மே 2017ல் கடுகு சாரிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இருந்த வரிகள்:
//அன்புள்ள பா.ரா அவர்களுக்கு,
வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன்.
எழுத்தாளர்கள். அரசியல்வாதிகள், நடிக, நடிகையர், பாடகர்கள், பாடகிகள் என்று பலரை உருவாக்கியுள்ளேன். இன்று உங்கள் படம் அகப்பட்டது (மாட்டிக்கொண்டது!) அதை வைத்து நான் உருவாக்கிய படம் இத்துடன்.
அன்புடன்,
பி எஸ் ஆர்//
அவர் கடிதத்துக்கு நான் எழுதிய பதில் இது:
//அன்புள்ள கடுகு சார்
வணக்கம். நலமா? என்னுடைய இந்தக் குறிப்பிட்ட புகைப்படத்தைப் பல நண்பர்கள் பலவிதமாக உருமாற்றம் செய்திருக்கிறார்கள். போட்டோஷாப்பர்களின் பிரத்தியேக விருப்பத்துக்குரியதாக இப்படம் அமைந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்படத்தை எடுத்தவர் என் நண்பர் குரு. அமெரிக்காவில் மைக்ரோசாஃப்டில் உத்தியோகம் பார்ப்பவர். ரொம்ப வருஷம் முன்னால் சென்னை வந்தபோது ஒரு புத்தகக் காட்சி சமயம் அரங்கில் வைத்து இதனை எடுத்தார். அதன்பின் அவர் வரவேயில்லை.
பிகு: உங்களுடைய பதம் பிரித்த பிரபந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பொன்றை நண்பர்கள் சுரேஷ்-பாலா (சுபா) அளித்தார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு இப்படியொரு மகத்தான பதிப்பு இதுவரை இல்லை என்று அடித்துச் சொல்வேன். கடந்த 17ம் தேதி அப்பா காலமாகிப் போனார். பதிமூன்றாம் நாள் திருவாய்மொழி பாராயணத்தின்போது இந்தப் பதிப்பைத்தான் உபயோகித்தேன். நம்மாழ்வார் ஒரு நம்பமுடியாத சொற்புதைபொருளாளர். ஒவ்வொரு சொல்லுக்குள் இருந்தும் என்னென்னவோ அர்த்தங்களைத் தோண்டி எடுக்கத் தூண்டுகிறார். வார்த்தை வார்த்தையாக நிதானமாக ரசித்து ரசித்துப் படித்து அனுபவிக்கப் பேருதவி செய்தது உங்கள் பதிப்பு. மிக்க நன்றி.
பாரா//
காலை முதல் அவர் இறந்துவிட்ட செய்திதான் திரும்பத் திரும்ப நினைவில் வருகிறது. மகத்தான மனிதர். நகைச்சுவை எழுத்தாளர் என்பதைத் தாண்டி அவரிடம் வேறு பல திறமைகள் உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்பு கல்கி பத்திரிகைக்கென்று சில ஃபாண்ட்கள் (எழுத்துருக்கள்) செய்து கொடுத்தார். எனக்கென்று என் பேரில் ஒரு ஃபாண்ட் வேண்டும் என்று அவரிடம் அடம் பிடித்தேன். ‘அதுக்கென்ன? பண்ணிட்டா போச்சு. உயிரெழுத்து பன்னெண்டு, மெய்யெழுத்து பதினெட்டு, உயிர்மெய் எழுத்து 216. இது தவிர ஃபுல் ஸ்டாப், கமா, செமிகோலன் இத்தியாதி. உங்க கையெழுத்துல கறுப்பு மையில எழுதி அனுப்புங்கோ. பத்து நாள்ள பண்ணி அனுப்பறேன்’ என்று சொன்னார்.
‘இப்படியெல்லாம் அநியாயத்துக்கு இம்போசிஷன் எழுத வெக்காதிங்க சார்’ என்றேன்.
‘சாசுவதமாறதெல்லாம் லேசில்ல சுவாமி’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
எழுத்துருவுக்கான டெஃபனிஷனா அது! வாழ்க்கைக்கே அல்லவா.
கடுகு சாருக்கு அஞ்சலி.