உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?

நண்பர் மனுஷ்யபுத்திரனின் 50வது கவிதைத் தொகுப்பு ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ சென்னை புத்தகக் காட்சி 2024 இல் வெளியாகிறது. மனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

மனுஷ்யபுத்திரனைத் திட்டுவது, இழிவு செய்வதாக எண்ணிக்கொண்டு அவர் எழுதுபவை கவிதையே இல்லை என்பது, அவரைக் குறித்துத் தப்பித்தவறி நல்ல விதமாக இரண்டு வரி யாராவது எழுதிவிட்டால், கர்ம சிரத்தையாக அங்கே சென்று காறித் துப்புவது போல ஒரு கமெண்ட் போடுவது போன்றவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் நிறைய நிகழத் தொடங்கியிருக்கின்றன. அவரது படைப்பியக்கமும் அவரது அரசியலும் சம்பந்தமே இல்லாத இரு வேறு எல்லைகளில் இயங்குபவை. ஆனால் அதையெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது. மனுஷ்யபுத்திரன் திமுக. சந்தும் சந்தர்ப்பமும் கிடைத்தால் போட்டுத் தாக்கு.

சிரித்துக்கொள்கிறேன். இது குறித்து யாராவது என்னிடம் கேட்டால் உங்களுக்குச் சரியாகத் தாக்கத் தெரியவில்லை, என்னிடம் வாருங்கள்; பாயிண்ட் எடுத்துத் தருகிறேன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சுமார் இருபதிலிருந்து எண்பது தொண்ணூறு பேர் கொண்ட மீச்சிறு வாசகர் குழாத்திலிருந்து கிளம்பி, இன்றைக்குத் தமிழ் தெரிந்த அத்தனை பேருக்கும் மனுஷ்யபுத்திரனைத் தெரியும் என்கிற நிலைக்குச் சென்றிருப்பவர் அவர். சற்று நிதானமாகவே யோசித்துச் சொல்கிறேன். அவர் ஒரு பொதுச் சொத்தாகியிருக்கிறார்.

இது ஒரு நிலை. அவ்வளவு எளிதில் எல்லோராலும் எட்ட இயலாதது. எழுத்தைத் தவிர வேறெந்தக் கவர்ச்சியும் அவருக்குக் கிடையாது. அவரது கட்சி முகமோ, தொலைக்காட்சிப் புகழோ இதற்கு எந்த உதவியும் செய்ததில்லை. சொல்லப் போனால், எழுத்துப் புகழைத்தான் அந்தப் பக்கம் அவர் அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம், அவரது சௌகரியம். நமக்குச் சம்பந்தமில்லாதது.

ஆனால் ஒன்று. சொன்னேனே, பொதுச் சொத்து. அதனால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேதம் செய்யலாம். பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது தமிழர் பண்பாடு. பண்பாட்டைக் காப்பது நமது கடன். என்ன ஒன்று, யார் எவ்வளவு பேசினாலும் அவரது இயக்கம் ஓயப் போவதில்லை.

எழுத்து ஒரு தொடர் செயல்பாடு. இடைவெளியின்றி இயங்கித்தான் தீர வேண்டும். வரம் வாங்கி வந்தவர்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் துறையில் வெல்ல வேண்டுமானால் இது ஒன்றுதான் வழி. நோபல் பரிசு வென்ற எத்தனையோ பல எழுத்தாளர்களின் பாரிஸ் ரெவ்யு பேட்டிகளில் இதனைக் கண்டிருக்கிறேன். சலிக்காமல் எழுதுபவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரன் நிறைய எழுதுகிறார் என்றால் அதனால்தான் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர வேறெந்த ரகசியமும் இதில் இல்லை. நிறையப் பேரால் கொண்டாடப் படுகிறார் என்றால், அவரளவு இன்றைய தலைமுறையினரின் வாழ்வையும் எண்ண ஓட்டங்களையும் ஒட்டி இன்னொருவர் எழுதவில்லை என்று அர்த்தம்.

இது யாருக்கும் புரியாமல் இருக்காது. ஆனால் ஏற்காமல் முறுக்கிக்கொண்டு திரும்பியிருக்கவே விரும்பும் பெருங்கூட்டமும் இங்குண்டு. இருந்துவிட்டுப் போகட்டும். அவர் உள்பட யாருக்கும் இதில் நஷ்டமே இல்லை. கலைஞனைக் கொண்டாடுவது ஒரு கலை என்றால், கறுப்புக் கொடி குத்திக்கொண்டு எதிர்த்து நிற்பதும் ஒரு கலையே. ஜெயமோகன் பார்க்காததா, சாரு பார்க்காததா, எஸ்ரா பார்க்காததா, பெருமாள் முருகன் பார்க்காததா. எல்லா தலைமுறையிலும் இது உண்டு. எல்லா காலத்திலும் இது உண்டு. எதுவும் இருப்பதற்கு இந்த மண்ணில் இடமுண்டு.

நிற்க. நண்பரின் ஐம்பதாவது கவிதைத் தொகுப்பு இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வெளியாகிறது. சுமார் ஆயிரத்தைந்நூறு பக்கங்கள். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான கவிதைகள். அருமை என்று சொல்லுங்கள். குப்பை என்று சொல்லுங்கள். புலம்பல் என்று சொல்லுங்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கும் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. செயலில் வாழ்பவன் மட்டும்தான் இறப்பின்றி இருக்கிறான்.

மனுஷுக்கு வாழ்த்துகள். இந்தப் புத்தகம் இன்னும் பல பெருஞ்செயல்களுக்குத் தொடக்கமாக இருக்கட்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி