கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 9)

‘பாரா’ என்று அழைக்கப்படும் நபர் யார்? இதில் எப்படி நுழைந்தார். எதற்காக நுழைந்தார்? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் சூனியன் அதெல்லாம் உனக்கெதுக்கு? கதையைப் படி என்றதும் ஒன்பதாவது அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
மண்வாசனை வீசுவது போல் அரசியல் வாசனை இந்த அத்தியாயம் முழுவதும் தெறிக்கிறது. அரசியலைப் பற்றியும் அதனோடு தொடர்புடையவர்களையும் சொல்லிச் சென்றுள்ளார்.
சமூகம் பெண்ணுக்குச் சில கட்டமைப்புகளை வழங்கி உள்ளது. அதிலிருந்து அவள் சற்று மாறுபட்டாலும் அவளை ‘நடத்தைத் தவறியவள்’, ‘பெண் குலத்திற்கே இழுக்கு’ என்றெல்லாம் சொல்வர். ஆனால், நம் கோவிந்தசாமி அவ்வாறெல்லாம் அவளைக் கூறவில்லை. அவளைத் தன்னை நேசிப்பதைவிட அளவிற்கு அதிகமாகவே அவளை நேசித்தான். ஒருவேளை இந்த நேசிப்பால்தால்தான் கோவிந்தசாமிக்கு உதவி செய்ய வேண்டும் எனச் சூனியன் எண்ணியிருப்பானோ!
‘பாண்டிச்சேரிக்குப் போக வேண்டும்’ எனக் கோவிந்தசாமி எண்ணிய போது, அந்தப் பகுதியைக் குறித்த எண்ணத்தை அவளிடம் பகிரும் போது, தெளிவான சிந்தனையுடன், அவள் தெளிவான பதிலையே அளிக்கிறாள்.
“குடி சாதாரண விஷயமாகக் கருதப்படும் ஓர் ஊரில் யாரும் காணாதது கண்டாற்போல அள்ளிக் குடித்து விடுவதில்லை”
கோவிந்தசாமி தன் சிந்தனையைக் கொண்டு சிந்திக்கத் தெரியாதவானாக இருக்கிறான் என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் தெரிந்தாலும் பல அத்தியாயங்களுக்குப் பின்னோக்கிச் சென்றால், சூனியன் ஓர் அத்தியாயத்தில் கோவிந்தசாமி தன் மூளையை, அதாவது அறிவைப் “பல வருடங்களாகப் பயன்படுத்தவில்லை” என்று கூறும் வரி என் நினைவு வந்து சென்றது.
எதற்காக வந்தது என்றால், அவள் நீங்கள் பாண்டிச்சேரியிலிருந்து வரும் போது, ‘கிரைப்வாட்டர்’ வாங்கி வாருங்கள் என்கிறாள். இங்குக் கிடைக்காததா அங்குக் கிடைக்கப்போகிறது என்று கூட எண்ணவில்லை. அவளிடம் எதற்காகக் கேட்கிறாள் என்று கேட்கவும் இல்லை. ‘சரி, அங்குச் சென்று வாங்குவோம்’ என்று கூட எண்ணவில்லை.
கோவிந்தசாமிக்கு அவளை விட்டுப்பிரிய மனமில்லை. தன்னை நேசித்த, தான் நேசித்த ஒரு பெண்ணை விட்டு விலக அவனுக்கு மனமில்லை.
அன்பு எந்த இடத்தில் அளவுக்கு அதிகமாகக் குவிகிறதோ அங்கு எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் குவிவது இயல்பே! எண்ணியதற்கு மாறாக நடப்பதால் பிறர் அறியாத மனப்பிறழ்வு ஏற்படுகிறது. இந்த மனப்பிறழ்வு கோவிந்தசாமியிடம் சிறுவயது முதற்கொண்டு இருந்துள்ளது.
அவளுக்கு இவனுடன் வாழ மனமில்லை. மனமில்லாத மனமுள்ள இந்த மனங்கள் ஒன்று சேருமா எனத் தெரியவில்லை.
Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me