எப்போதும் நூறு சதம்

என்னுடைய ஒய்யார ஒழுங்கீனங்கள் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். அதில் முக்கியமான ஓர் ஒழுங்கீனத்தைப் பற்றி எப்படியோ இதுவரை எழுதாது விட்டிருக்கிறேன். நேற்று மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவகாரம் வந்து போனதால் இப்போது எழுதிவிடுகிறேன்.

நான் ஒரு மூலவர். அதாவது எதற்காகவும் எழுந்து நகர்ந்து போகாத ஆலமரத்தடிப் பிள்ளையார். என் மனைவியின் கருத்துப்படி சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே என் அலுவல் அறையை விட்டு எழுந்து வெளியே வருபவன். என் லேப்டாப், மொபைல், ஹெட்போன், ஸ்பீக்கர், பேனா பென்சில் குப்பி, ப்ரிண்ட்டர், யானை பொம்மை, நான் வணங்கும் சித்த புருஷர்கள், குடிக்கத் தண்ணீர், பர்ஸ், வோலினி ஸ்ப்ரே, லேப்டாப் சுத்திகரிப்புக்கான ப்ரஷ், ரெஃபரன்ஸ் புத்தகங்கள், டிக்‌ஷனரிகள், மாவா, டூத் பிக், ஒயிட் போர்ட், மார்க்கர் இன்ன பிற நிரந்தரத் தேவைகள் அனைத்தையும் கையெட்டும் எல்லைக்குள்தான் எப்போதும் வைத்திருப்பேன். எதையும் எடுப்பதற்காகக் கூட அதிகம் அசைவதில்லை.

இப்படி இருப்பவனது லேப்டாப்பும் மொபைல் போனும் எப்போதும் சார்ஜில் இருக்க அவசியம் இல்லை அல்லவா? ஒரு முழு சார்ஜ் ஆகிவிட்டால் பிடுங்கிப் போட்டுவிட்டு பேட்டரி தீரும் வரை பயன்படுத்த வேண்டும். அது ஜீரோவுக்கு வரும்போது மீண்டும் சார்ஜ் ஏற்றிக்கொண்டால் போதுமானது. கருவிகளின் தேக ஆரோக்கியத்துக்கும் இதுதான் நல்லது. இத்தனைக்கும் நான் உபயோகிக்கும் மேக்புக் ஏர், ஒரு முழு சார்ஜுக்குக் கூசாமல் எட்டு மணி நேரம் வேலை செய்யும். போன் எவ்வளவு நேரம் தாங்கும் என்று இதுவரை கணக்கிட்டுப் பார்த்ததில்லை என்றாலும் அதுவும் ஒரு நாள் சார்ஜ் தாங்கும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் அவசியமான / தேவை என்று நான் கருதும் அழைப்புகள் தவிர பிறவற்றை ஏற்பதில்லை. மொபைலில் அதிகம் விடியோ பார்ப்பதில்லை.

இந்த வக்கணைக்கெல்லாம் குறைச்சல் இல்லை என்றாலும் லேப்டாப்பையும் மொபைலையும் பெரும்பாலும் சார்ஜிலேயேதான் வைத்திருக்கிறேன். இது என்ன வியாதி என்று புரியவில்லை. 100%க்கு ஒரு புள்ளி குறைந்தாலும் சார்ஜ் போய்விட்டது போல ஓர் உணர்வு வந்துவிடும். உடனே இல்லாவிட்டாலும் அடுத்த அரை மணியில் சார்ஜ் போட்டு நூறாக்கிவிடுகிறேன். இதில் மன்னிக்க முடியாத பெருங்கொடுமை, காலை எழும்போது முழு சார்ஜ் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு படுக்கப் போவதற்கு முன்னால் ஒரு மணி நேரம் சார்ஜ் போடுகிறேன். பெரும்பாலும் அப்போது தொண்ணூறு சதவீத சார்ஜ் இருக்கும்.

இந்த சார்ஜ் நோயை மனப்பழக்கத்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதை அறிவேன். முன்பே ஒருமுறை மாமல்லன் லேப்டாப்பை எப்போதும் சார்ஜில் வைத்திருக்க வேண்டாம் என்று சொன்னார். பேட்டரி மாற்ற வேண்டிய சூழ்நிலை வருமானால் ஆப்பிள்காரன் கூசாமல் பதினையாயிரம், இருபதாயிரம் பிடுங்கிவிடுவான். அதுகூடப் பரவாயில்லை. நேற்று ஆப்பிள் ஃபோரத்தில் இதைக் குறித்துச் சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தபோது மேலும் சில அபாயங்களும் இதில் உள்ளது தெரிந்தது. பேட்டரி நாசமாகத் தொடங்கினால் அதற்கு பொன்னுக்கு வீங்கியெல்லாம் வருமாம். லேப்டாப்புக்குள்ளே பட்டாசு சத்தம் கேட்டதாக ஒருவர் எழுதியிருந்தார். எதையும் கருத்தில் கொள்ளாமல் இவ்வளவு காலமாக என் கணினியைப் போட்டு அடி அடியென்று அடித்துத் துவைத்திருக்கிறேன். அப்படியும் அது இன்னும் சீர் குலையாமல், தேக புஷ்டியுடன்தான் இருக்கிறது. (காண்க: சைக்கிள் கவுண்ட் ஸ்கிரீன் ஷாட்)

நேற்றிரவு திடீர் பயமும் பணிவும் வந்து, திருந்தி நல்லவனாகிவிட முடிவு செய்து, சார்ஜைப் பிடுங்கிப் போட்டேன். நேரம் அப்போது இரவு ஏழு மணி. அதன் பிறகு பதினொன்றரை வரை வேலை செய்திருக்கிறேன். மீண்டும் இப்போது பத்து நிமிடங்களுக்கு முன்னர் திறந்து இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். பிடுங்கிய சார்ஜர் பிடுங்கியதுதான். லேப்டாப்பில் 59 சதவீதமும் மொபைலில் 42 சதவீதமும் சார்ஜ் மிச்சம் இருக்கிறது. பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

இது, ஒருநாள் ஒழுக்க விரதமாக முடிந்துவிடாமல் நிரந்தரமாகத் தொடர வேண்டும்.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி