மாயவலை – ஒரு கடிதம்

திரு ராகவன் அவர்களுக்கு

தங்களின் ’மாய வலை’யை சிலநாட்களுக்கு முன்னர் வாங்கினேன். உங்கள் எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன் அதில் உணவுப் பாரம்பரியம் குறித்த ஒரு நூலை பலநாட்கள் வைத்திருந்து குறிப்பெடுத்துகொண்டிருந்தேன். உங்கள் பெயரில் இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் குமுதம் வாசிப்பதில்லை. அதனால் இது தொடராக வந்தது தெரியாமல் போய்விட்டது

தலையணை சைஸில் புத்தகம் –  அதுவும் நல்ல பொருத்தமான முகப்புச்சித்திரம், வாங்காமல் விடவே முடியவில்லை. இன்னும் வாசித்து முடிக்கவில்லை. லஷ்கர் இ தொய்பாவில் தான் இருக்கிறேன்.  எனினும் முடிக்கும் முன்பே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவேண்டும் என்னுமளவிற்கு அத்தனை அருமையாக இருக்கிறது மாயவலை.

எத்தனை பெரிய ஒரு   work  இது ? பல முனைவர் பட்ட ஆய்வுகளை ஒன்றாய் வாசிப்பது போல இருக்கிறது,.

எல்லாவற்றையும் விட முக்கியமென்னவென்றால் மிக பயங்கரமான தீவிரமான விஷயங்களை உங்களின் எளிய, அழகிய, நகைச்சுவையுடன் கூடிய நடையில் சொல்லி இருப்பதுதான்.

பெரும்பாலும் நீங்கள் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கிறதே ஒழிய வாசிக்கும் உணர்வே இல்லை.

எல்லா பக்கங்களிலும் பேனாவால் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசிக்கிறேன். கல்லூரி இந்த வாரம் திறந்ததும் மாணவர்களிடன் சொல்ல ஏராளம் தகவல்கள்  தந்திருக்கிறீர்கள்.

பல சொற்களை  மாயவலை வாசித்தபின்னரே  முறையாக உச்சரிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். மெக்கா மெதினா கட்டுமானப்பணிகளுக்கு ஒசாமாவுக்குமெல்லாம் தொடர்பிருப்பது  ஆச்சர்யமாக இருந்தது. பல அத்தியாயங்கள் வாசிக்கையில் நல்ல வேளை இந்த புத்தகத்தை வாங்கினோம் என்று என்னை நானே பாராட்டி க்கொள்கிறேன்.

// ஆத்திகர்களோ நாத்திகர்களோ, இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் ஒழிக்கப்படவேண்டும்// எனும் ஒசாமாவின் கருத்து அனேகத் தீவிரவாத செயல்களின் பால பாடம் அல்லவா?

ஒசாமா பயணிக்கும் பாதை புனிதமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதும் இன்னும் சில தீவிர இயக்கங்கள்  discipline  குறித்த கட்டுப்பாடுகளைக்கொண்டிருப்பதெல்லாமே பெரிய் முரண்.  இஸ்லாத்தின் அடிப்படைகளோடு உடற்ப்பயிற்சியும் ராணுவப்பயிற்சியும் அவர்களெல்லாம் எடுத்துக்கோள்வதெல்லாமே வாசிக்க புதிய விஷயங்கள், தீவிரவாதிகள்  இப்படி முறையான பயிற்சியெல்லாம் எடுத்துக்கொள்வார்கள் என்றெண்ணி இருக்கவில்லை நான் இது வரை.

ஏதேனும் மறைவிடங்களில் ஒளிந்து சதித்திட்டம் தீட்டும் சித்திரம் மட்டுமே என் சிற்றறிவுக்கு இது வரை கிட்டியிருந்தது.

ஒரு தீவிரவாத இயக்கம் குறித்த புத்தகமொன்றை நான் இத்தனை விரும்பிப்படிப்பேனென்று  ஒரு போதும் நினைத்ததே இல்லை.

ஜெயமோகன் அவர்களின் வெண்முரசில் பலராமர் யாதவர்களுக்கு போர் நெறிகளைக்கூறுகையில் ‘’ பசுக்கள் பெண்கள் கொல்லப்படக்கூடாதென்றும் ஒரு குலத்தையே அடியோடு அழிக்ககூடதென்றும் பலவாறு சொல்லுவாதாக வரும். அதை நினைத்துக்கொண்டேன் மாயவலை வாசிக்கையில்.

எந்த நெறியும் அறமுமின்றி மதத்தின் பெயரால் இயங்கும் இன்னும் எத்தனை இயக்கங்களை  பற்றிச்சொல்லப் போகிரீர்களோ என்று கொஞ்சம் பயமாகவும் கூட இருக்கிறது.

இந்த மதவாத இயக்கங்களுக்கு எதுவும் ஒரு பொருட்டல்ல என்பதுவும், இன்று கூட   காலைச்செய்திகளில்   IS  தாக்குதல்கள் குறித்த செய்தி கேட்டதுமாய் இனி   வரும் தலைமுறைகள்  குறிப்பாக என் இரு மகன்களும் எங்கு எந்த ஊரில் எந்த இயக்கத்தினரின் திட்டங்களினால் பாதிப்படைவார்களோ  என்று பயமாய் இருக்கிறது.

முழுவதும் வாசித்தபின்னர் இன்னும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்னும் முடிவில் இருக்கும்,

லோகமாதேவி-

பொள்ளாச்சி

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி