கிழக்கு ப்ளஸ் – 2

பகுதி 1 

குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக நாம் பிரத்தியேகப் பதிப்புகள் ஆரம்பிக்கவேண்டும். ஆடியோ புத்தகங்கள் செய்துபார்க்க வேண்டும். அனிமேஷன் சிடி உருவாக்கும் கலையை முயற்சி செய்யவேண்டும். தமிழில் மட்டுமல்லாமல் சாத்தியமுள்ள பிற அனைத்து மொழிகளுக்கும் பரவவேண்டும். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடவேண்டும்.

இவையெல்லாம் கிழக்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் – அதாவது 2003ம் ஆண்டின் மத்தியில் நானும் பத்ரியும் பேசியவை. இதெல்லாம் முடியுமா, எப்போது முடியும், யார் செய்யப்போகிறார்கள், எங்கிருந்து பணம் வரும், வெற்றிகரமாக இவை அனைத்தையும் இயக்க முடியுமா? எத்தனை மூளைகள் வேண்டும், செயல்படுத்த எத்தனை பெரிய படை தேவைப்படும் – எதைப் பற்றியும் கவலைப்படாமல், செய்யவேண்டும் என்று நினைத்த அனைத்தையும் அந்த ஆண்டு இறுதிவரை பேசித் தீர்த்தோம்.

ஆரம்பித்துவிட்டபிறகு, எதிர்காலத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கும் பொறுப்பை பத்ரி ஏற்றுக்கொண்டார். தொடங்கிய பதிப்பகத்துக்கு ஓர் உருவம் கொடுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். முதல் வருடம், மார்க்கெட்டில் தீவிரமாக விற்பனையாகும் எந்தப் பிரபல எழுத்தாளரின் புத்தகமும் வேண்டாம் என்பது விதித்துக்கொண்ட முதல் விதி. பதிப்பகத்தின் இயல்பான முகம் எப்படி உருவாகிறது என்பதை விழிப்புணர்வுடன் கவனிப்பதற்காகவே இப்படியொரு நிபந்தனையைப் போட்டுக்கொண்டோம்.

என்னிடம் அப்போது இருந்த எழுத்தாளர்கள் இரண்டே பேர். என். சொக்கன், சோம. வள்ளியப்பன். இவர்களில் சொக்கனை ஆயுதமாகவும் வள்ளியப்பனைக் கேடயமாகவும் பயன்படுத்த நினைத்தேன். இருவருடனும் பேசினேன்.

இருவருமே கதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். கதையல்லாத – ஒரு குறிப்பிட்ட விஷயம் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு, தகவல் பிழை இல்லாமல் உண்மையாக – அதே சமயம், கதைக்குரிய சுவாரசியத்துடன் அதை நிறைவாக எழுத்தில் கொண்டுவரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பைத் தெரிவித்தேன். வள்ளியப்பனுக்காவது நிர்வாகவியல், பொருளாதாரம், மனிதவளம் என்று அவர் படித்த / பணிபுரியும் துறை சார்ந்து எழுதும் வாய்ப்பு இருந்தது. சொக்கன் படித்தது பொறியியல். பணியாற்றுவது மென்பொருள் துறை. ஆனால் நான் எழுதச் சொன்னது வாழ்க்கை வரலாறுகள். வாழ்க்கை வரலாறு எழுதச் சொன்னதுகூட அவனுக்கு வருத்தமில்லை, கதைகள் எழுதாதே என்று சொன்னது நெஞ்சு கொள்ளாத வருத்தம்.

நினைத்தால் மணிக்கொரு சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவன், என் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் அன்பின் காரணத்தால் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டு எழுத ஆரம்பித்தான்.

கிழக்கின் முதல் புத்தகம் ‘அம்பானி: ஒரு வெற்றிக்கதை’ அவன் எழுதியது. [தற்செயலாக எங்களுடைய ஐம்பதாவது, நூறாவது, இருநூறாவது புத்தகங்களும் அவன் எழுதியவையாகவே அமைந்தன.] ஒரு தமிழ்ப் புத்தகம் ஆயிரம் பிரதிகள்தான் விற்கும் என்கிற கூற்றை முதல்முதலில் எங்களுக்குப் பொய்யாக்கிக் காட்டிய புத்தகம் அது. வாசிக்கும்போது ஒரு நாவலைப் போன்றே தோற்றமளிக்கும் அந்தப் புத்தகத்தில் மிகையோ, உண்மைக்குப் புறம்பான தகவல்களோ, ஜோடனைகளோ கிடையாது. புனைகதையின் கட்டமைப்பை, கதையல்லாத ஒரு படைப்புக்கு வழங்கி, அதன்மூலம் வாசிப்பை எளிதாக்கும் உத்தி ஒன்றுதான் புதிது. அது ஒரு வாழ்க்கை வரலாறுதான். வெற்றிக்கதைதான். ஆனால் அந்த உத்தியினால் வெற்றி கண்டது. ரிலையன்ஸுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் அம்பானி ஒரு வெற்றிகரமான தொடக்கத்தை அளித்தார்.

அம்பானி இறந்து சிலகாலமே ஆகியிருந்த நேரம் அது. ரிலையன்ஸ் நிறுவன உயரதிகாரிகளுடன் திரும்பத் திரும்பத் தொடர்புகொண்டு தகவல்கள் திரட்டி, பலருடன் பேசி, முகேஷுடன் பேச முயற்சி செய்து, செய்து தோற்று, தொடக்க காலத்திலிருந்து அம்பானி பத்திரிகைகளில் பேசிய பலவற்றைத் தேடித் தொகுத்து வாசித்து, அவரைப் பற்றிப் பிறர் பேசியவற்றையெல்லாம் தேடி, அனைத்தையும் குவித்துவைத்துச் சரிபார்த்து, ஒப்புநோக்கி – சாதாரண வேலையல்ல. பின்னாளில் மணிரத்னம் தனது ‘குரு’ படத்தை எழுத அமர்ந்தபோது எங்கள் புத்தகம் அவரது பணிச்சுமையைக் கணிசமாகக் குறைத்தது என்று கேள்விப்பட்டோம். சந்தோஷமாக இருந்தது.

இன்றைக்குத் தன் வயதைக் காட்டிலும் அதிகமான புத்தகங்களை சொக்கன் எழுதியிருக்கிறான். அவன் இல்லாத தமிழ்ப் பத்திரிகைகள் கிடையாது. அவன் எழுதாத சிறப்பிதழ்கள் கிடையாது. அலுவல் நேரம் போக மிச்சமுள்ள கணங்கள் ஒவ்வொன்றையும் எழுத்துக்கே செலவிட்டுக்கொண்டிருக்கிறான். முதல் முறையாக, ஒரு பதிப்பகம் உருவாக்கிய எழுத்தாளனைப் பத்திரிகைகள் சுவீகரித்துக்கொண்ட சம்பவம் தமிழில் அவன் விஷயத்தில் நடந்தது.

வள்ளியப்பன் இன்றைக்குப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் தமிழகமெங்கும் பல கல்லூரிகளிலும் பிரபலம். அறியப்பட்ட மேனேஜ்மெண்ட் குரு. பங்கு வர்த்தக வழிகாட்டி.

வள்ளியப்பன் என் நண்பர். சொக்கன் என் மாணவன். எனவே கிழக்குக் கான எழுத்து முறைகளை வகுக்கவும் கிழக்கு செய்ய நினைத்த செயல்களைப் பரீட்சை செய்து பார்க்கவும் இவர்கள் இருவரையும் அவர்கள் சம்மதத்துடன் பயன்படுத்திக்கொண்டோம். கனமான விஷயங்களை சுவாரசியமாகச் சொல்லுவது என்னும் இலக்குக்கான உழைப்புடன், அவற்றைச் சாதிக்கக்கூடிய எழுத்தாளர்களை உருவாக்குவதும் எங்களது தலையாய பணியாக ஆனது.

ஒப்பீட்டு அளவில், ஒரு புத்தகத்தை உருவாக்குவது சுலபம். ஓர் எழுத்தாளனை உருவாக்குவது உள்ளவற்றிலேயே மிகவும் சவாலான காரியம். ஒரு ராணுவ வீரனை உருவாக்குவது போல, ஒரு தீவிரவாதியைச் சமைப்பது போல குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து அதனை நோக்கிச் செலுத்திக்கொண்டே இருக்கும் பணி அது. இலக்கை அடைந்ததும் கல்லை நகர்த்தி வேறிடத்தில் வைத்து அங்கு போகச் சொல்லி மீண்டும் தள்ளியாகவேண்டும்.

தன் விருப்பத்தில் கதைகளும் கவிதைகளும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வேறு. நான் சொல்வது அறிவுப் பணியில் ஈடுபடும் எழுத்தாளர்கள். இது கஷ்டம். மிகவும் கஷ்டம். எழுதிப் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இன்றைக்குச் சுமார் நூற்றைம்பது எழுத்தாளர்கள் NHM நிறுவனத்துக்காக எழுதுகிறார்கள். அத்தனை பேரும் தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு எத்தனை தீவிரமாக, நேர்மையாக, விசுவாசமாக இருக்கிறார்களோ, அதே அளவு தீவிரம், நேர்மை, விசுவாசத்துடன் கூடிய அர்ப்பணிப்பை எங்களுக்கு எழுதுவதிலும் வழங்குகிறார்கள்.

அதே சமயம், இணையம் உள்பட பல்வேறு தளங்களில் எங்களுடைய புத்தகங்கள் குறித்த எதிர்மறையான பல கருத்துகள் அடிக்கடி வெளிவருகின்றன. அவற்றுள் நான் ரசித்த சில பிரயோகங்கள் : டவுன்லோட் பிரதிகள், ஃபேக்டரி பொருள்கள், மொழிபெயர்ப்பாளர்களை மட்டுமே ஆசிரியர்களாகக் கொண்ட புத்தகங்கள், அசெம்ப்ளி லைன் தயாரிப்புகள்.

இப்படித் தோன்றுவதை நான் குறைசொல்ல மாட்டேன். ஆனால் ஒவ்வொரு கதையல்லாத, அறிவுபூர்வமான புத்தகத்தைத் தமிழில் உருவாக்குவதற்கும் குறைந்தது நூறு புத்தகங்களைப் படிக்கவேண்டியுள்ளது. துறைசார் வல்லுநர்களைச் சந்தித்துப் பேசவேண்டியுள்ளது. இணையத்தையும் நாடவேண்டியுள்ளது. ஒவ்வொன்றையும் ஒப்புநோக்க வேண்டியுள்ளது. தகவல் வேறுபாடுகளை கவனித்து, சரியானவற்றைத் தேடிப்பிடிக்க மெனக்கெட வேண்டியுள்ளது. ஆங்கிலத்தில் ஒரு விஷயம் எழுதப்பட்டுவிட்டதனாலேயே தமிழில் அது வரக்கூடாது என்று யார் சொல்ல இயலும்? சுமார் நூற்றைம்பது ஆண்டுகாலத் தமிழ் புத்தகப் பதிப்பு வரலாறில் சர்வதேச அரசியல் குறித்தும் தேச வரலாறுகள் குறித்தும் எழுதப்பட்ட புத்தகங்களை ஐந்து கைவிரல்களுக்குள் அடக்கிவிட முடியும். பல கோடிக்கணக்கில் பணம் புரளும் பங்குச் சந்தை வர்த்தகம் குறித்து ‘அள்ள அள்ளப் பணம்’ வெளியாவதற்கு முன்னர் ஒரு புத்தகம் கூடக் கிடையாது. இந்திய தொழில் துறையின் மாபெரும் சாதனையாளர்கள் என்று வருணிக்கப்படும் அம்பானி, நாராயண மூர்த்தி, லஷ்மி மிட்டல் போன்றோர் எப்படித் தம் துறைகளில் சாதித்தார்கள் என்பதை விளக்க எந்தப் புத்தகமும் அதற்குமுன் இல்லை. [லஷ்மி மிட்டல் குறித்து ஆங்கிலத்தில் கூட ஒரு புத்தகம் கிடையாது!]

நீ அமெரிக்காவுக்கும் பாலஸ்தீனுக்கும் போகாமல் எப்படி டாலர் தேசத்தையும் நிலமெல்லாம் ரத்தத்தையும் எழுதலாம் என்றுகூடச் சிலர் என்னிடம் கேட்டார்கள். வேண்டியது ஞானப்பழம் என்றால், உலகைத்தான் சுற்றவேண்டுமென்கிற அவசியமில்லை.

கிழக்கு ஆரம்பித்து முதல் ஐம்பது புத்தகங்களைத் தாண்டியபோது நாங்கள் அதிகம் எதிர்கொண்ட கேள்வி இதுதான்: ‘உங்கள் புத்தகங்களுக்கான விஷயங்களை இண்டர்நெட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவிடுகிறீர்களா?’

இணையத்தில் என்ன இருக்கிறது, அதில் எத்தனை குப்பை என்பது பற்றி எதுவுமே தெரியாதவர்களால் மட்டுமே இக்கேள்வியைக் கேட்க இயலும். இப்படிக் கேட்ட அத்தனை பேருக்கும் நான் சொன்ன பதில்: ‘நீங்கள் இணையத்தை மட்டுமே உதவிக்கு வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு புத்தகத்தை முழுமையாக எழுதிக்கொண்டு வாருங்கள். நான் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்விடுகிறேன்.’

மனம் சோர்ந்த அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் எனக்கு உற்சாகமூட்டி, கனலை அணையவிடாமல் பாதுகாத்த ஒரே நபர் பத்ரி. பத்ரியைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இப்போது முதலாண்டு கிழக்கு.

அம்பானியில் ஆரம்பித்து விறுவிறுவென்று ஐம்பது புத்தகங்களை அந்த ஆண்டு (2004) வெளியிட்டோம். நட்புக்காக மாலனும் இரா. முருகனும் ஆர். வெங்கடேஷும் எங்களுக்குத் தங்களுடைய புத்தகங்களைக் கொடுத்தார்கள். ஆண்டிறுதியில் அசோகமித்திரன் அவருடைய கட்டுரைகள் அனைத்தையும் எடுத்துக் கொடுத்தார்.

சுமார் ஒரு மாதகாலம் அமர்ந்து, அந்தக் கட்டுரை நூலைச் செதுக்கி, ஒழுங்காக்கி, அவசியமான அடிக்குறிப்புகள் சேர்த்து, காலவரிசைப்படுத்தி, துறை வாரியாக வரிசைப்படுத்தி, ஒரு வடிவத்துக்குக் கொண்டுவந்தோம். இரவு பகல் பார்க்காத உழைப்பு அது. ஜனவரியில் வெளியான ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ இரண்டு பாகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியின் கவன ஈர்ப்பு நூல்களாகக் காட்சியளித்தன. அதே ஆண்டுதான் என்னுடைய டாலர் தேசமும் நூல் வடிவம் பெற்றது. இத்தனை பெரிய அளவில், இத்தனை பெரிய விலையில் இத்தனை ராவான சப்ஜெக்டை வெளியிடுகிறோமே, எத்தனை விற்கும் என்கிற சந்தேகம் எனக்கு லேசாக இருந்தது.

ஆனால்  வெளியிட்ட தினம் தொடங்கி இன்றைக்குவரை விற்பனை வேகத்தில் சிறு தேக்கமும் அந்நூலில் இல்லை. எனக்கே தெரியாமல் பல பதிப்புகள் வருகின்றன, விற்றுப்போகின்றன. மீண்டும் நூல் அச்சுக்குப் போகிறது. ஒவ்வோர் ஆண்டும் பெறுகிற ராயல்டி கணக்கு விவரத் தாளில்தான் அதன் மறுபதிப்பு விவரங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்கிறேன்.

தமிழர்களின் வாசிப்பு ஆர்வத்தைச் சந்தேகப்படவே வேண்டாம் என்று எங்களுக்கு அழுத்தம் திருத்தமாகப் புரியவைத்த முதல் புத்தகம் அது. மாத நாவல்தான் படிப்பார்கள், கலர்ப் படம் போட்ட கவிதைப் புத்தகங்கள், சமையல், கைரேகை, வாஸ்து புத்தகங்களைத்தான் காசு கொடுத்து வாங்குவார்கள் என்கிற பொய்த் திரையைக் கிழித்தெறிந்த புத்தகமும் கூட.

[தொடரும்]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter