தன் கவிதையின் மீது கொடுக்கப்பட்ட தீர்ப்புக்காக கோவிந்தசாமி கலங்கிப் போகிறான். கவிஞனல்லாவா? மனம் அத்தனை இலகுவாக இருக்காதா என்ன? அதன் தொடர்ச்சியாக அவனுள் மலரும் பழைய நினைவுகள் நம்மையும் மலர்த்திப் போடுகிறது.
காதலர் தினத்துக்கு எதிராய் ஒரு தலைவர் விட்ட அறிக்கைக்கு ஆதரவாய் புரட்சிக்கவிதை(!) எழுத நினைத்த கோவிந்தசாமிக்கு தன் காதல் நிலைப்பாட்டோடு, கடவுள் கிருஷ்ணனும் தேக்கமாய் வந்து நிற்கிறார். ஒரு கவிதையைப் பிரசவித்தல் என்றால் சும்மாவா?
கவிதைக்குத் தேக்கமாய் நின்ற தன் நிலைப்பாட்டுக்கு ஒரு தெளிவைக் கண்டடையும் கோவிந்தசாமி தனக்குத் தெரிந்த அறிஞர் மூலம் கிருஷ்ணரால் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறான். கூடவே ”சைத்தான்” என்ற பட்டத்தையும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொள்கிறான். ஐயம் தீர்த்த அறிஞரிடமே ”ஒரு பெண்ணை உரிச்சிக் காட்டுங்கள்” என்று சொன்னால் வேறு என்ன கிடைக்கும்? அந்த அறிஞரைத்தான் அனுமானிக்க இயலவில்லை.
தன் புரட்சிக் கவிதையை பட்டாணி, சுண்டல் எல்லாம் போட்டு கோவிந்தசாமி எழுதி முடிக்கிறான். சோற்றுக்குச் செத்த சங்கியாகவே கோவிந்தசாமி வந்து கொண்டிருக்கிறான்.
தன்னை சைத்தான் எனச் சொன்ன அறிஞருக்கு தன்னிலை விளக்கமாய் தானே எழுதிய விமர்சனக் கடிதத்தைப் பிரசுரிக்க அவருக்கு கோவிந்தசாமி ”நாராதமன்” ஆனான். நமக்கெல்லாம் பரிதாபத்துகுரியவனாய், நல்லவனாய், பாவப்பட்டவனாய் தெரியும் கோவிந்தசாமி சாகரிகா, பாகவத அறிஞர், சூனியன் ஆகியோரிடமெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்கிறான். எல்லாம் வாய் தான் காரணம் என்றாலும் அதை கோவிந்தசாமி மூடி விட்டால் நமக்கு சுவராசியமிருக்காது.