ஆசி

சிறிய அளவிலாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடித்ததும் வைத்து வணங்க இரு பாதங்கள் கிடைக்காதா என்று மனம் தேடத் தொடங்கும். பாதங்களுக்குப் பஞ்சமில்லை. பொருத்தப்பாடு ஒன்று இருக்கிறது.

அப்பா இருந்தவரை எனக்குப் பிரச்னை இருந்ததில்லை. இதைச் செய்திருக்கிறேன் அப்பா என்று தகவலாகச் சொல்லும்போதே என் மானசீகத்தில் காலடி தென்பட்டுவிடும். உடனே அவர் படிக்கத் தயாராகிவிடுவார். முடித்துவிட்டு, ‘நல்லாருக்கு’ என்று சொல்லிக்கொண்டே திருப்பிக் கொடுப்பார். (கருத்து ஏதாவது இருந்தால் இரண்டு நாள்களுக்குப் பிறகு வரும்.) அவரது ஆசீர்வாதம் அப்படித்தான் வெளிப்படும். பொலிக பொலிக எழுதிக்கொண்டிருந்தபோது அவரிடம் நடமாட்டம் இல்லாமல் போனது. படுக்கையில்தான் இருந்தார். பேச்சு தொண்ணூறு சதமானம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஒருநாளும் விடாமல் அந்தத் தொடரை எப்படியோ படித்துவிடுவார். அவர் இருந்த நிலையில் அப்போது கருத்தாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவர் படிப்பதே எனக்கு ஆசி என்று நினைத்துக்கொள்வேன். யதி படிக்க அவர் இல்லாமல் போனார்.

அதை எழுதி முடிக்கும்போதுதான் பெரும் குறையாக உணர்ந்தேன். அந்த அபத்தத்தை எப்படிக் கடப்பது என்றே புரியவில்லை. விமரிசனம் – மதிப்புரை இதெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. கட்டித் தழுவி, உச்சி மோந்து ஆசியளிக்கப் பிரத்தியேகமாக ஒருவர் இல்லையென்றால் எழுதுவதல்ல; இருப்பதே வீண்.

முன்னாள்களில் திகசி எனக்கு அப்படியொரு ஆசித் தந்தையாக இருந்தார். அவரோ திருநெல்வேலி டவுண். நானோ குரோம்பேட்டை. சந்தித்துக்கொள்வதுகூட வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்ந்தால் அதிகம். ஆனால் பதினைந்து பைசா தபால் கார்டில் அவர் வாரம்தோறும் என்னை வளர்த்துக்கொண்டு இருப்பார். சிலதெல்லாம் சொன்னால் சிரிப்பாக இருக்கும்.

ஒரு சமயம் சலூனுக்கு முடிவெட்டிக்கொள்ளப் போயிருந்தேன். ஏதோ யோசனை. சிகையலங்காரக் கலைஞர் செய்ததை கவனிக்கவில்லை. அவர் ஏராளமாக வெட்டித் தள்ளி, தலையில் இருந்த அனைத்து முடிகளையும் முள் முள்ளாகக் குதறிவிட்டிருந்தார். மீண்டும் அது மென்மை கொள்ளும் அடர்த்தி அடைய எப்படியும் மூன்று மாதங்களாவது ஆகும்.

சண்டை போட்டு என்ன பயன்? ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஆனால் வந்ததும் எனக்கு நேர்ந்த அநீதியை விளக்கி திகசிக்கு ஒரு தபால் கார்டு போட்டேன். ‘சிறு வயதில் வேறு வழியின்றி அப்பா சொன்னதற்காக இப்படி முடிவெட்டிக்கொண்டு வருவேன். இப்போது நான் பெரியவனாகிவிட்டேன். ஆனாலும் விதி விடுவேனா என்கிறது. என் தலையைப் பார்க்க எனக்கே பயமாக உள்ளது’ என்று அதில் எழுதியிருந்தேன்.

அதற்கு திகசியிடம் இருந்து வந்த பதில்: ‘அடடே. குச்சி முடியா? உள்ளங்கையை வைத்துத் தேய்த்தால் சுகமாக இருக்குமே. பைக்கில் போகும்போது அதுவரை காற்றுப் படாத இடமெல்லாம் குளிர்ந்து போய்விடுமே. ஒரு ரகசியம் தெரிந்துகொள். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் நிறைய காதலிகள் உள்ளார்களாம்.’ (விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையில் மேற்கிந்திய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு ஆட வந்திருந்த காலம்.)

மேலோட்டமான பார்வையில் இது ஒரு ஒன்றுமே இல்லாத உரையாடல். என் வருத்தமும் பெரிதல்ல; அவரது பதிலும் மகத்தானதல்ல. இருப்பினும் என் சம்பந்தப்பட்ட ஓர் அற்ப விஷயத்தைக்கூட நான்கு வரி பொருட்படுத்திய மனத்தை எப்படி வகைப்படுத்த?

யதி எழுதி முடித்த சமயம் அதன் முதல் பிரதியைத் தரவும் பெறவும் அவர்கள் இருவருமே இல்லை. அந்த வெறுமையை – சில நிமிடங்கள்தாம் – என்னால் சகிக்கவே முடியவில்லை. அச்சமயம் என்னைக் காப்பாற்றியவர் வண்ணதாசன். யதி அச்சாகி வந்ததும் அவருக்குத்தான் முதலில் அனுப்பினேன். விமரிசனத்துக்கல்ல. மதிப்புரைக்கல்ல. பாராட்டுக்கல்ல. நான் எழுதியிருக்கிறேன் பார் என்று காட்டிக் கொள்வதற்கல்ல. வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஆசி. அது வெளியான புத்தகக் காட்சி மைதானத்தில் வைத்து என்னைக் கட்டிப் பிடித்து – கையை விடவேயில்லை – பதினைந்து நிமிடங்கள் இருக்குமா? அத்தனை பெரிய நாவலுக்கு அவ்வளவு நீண்ட ஆசி அவசியம். அங்கே வார்த்தைகளுக்கு வேலையே இல்லை. சொல்லைப் புறந்தள்ளி உணர்ச்சி தனது சுய வடிவில் வெளிப்பட்ட தருணம்.

அந்தத் தொடு வர்மம்தான் இறவானை எழுதி முடிக்க வைத்தது.

மீண்டும் அதே பிரச்னை. அதே வினா. இம்முறை யார் எனக்கு ஆசி அளிக்கப் போகிறார்கள்? சின்னக் குழந்தைகள் பல்பொடி டப்பாவில் புளியங்கொட்டை சேமித்து வைப்பது போல நான் இத்தகைய ஆசிகளைச் சேகரித்துக்கொண்டிருப்பவன். வன்மத்தின் காற்றைக்கூட வாழ்வில் ஒருமுறை சுவாசித்திராத புண்யாத்மாக்களைத் தேடிப்பிடிப்பது மிகவும் சிரமம். ஆசி கிடைப்பது அதைவிட சிரமம்.

இறவான் இன்னும் பத்து நாள்களில் தயாராகிவிடும். முதல் பிரதியை யாரிடம் தருவேன்! எழுதும்போதுகூட நான் இவ்வளவு கவலைப்படவில்லை. முடித்ததில் இருந்து வேறு சிந்தனையே இல்லை.

எனக்கான முறைத் தந்தையை இம்முறை எங்கே பார்க்கப் போகிறேன்?

[இறவான் எழுதி முடித்தபோது எழுதிய குறிப்பு. பிரசுரிக்க மறந்து அப்படியே விட்டிருக்கிறேன். இப்போது கிடைத்தது. பிரசுரிக்கிறேன்.]
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!