வாட்சப், ஃபேஸ்புக் மெசஞ்சர், டெலிகிராம் மற்றும் கட்டண மெசேஜ் சேவைகளை எதற்காக, எவ்வளவு பயன்படுத்துகிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். வாட்சப் வந்த பின்பு கட்டண மெசேஜ் அனுப்பும் வழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது என் மனைவிக்கு மட்டும் சாதாரண மெசேஜ் அனுப்புவேன். அதுவும் இருவருடையதும் ஐபோன் என்பதால் காசில்லா ஐமெசேஜ். மற்றபடி வங்கியில் இருந்து, க்ரெடிட் கார்ட் நிறுவனத்தில் இருந்து, இதர விளம்பரதாரிகளிடமிருந்து வருகிற ஒருவழிச் செய்திகளுக்கு மட்டும்தான் அது.
இந்நாள்களில் என்னிடம் அதிகப் பயன்பாடு உள்ள செயலி, வாட்சப்தான். தினசரி எழுதும் காட்சிகளைப் படப்பிடிப்புக் குழுவினருக்கு அதில்தான் அனுப்புகிறேன். தொழில் தொடர்பான உரையாடல்களும் அதில்தான் நடைபெறுகின்றன. திரைக்கதையே இப்போதெல்லாம் வாட்சப் ஆடியோவாகத்தான் வருகிறது. நெருங்கிய நண்பர்கள், எழுத்தாள நண்பர்களுடன் பேசுவதும் அதில்தான். இதில் மாமல்லனுடன் பேசியதை மட்டும் தொகுத்தால் இரண்டு வெண்முரசு சைசுக்குப் புத்தகம் போடலாம். சாருவோடு பேசியதை எல்லாம் தொகுத்துப் புத்தகமாக்கினால், உடனே யாராவது தடை உத்தரவு வாங்குவார்கள். சீக்கிரம் பிரபலமாகிவிடலாம். சிஎஸ்கேவுடன் முன்னர் ஃபேஸ்புக் மெசஞ்சரில்தான் பேசிக்கொண்டிருந்தேன். பிறகொரு நாள் அவரைத் தூக்கி இங்கே போட்டுவிட்டேன். லஷ்மியும் அப்படித்தான். பிரசன்னா, சொக்கன், ராஜேஷ், பெனாத்தல் சுரேஷ், ஈரோடு நாகராஜ். அநேகமாக தினமும் உரையாடும் நண்பர்கள் இதில்தான் இருக்கிறார்கள்.
டெலிகிராம் பயன்பாடு மிகவும் சொற்பம். ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டு கோகுலை அழைக்க வேண்டுமென்றால் மட்டும் டெலிகிராமில் அழைப்பேன். அவர் ஜூமில் வந்து உதவி செய்துவிட்டுப் போவார். என் நண்பர் வட்டத்தில் வேறு யாரும் டெலிகிராமில் இல்லை. இருப்பவர்களும் எப்போதாவது டெலிகிராம் பார் என்று வாட்சப்பில் செய்தி போட்டால் வந்து பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.
ஃபேஸ்புக் மெசஞ்சர். மனுஷ்யபுத்திரன், மகுடேசுவரன், ஆசாத், அபிலாஷ், அழிசி சீனிவாச கோபாலன், பால கணேஷ் போன்றவர்களை இங்கே பிடிப்பது எளிது. பெரும்பாலும் இரவு நேரங்களில் இவர்களுடன் இங்கு பேசுவேன். அபூர்வமாக வண்ணதாசன் கூப்பிடுவார். ராஜேஷ் குமார் மெசஞ்சர் ஆடியோவில் அழைப்பார். (ஆனால் அவர் மகன் கார்த்திக் வாட்சப்பில்தான் அழைப்பார்.) கொழும்பு நண்பர் ஜாஃபர் அகமது அழைப்பார். இவர்கள் தவிர எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள் என்னை அழைக்கும் பிராந்தியமாகவும் இதுவே உள்ளது. வெறும் ஹலோக்களுக்கும் குட் மார்னிங் மெசேஜ்களுக்கும் நான் பதில் சொல்வதில்லை. விஷயத்துடன் அணுகுபவர்கள் தொடராமல் போவதில்லை.
முன்னொரு காலத்தில் யாஹு மெசஞ்சர் என்றொரு அழைப்பான் இருந்தது. அன்றைய என் மொத்த நண்பர் வட்டமும் அதற்குள்தான் அமர்ந்திருந்தது. உண்மையில் ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்வது போலவே உணர்வேன். நள்ளிரவு கடந்து, அதிகாலை ஆனாலும் அதில் ஜெயமோகன் பெயருக்கு அருகே பச்சை விளக்கு எரியும். ஐயோ இந்தாள் மட்டும் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறானே; நாம் தூங்கிவிடக்கூடாது என்று எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்து பேய் போல வேலை செய்வேன். மறக்க முடியாத நாள்கள்.
அழைப்பான்களில் தயிர் சாதமாகப் பேசிவிட்டுப் போனால் ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் எந்த எழுத்தாளனும் முழுத் தயிர் சாதமாக இருக்க மாட்டான் என்பதுதான் பிரச்னை. இன்று எல்லோரும் சொல்கிறார்களே என்று சிக்னல் இன்ஸ்டால் செய்திருக்கிறேன். இதுவரை நான்கு பேர் அங்கே இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனக்கென்னவோ வாட்சப்பை விட்டு சமூகம் அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது என்று தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை, என் நண்பர்களுக்கு மட்டும் புரியும்படியாக ஒரு என்கிரிப்டட் தமிழை உருவாக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.