கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 12

வளர்மதியைக் காதலிக்கத் தொடங்கிய நாளாக, பிரதிதினம் இரண்டு கடிதங்கள் வீதம் அவளுக்கு எழுதி ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் அட்டைக்குள்ளும் சொருகி வைப்பதை பத்மநாபன் வழக்கமாகக் கொண்டிருந்தான். புத்தகத்துக்கு மேலே போடப்படும் பிரவுன் அட்டைகள் எப்போதும் ரகசியச் சுரங்கங்களாகவே இருக்கின்றன. காதல் கடிதங்கள். தேர்வு பிட்டுகள். கெட்டவார்த்தைப் படங்கள். பிளாட்பாரத்தில் ஐந்து காசுக்கு இரண்டு வீதம் பொறுக்கியெடுத்து வாங்கிவந்து பாத்ரூமில் மட்டும் பார்த்து ரசிக்கிற துண்டு பிலிம்கள்.

அவன் டாய்லெட்டுக்குப் புத்தகம் எடுத்துச் செல்வது குறித்து அவனது அம்மா எப்போதும் பெருமிதம் அடைவது வழக்கம். விழுந்து விழுந்து படிக்கிறான், மார்க்குதான் வரமாட்டேங்குது என்று அண்டை வீட்டு ஈ.பி. சம்சாரத்திடம் அவள் சொல்லி வருத்தப்படுவதை அவ்வப்போது கேட்டிருக்கிறான். அம்மாக்களை ஏமாற்றுவதில் ஏதோ ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இப்போது அது நினைவுக்கு வர, குப்பென்று கண்ணை நீர் மறைத்தது. இது மொட்டை மாடி. யாருமற்ற தனிமை. மேலும் இரவும் அவனுக்கான பிரத்தியேக அறுபது வாட்ஸ் விளக்கும். இப்போது அட்டையைக் கழற்றிவைத்துவிட்டு ஒவ்வொரு பிலிமாக எடுத்துப் பார்த்தாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் மனம் வரமாட்டேனென்கிறது. அனைத்தையும் எரித்துவிடலாம்போல் அப்படியொரு ஆத்திரம் பிதுக்கிக்கொண்டு பொங்குகிறது.

வளர்மதி. ஏன் இப்படி இம்சிக்கிறாள்? நினைக்காமலும் இருக்கமுடியவில்லை. நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது. துக்கத்தின் சாயல் பூசிய மகிழ்ச்சிப் பந்தொன்று உள்ளுக்குள் உருண்டபடி கிடக்கிறது. அவள் மட்டும் தன் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டால் உலகத்தையே ஒரு கைப்பிடிக்குள் மூடிவிட முடியும் என்று உறுதியாகத் தோன்றுகிறது. பாழாய்ப்போன முழுப்பரிட்சை குறுக்கே வராதிருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நினைத்து அனுபவித்திருக்கலாம். இப்போது படித்தாகவேண்டும்.

தவிரவும் லட்சியம் என்று ஒன்று வந்திருக்கிறது. வகுப்பில் முதல். தேர்வில் முதல். வாழ்வில் முதல். பிறகு வளர்மதிக்காக இத்தனை உருகவேண்டிய அவசியமிருக்காது. கண்டிப்பாகக் கிடைப்பாள். குடுமி ஐ லவ் யூ. நிச்சயம் சொல்வாள். சந்தேகமில்லை.

எனவே அவன் கடிதத்தையும் பிறவற்றையும் மடித்துச் சொருகிவிட்டு உக்கிரமாகப் படிக்க ஆரம்பித்தான்.

கூட்டுச் சராசரி என்பது எப்போதும் பெருக்குச் சராசரியைவிட அதிகமாகவே இருக்கும். இரு எண்களின் கூட்டுச் சராசரி என்பது இரண்டையும் கூட்டி இரண்டால் வகுத்தால் வருவது. பெருக்குச் சராசரியாகப்பட்டது இரு எண்களின் பெருக்கல் தொகையின் வர்க்கமூலம்.

என்ன ஒரு கண்டுபிடிப்பு! உட்கார்ந்து யோசித்த கணித மேதைகள் நீடூழி வாழட்டும். அவன் படித்தபடியே தூங்க ஆரம்பித்தான்.

மறுநாள் தேர்வுகள் ஆரம்பமாயின. தாற்காலிகமாக பத்மநாபன் வளர்மதியை மறந்தான். ஆசிரியர்களை, அப்பா அம்மாவை, ஹெட்மாஸ்டரை, நண்பர்களை, எதிரிகளை எல்லோரையும் மறந்தான். வினாத்தாள். விடைத்தாள். என்ன எழுதுகிறோம், எழுதுவது சரியா என்று திருப்பிப் படித்துப்பார்க்கக்கூட இல்லை. எழுதி நீட்டிவிட்டு வந்துகொண்டே இருந்தான். வீடு திரும்பியதும் மறுநாள் தேர்வுக்கான படிப்பு.

தான் படித்துக்கொண்டிருக்கிறோம், தேர்வு நடந்துகொண்டிருக்கிறது என்பதுகூட அவனுக்கு நினைவில் இல்லை. செலுத்தப்பட்ட ஓர் இயந்திரம் போல் இயங்கிக்கொண்டிருந்தான். மனத்தில் முன்பிருந்ததைப் போல பயமோ, பதற்றமோ, எதிர்பார்ப்போ, மகிழ்ச்சியோ, துக்கமோ ஏதுமில்லை. வெறுமையும்கூட அழகாகத்தான் இருக்கிறது. வெட்டவெளிப் பாலைவனத்தில் எங்கோ ஓரிடத்தில் வளர்மதி என்னும் சிறு சோலை இருக்கிறது. அடையும்வரை இழுத்துப் பிடிக்க முடியுமானால் சரி. இல்லாதுபோனால் பெரிய பிரச்னை ஏதுமில்லை. பத்தாம் வகுப்பு பி செக்ஷனுக்கு அவன் போகும்போது வேறு வகுப்புகளிலிருந்தும் யாராவது பெண்கள் வருவார்கள். அவர்களில் சிலர் அவன் கண்ணுக்கு அழகாகத் தென்படக்கூடும். இதற்குமுன்பும் சில முறை இவ்வாறு நேர்ந்திருக்கிறது.

ஆறு தினங்கள். அவன், அவனாக இல்லை. அதுவாக இருந்தான். இறுதித் தேர்வு தினத்தன்று மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ரிசல்ட் தினத்தன்று சந்திக்கலாம் என்று சொல்லிக்கொண்டு பிரிந்தார்கள்.

பன்னீர் செல்வம் செங்கல்பட்டில் உள்ள தன் அத்தை வீட்டுக்கு ஒரு மாதம் செல்லவிருப்பதாகச் சொன்னான். கலியமூர்த்தி, கள்ளக்குறிச்சிக்குப் போகிறானாம். பெருமாள் சாமிகூட திருவான்மியூரில் யாரோ உறவினர் இருப்பதாகவும் அவர்கள் வீட்டுக்குப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்ததை பத்மநாபன் கேட்டான்.

பொதுவாக விடுமுறைகளில் அவன் எந்த உறவினர் வீட்டுக்கும் செல்வது கிடையாது. ஒருமாதம் தங்கி உறவு வளர்க்கத் தக்க உறவினர்கள் யாரும் இல்லையோ என்னவோ. அவனது அப்பா, ஒவ்வொரு ஆண்டிறுதி விடுமுறையிலும் அவனுக்கு நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பது வழக்கம்.

இந்த வருடம் அதையும் எதிர்பார்க்க முடியாது. எதிரே வருவது பத்தாம் கிளாஸ். பள்ளியிறுதி. அரசுத் தேர்வு. எங்காவது பழைய புத்தகத்துக்கு ஏற்பாடு செய்துவைத்திருப்பார். படிக்கவேண்டும். அல்லது படிப்பதுபோல பாவனை செய்யவேண்டும்.

‘பாஸ் பண்ணிருவ இல்ல?’ என்று அம்மா கேட்டாள்.

அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனாலும் ஏன் அம்மாவுக்குச் சந்தேகமாக இருக்கிறது? தெரியவில்லை.

‘சீச்சீ. மார்க்கு எத்தினின்றதுதான் விசயம். ஏண்டா நாநூற தாண்டிருவ இல்ல?’ என்றார் அப்பா. அவரது அபார நம்பிக்கை அவனுக்கு அச்சமளித்தது. திடீரென்று தானொரு படிக்கிற பையனாக அடையாளம் காட்டிக்கொண்டது தவறோ என்று தோன்றியது. படித்தது தப்பில்லை. ஆனால் வெளியே தெரியும்படி நடந்துகொண்டிருக்கவேண்டாம் என்று நினைத்தான்.

அந்த ஆண்டின் இறுதி நாளில் தேர்வு முடிந்து வெளியே வந்து அவன் வெகுநேரம் காத்திருந்தான். வளர்மதி இன்னும் வெளியே வரவில்லை.

வருவாள். ராஜாத்தி, க்ளாரா, பொற்கொடி இன்னபிற தோழிகள் புடைசூழ நடுவே வருவாள்.

வளர்மதி விடுமுறைக்கு எங்கே போகப்போகிறாள்? அவனுக்குத் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. கேட்கலாம். பதில் சொல்லுவாள். அவசியம் சொல்வாள். ஆனால் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகு சோகம் வந்துவிடும். ஒரு மாதகாலம். ஊருக்குப் போறேன் குடுமி. எங்க மாமா வீட்டுக்கு. அத்த வீட்டுக்கு. பெரியம்மா வீட்டுக்கு.

என்னத்தையாவது சொல்லிவிட்டால் மிச்ச நாளைக் கடத்துவது சிரமம். ஒன்றும் தெரியாதிருந்தாலே தேவலை. ஆறு தெரு தாண்டினால் வளர்மதி வீடு வரும். வீட்டுக்குள் அவள் இருப்பாள். தனது செல்ல நாய்க்குட்டி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருப்பாள். போய்ப் பார்க்கலாமா? திடீரென்று எதிரே போய் நின்றால் அவளது முகபாவம் எப்படி மாறும்? என்ன சொல்வாள்? டேய், போயிடுடா. எங்க தாத்தா வந்துடுவாரு. பதறலாம். பயப்படலாம். கலவரமடையலாம்.

இப்படி நினைத்துக்கொண்டிருப்பதே சுகமாக இருக்கும். எதற்குக் கேட்டுவைத்து ஏதாவது விடை பெற்று வருத்தத்தைச் சுமந்துகொண்டு வீட்டுக்குப் போகவேண்டும்?

எனவே அவன் வெறுமனே காத்திருந்தான். வருவாள். பார்க்கலாம். சிரிக்கலாம். போய்விடலாம்.

ஒருவேளை தேர்வு முடிந்த சந்தோஷத்தில் இன்றைக்கே ‘குடுமி ஐ லவ்யூடா’ என்று சொல்லிவிட்டால்?

கிளுகிளுவென்றிருந்தது. அடக்கிக்கொண்டான். தன்னிடம் கூட சொல்லவேண்டாம். சாகிற வரை சொல்லவே வேண்டாம். அவளது பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரிடமாவது சொன்னால்கூடப் பரவாயில்லை. போதும். இவளே, ராஜாத்தி, நான் நிஜமாவே குடுமிய லவ் பண்றேண்டி. ஆனா அவன்கிட்ட சொல்லிடாத.

சொல்லுவாளா? ஒருவேளை அவளுக்கும் இருக்குமா? தன் வயதுதானே? தன் மனம் தெரியும்தானே? ஏன் அவளுக்கும் இருக்கக்கூடாது?

ஒருமாத விடுமுறை. கடவுளே, எப்படிக் கழிக்கப்போகிறேன்? நண்பர்கள் இல்லாத தினங்கள். பள்ளி இல்லாத தினங்கள். வளர்மதி இல்லாத தினங்கள். கொடுமை அல்லவா? குரூரம் அல்லவா?

அவனுக்கு அழுகை வந்தது. அதே சமயம் வளர்மதியும் வந்தாள்.

‘டேய் குடுமி, நீ வீட்டுக்குப் போகல?’

‘இல்ல வளரு.’

‘ஏண்டா?’

‘ஒனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.’

அவள் சிரித்தாள். உலகமே சிரிப்பது போலிருந்தது அவனுக்கு.

‘என்ன விஷயம்டா?’

‘நான் சொன்னத யோசிச்சியா?’

‘என்ன சொன்ன?’

‘ஐ லவ் யூ வளரு.’

‘சீ போடா. ஒனக்கு வேற வேலையே இல்ல.’

‘இல்ல வளரு. நான் நெசமாத்தான் சொல்லுறேன். என்னால.. என்னால..’

அவனால் பேசமுடியவில்லை. அழுகை வந்தது. அழுதுவிடுவோமோ என்று அச்சமாக இருந்தது. வளர்மதி எதிரே அழுவது அவமானம். அவளுக்கு ஒருவேளை காதல் இருந்தால், ஓடியே போய்விடக்கூடும். ம்ஹும். அழக்கூடாது. கண்டிப்பாகக் கூடாது.

‘ஒழுங்கா எக்ஸாம் எழுதினியா?’

‘உம்’ என்றான் சுரத்தே இல்லாமல்.

‘கணக்கு பேப்பர் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி இல்ல?’

‘தெரியல வளரு.’

அவள் உற்றுப்பார்த்தாள். சில வினாடிகள் பேசாதிருந்தாள். பிறகு சட்டென்று, ‘ரிசல்ட் வரட்டும். பாக்கலாம்’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

அவன் நெடுநேரம் அங்கேயே நின்றிருந்தான். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. ஒரு மாத விடுமுறை. சரியாக முப்பது நாள்கள். ஒரு நாளைக்கு மூன்று வீதம் தொண்ணூறு கவிதைகள் எழுதி பள்ளி திறக்கும் தினத்தன்று வளர்மதியிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்துகொண்டான்.

‘அதென்னடா தொண்ணூறு? இன்னும் பத்து எழுதவேண்டியதுதானே?’ சிரித்துக்கொண்டே கேட்பாள்.

‘அத்த நீ எளுதி பூர்த்தி பண்ணு வளரு’ என்று சொல்லவேண்டுமென எண்ணிக்கொண்டான்.

[தொடரும்]
Share

2 comments

 • பாரா,

  இப்படி கால் கிலோ, அரைக்கிலோவோ நிறுத்துப் போடறத மொத்த சரக்கையும் ஒரேடியா இறக்கி வெக்கலாம்ல. 🙂

  • சுரேஷ்: ஏற்கெனவே சொன்னேன். இந்தக் கதை முழுதும் என்னிடம் டிஸ்கியில் உள்ளது. மொத்தமாக யூனிக்கு மாற்றினால் ப்ரூஃப் பார்த்தே ரிடையர் ஆகிவிடுவேன். அவ்வப்போது ஓர் அத்தியாயம் எடுத்து மாற்றி சரி செய்து போடுவதற்கே மிகுந்த சிரமமாக உள்ளது. பலநாள் முடியாமல் போய்விடுகிறது. எப்படியும் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடித்துவிடுகிறேன். கவலைப்படாதீர்கள்.

   பல வாசக நண்பர்கள் நான் இந்தத் தொடரை வெளியிடுவதால்தான் புதிய கட்டுரைகள் எழுதுவதில்லையா என்று கேட்கிறார்கள். [கமெண்ட் பகுதியிலும் தனியஞ்சலிலும்.]

   உண்மை என்னவென்றால், என்னால் இப்போது புதிதாக ஏதும் எழுத இயலாத சூழ்நிலை. முழு வறட்சிக்கு பதில் இதுவாவது இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுதான் தூசுதட்டிப் போடுகிறேன்.

   கொஞ்சநாள் மட்டும். பொறுத்துக்கொள்ளுங்கள்!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter