சிங்கப்பூர் பயணம் 6

திங்களன்று சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் தமிழாசிரியர் குழுவினருக்காக [இவர்கள் கல்வி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். டெபுடேஷனில் வந்து போகிறவர்கள்.] ஒரு பயிலரங்கம் நடத்தினோம். ஏற்கெனவே திட்டமிட்ட பயிலரங்கம்தான் போலிருக்கிறது. ஆனால் பத்ரி செய்த சதியால் இந்த விவரம் எனக்கு முந்தைய தினம் இரவு வரை தெரியாமலேயே இருந்திருக்கிறது.

போகிற வழியில், எது குறித்த பயிலரங்கம் நடத்தப் போகிறோம் என்று கேட்டேன். பாடப்புத்தகம் எழுதுபவர்கள் அவர்கள். எது குறித்து என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.[அவர் மட்டும் மிகத் தெளிவாகத் தயார் செய்துகொண்டு வந்திருந்தார்.]

உண்மையிலேயே அது எனக்கு ஒரு நல்ல பயிலரங்காக இருந்தது. வேகமாகத் திட்டமிட்டு, தடாலென்று வகுப்பு நடத்தி எனக்குப் பழக்கமில்லை. ஆனால் அன்று அது முடிந்தது.

சிங்கப்பூர் பாடப்புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்கள் அளவுக்கு மொழிமோசம் பேணுவதில்லை என்று தோன்றியது. அங்கேயே உட்கார்ந்து சில புத்தகங்களை வேகமாகப் படித்துப் பார்த்தேன். உயர் வகுப்புப் புத்தகங்களில் கிட்டத்தட்ட, பழகுதமிழ் பயன்படுத்துகிறார்கள். பாலர்களுக்குத்தான் பல்லை உடைக்கும் தமிழ்.

அது பற்றிய என் கருத்துகளை எடுத்துச் சொல்லிவிட்டு, அவர்களுடைய பாடம் ஒன்றை மாதிரிக்காக எடிட் செய்து, சற்றே மாற்றி எளிமை கூட்டிக் காட்டினேன். பத்ரி, அமர் சித்ரக் கதை ஒன்றின் எங்களுடைய மொழிபெயர்ப்பை எடுத்து வைத்துக்கொண்டு அக்குவேறு ஆணிவேறாக உடைத்து, மொழியை எப்படியெல்லாம் எளிமையாகப் பயன்படுத்த இயலும் என்று செயல்முறை விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் எப்படியும் இன்னுமொரு நூறு வருஷத்துக்காவது கண்டிப்பாகத் தமிழ் உயிர் பிழைத்திருக்கும். ஆனால் சிங்கப்பூர் போன்ற தேசங்களில் தமிழ் பேசும் வீடுகளில்கூட தமிழ்ப் புழக்கம் குறைந்து வருவதாக ஆசிரியர்கள் சொன்னார்கள்.

அப்படியிருக்கும்போது என்னத்துக்காக இன்னமும் சங்க இலக்கியப் பாடங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து பயமுறுத்துகிறீர்கள், சமகாலத் தமிழை மட்டுமே நீங்கள் பாடத் தமிழாகவும் கொண்டால் பையன்கள் கொஞ்சம் தமிழ் மூச்சு விட்டுக்கொள்ள முடியுமே என்று சொன்னேன்.

ஆசிரியர்களுக்கு அது புரிகிறது. ஆனாலும் சிலப்பதிகாரத்தை விடுவதாவது? திருக்குறளை விடுவதாவது? அதெல்லாம் நமது சொத்தல்லவா என்று கேட்கிறார்கள்.

நல்லவேளை பதினெண் கீழ்க்கணக்கையும் பட்டியல் போட்டு பரீட்சை வைக்கிற அளவுக்கு நிலைமை மோசமில்லை என்பதால் இன்னும் நாலு சிட்டிங் உட்கார்ந்தால் கரைத்துவிடலாம் என்று தோன்றியது 😉

மாலை ஐந்து மணிக்குப் பயிலரங்கை முடித்துக்கொண்டு, முகம் கழுவிக்கொள்ளக்கூட அவகாசமின்றி அங்கிருந்தே சாலைக்குப் பாய்ந்து விமான நிலையத்துக்கு விரைந்தேன். இணையத்தில் எனக்கு அறிமுகமான எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் [பயிலரங்குக்கும் வந்திருந்தார். ஆனால் அங்கே பேசமுடியவில்லை.] வந்திருந்தார். அவரோடு நிலையத்தில் கொஞ்சநேரம் பொதுவாக உலக விஷயம் பேசிக்கொண்டிருந்தேன். ‘உங்கள் அப்பா பெயரை உங்கள் பெயராக அழைத்து அடிக்கடிக் குழப்புவார்கள் இங்கே. யாராவது எதற்காவது கூப்பிட்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனியுங்கள்’ என்று என்னத்துக்கோ பொதுவாகச் சொன்னார்.

நான் அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் முதலில் இருப்பதால் இது தவிர்க்க முடியாததுதானே என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் ஜெயந்தி வாயில் ஒரு பிடி மாவாவை அள்ளிப் போடவேண்டும். செக் இன் முடித்து, இமிக்கிரேஷன் தாண்டி, கஸ்டம்ஸ் கடந்து, கைப்பை பரிசோதனை, தொட்டுத்தடவிப் பரிசோதனை எல்லாம் முடித்து, இரண்டு மணிநேரத் தாமதத்தையும் உட்கார்ந்து கழித்துவிட்டு, ஒரு வழியாக நட்டநடு ராத்திரி விமானம் ஏறப் போன கணத்தில் மைக்கில் யாரோ கூப்பிட்டார்கள். ‘மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி…’

நாலைந்து முறை அந்த அறிவிப்பு வந்த பிறகுதான் அந்த உத்தமோத்தமர் பார்த்தசாரதியை அழைக்கிறார் என்பது புரிந்தது. ஒரு கணம்தான். எனக்குக் குலை நடுங்கிவிட்டது. ஏழு கடல், ஏழு மலை தாண்டி என் மாவா பொட்டலங்களை நான் எப்படியோ பதுக்கி எடுத்து வந்துவிட்டதை இப்போது விமானம் ஏறப்போகும் நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்களா? மற்றபடி நான் வேறெந்தக் கடத்தல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று உளமார உறுதி கூறுவேன்! கேவலம் நாலு சாக்லெட் பெட்டிகளைக் கூட வாங்கி வரமுடியாத அளவுக்கு இறுக்கமான செயல்திட்டம் வகுத்திருந்தார்கள்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி எங்கிருந்தாலும் உடனடியாக இமிக்கிரேஷன் கவுண்ட்டருக்கு வரவேண்டும். வராவிட்டால் தலை சீவப்பட்டுவிடுமா? தெரியவில்லை. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தேன். நான் பாழ்த்தேஸழ்ழேட்டி இல்லை என்று எனக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டேன். அல்லது அவர் கூப்பிட்டது என் காதில் விழவில்லை. விறுவிறுவென்று போய் விமானத்தில் ஏறி உட்கார்ந்துவிட்டேன். பதற்றத்தைத் தவிர்க்க அதே பொட்டலத்தைப் பிரித்து ஒரு பிடி அள்ளிப் போட்டுக்கொண்டு, ஆஞ்சநேயர் மாதிரி தியானம் செய்யத் தொடங்கிவிட்டேன்.

கையில் விலங்குடன் சிங்கப்பூர் காவல் துறையினர் எந்தக் கணமும் விமானத்தில் ஏறலாம் என்றெல்லாம் அபத்தமாகத் தோன்றிக்கொண்டே இருந்தது.

நல்லவேளையாக அப்படியேதும் நிகழவில்லை. அவர்கள் என்னைத்தான் கூப்பிட்டார்களா, அதே விமானத்தில் வேறு பாழ்த்தேஸழ்ழேட்டி யாராவது இருந்தாரா, ஒருவேளை ஏதேனும் அதிர்ஷ்டக் குலுக்கலில் என் டிக்கெட்டுக்குப் பரிசு விழுந்து [பிஎம்டபிள்யூ ரகக் காரொன்று விமான நிலையத்தில் பரிசுப் பொட்டல ரிப்பன் சுற்றுடன் நின்றுகொண்டிருந்தது. பலபேர் அதனருகில் நின்று போட்டோவெல்லாம் எடுத்துக்கொண்டார்கள்.] அநியாயமாக நான் அதைத் தவறவிட்டிருந்தேனா, எதுவும் தெரியவில்லை.

நல்லபடியாகச் சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். அவகாசம் கிடைத்தால் பொடிநடையாக அருண் மகிழ்நன் ஒருமுறை விமான நிலையம் வரைக்கும் சென்று என் பி.எம்.டபிள்யூவைப் பெற்றுக்கொண்டு அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவைக்க கோருகிறேன்!
[முற்றும்]

Share

9 comments

  • அடுத்து மலேசிய பயணம் எழுதுவீங்களா பாஸ்!

  • பாரா, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் என் பெயரின் பின்னால் உள்ள என் அப்பா பெயரை (பாலசுப்ரமணியன்) என்பதை “#$%^&*()(*&^%$” என்று கூப்பிட்டார்கள். நான் யாரொ ஒரு ரஷ்ய பெயரை கூப்பிடுகிறார்கள் என்று ஹாயாக உட்கார்ந்து இருந்தேன். அப்புறம் ஒவ்வொருவராக வந்து பாஸ்போர்டை வந்து பார்த்தார்கள். அப்புறம் சொன்னார்கள் 10 நிமிடமாக உங்களை கூப்பிட்டுகொண்டுள்ளோம் என்று! பாஸ்போர்டின் நெம்பரை கணிணியில் பதிய மறந்து விட்டாராம் அந்த பெண்! உட்கார்ந்து இருந்து இடத்தில் இருந்து அந்த பெண்ணின் கணிணியிடம் (20 அடி) செல்வதற்குள், பல ஆங்கில பட விசாரணை காட்சியெல்லாம் கண்முன் வந்து போனது 😉

  • உலகம் சுற்றும் பாரா,

    இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு செம்மொழி வளர்க்கும் உங்களை ஒரு முறை அமெரிக்கா அழைத்து வந்து பாராட்ட எனக்கு ஆவலாக இருக்கிறது.

    ஜெமினி ஆபீஸ் குளிரில் ஆரம்பித்து அமெரிக்கன் இமிக்ரேஷனில் நீங்கள் படப்போகும் தொடர் அவஸ்தைகள், கஸ்டம்சில் மாவா கொணர்ந்த மாமாவை ட்ரக் ஸ்குவாட் அல்சேஷன் பாய்ந்து பிறாண்டிப் பிடிப்பது, அப்புறம் பர்ரிடோ, சிமிசங்கா, கேஸடியா, ஸ்பாகெட்டி, ஃபெடூசினி என்று நீங்கள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் அமளி, அமெரிக்க ஆச்ஸெண்ட் அம்மாமிகளிடம் நீங்கள் படப்போகும் பேட்டி அவஸ்தைகள் … எல்லாவற்றையும் நேரில் பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.

    ஆனால் ஒன்று: மேகசைன் எடிட்டிங், பாலர் பள்ளி, பாடத் திட்டம், மொழி வளர்ப்பு, இத்யாதி இதர ஜல்லியடிகள்- எது பற்றியும் அமெரிக்காவில் மூச்சு விடக்கூடாது.

    சம்மதமா ?!

  • //கஸ்டம்சில் மாவா கொணர்ந்த மாமாவை ட்ரக் ஸ்குவாட் அல்சேஷன் பாய்ந்து பிறாண்டிப் பிடிப்பது, //

    பாரா, லா.ராம் ஓவரா படம் போடறாரு….அவரு ஊருல இருக்கும் குஜ்ஜு கடைகளிலேயே 120, 300, 160 எல்லாம் கிடைக்குது..பாக்கு/சுண்ணாம்பு மட்டும் கொண்டு போனாப் போதும்…அங்கேயே வாங்கிக்கலாம்…நீங்க கெளம்புங்க சார். 🙂

  • அன்பிற்கினிய பாரா,

    வணக்கம்.
    உங்களை அருகில் இருந்து கவனித்து, சிங்கப்பூரையும் அதன்
    தனித்தன்மைகளையும் சுட்டிக் காட்டி சுற்றிக் காட்ட முடியாமற் போனதே என்ற என் குற்றவுணர்ச்சிக்கு, உங்கள் கட்டுரை
    மேலும் தூபம் போடுவது மாதிரி இருக்கிறது.

    போஜனப் பிரியர் ஒருவரை, அதிலும் சிங்கப்பூருக்கு அதிதியாய் வந்த ஒருவரை, காலை பசியாற விடாமல் பயிலரங்கிற்கு
    அழைத்துச் சென்றதை “விதி” என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    நாட்டுப்புறப் பாட்டுக்காரர்கள் விஜயலட்சுமி அம்மாவும், நவநீதகிருஷ்ணன் அய்யாவும், ஈராண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்தபோதும் இது மாதிரிதான் நடந்தது. முற்பகல் நிகழ்ச்சிக்கு நடுவே, அவர்களுக்கு ஒப்பனையில் உதவப் போனபோது,
    “மகாலிங்கம், அம்மா காலையில இருந்து சாப்பிடலை, ஏதாவது கிடைக்குமா” என்று நவநீதன் அய்யா கேடடபோது
    நானும் மனைவியும் துடித்துப் போனோம்.

    நிகழ்ச்சி, நேரத்துக்குத் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் எப்படியோ அவர்களுக்கு உணவு தவறி விட்டது.

    பிள்ளைகளுக்காக என் மனைவி எப்போதும் கைப்பையில் கட்டி வைத்திருக்கும் சிற்றுண்டியை வைத்துச் சமாளித்தோம்.
    உணவு வகைகளின் பூலோக சொர்க்கமான சிங்கப்பூரில்,
    பாரா ஒருவேளை உணவைத் தவற விட்டது, மனதுக்கு
    சிரமமாக உள்ளது. மற்றபடி, சபாவும், சதக்கத்துல்லாஹ்-வும்
    தங்களால் இயன்ற அளவு உங்களை கவனித்துக் கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.

    எங்கள் செய்திப் பிரிவின் முன்னைய தலைவர் கண்ணப்பன், உங்கள் இரண்டு பயிலரங்குகளுக்கும் வந்திருந்தாராம்.
    மிகவும் அருமையாய், அனைவரும் ஈடுபாடு கொள்ளத்தக்க விதத்தில் சுவையாக நடத்திச் செல்லப்பட்ட நல்ல பயிலரங்கு என்று வாயார, மனமாரப் பாராட்டினார்.

    எனக்கு அதில் ஆச்சர்யமில்லை. பேசுவது நீங்களும் பத்ரியும்.
    நடத்துவது, திரு. அருண் மகிழ்நன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ?

    ஹூம். எனக்குத்தான் லபிக்கவில்லை. இருப்பினும், புத்தகம் போடும் திட்டமிருப்பது சற்று ஆறுதலளிக்கிறது.

    ஜூலையில் சிங்கப்பூருக்கு ஒரு சுற்று சென்று வரும் எண்ணமுண்டு. நேரமிருந்தால்,வாருங்கள் விட்டதைப் பிடிக்கலாம். சிங்கப்பூரின் ஜீவன் மிகுந்த ஈரச் சந்தை, ஹாக்கர்ஸ் சென்ட்டர்,ஞாயிற்றுக்கிழமை மாலை தேக்கா,
    MRT, எல்லாம் பார்க்கலாம்.

    (பின் குறிப்பு : உங்கள் மேலான பரிந்துரையின் பேரில் BSNL
    இணையத்துக்கு விண்ணப்பித்து, பன்னிரண்டு நாள் காத்திருப்புக்குப் பிறகு, புலி வருது புலி வருது கதையாய், கடைசியில் இன்று காலை புலி வந்தே விட்டது.
    வந்ததும் முதல் வேலையாய், பாய்ந்து சென்று பாரா-வைப்
    பாரா பாரா-வாகப் படித்து விட்டு இதை எழுதுகிறேனாக்கும்.)

    வாய்ப்புக் கிடைத்தால், உங்களோடு சேர்ந்து
    கனகவேல் காக்க பார்க்க வேண்டும்.

    மிக்க அன்புடன்,
    பொன். மகாலிங்கம்.

  • “உங்கள் அப்பா பெயரை உங்கள் பெயராக அழைத்து அடிக்கடிக் குழப்புவார்கள் இங்கே”

    இந்தப்பிரச்சனை அனைத்து இடங்களிலும் உள்ளது 🙂

  • அன்பின் பாரா, சில அவசர வேலைகளால் தங்களைச் சந்திக்க இயலவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் சந்திப்போம். அன்புடன் எம்.கே.குமார்.

  • பொடி நடையாகப் போய்ப் பார்த்தேன். அந்த ‘மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி…’ பார்டி தான்தான் அந்த ‘மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி…’ என்று சொல்லிக் கொண்டு BMW காரை ஓட்டிக்கொண்டு சென்று விட்டதாம். அடுத்தமுறை பேர் கூப்பிட்டால் உடனே போய் ஆஜர் சொல்லும்.
    அன்புடன், அருண் மகிழ்நன்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி