சாகரிகா பரப்பும் அவதூறுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற கோவிந்தசாமியின் உளத் தூண்டலுக்கு உதவ ஒரு கரமும் நீளவில்லை. ஷில்பாவை நம்பியும் பயனில்லை என்ற நிலையில் கோவிந்தசாமியே நேரடியாகக் களமிறங்கி விடுகிறான். அவன் பிரச்சனைக்கு நீலநகரவாசி ஒருவன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கிறது.
முகக்கொட்டகைக்குச் சென்று சிறு பிள்ளைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதைப் போல ஒன்றுக்கு நான்கு முகத்தையும், அதைப் பயன்படுத்துவதில் தனக்கிருக்கும் சந்தேகத் தெளிவையும் பெற்றுக் கொண்டு வருகிறான். புதிய முகத்தோடு கோவிந்தசாமி செய்த குடியுரிமை பதிவை வெண்பலகை ஏற்றுக் கொள்கிறது. தனி ஒருவனாய் கோவிந்தசாமியின் ஆட்டமும் ஆரம்பமாகிறது!
இலக்கிய கர்த்தாவில் ஒருவராக வருபவர் ”சிங்கம்” என்றும், எல்லா விவாதங்களிலும் வரும் இன்னொருவர் ”உயிர்மை கவிஞர்” என்றும் நினைக்கிறேன். தாபம் கொண்ட கவிஞர் தான் யாரென்று தெரியவில்லை. ஒவ்வொரு துறைக்கும் சிலரை கபடவேடதாரிக்குள் இழுத்து வந்து விட வேண்டுமென பா.ரா. முடிவு செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.
கவிதை பிறக்க மழை போல தலைமயிர் நட்டு நிற்பதும் ஒரு குறியீடாக காட்டியிருக்கிறார் முகநூலில் பலருக்கும் முதல் பதிவே கவிதையாகத் தான் இருக்கும். கோவிந்தசாமியும் அதற்கு விதிவிலக்கல்ல! அவன் எழுதியிருப்பது கவிதையில் என்ன ரகம்? என்பது அடுத்த அத்தியாயத்தில் தான் தெரியும்.