அனுபவம் பயணம் மனிதர்கள்

ரசிகன்

அவன் பெயர் காந்தி பாபு.

பெயரைச் சொல்வதைக் காட்டிலும் அவன் ஒரு விஜய் ரசிகன் என்று சொல்லுவதை மிகவும் விரும்புவான். இருக்கலாம். அதிலென்ன தவறு? லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள ஒரு விஜய்க்கு ஒரு காந்தி பாபுவும் ரசிகனாக இருப்பதில் பிழையில்லை. ஆனால் என்னை அதிர்ச்சியுற வைத்த விவரம், அவன் பகவதி படம் பார்த்து விஜய் ரசிகனானான் என்பது. புதிய கீதையில் அந்த ரசிக மனோபாவம் தீவிரம் கொண்டது என்பது.

சமீபத்திய கேரளப் பயணத்தின்போது அறிமுகமான அவனிடம் கொஞ்சம் பேசலாம் என்று முடிவு செய்தேன். ஒரு திரைப்படத்தில் எதுவெல்லாம் அவனைக் கவர்கிற அம்சம்?

‘தலைவர் டயலாக் டெலிவரிதான் சார் மெய்ன்’ என்றான்.

‘ஓ, சூப்பர். அப்பறம்?’

‘ஃபைட்டு, டான்சு சார்.’

‘இந்தக் கதை…’

‘அதெல்லாம் நல்லாத்தான் சார் இருக்கும். வில்லனோட மோதசொல்ல ஒரு முறை முறைப்பாரு பாருங்க.. சிலிர்த்திரும் சார்.’

‘இல்ல காந்தி பாபு. நீ சொன்ன பகவதி, புதிய கீதை ரெண்டுமே ஃபெய்லியர். காரணம் கதை சரியில்லன்னு…’

‘யாரு சொன்னாங்க? பகவதி நான் ஒம்போது தடவ பாத்தேன். புதிய கீதை மூணு தடவ.’

‘பாத்தியா? ஒரு பயங்கரமான ரசிகன், நீயே மூணு தடவதான் பாத்திருக்க. சனங்க எப்படி முழுப்படத்த ஒரு தடவ பாப்பாங்க?’

‘கதையெல்லாம் புக்குல படிச்சிக்கட்டும் சார். விஜய் படம்னா விஜய்க்காகத்தான் பாக்கணும்.’

‘என்னது? கதையெல்லாம் புக்குல படிக்கணுமா? எந்த புக்ல புதிய கீதை கதை வந்திருக்கு?’

‘நான் அத சொல்லல சார். கதபுக் படிச்சிக்க சொன்னேன். படத்துக்கு எதுக்கு அதெல்லாம்?’

‘ஓ அப்ப சரி. இதுக்கு பதில் சொல்லு. நீ பாத்ததுலயே ரொம்ப சுமாரான விஜய் படம்னு எத சொல்லுவ?’

முறைத்தான். பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்ததுபோலத் தோன்றியது. யாரோ அழைத்து, நகர்ந்து போய்விட்டான்.

அரை மணி கழித்து இழுத்து வைத்து மீண்டும் அதையே கேட்டேன். எது ரொம்ப சுமார்?

‘ரெண்டு மூணு இருக்குது சார். ஆனா அண்ணன் செலக்ட் பண்ணித்தானே நடிச்சிருக்காரு? அதனால அதுவும் நல்ல படம்தான்.’

‘அதாம்ப்பா. ஒரு உதாரணம் சொல்லு.’

‘சரி வெச்சிக்கங்க, பூவே உனக்காக.’

ஒரு சம்பவம் இப்படித்தான் சரித்திரமாகிறது.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி