொது அறிவை விருத்தி செய்தே தீருவது என்ற வெறியுடன் வருடம்தோறும் வாங்கி வாசிப்பேன். ஒரு எழுநூறு எண்ணூறு பக்கப் புத்தகத்தை அப்படியே மனத்தில் ஏற்றிக்கொள்வது இயலாத காரியம். குறிப்பாக, என்ன முட்டிக்கொண்டாலும் மாதங்கள், தேதிகள் நினைவில் இருக்காது. ஆனால் முக்கியமான சம்பவங்கள் நினைவில் இருப்பது அவசியம் என்று நினைப்பேன். எனவே இயர்புக்கின் ஒவ்வொரு குறிப்பையும் வாசித்துவிட்டு ஒரு நிமிடம் அதைப் பற்றி யோசிப்பேன். செய்தித் தாளில் அது நிகழ்ந்தபோது படித்தது நினைவில் இருக்கிறதா என்று பார்ப்பேன். அல்லது யாராவது அதைக் குறித்துப் பேசியதை நினைவுகூரப் பார்ப்பேன். குறிப்பிட்ட சம்பவம் பற்றி என் மனப்பதிவு ஏதாகிலும் இருக்குமானால் அது என்ன என்று கவனிப்பேன். ஆனால், பெரும்பாலான சம்பவங்கள் என் தொடர்பு எல்லைக்கு வெளியில் நிகழ்ந்ததாகவே இருக்கும்.

இத்தனைக்கும் அப்போதெல்லாம் தவறாமல் நாளிதழ்களைப் படிப்பேன். வார, மாத இதழ்களையும் விடுவதில்லை. தமிழில் உள்ளவை தவிர அவுட்லுக், சண்டே என்ற இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகளையும் தொடர்ந்து வாங்கிப் படித்து வந்தேன். இடையில் சிறிது காலம் தெஹல்கா வாங்கினேன். அது பழைய ஜூனியர் போஸ்ட் வடிவத்தில் இருக்கும். மேல் பார்வைக்கு மிகவும் தீவிரமான இதழைப் போலத் தோன்றும். படித்துப் பார்த்தால் நக்கீரன் போல இருக்கும்.

இதையெல்லாம் வரி விடாமல் படித்தாலும் ஆண்டு முடிவில் வாங்கும் மனோரமா இயர்புக் குறிப்பிடும் பல செய்திகள் நான் அறியாததாகவே இருக்கும். இது எனக்கு மிகுந்த அவமானத்தையும் குற்ற உணர்வையும் அளித்தது. அப்போது நான் பத்திரிகையாளனாகப் பணியாற்றிக்கொண்டிருந்ததால் இக்குற்ற உணர்ச்சியின் வீரியம் சிறிது அதிகமாகவே இருந்தது. பல நாள் தூக்கமே வராது. உலகப் பத்திரிகையாளர்களெல்லாம் ஏதேதோ கண்ணுக்கெட்டாத சிகரங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் ஒரு குப்பை மேட்டில் நின்று சூரியனைப் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருப்பது போலத் தோன்றும். அழுகையே வந்துவிடும்.

1996 பொதுத்தேர்தல் சமயம் செய்தி சேகரிக்கத் தலைநகருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம் வரை சென்றுவிட்டு, திரும்ப கல்கத்தா வந்து ரயில் பிடித்துச் சென்னை திரும்புவது திட்டம். டெல்லியில் அப்போது யுஎன்ஐ செய்தி நிறுவனத்தின் உயரதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த திரு கணபதி மூலமாக நான் செல்ல இருந்த மாநிலங்கள் அனைத்திலும் உள்ள ஒரு சில பத்திரிகையாளர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் மூலமாகப் பல தலைவர்களை நேரில் சந்திக்கவும் பேசவும் முடிந்தது. கணபதியின் நேரடி உதவி மூலமாக சந்திரசேகர், விபி சிங் போன்றோரை டெல்லியிலேயே சந்தித்தேன்.

அந்நாள்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வட இந்திய மாநிலங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள் அனைவரும் என்னைக் காட்டிலும் விவரம் அறிந்தவர்களாக இருந்தார்கள். முந்தைய தேர்தல், அதற்கு முந்தைய தேர்தல், இடைத்தேர்தல்கள், எங்கே யார் கூட்டணி, எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு வாக்குகள், எது ஜாதி ஓட்டு, எது காசு ஓட்டு, எது கள்ள ஓட்டு என்று விரல் நுனியில் தகவல் வைத்துக்கொண்டு அள்ளி வீசினார்கள். உண்மையிலேயே பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது. என்ன செய்தால் நானும் அவர்களைப் போன்ற தகவல் களஞ்சியப் பத்திரிகையாளன் ஆகலாம் என்று புரியவில்லை. சென்னை திரும்பிய பிறகு நான் சேகரித்த செய்திகளை எழுதிக் கொடுத்துவிட்டு இது பற்றி ஆழமாகச் சிந்தித்தேன். மனோரமா இயர்புக் படிப்பதை மட்டும் விடவில்லை. வருடம் ஒருமுறை படித்த அப்புத்தகத்தை அதன்பின் வருடம் முழுவதும் படிக்கத் தொடங்கினேன்.

2000 ஆவது வருடம் குமுதத்துக்குச் சென்ற பிறகு செய்தியாளனாக வெளியில் செல்லும் வழக்கம் குறைந்து, விரைவில் நின்று போனது. செய்தியாளர்கள் கொண்டு வருவதை வாசிக்கும் தரத்துக்கு உயர்த்தி அளிப்பது ஒன்றே பணி என்றானது. எடிட்டிங் என்பதை ஒரு பணியாக அல்லாமல் கலையாகப் பயிற்சி செய்யத் தொடங்கியது அப்போதுதான். மிகவும் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்தேன். குமுதம் எனக்கு அளித்த ஒவ்வொரு ரூபாய் சம்பளமும் என் மகிழ்ச்சிக்கு அளித்த போனஸ்தான். வேலைக்குக் கூலியல்ல. என் பணி எனக்குப் பிடித்துப் போய் நான் வேறு அது வேறல்ல என்றான பின்பு ஒரு நாள் தரிசனமாக அது எனக்குப் புரிந்தது.

அன்று நான் செய்துகொண்டிருந்த பணி, செய்திகளில் தகவல்களைச் சரி பார்ப்பதும் இட்டு நிரப்புவதும் புள்ளி விவரங்களால் அலங்கரிப்பதும் அல்ல. ஒரு செய்தியின் நீள அகலத்துக்குப் பொருந்தாத தகவல்களை கவனமாக அதிலிருந்து தேடி எடுத்து வெளியே வைத்ததுதான்.

அப்படி நான் எடுத்து வைத்த அனைத்துமே மனோரமா இயர்புக் தகவல்களாக இருந்ததை கவனித்தேன். பெரிய பாரம் இறங்கினாற்போல இருந்தது. அதன்பின் இயர்புக் வாங்குவதை நிறுத்திவிட்டேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி