நானும் எவ்வளவோ வருடங்களாக வீட்டுப் புருஷனாக இருக்கிறேன். இன்று வரை ஒரு கீரைக் கட்டை சரியாகப் பார்த்து வாங்கத் தெரிந்ததில்லை. இத்தனைக்கும் பேலியோவில் இருப்பவன் என்பதால் கீரை என்னுடைய மிக முக்கியமான உணவும்கூட. ஒவ்வொரு முறை கீரை வாங்கச் செல்லும்போதும் எனக்கு இரண்டு பிரச்னைகள் வரும்.
1. எது எந்தக் கீரை?
2. இந்தக் கீரை நன்றாக இருக்கிறதா இல்லையா?
நினைவு தெரிந்த நாளாக உட்கொள்ளும் உணவுதான். ஆனால் எது முளைக்கீரை, எது அரைக் கீரை, எது சிறு கீரை, எது பருப்புக் கீரை என்று தெரியாது. கடைக்காரனிடம் கேட்டுத்தான் உறுதிப்படுத்திக்கொள்வேன். இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. நானாக ஒரு கட்டுக் கீரையை எடுத்து, கடைக்காரனிடம் காட்டி, ‘இது என்ன கீரை’ என்று கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு வாங்குவதென்றால் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் நான் ‘முளைக்கீரை’ என்று கேட்டு, அவன் ஒரு கட்டு எடுத்து நீட்டினால் உடனே ஒரு சந்தேகம் வரும். உண்மையிலேயே அது முளைக்கீரை தானா?
சென்றமுறை வாங்கிய முளைக்கீரை வேறு வடிவத்தில் இருந்ததாகத் தவறாமல் தோன்றும். கணப் பொழுது குழம்பிப் போய், கடைக்கு வரும் யாராவது ஒரு பெண்மணியிடம் அதை மறு உறுதிப்படுத்திக்கொள்வேன். இதனால் கடைக்காரர்கள் வருத்தமடைவதையும் பார்க்கிறேன். ஆனால் எனக்கு வேறென்ன வழி?
தண்டைப் பார்த்தால் தெரியும், இலையின் அகலத்தைப் பார்த்தால் தெரியும், அடர்த்தியில் தெரியும் என்று பலபேர் பலவாறு சொல்லியிருக்கிறார்கள். இன்றுவரை, ‘இதோ நான் ஒரு அரைக் கீரைக் கட்டை எடுத்திருக்கிறேன், அல்லது ஒரு சிறு கீரைக் கட்டை எடுத்திருக்கிறேன்’ என்று திடமாக உணர்ந்து ஒன்றை எடுக்க முடிந்ததில்லை.
இரண்டு கீரைகளை மட்டும் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டுவிடுவேன். ஒன்று பாலக். இன்னொன்று முருங்கை. முருங்கையில்கூட சில சமயம் பிரச்னை வரும். அசப்பில் அது அகத்திக்கீரையோ என்ற மயக்கம் ஏற்படும். பாலக் ஒன்றுதான் படுத்தாத கீரை. ஆனால் எங்கள் வீட்டில் அது அடிக்கடி வாங்கும் கீரை அல்ல.
இப்போது அடுத்த பிரச்னைக்கு வருகிறேன். இந்தக் கீரை நன்றாக இருக்கிறதா இல்லையா?
இதைக் கண்டுபிடிப்பது கொடூரமானது. கடையில் அனைத்துக் கீரைகளையும் மொத்தமாக ஓரிடத்தில்தான் போட்டுக் குவித்து வைத்திருப்பார்கள். அந்தக் கீரைக் குவியலின்மீது மணிக்கொரு தரம் ஒரு வாளி தண்ணீரை ஊற்றி ஞானஸ்நானம் செய்துவிடுவார்கள். அதாவது எல்லா கீரைக் கட்டுகளுமே ஃப்ரஷ்ஷானவை. இந்தக் கணம் முளைத்து, அக்கணத்திலேயே பறிக்கப்பட்டு, நேரடியாகக் கடைக்கு வந்து சேர்ந்தவை என்று எண்ண வைப்பதற்காக. எனவே எதை எடுத்தாலும் ஈரமாக இருக்கும். எல்லாமே நன்றாக இருப்பது போலவே தோன்றும். ஆனால் வாங்கி வந்த பிறகு இல்லற மேலாளர் அது பூச்சி அரித்த கீரை என்று சொல்வார். அல்லது வாடி வதங்கியது என்பார். அதுவும் இல்லாவிட்டால் ஏகப்பட்ட குப்பைகள் இடைசெருகலாக உள்ளதைச் சுட்டிக்காட்டுவார். சில இலைகளில் பூச்சி அரித்தது பெரிய அளவு ஓட்டையாகவே தெரியும். அந்தக் கருமம் ஏன் கடையிலேயே என் கண்ணில் படவில்லை என்ற வினாவுக்கு இப்போது வரை விடை கிடையாது.
ஒரு கீரைக் கட்டைச் சரியாக இனம் கண்டு, பார்த்து வாங்கும் திறமையை ஆண்டவன் ஏன் எனக்குத் தர மறந்தான் என்று அடிக்கடித் தோன்றும். இது எனக்கு ஏன் இன்றுவரை ஒரு நல்ல கவிதையை எழுதத் துப்பில்லை என்ற வினாவுக்கு நிகரான துயரம் கொண்டது. எனவே, வாங்கி வரும் கீரை நன்றாக இல்லை என்ற விமரிசனம் எழும்போதெல்லாம் இப்படிச் சொல்லி சமாளித்துக்கொள்கிறேன்.
‘ஒரு நல்ல கீரைக் கட்டைப் பார்த்து வாங்குவதும் நல்ல புருஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் ஒன்று. இரண்டிலும் உன்னை விஞ்ச இயலாது.’