பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 105

ஶ்ரீபெரும்புதூரில் இருந்து கந்தாடையாண்டான் வந்திருந்தார். முதலியாண்டானின் புதல்வர். வயது அளித்த தளர்ச்சியால் இனி திருவரங்கத்தைவிட்டு எங்கும் போக முடியாது என்று தெரிந்தபின் வெளியூர் தொடர்புகளையெல்லாம் அவர்மூலம்தான் ராமானுஜர் கவனித்துக்கொண்டிருந்தார். குறிப்பாக, காஞ்சியிலும் ஶ்ரீபெரும்புதூரிலும் நடக்கிற விவரங்களையெல்லாம் அவர்தான் அடிக்கடி வந்து சொல்லுவார்.

தேசம் முழுவதிலும் இருந்து சீடர்களும் பக்தர்களும் வந்துகொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நடக்கிற திருவிழாக்கள், உற்சவங்கள், சத்சங்கங்கள், வாதப் போர்கள் குறித்த விவரங்களை ஆர்வமுடன் விவரிப்பார்கள். ஏராளமான திருக்கோயில்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஒழுங்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் ராமானுஜர். அனைத்தும் செம்மையாக நடைபெறுகிறதா என்று ஒவ்வோர் இடத்தில் இருந்தும் தகவல் வரும். காலட்சேப நேரங்கள், சீடர்களுக்கு வகுப்பெடுக்கும் நேரங்கள் நீங்கலாகப் பெரும்பாலும் இத்தகைய வெளியூர் பக்தர்கள் பேசுவதைக் கண்மூடிக் கேட்டுக்கொண்டிருப்பதிலேயே அவருக்குப் பொழுது போய்க்கொண்டிருந்தது.

உடல் தளர்ந்துவிட்டாலும் மனத்தில் ஒரு நிறைவு இருந்தது. ஒரு மாற்றத்தை அவர் உத்தேசித்தார். சமூகத் தளத்தில். ஆன்மிகத் தளத்தில். அறிவுத் தளத்தில். வாழ்நாள் முழுதும் அதற்காகவேதான் உழைத்துக்கொண்டிருந்தார். ஒரு வரமே போலக் கிடைத்த சீடர்கள் அவரது பணிச்சுமையைப் பெருமளவு பகிர்ந்துகொண்டார்கள். முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் வில்லிதாசரும் பிறரும் ராமானுஜர் உருவாக்கிய வைணவ சித்தாந்தத்தின் எல்லைகளைக் கணிசமாக விஸ்தரித்தார்கள். கோயிலும் பெருமாளும் சாஸ்திரங்களும் இன்னபிறவும் அந்தணர்களுக்கு மட்டுமே என்றிருந்த ஆதிகால வழக்கத்தை உடையவரும் அவரது சீடர் படையும் முயன்று மாற்றி வைத்தனர். பஞ்சபூதங்களும் அனைவருக்கும் பொதுவென்றால் அதைப் படைத்தவனும் அப்படியே.

வெறும் சொல்லல்ல. செயலில் நிரூபித்தார் ராமானுஜர். தமது வாழ்க்கையை ஒரு கருவியாகக் கொண்டு வாழ்ந்து காட்டினார். திருநாராயணபுரத்தில் நிகழ்ந்த ஹரிஜன ஆலயப் பிரவேசம், அதன்பின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தது. பிறப்பால் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் பேதம் பார்ப்பது ஒரு சமூக வியாதியெனக் கருதப்படலாயிற்று.

மறுபுறம் ஆழ்வார்களின் பிரபந்தங்களை ஆலயங்கள்தோறும் ஒலிக்கச் செய்வதில் அவர் மிகத் தீவிரமாக இருந்தார். வடமொழி சுலோகங்கள் இருக்கட்டும். நம் தமிழுக்கு இல்லாத மரியாதையா? வைணவ ஆலயங்களில் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்னும் நிலை வந்ததற்கு உடையவரே காரணம். அவர் நியமித்த திருக்குருகைப் பிரான் பிள்ளான், குரு சொல் தட்டாமல் திருவாய்மொழிக்கு ஓர் அழகிய உரை எழுத, அதன் பேரெழிலில் மயங்கிய மக்கள் ஒவ்வோர் ஆழ்வாரின் பாசுரங்களையும் தேடித்தேடிப் பொருளுடன் பயில விரும்பினார்கள்.

ராமானுஜர் தன்னைத் தேடி வரும் பக்தர்கள் ஒவ்வொருவருடனும் அக்கறையுடன் உரையாடினார். வேதாந்த விளக்கங்கள். பிரபந்தப் பெருங்கடல் முத்துக்குளிப்பு வைபவம். ஒருபுறம் ராமாயணப் பேச்சு. மறுபுறம் பிரம்ம சூத்திர விளக்கம். அவர் ஓயவேயில்லை.

நெஞ்சில் நிலைத்த ஒரே துயரமாக அவரது பிரியத்துக்குரிய முதல் தலைமுறைச் சீடர்கள் அவருக்கு முன் பரமபதம் அடைந்ததுதான் இருந்தது. ‘போதுமே இருந்தது?’ என்று என்றோ ஒருநாள் உரையாடலின் இடையே அவர் குறிப்பிட, அந்தக் கணமே கூரத்தாழ்வானுக்கு நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. நேரே கிளம்பி அரங்கனின் சன்னிதிக்குப் போய்விட்டார்.

‘பெருமானே, நீ என்ன செய்வாயோ தெரியாது. என் ஆசாரியருக்கு முன்னால் நான் போய்ச் சேரவேண்டும்.’ என்று கண்டிப்புக் கலந்த வேண்டுகோளை வைத்தார். கூரேசர் கேட்டுக் கொடுக்காமல் இருப்பதா? ‘சரி உம் இஷ்டம்’ என்று உத்தரவாகிவிட்டது.

கூரேசருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். நேரே ராமானுஜரிடமே வந்து இந்தத் தகவலைச் சொன்னார். ‘ஒரு கவலை விட்டது சுவாமி. தாங்கள் சொர்க்கத்துக்குப் போகும்போது அங்கே உம்மை வரவேற்க யார் இருப்பார்களோ என்னமோவென்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்போது எனக்கே உத்தரவு கிடைத்துவிட்டது.  வருகிறேன்!’ என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்தார். போய்விட்டார்.

அழுவதா? திகைப்பதா? யாருக்கும் எதுவுமே புரியவில்லை. ராமானுஜர் உடைந்து போனார். தமது எழுநூறு சீடர்களுள் அவருக்குக் கூரேசர் என்றால் தனி அபிமானம். எத்தனை பெரிய பணக்கார வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவர்! ஒரு கணத்தில் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டுத் தன் பின்னால் வந்து நின்றவர். நிறைவாழ்வுதான். ஆனாலும் இழப்பு தரும் வலி பெரிதல்லவா?

ஐந்தாறு வருடங்கள் ராமானுஜர் தனக்குள் ஒடுங்கிப் போனவராகவே உலவிக்கொண்டிருந்தார். துயரத்தின் பிடியில் இருந்து சிறிது மீளத்தொடங்கியபோது முதலியாண்டான் இறந்து போனார். பின்னாலேயே வில்லிதாசர் போய்ச் சேர்ந்தார். அவர் மறைந்த சில நிமிடங்களில் அவரது மனைவியான பொன்னாச்சியும் உடன் சென்றாள்.

உடையவர் திகைத்துவிட்டார்.

‘ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல்வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்’

என்ற பெரியாழ்வார் பாசுரம் அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆண்டாள் எம்பெருமானோடு ஐக்கியமானதைச் சுட்டிக் காட்டுவது. ஒரு தந்தையாகப் பெரியாழ்வார் அடைந்த விவரிக்க முடியாத உணர்வெழுச்சியின் வெளிப்பாடு.

அப்படித்தான் இருந்தது ராமானுஜருக்கு. பெரியாழ்வாருக்கு ஒரே ஒரு மகள்தான். உடையவருக்கு எத்தனை எத்தனை ஞானபுத்திரர்கள்! அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்த தலைமுறை என்று சீடர்கள் பெருகிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் நூறாண்டு காலம் ஒரு பெரும் பயணத்தின் உடன் வந்த தோழர்கள் அல்லவா அவர்கள்! இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்தவர்கள் அல்லவா! அடுத்தத் தலைமுறைக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் அல்லவா!

மனத்துக்குள் நொறுங்கிப் போயிருந்தார் ராமானுஜர். ஆனால் இதுவும் நிகழத்தானே வேண்டும்?  ஆனால் வாழ்வின் சாரம் பரமன் அடி பற்றல் என்பது புரிந்து வாழ்ந்தவன் வைகுந்தம் தவிர வேறெங்கும் போவதில்லை. துறவு ஏற்பதற்கு முன்னர் திருக்கச்சி நம்பியின் மூலம் காஞ்சி அருளாளப் பெருமான் தனக்களித்த ஆறு பதில்களை அவர் எண்ணிப் பார்த்தார்.

நானே பரம்பொருள்.

ஜீவனும் பரமனும் வேறு வேறு.

சரணாகதியே பெருவழி.

அந்த வழி வந்தவர்கள் இறக்கும்போது என்னை நினைக்கத் தேவையில்லை.

தேகம் விடுத்துப் புறப்படும்போது அடியார்களுக்கு மோட்சம் நிச்சயம்.

பெரிய நம்பியே உமது ஆசாரியர்.

இதை உணர்ந்தவர்களாகத்தான் அவரது அத்தனை சீடர்களுமே இருந்தார்கள். மோட்சத்தின் வாயிலில் உம்மை வரவேற்கக் காத்திருப்பேன் என்று சொன்ன கூரேசரின் சொற்கள் காதில் ஒலித்தன.

‘சுவாமி…’

கந்தாடையாண்டான் மெல்ல அழைத்தார்.

‘ம்ம்? கூப்பிட்டாயா ஆண்டான்?’

‘சுவாமி, திருநாராயணபுரத்து பக்தர்களுக்கு அருளியது போல ஶ்ரீபெரும்புதூருக்கும் தங்களது திருமேனிச் சிலையொன்று அருளவேண்டும் என்று அங்குள்ளவர்கள் பிரியப்படுகிறார்கள்.’

பிறந்த மண் கூப்பிடுகிறது. மகனே, என்னிடம் வா.

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி