ருசியியல் – 22

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் ஓர் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரம் ரெஃப்ரிஜிரேட்டரில் ஒரு பூண்டு டப்பா வைத்திருப்பான். மொத்தக் குளிர்சாதனப் பெட்டியையும் அதன் நெடி நாறடித்துக்கொண்டிருந்தாலும் தன்னிடம் பூண்டு இல்லவே இல்லை என்று சாதிக்கப் பார்ப்பான். கையும் பூண்டுமாக ஒரு கட்டத்தில் பிடிபடும்போது ஆவேசமடைந்து அந்தப் பூண்டு ஊறுகாய் டப்பாவைத் திறந்து சிங்க்கில் கொட்டிக் கழுவிவிடுவான். குளிர் சாதனப் பெட்டி அளவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பூண்டின் நெடி, அப்போது அபார்ட்மெண்ட் முழுதும் ஆளத் தொடங்கும்.

அந்தக் கதாபாத்திரத்தின் விவரிக்க முடியாத ஒரு பெரும் துக்கத்தின் குறியீடாகப் பூண்டின் நெடி நிறைந்து பரவுகிற ஜாலம் அந்த அத்தியாயம் முழுதும் நிகழ்ந்திருக்கும்.

உண்மையில் எனக்குப் பூண்டு பிடிக்கத் தொடங்கியதே அந்தக் கதையைப் படித்த பிறகுதான். அதற்கு முன்னால் வரை சகிக்க முடியாத துர்நாற்றம் என்று அதைத் தள்ளி வைத்திருந்தேன். ஏனோ அதன்பின் எனக்குப் பூண்டின் வாசனை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு சமயம் செட்டி நாட்டு அரண்மனைக்குப் போயிருந்தேன். என்னோடு புகைப்படக் கலைஞர் யோகாவும் வந்திருந்தார். பத்திரிகைப் பணி, என்னமோ சிறப்பிதழ், பேட்டி இத்தியாதி. வேலை முடிந்த பிற்பாடு அங்கேயே சாப்பிட்டுப் போகலாம் என்று சொல்லி உட்காரவைத்துவிட்டார்கள். அரண்மனைச் சாப்பாடெல்லாம் நாம் எப்போது அனுபவிப்பது? சரி, வாய்த்த வரை வரப்பிரசாதம் என்று அமர்ந்துவிட்டேன்.

‘நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களல்லவா?’ என்று கேட்டார் சமஸ்தானத்து நளபாகச் சக்கரவர்த்தி.

ஐயோ இல்லை என்று நான் அலறியதில் அவருக்கு மிகுந்த வருத்தம். அரண்மனை வளாகத்திலேயே ஒரு முற்றத்தில் நூற்றுக் கணக்கான கோழிகள் தானியப் படுக்கையின்மீது மேய்ந்துகொண்டிருந்ததைக் கண்டேன். அவற்றில் ஒன்றை அவர் உத்தேசித்திருக்கலாம். தவிரவும் அரண்மனைக்கு வந்து செல்லும் விருந்தாளியை அசறடித்துப் பார்க்க நினைத்திருக்கலாம். எப்படியானாலும் அவருக்கு ஏமாற்றம்தான். ‘ஐயா எனக்குத் தயிர் சாதம் போதும்’ என்ற பதில் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.

‘செட்டி நாட்டு சமையலில் அசைவம் போலவே சைவத்திலும் சில சாகசங்கள் செய்ய முடியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தனது ஆயுத பரிவாரங்களுடன் சமையலறைக்குப் போய்விட்டார்.

அன்றைய அந்த விருந்தை என்னால் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. அரை ஃபர்லாங் நீளத்துக்கு ஒரு வாழையிலை போட்டார்கள். இலையின் மேற்பகுதியில் இடது மூலை தொடங்கி வலது மூலை வரை வரிசையாக ஆறேழு வகைக் காய்கறிகள், கூட்டு, துவையல் இனங்கள். பொடி வகைகள், மூன்று வித ஊறுகாய். வழக்கமான சாம்பார், ரச வகையறாக்களுக்கு அப்பால் செட்டி நாட்டு ஸ்பெஷல் என்று சொல்லி ஒரு குழம்பைக் கொண்டு வந்தார்கள். அது பூண்டுக் குழம்பு.

பதமான காரத்தின் அடியாழத்தில் ஒரு மெல்லிய இனிப்புப் படலம் உண்டு என்பதை அன்று நான் அறிந்தேன். சட்டென்று எழுந்த சந்தேகத்தில், ‘வெல்லம் போடுவீர்களா?’ என்று கேட்டதற்கு, இல்லை என்று பதில் வந்தது. ஆனாலும் அந்தக் குழம்பு உண்டு முடித்தபின் இனித்தது. அது காரத்தில் தோய்த்த இனிப்பு. அன்று மாலை வரை என் கையில் பூண்டு மணந்துகொண்டே இருந்தது. சோப்புப் போட்டுக் கழுவினாலும் அந்த வாசனை போகவில்லை. கையே அப்படி என்றால் வாய் எப்படி இருந்திருக்கும்!

எனக்கு அந்தப் பூண்டுக் குழம்பு ரொம்பப் பிடித்துவிட்டது. எத்தனையோ உணவகங்களில், வீட்டில் எளிதாகச் செய்யக்கூடியதுதான். ஆனாலும் அந்த அரண்மனைக் குழம்புக்கு என்னமோ ஒரு விசேஷம் இருப்பதாகப் பட்டது. அது என்ன?

அந்த சமையல் கலைஞரிடமே கேட்டேன். ஒரு குழம்பை நாவில் இருந்து நேரே நினைவுக்குக் கடத்தும் சூட்சுமம் எது?

‘புளி எத்தனை பழையதாக இருக்கிறதோ, அந்தளவுக்குக் குழம்பில் ருசி கூடும்’ என்றார் அவர். புதிய புளியில் அத்தனை ருசி சேராது என்பது அவர் சொன்னது. பூண்டு ஆட்சி புரிந்தாலும் புளியில் இருக்கிறது சங்கதி!

ஆனால், பூண்டை ஓர் உணவாகப் பார்ப்பதைவிட மருந்தாகக் கருதுவதே சரி. இதில் இருக்கிற ‘அலிஸின்’ என்கிற பரப்பிரும்மம், நோய் எதிர்ப்பு சக்தி தருவதில் ஆரம்பித்து, கான்சர் வராமல் தடுப்பது வரை ஏகப்பட்ட காரியங்களை அமைதியாகச் செய்யவல்லது. இதே ‘அலிஸின்’ தான் பூண்டின் வாசனைக்கும் காரத்துக்குமேகூடக் காரணம் (இது வெங்காயத்திலும் ஓரளவு உண்டு). ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் மற்றும் டிரைகிளிசிரைட் என்கிற கெட்ட கொலஸ்டிரால் இனங்களை சம்ஹாரம் செய்வது இதற்குப் பிடித்த காரியம்.

என்ன பிரச்னை என்றால் இத்தனை சகாயம் தரும் பூண்டை சமைத்துச் சாப்பிடுவது அத்தனை பிரயோசனமில்லை. அலிஸின் குற்றுயிரும் குலை உயிருமாக ஆகிவிடும். பச்சையாக உண்பதுதான் பலன் தரக்கூடியது. பச்சையாகச் சாப்பிட்டுவிட்டு நாற்றத் துழாய்முடி நாராயணனாக உலா வந்தால் நோய்நொடி மட்டுமல்ல; சுற்றமும் நட்பும்கூடச் சற்றுத் தள்ளிப் போகிற அபாயம் உண்டு. அதெல்லாம் பரவாயில்லை என்பீர்களானால், தினமுமே நாலு பல் பூண்டு உள்ளே போகும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப நல்லது.

இன்றைக்கு ஒரு தீவிரவாத கோஷ்டி, தினசரி காலை வெறும் வயிற்றில் இந்தப் பச்சைப் பூண்டைச் சாப்பிடுவது நல்லது என்று சொல்லிக்கொண்டு நாடெங்கும் கிளம்பியிருப்பதைக் காண்கிறேன். அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லுகிறார்கள். நானே கூட யாரோ சொன்னதைக் கேட்டுக் கொஞ்ச நாள் இந்த மாதிரி விடிந்து எழுந்ததும் நாலு பூண்டை நறுக்கி வெந்நீரில் மாத்திரை போல் விழுங்கி வந்தேன். இதன் நிகர லாபம் அசிடிடி பிரச்னையாகத்தான் இருந்ததே தவிர, எடைக் குறைப்பல்ல. பச்சையாக உண்ணவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, பல் விளக்கியதுமே பகாசுரத்தனம் காட்டவேண்டும் என்பதில்லை. காய்கறிகளைச் சமைத்த பிறகு நாலைந்து பூண்டுகளைப் பச்சையாக நறுக்கி அதன் தலையில் போட்டு ஒரு கிளறு கிளறி உண்டால் முடிந்தது ஜோலி.

ஒருமுறை ராமேசுவரத்துக்குப் போயிருந்தபோது மண்டபம் அகதி முகாம் அருகே ஓர் உணவகத்தில் பகலுணவு சாப்பிடப் போய் உட்கார்ந்தேன். மேசை மீதிருந்த ஊறுகாய்க் கிண்ணத்தில் பூண்டு ஊறுகாய் இருந்தது. கொஞ்சம் நப்பாசைப் பட்டு பிடி சாதத்தில் அதைக் கலந்து உண்டு பார்த்தேன். அதிகம் காராமல், ருசியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று நினைத்து மேலும் நாலு பிடி சாதத்துக்கு ஊறுகாய் போட்டுப் பிசைந்து உண்டேன். மேலும் ருசித்தது. அன்றைக்கு சாம்பார், ரசமே வேண்டாம் என்று முடிவு செய்து ஊறுகாய் சாதம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.

எப்படியும் வயிற்று வலி அல்லது வெளியேற்ற நடவடிக்கையில் கலவரம் என்று என்னவாவது ஒன்று வந்தே தீரும் என்று தோன்றியது. அன்றைக்கு உண்ட அளவுக்கு வேறெப்போதுமே நான் ஊறுகாய் உண்டதில்லை. உடல் உபாதை தவிர அந்தப் பூண்டு நெடி ஒரு வாரத்துக்கு என்னைவிட்டு போகாது என்றும் தோன்றியது. என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது சப்ளையர் சிகாமணி ஓர் உபாயம் சொன்னார்.

பூண்டு உண்டபின் ஒரு பிடி பச்சரிசியை வாயில் போட்டு மென்று துப்பிவிட்டால் வாசனை போய்விடும்!

அசோகமித்திரனின் கதாபாத்திரத்துக்கு இந்த யோசனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

(ருசிக்கலாம்…)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!