மலேசியப் பயணம்

சிங்கப்பூரில் நடத்திய அதே பயிலரங்கத்தை மலேசியாவிலும் நடத்த, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அழைத்திருந்தார்கள். அதே இரண்டு நாள். அடுத்த சனி, ஞாயிறு.

பத்ரி, சிங்கப்பூரிலிருந்து பஸ் மார்க்கமாக மலேசியா சென்றுவிட, நான் சென்னை வந்து, இடைப்பட்ட நான்கு நாள்களில் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி முடித்துவிட்டு, இங்கிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றேன்.

மலேசியன் ஏர்லைன்ஸ்காரர்கள் உபசரிப்புத் திலகங்கள். நட்டநடு ராத்திரி விமானமென்றாலும் பயணம் முழுவதும் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் என்னத்தையாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உபசாரங்களை அங்கீகரிப்பதில் தமிழர்களுக்கு நிகரே கிடையாது அல்லவா? எனவே ஒரு கையில் ரெட் வைனையும் மறு கையில் ஒயிட் வைனையும் தலா ஒரு கோப்பை வாங்கி இரண்டையும் கலந்து அடிக்கிறார்கள். விமானத்தில் இருக்கிற விஸ்கி பாட்டில்களெல்லாம் வீணாகிவிடப் போகிறதே என்கிற சமூக அக்கறையுடன் ஏழு லார்ஜ், எட்டு லார்ஜ் என்றெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு குடித்துக்கொண்டே இருந்தார்கள். இதெல்லாம் இரவு பன்னிரண்டு மணி தொடங்கி இரண்டு மணி வரையிலும் நடைபெற்றது. அதன்பிறகு இரவு உணவு. அதை ஏன் விடவேண்டும்? மூக்கு பிடிக்கச் சாப்பிட்டு, போதையில் அவ்வப்போது கொஞ்சம் கீழே சிந்தி, காகிதப் பையில் வாந்தியெல்லாம் எடுத்து, பயணத்தை ஜோராக அனுபவிக்கிறார்கள்.

அழகான மலேசியப் பணிப்பெண்கள், சிரித்த முகம் மாறாமல் வாந்தியள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆகாய வெளியையும் நாறடிக்கும் திறமை நம்மவர்களுக்கு மட்டுமே உண்டு.

அதிகாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்வதற்கு அரை டிராயர் அணிந்த பத்ரி வந்திருந்தார். கல்கி நாள்களிலிருந்தே எனக்கு அறிமுகமான மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு கார் எடுத்துவந்திருந்தார்.

பிரம்மாண்டமான பார்க்கிங் பகுதியிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறி சாலையைத் தொட்டபோதே வேகமுள் நூறைக் காட்டியது. கோலாலம்பூர்ச் சாலைகளும் நன்றாகத்தான் இருக்கின்றன. இருபுறமும் ஏராளமான மரங்கள், விஸ்தாரமான வெளி. ஆனாலும் என்னமோ ஒன்று குறைவதாகப் பட்டது. சிங்கப்பூர் சாலை மாதிரி இல்லை என்று திரும்பத் திரும்பத் தோன்றியதன் காரணம் தெரியவில்லை. அதே மாதிரி, குறைந்த மக்கள் தொகையும் பரந்த நிலப்பரப்பும் கொண்ட தேசமான மலேசியா, இடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது பற்றிப் பெரிதாகச் சிந்திக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஒரு தலைநகரத்திலேயே அத்தனாம்பெரிய வெட்டவெளிகளைக் காணமுடியும் என்று என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

சினிமாக்கள் காட்டும் அந்த இரட்டைக் கோபுரங்கள் இருக்குமிடமும் அதனைச் சுற்றிய சில கிலோ மீட்டர்களும் மட்டும் காங்க்ரீட் நெரிசல் கொண்ட பகுதிகளாக இருக்கின்றன. அந்த ஊர் மு.க. ஸ்டாலின் மூலைக்கொரு மேம்பாலம் கட்டியிருக்கிறார். எங்கிருந்து பார்த்தாலும் அந்தக் கோபுரங்கள் தெரிகின்றன.

முக்கால் மணிநேரப் பயணத்துக்குப் பிறகு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்தேன். பயிலரங்கம் நடக்குமிடமும் நாங்கள் தங்கவிருந்த இடமும் ஒன்றே என்பதனால், வெளியே அலைவது கூடுதலாகத் தவிர்க்கப்பட்டது. முழு இரவும் விமானத்தில் விழித்திருந்ததனால் மிகுந்த களைப்பாக இருந்தது. அறைக்குச் சென்றதும் அப்படியே பெட்டியை வீசிவிட்டுப் படுத்துவிட்டேன். பத்ரி ஒரு சுவாரசியமான சோகக் கதையைச் [அவருக்கு நேர்ந்ததல்ல.] சொல்லி என்னைத் தூங்கவைத்தார்.

ஒன்றரை மணிநேரம் தூங்கிவிட்டு எழுந்தபோது அவர் குளித்து முழுகித் தயாராக இருந்தார். நானும் தயாராகி, இருவரும் சாப்பிடுவதற்காக வெளியே வந்தபோதுதான் என் விதி சிரித்தது.

மலேசியாவில் என்னைப் போன்ற ஒரு தாவர பட்சிணிக்குப் பெரும் பிரச்னை இருக்கும்போலிருக்கிறது. ஹோட்டல்களில் பலவிதமான உணவுப்பொருள்கள் அழகழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் முட்டையாவது சேர்க்கப்பட்டிருக்கிறது. அட ஒரு ரொஜாக்கின்மீது கொட்டப்படும் சாஸில் கூடவா இறால் கலப்பார்கள்? ஆடு, கோழி, ஜெல்லி வகைகள், விதவிதமான மீன் வகைகள் ஏராளமாக இருக்கின்றன. எல்லா இடங்களிலும். மலேசியா, மாமிசம் புசிப்போரின் சொர்க்கம் என்று தோன்றியது. எனவே எனக்கு நரகமாகிப் போனது.

தாவர உணவு கிடைக்கும் என்று ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் ரெ.கா. கிடைக்கத்தான் செய்தது. ஆனால் அது அசைவ உணவகத்தில் கிடைக்கக்கூடிய அசைவம் சேர்க்காத உணவு மட்டுமே. அக்கம்பக்கத்தில் உட்கார்ந்து இழுத்தும் உறிஞ்சியும் கடித்தும் நொறுக்கியும் உண்ணூவோர் அத்தனை பேரும் என்னை ஒரு ஜந்துவாகப் பார்ப்பதை உணர்ந்தேன். சரியாகச் சாப்பிட முடியவில்லை. ஒரு கப் தயிர்வாங்கிக் கரைத்து அடித்துவிட்டு எழுந்துவிட்டேன். சாதத்தில்கூட ஒரு துண்டு மீனைப் போட்டு [வாசனைக்காகவாம்] வேகவைக்கும் தீவிர அசைவர்களை மானசீகத்தில் வணங்கிவிட்டு, என் விதியை நொந்தபடிப் பயிலரங்குக்குச் சென்றேன்.

சிங்கப்பூரில் நடத்திய அதே எடிட்டிங் பாடங்கள்தாம். ஆனால் இங்கே மொழிபெயர்ப்பு செஷனுக்கு பதிலாக, வசனம் எழுதுவது பற்றிக் கொஞ்சம் பேசினோம். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வம் இருந்ததை உணர முடிந்தது. வாசிப்பு வேகத்தைக் கூட்டுவது – குறைப்பது எப்படி என்பதை ஒரு சில லைவ் உதாரணங்களுடன் விளக்கி, எழுதிக் காட்டியதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகத் தெரிந்தது.

முதல் நாள் மதியம்தான் பயிலரங்கு தொடங்கியது என்பதால் இரவு பத்து மணிவரை அமர்வுகள் இருந்தன. அன்று எங்கும் வெளியே போக முடியவில்லை. மறுநாள் காலை ஒன்பதுக்குத் தொடங்கி, மாலை நான்கு மணிக்கு முடித்துவிட்டோம். எனவே காரை எடுத்துக்கொண்டு சும்மா ஒரு ரவுண்ட் போனோம். பில்லா புகழ் பத்து மலை முருகனைப் பார்த்துவிட்டு [என்ன அபாரமான இளநீர் அங்கே!] அந்தப் பகுதியில் கொஞ்சம் நடந்தோம். அங்கிருந்து கொஞ்ச தூரம் போய், மெட்ரோ ரயில் பிடித்து நாலைந்து ஸ்டேஷன்கள் தாண்டிப் போய் இறங்கினோம். கடைகள் மிகுந்த பகுதி அது.

எனக்கு மலேசியாவின் தேசியச் சட்டையின்மீது எப்போதுமே ஒரு மையல் உண்டு. நண்பர் சோதிநாதன் பல்லாண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்தபோது எனக்கொரு சட்டை வாங்கிவந்துக் கொடுத்து அதை அறிமுகப்படுத்தினார். அதன் பேரெழிலில் சொக்கிப் போய் அதே மாதிரி பர்மா பஜாரில் நாலைந்து சட்டைகள் வாங்கிப் போட்டுக்கொண்டு சென்னை நகரத்து ஜீவராசிகளுக்கெல்லாம் குலைநடுக்கம் ஏற்படுத்திய தினங்கள் நினைவுக்கு வந்தன. எப்படியாவது இந்தப் பயணத்தில் அதே மாதிரி சட்டை பிடித்துக்கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

கடைகடையாகத் தேடி, உள்ளதிலேயே மிகத் தீவிரமான நிறச் சேர்க்கைகளும் பளபளப்பும் மிக்கதாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். பத்ரியும் திடீர்க் காதலுக்கு ஆளாகி அதே ரகச் சட்டைகள் இரண்டை வாங்கிக்கொண்டார். மலேசிய விமானப் பணிப்பெண்கள் தொடங்கி, கோலாலம்பூர் வீதிகளில் [ பெரும்பாலான கடைகளில் பெண்கள்தாம் வேலை பார்க்கிறார்கள். பரம சுதந்தரமாக இருக்கிறார்கள். வேறெந்த இஸ்லாமிய தேசத்தில் இப்படியொரு பெண் சுதந்தரம் சாத்தியம் என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.] நான் பார்த்த பெண்கள்வரை அத்தனை பேரும் அதே பத்திக் துணியில்தான் ஆடை அணிந்திருக்கிறார்கள். மலேசிய ஆண்களில் ஒரு சிலர் மட்டுமே தேசிய சட்டை அணிகிறார்கள். பெரும்பாலானோர் அடையாளமற்ற பொதுச்சட்டைகளையே அணிகிறார்கள். என்னைப் போல் அவர்களுக்கு அந்த ஜிகுஜிகா சட்டையின் அருமை பெருமைகள் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு நாள்களும் நான் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டு மனம் பொறுக்காத ரெ.கா., அன்றிரவு எங்கோ தொலை தூரத்தில் ஒரு சைவ உணவகம் இருக்கிறது என்று தேடி அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். மசால் தோசை, இட்லி, காப்பி. என் ஆன்மா சாந்தியடைய அதுவே போதுமானதாக இருந்தது.

இரவு அறைக்குத் திரும்பியதும் படுத்துவிட்டேன். மறுநாள் அதிகாலை விமானம். மூன்றரை மணிநேரத்தில் சென்னை. ஆறு மணிநேரத்தில் ஆபீஸ். பன்னிரண்டு மணிநேரத்தில் இது.

தீர்ந்தது விஷயம்.

இந்தப் பயணங்களுக்காக நாங்கள் தயார் செய்த எடிட்டிங் பயிற்சிப் பாடங்கள்தாம் அனைத்திலும் முக்கியமானவை. நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழிகளை, பாடமாக எழுதிப் பார்க்கும்போதுதான் அவற்றின் பரிமாணங்களே தெரியவருகின்றன. நாங்கள் தயாரித்திருக்கும் எடிட்டிங் பாடங்கள் நிச்சயமாக, உலகப் பொதுவான பாடங்களாக இராது. இருக்கவும் முடியாது. இவை, கிழக்கில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் மட்டுமே. ஆனால் எடிட்டிங் என்னும் கலையின் சில அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள நிச்சயமாக உதவக்கூடியவை.

விரைவில் இந்தக் குறிப்புகளை மேலும் விரித்துப் புத்தகமாகவே எழுதி வெளியிட ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். செம்மொழிக் களேபரங்கள் எல்லாம் முடியட்டும் முதலில்.

Share

25 comments

  • //சிரித்த முகம் மாறாமல் வாந்தியள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தார்கள்…
    அந்த ஊர் மு.க. ஸ்டாலின் //
    🙂

  • அப்டியே இந்த பயணத்த பத்தியும் ஒரு புக் போடுவீங்களா??

  • பாஸ்கர்: இதனைப் பயணக்கட்டுரை வடிவில் நான் எழுதவில்லை. இரண்டு நாள் சுற்றிவிட்டுப் புத்தகம் எழுதுவதெல்லாம் சாத்தியமில்லை. சும்மா ஒரு டைரிக்குறிப்பு மாதிரி இவற்றை எழுதிப் பார்த்தேன். அவ்வளவுதான். சிங்கப்பூரில் பார்த்த அளவுகூட மலேசியாவில் முடியவில்லை. இரு தேசங்களுக்குமே இன்னொரு சமயம் சென்று விரிவாகச் சுற்ற வேண்டும்.

  • இஸ்லாமியர்கள் பெரும்பான்மையானவர்களாக வாழும் நாடுகள் கட்டுப்பாடு மிகுந்தவை என்றொரு கருத்தாக்கம் இருப்பது உண்மைதான். குறிப்பாக பாலியல் தொடர்பான விஷயங்களில்.

    ஆனால் யூட்யூபில் பிட்டு படங்களை தேடிப் பார்த்தோமானால் பெரும்பாலானவை வங்கதேசம் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டவையாக இருக்கிறது.

    இந்த முரண்பாட்டை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை 🙁

  • Para Sir,

    Ok, then, Please let us know your next Singapore trip well in advance. Visiting Singapore as a toruist will not add any value to author. You should live here atleast for few weeks.

  • சிங்கப்பூருக்கு போவது சிந்தாதிரிப்பேடையிலிருந்து செண்ட்ரலுக்கும்,மலேசியா போவது மயிலையிருந்து மாம்பலம போவது போல் ஆகிவிட்ட இந்தக்காலத்தில் இத்துடன் பயணக்கட்டுரையை நிறுத்தியது நல்லது.ஐச்லாந்தில் எரிமலை குழம்பினை ருசி பார்த்தோம்,பாங்காங்கில் போராட்டத்தில் அடி வாங்கினோம் போன்ற அனுபவங்கள் அடிப்படையில் அமைந்த இடுகைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம் :).

  • “””செம்மொழிக் களேபரங்கள்””, “”அந்த ஊர் மு.க. ஸ்டாலின்””

    You have visited only 1 or 2 days but wrote too much about Malaysia with your DNA venom.

    Immmm…. you people never change. Let us wait for a new generation.

    Karuppan

  • இந்தியாவில் மட்டுமே சுத்த சைவ உணவகங்கள் அதிக அளவில் உள்ளன என நினைக்கிறேன். மற்ற எந்த நாட்டிலும் அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை [சரவண பவன் கிளைகளைத் தவிர்த்து].

    சிங்கை அனுபவத்திற்கு பின் கையில் எதுவும் எடுத்து சென்றிருக்கலாம். சாப்பிட முடியவில்லை என்கிற பாட்டு மீண்டும் மீண்டும் படிக்க பரிதாபமாக இருந்தாலும் – உண்டு தான் பார்ப்போமே முட்டையை என்கிற எண்ணம் வந்ததாக தெரியவில்லை. சாரு நிவேதிதா இந்த விஷயத்தை சரியாகத் தான் சொல்கிறார் போலும்.

    உணவுகளைப் பற்றி புத்தகம் எழுதுபவருக்கு [சரித்திரமாகவே இருந்தாலும்], புதிய உணவுகளை முயல்வது ஒரு நல்ல பெர்ஸ்னல் அனுபவமாக இருந்திருக்கும். எத்துனை நாட்களுக்குத்தான் ஞானப் பழத்தை உண்பது ?

  • பாராஜி,

    தீவிர சைவனாக இருப்பது, தீவிர வைணவனாக இருப்பதைவிட அப்படி ஒன்றும் கடினமல்ல! காலப்போக்கில் என் போன்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அதைப் புரிந்து கொண்டோம்.

    சீன, மலேஷிய, இத்தாலிய, கிரேக்க, மெக்சிகன், ஏன் அமெரிக்க சாப்பாட்டு வகைகளில்கூட, சுத்த சைவம் அநுசரிக்கப்படுகிறது. கஷ்டம்தான், ஆனால், எந்த டிஷ் வேண்டும், எதெல்லாம் வேண்டாம், செய்முறை எப்படி என்பது பற்றி நாம் அவர்களுக்கு முதலில் விளக்கினால் எல்லாமே சுபம், சௌக்கியம, வாந்தி தேவையில்லை, வயிறும் வாழ்த்தும்.

    என் பெண்ணும், பையனும் அமெரிக்காவில் இன்றளவும் உலகம் சுற்றும் புஷ்டியான சைவர்களே!

    பாராவுக்கு இது பற்றி நான் கூடிய சீக்கிரம் பாடம் எடுக்கத் தயார்!

  • Regarding the confusion on calling your Father’s name, i guess it is more to do with our confusion on First name and last name. At least in few of my friends passports i have seen First Name = Father’s name and their name = Last Name

    And if i am not wrong, i guess TN is probably the only state where we use Initials in the name as a norm. No where i have seen people using names like x.xxxx Pretty weird

  • Generally Mr/Ms. <> is also used as a mark of respect, unless they are close enough to call you on first name basis.

  • இரட்டைக் கோபுரத்திலிருந்து 3 ரயில் நிறுத்தங்கள் தாண்டி அருமையான சைவ உணவு விடுதிகள் நிறைய இருக்கின்றன..கே.எல்.சி.சி யில் எதுவும் இல்லைதான்!

    சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் பெருமளவு வேறுபாடு இருக்கிறது;சிங்கப்பூரின் இந்த சடுதி முன்னேற்றத்தையும் நகர ஒழுங்கையும் சகித்துக் கொள்ள முடியாத பங்களாளிப் பொறுமல்தான் கோலாலம்பூரை இந்த அளவுக்காவது வைத்திருக்கிறது என்பது என் எண்ணம்;இல்லையென்றால் அது இன்னொரு சென்னை,அவ்வளவுதான்..

  • இந்தப் பதிவு முன் பின்னாக இருந்தாலும் பக்கத்திற்கு கிடைத்திருக்கும் புதுச்சட்டை நன்றாக இருக்கிறது..

  • கே.எல்-ல் செந்தூல் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். சைவ அசைவ உணவகத்தில் அங்கே சைவ உணவு கிடைத்தது. அதை நாசிக் பண்டார் என்று அழைக்கிறார்கள்.
    மலேசிய இளநீருக்கு ஈடு இனை ஏதும் உண்டோ இவ்வய்யகத்தில்.

  • Dear Sir
    Please look into the the layout.
    Only 30% of the screen
    goes to content part. Major
    portions occupied by link area.
    Im viewing in FireFox 3.5.9.
    -vibin

    • அன்புள்ள விபின், நானும் ஃபயர்ஃபாக்ஸ் 3.5.9தான் உபயோகிக்கிறேன். என் திரையில் சரியாகவே இருக்கிறது. 70% திரை, எழுத்துக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மிச்சம்தான் லிங்க்களுக்கு உள்ளது. உங்களுடைய செட்டிங்கை சரிபார்க்க வேண்டுகிறேன். இப்பிரச்னை வேறு யாருக்கேனும் இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

  • //அந்த ஊர் மு.க. ஸ்டாலின் மூலைக்கொரு மேம்பாலம் கட்டியிருக்கிறார். எங்கிருந்து பார்த்தாலும் அந்தக் கோபுரங்கள் தெரிகின்றன. //

    இதற்குப் பெயர்தான் காலத்தின் கட்டாயமோ!!!

  • //என் பெண்ணும், பையனும் அமெரிக்காவில் இன்றளவும் உலகம் சுற்றும் புஷ்டியான சைவர்களே!//

    லாராஜி.. (ஹிஹி.. அதான் ‘லா’ஸேஞ்சலீஸ் ‘ரா’ம்)..

    அப்படீன்னு அவங்க சொல்லிகிறாங்களா? இல்லாங்காட்டி நெஜம்மாவேவா?!

  • //உபசாரங்களை அங்கீகரிப்பதில் தமிழர்களுக்கு நிகரே கிடையாது அல்லவா? எனவே ஒரு கையில் ரெட் வைனையும் மறு கையில் ஒயிட் வைனையும் தலா ஒரு கோப்பை வாங்கி இரண்டையும் கலந்து அடிக்கிறார்கள். விமானத்தில் இருக்கிற விஸ்கி பாட்டில்களெல்லாம் வீணாகிவிடப் போகிறதே என்கிற சமூக அக்கறையுடன் ஏழு லார்ஜ், எட்டு லார்ஜ் என்றெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு குடித்துக்கொண்டே இருந்தார்கள். இதெல்லாம் இரவு பன்னிரண்டு மணி தொடங்கி இரண்டு மணி வரையிலும் நடைபெற்றது. அதன்பிறகு இரவு உணவு. அதை ஏன் விடவேண்டும்? மூக்கு பிடிக்கச் சாப்பிட்டு, போதையில் அவ்வப்போது கொஞ்சம் கீழே சிந்தி, காகிதப் பையில் வாந்தியெல்லாம் எடுத்து, பயணத்தை ஜோராக அனுபவிக்கிறார்கள்//

    சார் இது பற்றி என்னுடைய விமான பயணத்தை எழுதி இருக்கிறேன் நேரமிருக்கும் போது படித்துப்பாருங்கள்.

    http://www.giriblog.com/2009/12/bad-experience-in-flight-travel.html

  • அமெரிக்காவில் சைவமாக இருப்பது ஒன்றும் பிரச்னையே இல்லை. பெரிய நகரங்களில் மூலைக்கு மூலை சைவமளிக்கும் உணவகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. முட்டை சுவை பார்க்காமலே நானும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆறு நகரங்களில் குப்பை கொட்டியாயிற்று. சைவம் பார்க்க சரவண பவன் தான் போகவேண்டும் என்பதெல்லாம் பிரமை 🙂
    நான் பார்த்தவரை மலேசியா, சிங்கப்பூர், துபாய் விமானங்களில் தான் பொதுவாக இந்த வாந்தி களேபரங்கள் அதிகம். பெரிய மூட்டைகள், விமானத்தில் ஏறும் கியூவில் அழைக்குமுன்னரே அடித்துக்கொண்டு போய் நின்று அசிங்கப்படுத்துவது, பத்து லார்ஜ்களும் பத்தாயிரம் சைடிஷ்களும் கேட்டுப் பிராணனை எடுப்பது போன்ற இம்சைகளும்.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!