மால்கள்

சென்னையில் நான் அறிந்த முதல் மால் என்பது மூர் மார்க்கெட். அங்குதான் ஒரு காலத்தில் எல்லாமே கிடைக்கும். தவிர எல்லாம் மலிவாகவும் கிடைக்கும். பயன்படுத்திய பாய், பெட்ஷீட்டுகளைக் கூட மூர் மார்க்கெட்டில் வாங்க முடியும். எப்படிப் பழைய புத்தகங்களை முடியுமோ அப்படி. நவீனத்துவ காலத்தின் முதல் மால் என ஸ்பென்சர் மால் அறிமுகமானபோது ஓரிரு முறை சென்ற நினைவிருக்கிறது. ஆனால் சிறு வயதில் போன மூர் மார்க்கெட் அளவுக்கு இல்லை. பிறகு சிடி செண்டர் வந்தது. அதன்பின் மூலைக்கொன்றாகப் பிறந்து நிறைந்துவிட்டது.

எனக்கு இந்த மால்களில் சுற்றி வர மிகவும் பிடித்திருக்கிறது. அவற்றின் பளபளப்பு. குளுமை. வாசனை. இங்கே இருக்கும் பல கடைகளை நான் வெளியே கண்டதில்லை. எல்லாமே மேற்கத்தியப் பெயர்களைக் கொண்ட கடைகள். பெரும்பாலும் துணிக் கடைகள். ஆண்களுக்குத் தனியே. பெண்களுக்குத் தனியே. துணிக்கடைகளை விட்டால் கைக்கடிகாரக் கடைகள். மொபைல் போன் கடைகள். செருப்புக் கடைகள். வாசனை திரவியக் கடைகள். ஒப்பனை மற்றும் சருமப் பராமரிப்புக்கான கலவைகள் விற்கும் கடைகள். ஒன்றிரண்டு வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடைகள். நகைக்கடைகள். இவ்வளவையும் பார்த்தபடியே மேல் தளத்துக்குப் போய்விட்டால் அங்கே சாப்பாட்டுக் கடைகள். குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். பிறகு திரையரங்கம்.

ஒவ்வொரு முறை மாலுக்குச் செல்லும்போதும் என்னவெல்லாம் வாங்கலாம் என்று நிதானமாக யோசித்து, திட்டமிட்டு, எழுதி எடுத்துக்கொண்டு செல்வேன். ஆனால் ஒருமுறைகூட நான் எழுதி எடுத்துச் சென்ற பொருள்களை வாங்கி வந்தது கிடையாது. பெரும்பாலும் அவை அங்கே இருக்காது. வேறு ஏதாவது ஒன்றிரண்டு பொருள்களை வாங்கி வந்திருப்பேன். பிறகு எனக்குத் தேவையானதை அமேசானில் அல்லது தி நகர் பெட்டிக் கடைகளில் வாங்கிக்கொள்வேன்.

டோனட்

மாலுக்கு வருகிற பெரும்பாலானோர் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏனெனில், எதிர்ப்படுகிற ஒவ்வொருவரையும் கவனிக்கிறேன். யாரும் மூட்டை மூட்டையாகப் பொருள்களை வாங்கிச் செல்வதில்லை. சுருக்கமாகச் சில மணிநேர இன்பச் சுற்றுலாத் தலங்களாகவே இந்த மால்களை மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. பணக்காரக் கடைக்காரர்கள் பாடு திண்டாட்டம்தான்.

முன்பெல்லாம் லேண்ட் மார்க் கடைக்குச் சென்றால் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையாவது வாங்குவேன். A4 பேப்பர்களில்கூட பச்சை, நீலம், ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களைக் கூட்டி வாங்கத்தூண்டும் வித்தகம் அறிந்த கடை அது. புதிய புத்தகங்கள், சிடிக்கள், பேனாக்கள் என்று எப்போதும் வாங்க ஏதாவது இருக்கும். இன்று லேண்ட் மார்க் இல்லை. ஸ்டார் மார்க் என்றொரு கடை எல்லா மால்களிலும் இருக்கிறது. பார்ப்பதற்கு நவீனமாக இருக்கிறதே தவிர பழைய மூர் மார்க்கெட்டுக்கு நிகரானதுதான் இது. இருக்கும் எதையும் எடுக்கத் தோன்றாது. நாம் கேட்கும் எதுவும் அங்கே இருக்காது. நானும் மூன்று மாதங்களாக அதிகபட்சம் முக்கால் அடி நீள அகலத்தில் ஒரு ஒய்ட் போர்ட் தேடுகிறேன். இங்கே எந்த மாலிலும் அது இல்லை. அமேசானில் இருக்கும் போர்ட்கள் குறைந்த பட்சம் ஓரடி நீள அகலம் கொண்டதாக இருக்கிறது. மேசைக்குப் பொருந்தாது.

நமக்கு வயதாவதுதான் பிரச்னையாக இருக்கும் என்று சமயத்தில் தோன்றும். இல்லை. பதினைந்து வயது நிரம்பிய என் மகளும் மால்களில் வெறுமனே சுற்றித்தான் வருகிறாள். ஆசைப்பட்டு நான்கைந்து பொருள்களை என்றாவது எடுக்கிறாளா என்று பார்த்தால் இல்லை. இன்று ஒரு மாலுக்குச் சென்றேன். நெடுநாளாக டோனட் என்பது எப்படி இருக்கும் என்று உண்டு பார்க்க ஆசை. இன்று அந்த ஆசையைத் தீர்த்துக்கொண்டேன். அது ஒரு மேற்கத்திய இனிப்பு வடை என்று எண்ணியிருந்தேன். இல்லை. சுற்றளவு குறைந்த பன் போலத்தான் இருக்கிறது. இன்னொரு முறை உண்பேனா என்று தெரியவில்லை.

மால்களுக்குச் செல்வதன் நிகரலாபம் நிதானமாக நிறைய நடக்க முடிவதுதான். மகிழ்ச்சி என்றால், ஏழெட்டு முறை எஸ்கலேட்டரில் ஏறி இறங்குவதைத்தான் சொல்லத் தோன்றுகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி