இதுவரை நான் பேசியதில்லை. கிழக்கு பற்றி. அங்கு என் பணி பற்றி. இது ஆரம்பித்த விதம் பற்றி. அடைந்த வெற்றிகள் பற்றி. நேர்ந்த வீழ்ச்சிகள் பற்றி. தடுமாறிய கணங்கள் பற்றி. தட்டிக்கொண்டு எழுந்து நடந்த தருணங்கள் பற்றி.
பேசாததற்கான காரணங்கள் பல. அவை அத்தனை முக்கியமில்லை. இப்போது பேசலாம் என்று நினைப்பதற்கான காரணம் ஒன்று. அது முக்கியமானது.
பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விடி ஃபண்ட் என்னும் வென்ச்சர் கேப்பிடல் முதலீட்டு நிறுவனம் எங்களுடைய New Horizon Media Private Limited நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. [இது குறித்த முழுமையான செய்திக் குறிப்பின் தமிழாக்கத்தை இங்கே காணலாம்.] இந்திய புத்தகப் பதிப்புத் துறையில் இதற்குமுன் எந்த முதலீட்டு நிறுவனமும் முதலீடு செய்ததில்லை. தமிழ் தொடங்கி காஷ்மீரி வரை. மராத்தி தொடங்கி அஸ்ஸாமி வரை. எந்த மொழி பதிப்பு நிறுவனத்திலும் யாரும் செய்ததில்லை. பதிப்புத் துறையை முதலீட்டுக்குரிய ஒரு துறையாகவே இதுகாறும் யாரும் கருதியதில்லை என்பதுதான் இதன் உள்ளுரைப் பொருள்.
பெரும்பாலும் குடிசைத் தொழிலாகவும் சிறுபான்மையோரால் குடும்பத் தொழிலாகவும் மட்டுமே தமிழகத்தில் பதிப்புத் தொழில் நடத்தப்பட்டு வந்தது. இதனைச் சேவையாகச் செய்தவர்களும் உள்ளார்கள். அவர்களை வணங்கி, வழிவிட்டு ஒதுங்கிவிடுவோம். ஒரு தொழிலாக, இத்துறையில் என்னென்ன செய்யலாம், எத்தனை உயரங்களுக்குச் செல்லலாம் என்று யாரும் உட்கார்ந்து சிந்தித்ததுகூட இல்லை என்பதுதான் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம்.
New Horizon Media Private Limited சார்பில் கிழக்கு பதிப்பகம் என்னும் முதல் இம்ப்ரிண்ட்டை பிப்ரவரி 2004ல் நாங்கள் தொடங்கியபோது எங்களுக்கு இருந்த பெரிய பிரச்னையே அதுதான். இந்தத் துறையைப் பற்றிய மிக எளிய, அடிப்படைத் தகவல்களைக்கூடத் தடவித் தடவித்தான் நாங்கள் பெறவேண்டியிருந்தது. [வெளிநாடுகளுக்குப் புத்தகங்களை எப்படி அனுப்புவது என்று ஒரு பதிப்பாளரிடம் கேட்டபோது, அது தொழில் ரகசியம், சொல்லமாட்டேன் என்று சொன்னார்.] ஒரு புதிய பதிப்பகம் பிறப்பதை மூத்தவர்கள் அத்தனை ஆர்வத்துடன் வரவேற்கிற வழக்கமில்லை என்பதும் தெரியவந்தது. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட பழமொழியை உபயோகிக்கமாட்டேன். காட்டில்தான் நடக்கத் தொடங்கினோம். ஆனால் கண் திறந்தே இருந்தது.
எங்களுக்கு இருந்ததைக் கனவு என்பதைவிட, ஒரு மாதிரி வேகம் அல்லது தீவிரம் எனலாம். தமிழ் வாசகர்களுக்கு வேண்டிய தகவல்கள் – எந்தத் துறையிலும் போதாமலே இருப்பது பற்றிய கடுப்பும் கோபமும் அதிகமாக இருந்தது. புத்தகம் என்றால் இலக்கியம்தான், சமையல்தான், வாஸ்துதான் என்றிருந்த நிலைமை குறித்த மெல்லிய அச்சமும் இருந்தது. இவற்றின் பெயரில் இறைந்துகிடந்த பல மலினமான சரக்குகள் பற்றிய கவனமும் இருந்தது. புத்தகம் போட்டால் முக்கி முக்கி ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடும் என்று கிடைத்திருந்த தகவல் மீதான வியப்பு இருந்தது. ஆயிரம் பிரதிகளா? அவ்வளவுதானா?
ஏன் பத்தாயிரம் முடியாது? இருபத்தையாயிரம்? ஐம்பதாயிரம்? லட்சம்? ஆறு கோடித் தமிழர்கள் உள்ள இடத்தில் ஆயிரம் பேருக்குத்தானா படிக்கத் தெரியும்?
படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் புத்தகம் படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயமா என்ன என்ற கேள்வி வந்தது.
ஆமாம், படித்துத்தான் ஆகவேண்டும் என்று எங்களுக்கான பதிலை நாங்கள் சொல்லிக்கொண்டோம். அப்படிப் படிக்கவைக்கும் விதத்தில் புத்தகங்கள் உருவாகுமானால் படித்தே தீருவார்கள் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததுதான் எங்கள் பலம்.
New Horizon Media Private Limited தொடங்கப்பட்டபோது இருவிதமான மூலதனத்தை முதலில் போட்டோம். கொஞ்சம் பணம். நிறைய நம்பிக்கை.
வாசகர்களின் மீதும் எங்கள் மீதும் இருந்த நம்பிக்கை அது.
16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர் என்னும் முகவரியில் – ஒரு புராதனமான வீட்டின் மாடியில், ஐந்து ஊழியர்களுடன் கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
பத்ரி அப்போது தேர்ட் அம்பயராக இருந்தார்.
[தொடரும்]