பொலிக! பொலிக! 104

நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும் கணப் பொழுது உறைந்து மீண்டாற்போலிருந்தது. தடதடத்து ரதம் ஓடும் அகண்ட பெரும் வீதியில் ராமானுஜரும் கூரேசரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்தபோது பரவசக் கண்ணீரைத் தவிர இருவரிடமும் ஏதும் இருக்கவில்லை. ‘சுவாமி..!’ என்று பாதம் பணிய வந்த கூரேசரை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டார் ராமானுஜர்.

‘இதுவோ விதி? இதுவோ உம் சேவைக்குப் பரமன் அளித்த பரிசு? ஞானச் சுடரொளி வீசும் தங்கள் விழிகளை அல்லவா இத்தனைக் காலமாக உமது அடையாளமாக என் நினைவில் ஏந்தி பத்திரப்படுத்தி இருந்தேன்! அதைப் பிடுங்கி எறிந்தது காலத்தின் உக்கிரமா, கலியின் வக்கிரமா? இப்படி ஆகிவிட்டதே கூரேசரே!’

‘வருந்தாதீர்கள் சுவாமி. கலி கெடுக்க வந்த புருஷர் தாங்கள். ஆயிரமாயிரம் பேர் அகக்கண் திறந்து வைத்தவர் தாங்கள். அடியேனும் அதிலொருவன் அல்லவா? இந்த விழிகள் எனக்கெதற்கு? இதனால் எதைக்கண்டு மகிழப் போகிறேன்? நெஞ்சில் நீங்கள் இருக்கிறீர்கள். நினைவில் எம்பெருமான் இருக்கிறான். விழிகொண்டு கண்டறிய வேறேதும் எனக்கில்லை சுவாமி!’ என்றார் கூரேசர்.

வீதி குழுமிவிட்டது. உடையவரின் சீடர்கள் எழுநூறு பேரும் ஓடோடி வந்து  கூரேசரின் தாள் பணிந்தார்கள். யாருக்கும் பேச்சு எழவில்லை. நடந்த கோர சம்பவத்தின் எச்சமாகக் குழிந்திருந்த அவரது கண்கள் அவர்களது வாயடைக்கச் செய்திருந்தன. எப்பேர்ப்பட்ட மகான்! யாருக்கு இந்த நெஞ்சுறுதி வரும்! மன்னனே ஆனாலும் மற்றொரு கருத்தை ஏற்கமாட்டேன் என்று அடித்துப் பேசுகிற தெளிவு எத்தனை பெரிய வரம்! மிரட்டல் அவரை அச்சுறுத்தவில்லை. தண்டனை அவரை பலவீனப்படுத்தவில்லை. வலியும் வேதனையும் குருதிப் பெருக்கும்கூட அவருக்கொரு பொருட்டில்லை. ‘எம்பெருமானாரே, இத்தனை ஆண்டுகள் தங்களைக் காணாமல், தங்கள் நிழலில் வசிக்காமல் அனலில் வாடினேனே, அதனைக்காட்டிலும் ஒரு துயர் எனக்கில்லை’ என்றார் கூரேசர்.

‘இல்லை. இது மிகக் கொடுமை. ஒரு பாவமும் அறியாத தங்களுக்கு இது நேர்ந்திருக்கவே கூடாது!’

‘யார் கண்டது? பரம பாகவதர் யாருடைய திருமண்ணாவது நேராக இல்லை என்று எப்போதாவது மனத்துக்குள் நினைத்திருப்பேன். அந்த பாகவத அபசாரமாவது செய்யாமல் இது எனக்கு நேர்ந்திராது சுவாமி!’

‘ஐயோ நீங்களா! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர் கூரேசரே. உலகுக்கும் மக்களுக்கும் உங்கள் மூலம் பகவான் ஒரு செய்தி சொல்லியிருக்கிறான் என்று மட்டும்தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நிபந்தனையற்ற அன்பும் அப்பழுக்கற்ற தியாகமும் பரிசுத்தமான சேவையுமே வைணவம் என்பதை நீங்கள் உணர்த்தியிருக்கிறீர்கள்.’

துயரத்தின் கனத்தைச் சொற்களின்மூலம் வெளியே இறக்கப் போராடிக்கொண்டிருந்தார் ராமானுஜர். முடியவில்லை. அன்றும் மறுநாளும் ஒவ்வொரு நாளும் கூரேசரைக் காணும்போதெல்லாம் அவரைத் துக்கம் கவ்விக்கொள்ளும். அம்மெலிந்த தேகத்தையே அவரது விழிகள்தாம் தாங்கிக்கொண்டிருந்தாற்போல் இருக்கும். அப்படியொரு சுடர். அப்படியொரு பெருங்கருணை. அது இல்லாது போய்விட்டதே.

ஒருநாள் இதை யோசித்தபடியே தனித்து அமர்ந்திருந்த உடையவர், சட்டென்று ஏதோ தோன்ற, எழுந்தார். விறுவிறுவென்று திருவரங்கத்து அமுதனார் இல்லத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கோயில் அதிகாரியாக இருந்து, தொடக்க காலத்தில் ராமானுஜரின் சீர்திருத்தங்கள் பிடிக்காமல் போர்க்கொடி தூக்கிய அமுதனார். பிறகு உடையவரின் நோக்கத்தில் இருந்த பரிசுத்தம் புரிந்து பாதம் பணிந்த அமுதனார். ‘கூடாது; வேண்டாம்’ என்று ராமானுஜர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், ராமானுச நூற்றந்தாதி என்னும் காலத்தால் அழியாத பேரற்புதப் படைப்பைத் தந்து, அதை அரங்கன் அருளால் நிரந்தரமாக்கும் கொடுப்பினை பெற்ற அமுதனார்.

அது நல்ல நண்பகல் நேரம். தன் வீட்டு வாசலுக்கு உடையவர் வந்து நிற்பது கண்டு திடுக்கிட்டு ஓடி வந்தார் அமுதனார். ‘சுவாமி! வெளியே ஏன் நிற்கிறீர்? உள்ளே வரவேண்டும்!’

‘நான் பிட்சை கேட்டு வந்துள்ளேன் அமுதனாரே!’

‘திருவுள்ளம் என்னவென்று தெரிந்தால் இயன்றதைச் செய்வேன்.’

‘திருவரங்கம் திரும்பிய கூரேசர் குடும்பத்துக்குத் தங்குவதற்குச் சரியான இடம் இல்லை. பெரிய நம்பியின் மகன் புண்டரீகாட்சனும் இடிந்து விழும் தறுவாயில் உள்ள ஓரிடத்தில் வசித்துக்கொண்டிருக்கிறார். பாகவத உத்தமர்களைப் பராமரிப்பதைக் காட்டிலும் பெரிய கைங்கர்யம் வேறில்லை…’

அமுதனாருக்குப் புரிந்தது. சித்திரை வீதியில் இருந்த தமது இரண்டு நிலங்களை அந்தக் கணமே கூரேசருக்கும் பெரிய நம்பி குடும்பத்தாருக்கும் தந்துவிட்டதாகச் சொன்னார். உடையவர் தமது சீடர்களைக் கொண்டு அங்கு இரு குடும்பங்களும் தங்குவதற்கேற்ப வீடுகளைக் கட்டினார். அவர்களைக் குடியேற்றி அழகு பார்த்தார். எதிரெதிர் வீடுகளில் இரு பெரும் சூரியச் சுடர்கள்.

‘ஆனால் இதெல்லாம் எனக்குப் போதாது கூரேசரே. நீங்கள் என்னோடு காஞ்சிக்கு வரவேண்டும். வரம் தரும் கடவுளான பேரருளாளன் தங்களுக்குக் கண்டிப்பாகப் பார்வையைத் திருப்பித் தருவான்’

‘என் பார்வை அத்தனை அவசியமா சுவாமி?’

‘எனக்கு அவசியம்’ என்றார் ராமானுஜர். வற்புறுத்தி அவரைக் காஞ்சிக்கு அழைத்துச் சென்று சன்னிதியில் நிறுத்தினார். கூரேசர் நெஞ்சுருகப் பாடிய சுலோகங்களைக் கேட்டுக் கனிந்த பேரருளாளன் திருவாய் மலர்ந்தான்.

‘என்ன வரம் வேண்டும் கூரேசரே?’

ஒரு கணமும் யோசிக்காமல் அவர் பதில் சொன்னார், ‘நாலூரான் இறந்தால் அவனுக்கு நல்லகதி கிடைக்க வேண்டும்.’

திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். ‘என்ன இது கூரேசரே? நான் என்ன சொன்னேன், நீங்கள் என்ன கேட்டீர்?’

‘சுவாமி, என்னை மன்னித்துவிடுங்கள். என் கண்ணைவிட மேலான தாங்கள் என்னுடன் இருக்கிறீர்கள். ஆனால் வைணவனாகப் பிறந்தும் பாவம் பல புரிந்து அவன் நரகம் போவான். நாலூரான் நரகம் போனான் என்று சொல்லாமல் ஒரு வைணவன் நரகம் போனானென்று சரித்திரம் பேச இடம் தர விருப்பமில்லை எனக்கு’ என்று சொன்னார்.

கேட்டுக்கொண்டிருந்த உடையவர் மட்டுமல்ல; அருளாளனே வியந்து போனான். ‘ஓய் கூரேசரே, இன்னொரு வரம் இந்தாரும். நாலூரான் மட்டுமல்ல; உமது சம்பந்தமுள்ள அத்தனை பேருக்கும் இனி சொர்க்கம்தான்!’ என்று திருவாய் மலர்ந்தான்.

குரு சொல் மீறினால் நரகம் என்று முன்பொருமுறை திருக்கோட்டியூர் நம்பி எச்சரித்தும், மீறிய சம்பவம் ராமானுஜருக்கு நினைவுக்கு வந்தது. ‘கூரேசரே, உமது சம்பந்தத்தால் எனக்கும் இனி சொர்க்கம் நிச்சயம்!’ என்று சொல்லிப் புன்னகை செய்தார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி