தொழில்நுட்பம்

fifine K 678 – ஒரு மதிப்புரை

இந்த மைக்கைப் பற்றி வெங்கட் எனக்குச் சொன்னார். ஒலிச் சுத்தம் நன்றாக இருப்பதையும் பயன்பாடு எளிதாக உள்ளதையும் அவரது அலுவலக அறையில் கண்டேன். நாளெல்லாம் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கும் இம்சையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இது நடந்ததால் உடனே அமேசானில் ஆணையிட்டு, இன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

இன்னொரு காரணம், ஹெட்போனை மாட்டிக்கொள்ளும்போது கணித் திரையில் நமது மேனி எழில் பாதி மறைந்துவிடுகிறது என்றொரு எண்ணம். அதிலும், காதிலிருந்து வாய் வரை நீட்டிக்கொண்டிருக்கும் அந்த மைக், zoomல் பார்க்கும்போது ஒரு பக்கம் மட்டும் மீசை வைத்தாற்போலத் தெரிகிறது. ப்ளூ டூத் ஹெட் செட் பயன்படுத்தலாம்தான். ஆனால் என்னைப் போன்ற நூறு சதமான சோம்பேறிகள் ஒழுங்காக சார்ஜ் போட்டு வைக்க மாட்டார்கள்.

இனி விவரங்கள்.

1. மைக்செட்காரனைப் போல உட்கார்ந்து முடுக்கிக்கொண்டிருக்க அவசியமில்லை. ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ் போல அவனே எல்லாம் முடுக்கித்தான் அனுப்பி வைக்கிறான்.

2. USB portஐ கணினியில் சொருகி, செட்டிங்ஸில் input source ஐ fifine என்று மாற்றினால் போதும்.

3. கம்பெனிக்காரன் கொடுத்திருக்கும் ஸ்டாண்ட், சிறிதாக, அழகாக உள்ளது. மேசையில் லேப்டாப் அருகே வைத்துவிட்டுப் பேசலாம். பேருரை அல்லது சொற்பொழிவாற்ற வேண்டுமென்றால் தனியாக பெரிய ஸ்டாண்ட் வாங்கியும் பொருத்திக்கொள்ள வழி இருக்கிறது.

4. மைக்கின் முன் பக்கம் ம்யூட் பட்டன் உள்ளது. தேவையில்லாதபோது அதை உறங்கவிடலாம். பின்புறம் இன்புட் வால்யூம் கண்ட் ரோலுக்கும் ஹெட்போன் ஒலிக் கட்டுப்பாட்டுக்கும் தனித்தனியே திருகு சாதன வசதி உள்ளது. ஹெட்போனைத் தவிர்க்கத்தான் மைக் வாங்கியிருக்கிறேன் என்பதால் எனக்கு இது அநாவசியம். எனக்கு என் லேப்டாப் வெளிப்படுத்தும் ஒலியே போதும். ஜோராக ஒலிக்கவிட்டு எதையாவது கேட்க வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது எனது ஆகி வந்த creative speaker. 2003ல் முதல் கம்ப்யூட்டர் வாங்கிய காலத்திலிருந்து சலிக்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறது.

5. மறந்து போய் மைக்கின் பின்புறத்தை முன்னால் வைத்துப் பேசத் தொடங்கினால் ஒலி வாங்காது. இது ஒரு சிக்கல்தான். user guide-இல் இதனைக் குறிப்பிட்டிருக்கிறான். பிரபல பாடகர்களைப் போல நாலாபுறமும் வளைத்து வளைத்தெல்லாம் பயன்படுத்த முடியாது. முன் பக்கம் மட்டும்தான் ஒலி வாங்கும். பின் பக்கம் பல்புதான் வாங்கும். ஆனால் முன் பின் இரு பக்கங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். இது புரியாமல் முதலில் ரெக்கார்ட் செய்து பார்த்தது வரவில்லையே என்று சிறிது நேரம் தடுமாறினேன். பிறகு மேனுவல் படித்து ஞானம் பெற்றேன்.

6. zoom meetings, வாட்சப் வாய்ஸ் மெசேஜிங், பாட்காஸ்ட், யூ ட்யூப் பயன்பாடுகளுக்கு உதவும்.

7. ஒரிஜினல் விலை ரூ. 6990. நேற்று முன் தினம் நான் அமேசானில் ஆர்டர் போடும்போது 5100 ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று பார்த்தால் 5450 ரூபாய் போட்டிருக்கிறான்.

8. அவ்வளவுதான்.

Share

Add Comment

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி