சொற்களால் ஆனவன்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைப் பணியில் இருந்து விலகி பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். தனியே ஒரு தொடரை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்த அவரிடம் அப்போது ஒரு கதை சொன்னேன். பிறகு பல சந்தர்ப்பங்களில் பல்வேறு கதைகளைப் பேசினோம். ஒரு நாள் கதீட்ரல் சாலையில் அமெரிக்க தூதரகத்துக்கு எதிர்ப்புறம் நடைபாதையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தபோது மூன்று அல்லது நான்கு வரியில் ஒரு கதைச் சுருக்கம் சொன்னேன். கேட்டுக்கொண்டு போய்விட்டார். பல மாதங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அப்போது நான் பணியாற்றிக்கொண்டிருந்த கிழக்கு பதிப்பக அலுவலகத்துக்கு வந்தார். ‘அந்தக் கதை தேர்வாகிவிட்டது. நாம் வேலையைத் தொடங்கலாம்’ என்று சொன்னார். 2004ம் ஆண்டு கெட்டி மேளம் நெடுந்தொடருக்கான பணி ஆரம்பமானது. அந்தத் தொடரின் கதை வசனம் என்னுடையது. திரைக்கதையை முத்துச் செல்வன் எழுதினார். நான் நினைத்தும் பார்த்திராத நெடுந்தொடர் துறையில் பின்னாளில் நான் முழு நேரமும் ஈடுபடக் காரணம் இயக்குநர் விக்கிரமாதித்தன்தான்.

கற்பனை என்கிறோம். கலை என்கிறோம். படைப்பு என்கிறோம். இன்னும் என்னென்னவோ சொல்கிறோம். உணர்ச்சி வயப்படாமல் இந்தப் பதினேழு ஆண்டுக் கால அனுபவங்களை எண்ணிப் பார்த்தால் தொழில் என்ற வகையில் இந்தத் துறை எனக்கு மிகுந்த நிறைவைத் தந்திருக்கிறது. ஆனால் தொழிலாக மட்டும்தான். வேறெதுவும் இல்லை. இந்தப் பதினேழு ஆண்டுகளில் ஒரு நாள் கூட நான் நெடுந்தொடருக்கு எழுதாதிருந்ததில்லை. கெட்டி மேளம் எழுதிக்கொண்டிருந்தபோது மட்டும்தான் ஒரு பணி. அதன் பிறகு எப்போதும் குறைந்தது இரண்டு சீரியல்களிலாவது பணியாற்றி வந்திருக்கிறேன். 2010 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் ஆறு சீரியல்களுக்கு எழுதினேன். எதற்காக அவ்வளவு வேலை செய்தேன் என்று இப்போது எண்ணிப் பார்த்தால் அதிர்ச்சியாகவும் சிறிது அச்சமாகவும்கூட இருக்கிறது. ஏதோ ஒரு வேகம். ஏதோ ஒரு வெறி. வந்த வாய்ப்பு எதையும் மறுக்க விரும்பாத மனநிலையில் அப்போது இருந்தேன்.

தினமும் காலை ஒன்பது மணிக்கு எழுத உட்காருவேன். பிற்பகல் ஒரு மணி வரை நிறுத்தாமல் எழுதுவேன். சாப்பிட்டு விட்டு இரண்டு மணிக்குப் படுத்துத் தூங்கி மாலை ஐந்து மணிக்கு எழுந்து மீண்டும் எழுத ஆரம்பித்தால் இரவு இரண்டு அல்லது மூன்று மணி வரை எழுதுவேன். சில நாள் அதிகாலை ஐந்து வரைகூட வேலை செய்வேன். அதன்பின் சிறிது நேரம் தூங்கி எழுந்தால் மீண்டும் அதே பணி. மதியம் உறங்கும் அந்த மூன்று மணி நேரம் மட்டும்தான் என்னுடைய ஓய்வு நேரமாக இருந்தது அப்போது. அந்நாள்களில் நண்பர்களைச் சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, வெளியே செல்வது, படங்கள் பார்ப்பது எதுவும் இருந்த நினைவில்லை. ஓர் இயந்திரத்தை முடுக்கிவிட்டு யாரோ ஸ்விச்சை அணைக்க மறந்து போய்ச் சென்றுவிட்டாற் போலத்தான் இருந்தது.

ஒரு சம்பவம். மறக்கவே முடியாது. உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் மனைவியின் தாயார் ஒரு நாள் அதிகாலை காலமாகிவிட்ட செய்தி வந்தது. அப்போது நான் நான்கு சீரியல்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். என் மனைவியின் தாயாருக்காக நான்கு படப்பிடிப்புகளை ரத்து செய்ய முடியாது. எனவே, ‘நான் போகிறேன். நீ மாலை வரை எடுப்பதற்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்து சேர்’ என்று சொல்லிவிட்டு என் மனைவி மட்டும் கிளம்பிச் சென்றாள். அப்படித்தான் செய்யவேண்டி இருந்தது. காரியம் முடித்துவிட்டு மாலை திரும்பி வந்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்து வேலையைத் தொடங்கினேன். பின்னாளில் என் தந்தை காலமானபோதும் இப்படித்தான் நடந்தது. மகிழ்ச்சியல்ல; துயரங்களுக்குக் கூட அனுமதியில்லாத வாழ்க்கை. அதனாலென்ன? விரும்பி ஏற்றது. அதனால் விமரிசனங்களே இல்லை.

ஆனால் தொடக்கம் முதல் ஒரு தீர்மானம் வைத்திருந்தேன். நெடுந்தொடர்களுக்குத் திரைக்கதை எழுதுவதில்லை. வசனம் மட்டும்தான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற சொற்கள் திரையுலகத்திலும் பயன்படுத்தப்படுபவைதான் என்றாலும் நெடுந்தொடர் துறையில் இவற்றுக்கான இலக்கணங்கள் வேறு. இந்தத் துறையில் திரைக்கதை ஆசிரியராக நிலைத்திருப்பது மிகவும் சிரமம். நீங்கள் தருகிற கதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியமில்லை. ரேட்டிங் வருகிறதா இல்லையா என்பது மட்டும்தான் முக்கியம். ரேட்டிங்குக்காக சிந்திப்பது, அவ்வப்போதைய ஆலோசனைகளின் பேரில் கதையை மாற்றுவது, அதிரடித் திருப்பங்களை எண்ணிக்கொண்டே வாழ்வது என்பதெல்லாம் என் இயல்புக்குப் பொருந்தாதவை. எனவே, கொடுக்கும் திரைக்கதைக்கு வசனம் எழுதினால் மட்டும் போதும் என்று முடிவு செய்துகொண்டேன்.

இது ஒரு காட்சியின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான கட்டமைப்பைச் சொற்களால் தீர்மானம் செய்யும் பணி. அது எவ்வளவு சிறந்த காட்சியாக இருந்தாலும் சரி; எவ்வளவு மோசமான காட்சியாக இருந்தாலும் சரி. திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்துக்கு மட்டும் நேர்மையாக இருந்துவிட்டால் போதும். கதை என்னுடயதாக இருப்பதில்லை என்பதால் உணர்வு ரீதியாக இது என்னை பாதிப்பதே இல்லை. ஒரு திருமணம் நடந்தாலும் சரி; நின்றாலும் சரி. ஒரு கொலை நடந்தாலும் சரி; பிணம் எழுந்து ஓடினாலும் சரி. கதாநாயகி கதறினாலும் சரி; கட்டிப்பிடித்துக் கொஞ்சினாலும் சரி. தருணத்துக்கு உகந்த சொற்களைக் கொடுத்துவிடுவதுடன் என் பணி முடிந்துவிடுகிறது. என்னால் முடிந்தவரை அதைச் சரியாகவும் அழகாகவும் செய்துவிட வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பேன்.

இந்தக் காரணத்தால் மட்டும்தான் மிகப்பெரிய தொடர்களில் தொடக்கம் முதல் இறுதி வரை பணியாற்ற முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். வாணி ராணி 1700க்கு மேற்பட்ட எபிசோடுகள். கல்யாணப் பரிசு 1800க்கு மேற்பட்ட எபிசோடுகள். நான் பணியாற்றிய பல தொடர்களில் இயக்குநர்கள் மாறுவார்கள். திரைக்கதை ஆசிரியர்கள் மாறுவார்கள். நடிக நடிகையர் மாறுவார்கள். உண்மையிலேயே ஒரு தனித்தீவில் சிறை வைக்கப்பட்டவன் போல என் அறைக்கதவை இழுத்து மூடிக்கொண்டு நான் பாட்டுக்கு மறுநாள் படப்பிடிப்புக்கு எழுதிக்கொண்டிருப்பேன். என்ன நடக்கிறது என்பதே இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தெரிய வரும். சொன்னேன் அல்லவா? விமரிசனங்கள் இல்லாதபோது விவகாரங்கள் அண்டாது.

என் நண்பர்கள் அடிக்கடிக் கேட்பார்கள். சீரியலுக்கு எழுதிக்கொண்டு எப்படி உன்னால் நாவல்கள் எழுத முடிகிறது? அந்த எழுத்து இதை பாதிக்காதா? ‘யதி’ வெளியாகிப் பெரிய அளவில் பேசப்பட்ட போது இந்தக் கேள்வி அநேகமாக தினமும் வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் என்னை பேட்டி கண்ட ஊடகவியலாளர்கள் தவறாமல் இதனைக் கேட்டார்கள். சமூக வலைத் தளங்களில் திரும்பத் திரும்ப இதற்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது.

உண்மையில் சீரியலுக்கு வசனம் எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்கும் சம்பந்தமே கிடையாது. நான் இங்கே திரைக்கதையில் ஈடுபட்டிருந்தால் ஒருவேளை நாவலாசிரியனாக ஆக முடியாமல் போயிருக்கலாம். கவனமாக அதைத் தவிர்த்துவிட்டதால் எனக்கு இதில் பிரச்னை வந்ததில்லை. ஒவ்வொரு நாளும் எழுதவேண்டிய காட்சிகளை எழுதி அனுப்பிவிட்டுத்தான் என் சொந்த எழுத்து வேலைகளில் அமர்கிறேன். அயர்ச்சியோ சோர்வோ எப்போதும் ஏற்பட்டதில்லை. இரண்டு வெவ்வேறு மொழிகளில் பேசும் திறமை உள்ளவன் எப்படிச் சமாளிப்பானோ அப்படித்தான் செய்கிறேன். ஆனால் சந்தேகமில்லை. இரண்டும் வெவ்வேறு மொழிகள்.

ஒரு விஷயம் சொன்னால் வியப்பாக இருக்கும். நான் ஒரு நாவலாசிரியன் என்பதோ, பன்னிரண்டு நாவல்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் எழுதியவன் என்பதோ இந்தத் துறையில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. முற்று முழுதாக இந்தத் துறை சார்ந்தே ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அதற்கு விழா வைத்து விருதெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே அதைக் கேள்விப்பட்டவர்களோ படித்தவர்களோ யாருமில்லை. எப்படி நான் குடியிருக்கும் வளாகத்தில் என்னை ஓர் எழுத்தாளனாக அறிந்தவர்கள் யாருமில்லையோ, அதே போலத்தான் நான் பணி புரியும் இந்தத் துறையிலும். இங்கு நான் கடைநிலை ஊழியன். டைலாக் ரைட்டர் என்பார்கள்.

நான் இதனை விரும்புகிறேன். இறுதிவரை இப்படி இருந்துவிடுவதே எனக்கும் என் எழுத்துக்கும் சௌகரியம் என்று கருதுகிறேன். நான் எண்ணுவதை எண்ணும் விதத்தில் செய்யவும் செயல்படவும் அவசியமான மனநிலையை எப்போதும் தக்கவைக்கத் தேவைப்படும் பொருளாதார சுதந்தரத்தை எனக்கு இந்தத் துறை தந்திருக்கிறது. பதிலாக என் சொற்களில் ஒரு சிறிய பகுதியை நான் இதற்குத் தருகிறேன். வேறெதுவும் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை.

நன்றி: அந்திமழை மாத இதழ், ஆகஸ்ட் 2021

Share

1 comment

  • அற்புதமான வாழ்கை வாழ்ந்து இருக்கிங்க சார். நன்றியும் பேரன்பும்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி