இரண்டு தயாரிப்பாளர்கள்

அவர் பெயர் நரசிம்மன். நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானார். அவ்வப்போது நகைச்சுவை சிறுகதைகள் எழுதுவார். ஒன்றிரண்டைப் பிரசுரித்தபோது ஒரு நாள் நேரில் வந்து பார்த்தார். பிறகு வாரம் ஒருநாள வருவார். குறுகிய காலத்தில் நண்பராகிப் போனார். நண்பரான பின்பு கல்கியில் அவர் எழுதுவது குறைந்துவிட்டது. மாறாக, நான் கல்கிக்கு வெளியிலும் எழுதும் சாத்தியங்கள் குறித்துப் பேசத் தொடங்கினார்.

எனக்கு அது வியப்பாக இருந்தது. எந்த நம்பிக்கையில் இம்மனிதர் நம்மிடம் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். சில சிறுகதைகள் எழுதியிருந்தேன். ஒன்றிரண்டு நாவல் முயற்சிகள் செய்து தோற்றிருந்தேன். வேறு சொல்லிக்கொள்ளும்படியாக அக்காலக்கட்டத்தில் நான் ஏதும் செய்திருக்கவில்லை. ஆனால் திரைத்துறை சார்ந்த சில கனவுகள் மிச்சம் இருந்தன. யாருக்கு இருந்ததில்லை? எனக்கு அதெல்லாம் கல்கியில் சேர்வதற்கு முன்னரே பெரும்பாலும் வடிந்துவிட்டது. சொன்னேனே, மிச்சமிருந்தவை மட்டும்தான்.

நரசிம்மன்தான் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடர்களைக் குறித்து என்னிடம் பேசினார். திரை உலகத்தைக் காட்டிலும் இதற்கு நம்பகத்தன்மை சிறிது அதிகம என்று அவர் சொன்னார். சன் டிவியின் அசுர வளர்ச்சி குறித்தும் மெட்டி ஒலி தொடரின் வெற்றியைக் குறித்தும் நிறைய சொன்னார். வாய்ப்பிருந்தால் நாம் இணைந்து ஒரு தொலைக்காட்சித் தொடர் செய்வோம் என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டபோது எனக்குப் புரியவில்லை.

அவர் ஏதோ பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அது என்ன பிசினஸ் என்று எனக்குத் தெரியாது. கெமிக்கல் இண்டஸ்டிரி என்று சொன்ன நினைவு இருக்கிறது. ஒரு பழைய மாருதி 800 காரில் கல்கி அலுவலகத்துக்கு வருவார். நான் கிளம்பும்வரை காத்திருந்து என்னை அழைத்துக்கொண்டு செல்வார். கேகே நகர் சரவண பவன் அல்லது அசோக் பில்லருக்குப் பின்புறம் இருந்த கங்கா என்கிற ஒரு திறந்த வெளி உணவகத்துக்குச் செல்வோம். சிற்றுண்டி – காப்பியுடன் ஒன்றிரண்டு மணி நேரம் பேசுவோம். பிறகு நான் பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவேன்.

ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு ஏற்றாற்போன்ற கதையைத் தயார் செய்யச் சொல்லி என்னிடம் அவர் கேட்டார். அப்போதுகூட அவரை ஒரு தயாரிப்பாளராக என்னால் எண்ணிப் பார்க்க முடிந்ததில்லை. பிரபலமில்லாத, பெரிய வெற்றிகளைத் தந்திராத ஒரு சாதாரண எழுத்தாளனை வந்து வந்து பார்க்கக்கூடிய ஒருவர் எப்படி ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக இருப்பார்?

ஆனால் அவர் என்னை மிகவும் எதிர்பார்த்தார். என்னால் ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடரை எழுத முடியும் என்று தீவிரமாக நம்பினார்.

இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் கல்கியிலிருந்து விலகினேன். அடுத்து செய்யப்போவது குறித்த தெளிவு ஏதும் அப்போது எனக்கில்லை. நரசிம்மன் மீண்டும் என்னை அழைத்தார். ‘இன்று நாம ஓர் இயக்குநரைச் சந்திக்கிறோம்’ என்று சொன்னார்.

தி.நகரில் ஓர் உணவு விடுதியில் அன்று மாலை இயக்குநர் விக்கிரமாதித்தனைச் சந்தித்தேன். அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரின் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நரசிம்மனுக்கு அவரோடு ஏற்கெனவே பரிச்சயம் இருந்தது. விக்கிரமாதித்தனோடு மட்டுமல்ல. அவரது திரைத்துறை குருவான இயக்குநர் ராஜசேகருடனும் (இவர் அப்போது திரைப்படம் இயக்குவதில் இருந்து விலகி, நெடுந்தொடர்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.) நல்ல பழக்கம் இருந்திருக்கிறது. எக்காலத்திலோ அவர்கள் இணைந்து ஏதோ ஒன்றைச் செய்ய முயற்சி செய்து, அது நடக்காமல் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. நரசிம்மன் அது குறித்தெல்லாம் என்னிடம் அதிகம் பேசியதில்லை. ஆனால் என்னை சம்பந்தப்படுத்தி ஒரு நெடுந்தொடர் தயாரித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அதில் சந்தேகமில்லை.

தொடருக்கு ஏற்றாற்போன்றதொரு கதை தேடிக்கொண்டிருப்பதாக விக்கிரமாதித்தன் சொன்னார். என்னால் அதனைச் செய்ய முடியும் என்று நரசிம்மன் அவருக்கு நம்பிக்கை அளித்தார். கதை-தொடர் என்பதையெல்லாம்விட எனக்கு விக்கிரமாதித்தன் என்கிற மனிதரைப் பிடித்தது. மிகவும் எளிமையாக இருந்தார். அன்பாகப் பழகினார். அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசியிருப்போம். இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டாற்போலத் தோன்றியது. விரைவில் கதையுடன் வருவதாகச் சொல்லி விடைபெற்றேன்.

இன்னொரு நாள் நாங்கள் மூவருமாக இயக்குநர்-நடிகர் ராஜசேகரையும் சந்தித்தோம். இச்சந்திப்புக்காக நரசிம்மன் தி நகரில் ஓர் அறையை நாள் வாடகைக்கு எடுத்திருந்தார். ரகசியம் எதுவும் கிடையாது. அறை எடுத்துப் பேசுமளவுக்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இத்துறையில் ஒரு திட்டம் சரியாக உருக்கொள்கிறது என்கிற எண்ணம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வருவதற்கு அது அவசியமானது என்பது பிறகு புரிந்தது.

இவ்வாறாகச் சில சந்திப்புகள் தொடர்ந்து நடந்தன. நானும் ஒன்றிரண்டு கதைகளைத் தயார் செய்து விக்கிரமாதித்தனிடம் சொன்னேன். ஒவ்வொரு முறையும் அவர் இன்னொரு கதை யோசித்துக்கொண்டு வரும்படிச் சொல்லி அனுப்புவார். இடைப்பட்ட காலத்தில் நான் குமுதத்தில் பணிக்குச் சேர அழைப்பு வந்தது. கல்கியில் எனக்கு வழிகாட்டியாக இருந்த இளங்கோவன் அப்போது குமுதத்துக்குச் சென்றிருந்தார். அவர் என்னைப் பற்றி குமுதம் இயக்குநர் பி. வரதராஜனுக்குச் சொல்ல, அவரை ஒரு நாள் உட்லண்ட்ஸ் ஓட்டலில் சந்தித்தேன். பத்து நிமிடச் சந்திப்புதான். வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

பிறகு மூன்றாண்டுகள் குமுதத்தில் கழிந்தன. என் சுபாவத்துக்கு அங்கே அவ்வளவு காலம் இருக்க முடிந்தது அதிகம். அங்கிருந்து வெளியேறியதும் மீண்டும் ஒரு நாள் விக்கிரமாதித்தன் என்னைச் சந்திக்க வந்தார். திரும்பவும் அதேதான். ஒரு கதை சொல்லுங்கள்.

அந்த மூன்றாண்டுகளாகவும் அவருக்குப் பிடித்தமான ஒரு கதை அமையவில்லை என்பது எனக்குச் சிறிது வியப்பாக இருந்தது. எப்படியும் பத்திருபது எழுத்தாளர்களிடமாவது கதை கேட்டிருப்பார். எதுவுமேவா சரியாக அமைந்திருக்காது?

ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அப்படியொன்றும் மகத்தான கதைகளைக் கொண்டதாக இருந்ததில்லை. தவிர, ஒரு தொலைக்காட்சித் தொடரின் வெற்றி கதையால் தீர்மானிக்கப்படுவதும் இல்லை. இதெல்லாம் பின்னர் நானறிந்த உண்மைகள் என்றாலும் அன்றைக்குச் சிறிது வியப்பாகத்தான் இருந்தது.

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் வாடகைக்கு ஓரிடம் ஏற்பாடு செய்துகொண்டு எளிமையாகப் பணிகளைத் தொடங்கினோம். கிழக்கு ஆரம்பித்த ஒன்றிரண்டு மாதங்களில் விக்கிரமாதித்தனை மீண்டும் சந்தித்தேன். ஒரு நாள் மாலை டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு வெளியே நடைபாதையில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தபோது, அக்கணத்தில் தோன்றிய கதையொன்றை ஒரு சில வரிகளில் சொன்னேன். கேட்டுக்கொண்டு போய்விட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் போன் செய்து நேரில் வருவதாகச் சொன்னார். கற்பகாம்பாள் நகர் கிழக்கு அலுவலக மாடியில் மீண்டும் சந்தித்தோம். நான் சொன்ன கதை ஜெயா டிவியில் ஏற்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாகச் சிறிது விரிவான கதைச் சுருக்கம் தேவை என்று கேட்டார். அப்படியே அவரை அமர வைத்து, கதைச் சுருக்கத்தை எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

அதன்பிறகு நடந்தவை அனைத்தும் அதுவரை நான் பார்த்திராத வேகத்தில் நடந்தன. விக்கிரமாதித்தன் என்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீட்டு முகவரி கொடுத்து அங்கே வரச் சொன்னார். அதுவரை அத்தனை பெரிய பங்களாவுக்குள் நான் சென்றதில்லை. வெளியிலிருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. உள்ளே சென்றால் வேறு உலகமாக இருந்தது. போர்டிகோவில் காண்டாமிருகம் போல இரண்டு கார்கள் நிற்கும். கடந்து உள்ளே சென்றால் பிரம்மாண்டமான வரவேற்பறை. விலை கூடிய பளிங்கு விளக்குகள். உட்கார்ந்தால் ஏந்திப் படுக்க வைத்துக்கொள்ளும் சோபாக்கள். அழுக்குப் படாத வழுவழுப்பான தரை. அலங்காரப் பிடி வைத்த வளைவு மாடிப் படிகள். எங்கு தொட்டாலும் சில்லென்று இருக்கும். பார்க்கும் இடமெல்லாம் பணத்தின் செழுமை தெரிந்தது. அந்த வீட்டின் மொட்டை மாடி வரை சென்று பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் நிறைய பூச்செடிகள் வைத்திருப்பார்கள். நல்ல உயர்தரத் தேக்குப் பலகை போட்ட ஒரு பெரிய ஊஞ்சல்கூட இருந்தது. மொட்டை மாடி கைப்பிடிச் சுவரோரம் நின்று பார்த்தால் வீனஸ் காலனி சாலை ஓர் அங்கவஸ்திரம் போலத் தெரியும்.

அதுதான் நிதின் கபூரின் வீடு என்று சொன்னார்கள். நிதின் கபூர் என்கிற பெயரை நான் அப்போதுதான் முதலில் கேள்விப்பட்டேன். இந்தி நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர் என்று இன்னொரு தகவலை இயக்குநர் சொன்னார். இந்தியில் ஜிதேந்திரா என்றொரு நடிகர் இருக்கிறார் என்பதும் அவர் ஶ்ரீதேவியைக் காதலித்தவர் என்பதும் எனக்குத் தெரியும். மற்றபடி அவரது சகோதரர் வரை நான் அறிந்து வைத்திருக்க நியாயமில்லை அல்லவா? நானொரு இந்திப் பட ரசிகனும் இல்லை என்பது ஒரு காரணம்.

‘சரி. உங்களுக்கு ஜெயசுதாவையாவது தெரியுமா?’

‘ஆம். நடிகை.’

‘அவர்தான் நமது தயாரிப்பாளர். இவர் அவரது கணவர்.’

‘ஓ. சரி.’

‘இங்கே தங்கி, இந்தத் தொடரைத் தயாரித்து அளிக்கப்போவது இவர்தான்.’

‘நல்லது.’

எனக்கு ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் சம்பளம் பேசினார்கள். உயரமும் ஆகிருதியுமாக நிதின் கபூர் வந்து கைகொடுத்து வாழ்த்து சொன்னார். அவரது உள்ளங்கை இரண்டு பேரின் உள்ளங்கைகளைச் சேர்த்துத் தைத்தாற்போல அகலமாக இருந்தது. கோடம்பாக்கம் பெஸ்ட் மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் அலுவலகம் ஏற்பாடு செய்து தந்தார்கள். மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஒரு வீட்டில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.

மூன்று மூத்த சகோதரிகள் திருமணத்துக்கு இருக்கும்போது நான்காவதாகப் பிறந்தவன் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு வந்துவிடுகிறான். பொறுப்பற்ற கணவனும் பிழை புரிந்த மகனும். தம் மகள்களைக் கரை சேர்க்க ஒரு தாய் என்னென்ன கஷ்டங்கள் படவேண்டியிருக்கும்?

இதுதான் கதைச் சுருக்கம். கெட்டிமேளம் என்று தலைப்பிடப்பட்ட அந்த நெடுந்தொடர், ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. விக்கிரமாதித்தனுக்கு நல்ல இயக்குநர் என்கிற பெயரும் எனக்கு நல்ல கதை-வசனகர்த்தா என்ற பெயரும் ஒருங்கே கிடைக்கக் காரணமானது.

அது நான் எதிர்பாராத திருப்பம். ஒரு தொலைக்காட்சித் தொடர் எழுத்தாளனாக நான் உருப்பெறுவேன் என்று எண்ணியதில்லை. அதற்காக ஆசைப்பட்டதும் இல்லை. ஆனால் நடந்தது. அடுத்தப் பதினேழு ஆண்டுகள் என் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை அந்தப் பணியே எடுத்துக்கொண்டது.

தொலைக்காட்சித் தொடர்களுக்குள் நான் நுழையக் காரணமாக இருந்தவர் இயக்குநர் விக்கிரமாதித்தன். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நரசிம்மனை அதன்பின் பார்க்கவே முடியவில்லை. அவர் ஒரு தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்ததாகவும் தெரியவில்லை. ஒரு புதிய இயல் எனக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த அவரை என்னால் மறக்க முடியாது.

அவரைப் போலத்தான் அந்தத் தொடரின் தயாரிப்பாளர் ஜெயசுதாவும். அவர் எப்போதும் ஹைதராபாத்திலேயேதான் இருந்தார். நூறாவது எபிசோட் ஒளிபரப்பானபோதோ, இருநூறாவது எபிசோடின்போதோ ஒரு நாள் போனில் பேசி வாழ்த்துச் சொன்னார். அவ்வளவுதான். அந்தத் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு வரை என்றுமே அவரை நான் பார்த்ததில்லை.

அந்தத் தொடர் வெளியாகிப் பல வருடங்களுக்குப் பின்பு ஒரு நாள் செய்தித் தாளில், நிதின் கபூர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நல்ல மனிதர். எப்போதும் தனியாக இருந்தார். அவர் வீட்டில் செடி கொடிகளை கவனித்துக்கொண்டவர்கள்தாம் அவரையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு சமயங்களில் அவர் வீட்டு மொட்டை மாடியில் அவரோடு அமர்ந்து பேசியிருக்கிறேன். அவர் அடுத்துத் தயாரிக்கவிருந்த தெலுங்கு மற்றும் ஹிந்தி தொடர்களைக் குறித்து அப்போது சொன்னார். ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. வலுவான குடும்பக் கதைகள் நிறைய வேண்டும் என்று ஆர்வமுடன் பேசுவார். கெட்டி மேளம்கூட ஒரு வெற்றிகரமான தொடர்தான். பொருளாதார ரீதியில் தயாரிப்பாளரை அது ஏமாற்றியிருக்க வாய்ப்பில்லை.

பொதுவாகவே குடும்ப உறவுகளின் அருமையைப் பேசும் தொடர்கள் ஏமாற்றம் தருவதில்லை.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!