சாட்சிக்காரன் குறிப்புகள்

கனவே போலத்தான் இருந்தது. ஒருமுறை கண் இமைத்துத் திறக்கும் நேரத்தில் அவளை நான் கண்டுகொண்டேன். ஞாபகத்தில் பிசகேதும் இல்லை.  ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – பிராக்கெட்டில் சுத்த சைவம் – முதலாளி தையூர் வரதராஜு முதலியாரின் இரண்டாவது பெண் பொற்கொடிதான் அவள். பதினெட்டு வயதில் பார்த்தது. பத்து வருஷத்துக்கு உண்டான தோற்றம் சார்ந்த மாற்றங்கள் இருப்பினும் அடிப்படை வார்ப்பு மாறிவிடுமா என்ன? தவிரவும் ப்ளஸ்டூவில் அவளுக்கு நான் ஆங்கிலப்பாடம் எடுத்திருக்கிறேன். பிஹோல்ட் ஹர் சிங்கிள் இன் தி ஃபீல்ட், யான் ஸாலிடரி ஐலண்ட் லாஸ் என்று தமிழில் எழுதிவைத்துப் படித்துக்கொண்டிருந்தவள் காதைப் பிடித்துத் திருகி, கண்ணில் நீர் வரவழைத்திருக்கிறேன். அப்போதே அவள் ஜீவராசன்பேட்டை இஸ்மாயில்கனியைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்திருந்தால் ஒருவேளை காதைத் திருகாமல் இருந்திருக்கலாம். அன்றைக்கு அதிகாலை நாலரை மணிக்கு, பதைக்கப் பதைக்க முருகைய நாடார் கடைக்கு எதிரே கோவளம் திருப்பத்தில் அவனுடனும் பெரியதொரு பெட்டியுடனும் அவள் பேருந்தில் ஏறுவதைப் பார்க்க நேர்ந்தபோது கைதூக்கி ஆசீர்வதித்திருக்கலாம். அல்லது கூப்பிட்டு விசாரித்து ஏதாவது நல்லதாக நாலு வார்த்தை பேசியிருக்கலாம்.

முந்தைய வருடம் வரை என்னிடம் படித்துக்கொண்டிருந்த மாணவி. இருளோடு இருளாக யாரோ ஒரு வாலிபனுடன் பேருந்து ஏறி எங்கோ போகிறாள். என்னைத் தவிர அந்தக் காட்சியை நேரில் பார்த்த சாட்சி என்று ஊரில் யாருமில்லை. திருடர்களும் காதலர்களும் பெரும்பாலும் அதிகாலை நேரங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆறு மணிக்கொரு முகூர்த்தம் என்று அவசரமாகச் செங்கல்பட்டுக்குப் புறப்படும் ஆங்கில ஆசிரியர்களும்.

இந்த நிலையில் நான் செய்யக் கூடியது என்ன?

இஸ்மாயில்கனியை எனக்குத் தெரியும். முந்தையவாரம் கூட இரண்டு மீட்டர் காடாத் துணிவாங்கி, அவன் கடையில்தான் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அருமையான டெய்லர். அவனைப்போல் நேர்த்தியாக அண்டர்வேர் தைத்துக் கொடுக்க பிராந்தியத்தில் வேறு யாரும் கிடையாது. சட்டை, ஜிப்பா, சோளி வகையறாக்கள் எதுவானாலும் நம்பி, கொடுக்கலாம். பேண்ட் தைத்தால் மட்டும் கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும். அந்த விஷயத்தில் மட்டும் எழுபதுகளில் வெளியான தமிழ்த்திரைப்படங்களின் ஆடை அலங்கார பாதிப்பிலிருந்து அவன் இன்னும் விடுபடாமலே இருந்தான். பிரச்னை இல்லை. சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆல்டர் செய்து தருவான். இளைஞன். அத்தனை சிறிய வயதில் சுயதொழில் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தவன்.

என்ன தவறு? அவனும் காதலிக்கலாம். பொற்கொடிக்கும்கூட காதல் வருகிற வயதுதானே? ஒரு பிழையும் இல்லை. ஆனால் இந்த விஷயத்தை நான் பார்ப்பதற்கும் ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகாவின் முதலாளி வரதராஜு முதலியார் பார்ப்பதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் அவசியம் இருக்கும்.

முதலியார் எப்போதோ ஒருமுறை விநாயகர் சதுர்த்தி சமயம் பம்பாய்க்குப் போய்வந்திருக்கிறார். அந்தக் கோலாகலமும் விநாயகரிடம் மராத்தியர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்தியையும் பார்த்தவருக்கு உடனடியாக ஏதோ தோன்றியிருக்க வேண்டும். இரண்டு காரியங்கள் செய்தார். புதுப்பாக்கம் சாலையில் ராஜலட்சுமி திரையரங்கை ஒட்டி, அவருக்கு இருந்த இரண்டேகால் கிரவுண்டு நிலத்தில் ஒரு அழகான பிள்ளையார் கோயில் கட்டினார். ஸ்ரீ அருகம்புல் விநாயகர் ஆலயம். சோழிங்க நல்லூரில் ஆர்டர் கொடுத்து விநாயகர் விக்கிரகம் பளபளப்பாக வந்துவிட்டது. திருப்போரூர் கோயிலிலிருந்து அர்ச்சகர்களும் பிள்ளையார்பட்டியிலிருந்து தலைமை அர்ச்சகரும் வந்திருந்தார்கள். கோலாகலமான விக்கிரகப் பிரதிஷ்டை.

அன்றைய தினமே ஊரின் முதல் ஓட்டலுக்கும் அவர் அஸ்திவாரம் இட்டார். ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – சுத்தசைவம்.

முதலியார், பெரிய உப்பள முதலாளி. இரண்டு லாரிகள் அவர் பெயரில் ஓடுகின்றன. கோவளம், கேளம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் அவரைக் கலந்துகொள்ளாமல் எந்தப் பெரிய காரியத்திலும் இறங்கமாட்டார்கள். மசான கொள்ளை, ஆடித் திருவிழா என்று வருஷத்துக்கு நாலைந்துமுறை 192 பக்க நோட்டில் சுபம் – லாபம் என்று எழுதி எடுத்துக்கொண்டு புறப்படும் நன்கொடைப் படைகள் முதலில் வரதராஜு முதலியார் வீட்டுக்குத் தான் போகும். எவ்ளய்யா போடணும் என்று கேட்டுக்கொண்டே ரூ. ஐந்நூத்தி ஒன்று என்று எழுதியபடிக்கு ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை எடுப்பார்.

நாலுபேர் பாராட்டவென்று செய்தாரோ, நல்ல காரியம் என்று செய்தாரோ தெரியாது. ஊரில் அவர் முதல் கல் எடுத்து வைத்து நிறைய காரியங்கள் நடந்திருக்கின்றன. நான் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்துக்குக் கூட ஒரு மேல்நிலை நீர்த்தொட்டி கட்டித்தர முதல் தொகையாக ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தவர் முதலியார்தான். பிற்பாடு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டடம், சத்துணவுக்கூட ஓலைக் கொட்டகை மாற்றல், விளையாட்டு மைதானத்தில் குடிநீர்க்குழாய் அமைப்பது என்று எங்கள் தலைமை ஆசிரியர் தேடித்தேடி ஒவ்வொரு பணியாக எடுத்துக்கொண்டு அவரிடம் தான் முதலில் போவார்.

ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கக் கூப்பிட்டு ஒரு பொன்னாடை. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி. பிள்ளைகளுக்கு நீர் கொடுத்த வரதராஜு முதலியார் என்று ஓரிரண்டு புகழாரங்கள்.

பணக்காரர்களுக்குப் பணம் தவிரவும் சிலது வேண்டித்தான் இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் முதலியார் எங்கள் பள்ளிக்கூடத்தைப் பெரிய அளவில் விஸ்தரிக்க உதவிகரமாக இருந்தார். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து அதுநாள் வரை மேல்நிலைப் படிப்புக்காக திருப்போரூருக்கும் சோழிங்கநல்லூருக்கும் போய்க்கொண்டிருந்த பிள்ளைகள் மெல்லமெல்ல எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வரத் தொடங்கினார்கள். முதலியார் தமது மூன்று மகள்களையும் கூட அங்கேயேதான் விட்டிருந்தார். மூத்தவள் பதினோராம் வகுப்பில் ஃபெயில் ஆனாள். அதனாலென்ன? கருங்குழியில் ஒரு வெற்றிலைத் தோட்டமும் திருப்போரூரில் டூரிங் டாக்கீஸும் வைத்திருந்த கோதண்டராம முதலியாரின் மூத்த மகனைப் பிடித்துத் திருமணம் செய்துவைத்துவிட்டார். எங்கள் பள்ளிக்கூடம் சார்பில் நானும் தலைமை ஆசிரியரும் அந்தத் திருமணத்துக்குப் போய்வந்தோம். திருப்போரூரில்தான் நடந்தது. வெற்றிலை பாக்கு கவரில் வேட்டி, துண்டு வைத்துக்கொடுத்த முதல் நபர், அந்தப் பிராந்தியத்திலேயே அவர்தான்.

அந்தத் திருமணத்தில் பொற்கொடி பட்டுப் பாவாடை தாவணியில் துள்ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந்தாள். என்னையும் தலைமை ஆசிரியரையும் மிக மரியாதையாகக் குளிர்பானம் கொடுத்து உபசரித்தாள். ‘அடுத்து உனக்கு எப்பம்மா?’ என்று தலைமை ஆசிரியர் அசட்டு ஜோக் அடித்தபோது, ‘நான் படிக்கப் போறேன் சார்’ என்று பொற்கொடி சொன்னாள். முதலியாருக்கு அந்த பதிலில் ஏகப் பெருமை. தன் இரண்டாவது மகளின்மீது அவர் பெரிய நம்பிக்கைகள் வைத்திருந்தார். அவள் எம்.பி.ஏ. படிக்க வேண்டும். உப்பளத் தொழிலை நவீனமாக்க வேண்டும். உள்ளூரில் ஒரு அயோடைஸ்டு தூள் உப்பு ஃபாக்டரி கட்டவேண்டும். அதன் நிர்வாகப் பணிகள் அத்தனையையும் அவளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். நம்ம பள்ளிக்கூடத்தில் படித்து வரும் பையன்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு அவசியம் இருக்கும்.

“அடேயப்பா” என்றார் தலைமை ஆசிரியர்.

பொற்கொடிக்கு அப்போது பதினைந்து வயதுதான். பத்தாம் வகுப்பில்தான் இருந்தாள். ஜீவராசன்பேட்டை டெய்லர் இஸ்மாயில் கனியை அப்போது அவள் சந்தித்திருக்க முடியாது.

வரதராஜு முதலியார் போன்ற பணக்காரர் மற்றும் பக்தி சீலருக்கு மூன்று பெண்குழந்தைகள் பிறந்தது பற்றியெல்லாம் வருத்தம் இருக்க வாய்ப்பில்லை. அந்த வருடம் தான் அவர் தையூரில் ஒரு பெரிய மாந்தோப்பை விலைக்கு வாங்கி, ‘பொற்கொடி ஃப்ரூட்ஸ்’ என்று போர்டு மாட்டி, மாம்பழ ஏற்றுமதி சாத்தியங்கள் பற்றியும் யோசிக்கத் தொடங்கியிருந்தார்.

0

நான் எதிர்ப்பக்கம் செங்கல்பட்டு பேருந்துக்காகக் காத்திருந்தபோதுதான்  இந்தப்பக்கம் பொற்கொடியும் இஸ்மாயில்கனியும் சென்னை போகும் மாமல்லபுரத்து வண்டியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஐந்துநிமிடங்கள் நான் முன்னதாகப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்திருந்தால் எதிரெதிரே அவசியம் சந்தித்திருப்போம். அவளாக ஏதும் பேசாவிட்டாலும் நானே ஓரிரண்டு வார்த்தைகள் பேசியிருப்பேன். என்ன ஏது என்று விசாரித்திருக்கலாம். அதற்கு அப்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்கள் ஏறிய பேருந்து கிளம்பிவிட்டது. பின்புறக் கண்ணாடியை ஒட்டிய நீள இருக்கையில்தான் பொற்கொடி அமர்ந்திருந்தாள். பேருந்து, கோவிந்தராஜ் டாக்டர் க்ளினிக்கைத் தாண்டிய சமயம் அவள் பின்னால் திரும்பி என்னைப் பார்த்ததுபோலிருந்தது.

ஒருகணம் எனக்கு மிகவும் பரபரப்பாகியிருந்தது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விதான். விடையே தோன்றாத கேள்வி. உடனே தையூருக்குப் போய் முதலியாரிடம் விஷயத்தைச் சொல்லலாம். தொலைபேசியில் அழைத்தும் சொல்லலாம். ஆனால் நினைவில் வைத்துக்கொள்கிற மாதிரி அடிக்கடி பேசுகிற நபர் இல்லை அவர். அவரது தொலைபேசி எண் வீட்டில் டைரியில் இருக்கிறது. விடிகிற நேரத்தில் அப்படியொரு செய்தி நிச்சயம் முதலியாருக்குக் கசப்பானதாகவே இருக்கும். ஒருவேளை பொற்கொடியின் காதல் விவகாரம் முன்னதாகவே அவருக்குத் தெரிந்திருக்குமானால், ஓரளவு சமாளிப்பார். செய்தியே புதிது என்றால் தாங்குவது சிரமமே. அதுவும் ஒரு டெய்லர் பையன். இஸ்மாயில் கனி.

நான் ஏறவேண்டிய காண்டீபன் பஸ் சர்வீஸ் பேருந்து வந்துவிட்டது. அனிச்சையாக ஏறி அமர்ந்துகொண்டாலும் மனத்துக்குள் ஒரு பதற்றம் இருந்தது. குறுகுறுவென்று உள்ளுக்குள் கொரித்துத் தின்னும் புழு போல. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை தைரியம் வந்துவிடுகிறது! வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான். கஷ்டம் தான். காதல் முக்கியம்தான். அதனாலென்ன? பதினெட்டு வருட உறவுகளை சட்டென்று இடதுகையால் ஒதுக்கி வைத்துவிட்டுக் கிளம்பிவிட முடியுமா? அல்லது, எப்படியும் கொஞ்சநாளில் சூடு தணிந்து எல்லாம், எல்லாமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகிவிடும் என்கிற நம்பிக்கை காரணமா?

எந்தப் பெற்றோரும் தம் பெண்ணை முற்றிலுமாக ஒதுக்கிவிடமாட்டார்கள். எந்தப் பெண்ணும் மனத்தின் அடியாழத்தில் பெற்றோருக்கென்று கட்டமிட்டு வைத்திருக்கும் இடத்தில் இன்னொரு உறவை உட்காரவைத்துவிட மாட்டாள். ஆனால், உறவுகளல்ல; உடனடித் தேவைகள் முக்கியத்துவம் பெரும் தருணம் அது.

உடனடித் தேவைகளா! சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். வெறும் சொற்கள். அலகிட்டுப் பார்க்கும்போது எத்தனை பரிமாணங்கள் எய்திவிடுகின்றன. பொற்கொடி எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கவேண்டும் என்று என் மானசீகத்தில் விநாயகரை வேண்டிக்கொண்டேன். ஸ்ரீ அருகம்புல் விநாயகர்.

அவள் தந்தையை நினைத்தால்தான் கவலையாக இருந்தது. முதலியார் அதை எப்படி எதிர்கொள்வார் என்று என்னால் யோசித்தோ அல்லது யூகித்தோ அறியமுடியவில்லை. பெரும் பணக்காரர். ஊருக்கு உபகாரி. முக்கியஸ்தர். நடந்துவரும் தோரணையில் தம் இயல்பையும் இருப்பையும் பதிவு செய்துவிடுகிறவர். ஊருக்குள் ஓடிய முதல் கார், அவர் வாங்கியது. வெள்ளை நிற அம்பாசிடர். பலநாட்கள் பள்ளியில் ஆங்கிலம் இரண்டாம் பாடத்துக்கான ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். மாலை பிள்ளைகள் வீடு திரும்ப ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். அப்போதெல்லாம் பொற்கொடியை அழைத்துப் போக அந்த வெள்ளை அம்பாசிடர் கார் பள்ளி காம்பவுண்டு சுவருக்கு வெளியே காத்திருக்கும். கஷ்டப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கிற பொற்கொடி. எப்படியும் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி ஆகிவிடப்போகிற பொற்கொடி. அயோடைஸ்டு உப்பு ஃபாக்டரி ஆரம்பித்து, ஊரில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப்போகிற பொற்கொடி.

அவள்தான் ஜீவராசன்பேட்டை டெய்லர் இஸ்மாயில் கனியுடன் ஓடிப்போனாள்.

0

செங்கல்பட்டு கல்யாணத்துக்குப் போய்விட்டு நான் ஊர் திரும்பியபோது மணி காலை ஒன்பது முப்பது. நான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போதே விஷயத்தின் சூடு ஊரெங்கும் பரவியிருந்ததைக் கண்டுகொண்டேன். முருகைய நாடார் மளிகைக் கடைக்கு எதிரே கூட்டம் கூட்டமாக ஆட்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். முதலியாரின் உப்பு கொடோன் ஊழியர்கள் பலர் – எதற்கென்று தெரியாமல் – கையில் தடியுடன் சுற்றிச் சுற்றி வரக்கண்டேன்.

சரசரவென்று நான்கைந்து கார்கள் குறுக்கே போயின. ஊரில் கார் வைத்திருப்போர் மொத்தமே இரண்டு பேர்தான். அவர்களுள் ஒருவர் முதலியார். ஆனால் திடீரென்று எங்கிருந்து அத்தனை கார்கள் வந்தன என்று தெரியவில்லை. ஒவ்வொரு காரிலும் ஐந்தாறுபேர் அடைந்திருந்தார்கள். எல்லோரும் இஸ்மாயில் கனியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா? உள்ளூரில் சுற்றிச்சுற்றி வந்து என்ன பயன்?

எனக்கு உடனே பல திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. காதலியுடன் தப்பியோடும் கதாநாயகன். பிடிபட்டு, எங்காவது குடோனில் அடைக்கப்பட்டு குண்டர்களால் தாக்கப்படும் காட்சிகள். உதட்டோரம் ரத்தம் ஒழுக அவன் சரிந்து விழுவது நிச்சயம். சம்பந்தமில்லாமல் இன்னொரு அறையில் அவன் காதலி உடனே பாட ஆரம்பிப்பாள். உள்ளத்தின் சோகத்தையெல்லாம் பிழிந்து, அவள் பாடி முடிப்பதற்குள் கதாநாயகன் எப்படியும் தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டுவிடுவான்.

சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் மேலதிக வித்தியாசங்கள் இல்லை போலிருக்கிறது. இந்நேரம் எப்படியும் இஸ்மாயில் கனியும் பொற்கொடியும் சென்னையில் ஏதாவது ஒரு பதிவாளர் அலுவலகத்தில் வேலையை முடித்திருப்பார்கள் என்று தோன்றியது. முன்னேற்பாடுகளுடன் தான் அவர்கள் கிளம்பிப்போயிருக்க வேண்டுமென்று நினைத்தேன். எனக்கு உடனே முதலியாரைப் பார்த்துப் பேசவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதிகாலை அவர்கள் கிளம்பிப் போவதை நான் பார்த்ததாகச் சொல்லுவதற்கில்லை. விநாடி நேரத்தில், அவர்கள் ஏறிய பேருந்து கிளம்பிவிட்டது என்கிற உண்மையை அவரால் உணர இயலாமல் போகலாம். மேலும் இச்சம்பவத்தை ஓர் அவமானமாக அவர் கருதலாம். அந்தஸ்து, சாதி, இன்னபிற காரணங்கள். விசாரிப்பதோ, தகவல் சொல்லுவதோ வலியை அதிகரிப்பதாகவே முடியும். அவர்கள் போனதை நான் பார்த்த விஷயம் என்னுடனேயே இருந்துவிடுவது நல்லது என்று அப்போது தோன்றியது.

அந்த வாரத்தில் ஒருநாள் மாலை வழக்கம்போல் அருகம்புல் விநாயகர் கோயிலுக்குப் போய்விட்டு வந்த என் மனைவி, சந்நிதியின் எதிரே மண்டபத்தில், முதலியார் பிரமை கொண்டவர்போல் மௌனமாக வானம் பார்த்து அமர்ந்துகொண்டிருந்ததாகத் தெரிவித்தாள். பாவமாகத்தான் இருந்தது. ஒரு காதல் அல்லது கலப்புத் திருமணத்தைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய தந்தைதான் நான் என்பதாக – முன்னதாகத் தெரியப்படுத்திவிட வேண்டிய கடமை ஒரு தந்தைக்கு அவசியம் உண்டு போலிருக்கிறது. ஒருவேளை அப்படியொரு மனப்பக்குவம் இல்லாதிருக்குமானால், அதற்கான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். பலபேரைக் கதறியழச் செய்துவிட்டுத்தான் ஒரு காதல் வெற்றி பெற வேண்டும் என்கிற இயற்கையின் நியதி மீது கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் ஆச்சர்யம், எனக்குப் பொற்கொடியின்மீது கோபம் வரவில்லை. நிச்சயமாக இல்லை. அது ஏனென்றுதான் தெரியவில்லை. இனி அவள் எம்.பி.ஏ. முடித்து அயோடைஸ்டு உப்பு ஃபாக்டரி தொடங்கமாட்டாளே என்கிற வருத்தம் மட்டும்தான்.

ஒரு வாரம், பத்து நாள்கள் வரை ஊரில் அந்தப் பேச்சு பிரதானமாக இருந்தது. இஸ்மாயில் கனி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் சென்னை போலீஸ் உதவியுடன் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள்.  ஒருநாள் காலை பொற்கொடி ஃப்ரூட்ஸ் வழியாக நான் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது தற்செயலாக வரதராஜு முதலியாரைச் சந்தித்தேன். குரலில் பழைய கம்பீரமோ, உற்சாகமோ இல்லாமல்தான் பேசினார்.

“இஷ்டப்பட்டவன கட்டிக்கிட்டு நல்லா இருக்கட்டும் சார். எனக்கு அதில்லை வருத்தம். அவன் யாரு, என்னான்னு கூடத் தெரியாது எனக்கு. சோளி தைக்கத் துணி எடுத்துட்டுப் போவ வீட்டாண்ட வருவானாம். நீங்களே சொல்லுங்க. ஊர்க்காரன் என்ன சொல்லுவான்? மொதலியாருக்குப் பொண்ண பெத்துக்கத் தெரிஞ்சிதே தவுர வளக்கத் தெரியலன்னு பேசமாட்டானுவ? ஊர்க்காரன் என்ன, எங்க சங்கத்துலயே முதுகுக்குப் பின்னால பேசறானுக சார். எம்மொதப் பொண்ணோட புருசன் போன் போட்டு விசாரிக்கிறான். அவனை நாலு பேரு கேக்கறானுகளாம். அவமானமா இருக்காம். என்னா பதில் சொல்லன்னு கேக்கறான். இதுக்குத் தங்கச்சின்னு ஒண்ணு இருக்குது. அதுக்காகத்தான் உசிரை வெச்சிக்கிட்டு இருக்க வேண்டியிருக்குது. இல்லாட்டி நானும் எம்பொண்டாட்டியும் என்னிக்கோ மருந்து குடிச்சிருப்போம்…”

“அடடே, எதுக்கு சார் வருத்தப்படறிங்க? விட்டு விலகற உறவா இதெல்லாம்? நேரம் அப்படி செய்ய வெச்சிருக்கு. எல்லாம் சரியாயிடும். இதெல்லாம் நடந்ததுங்கறதே மறந்துபோகற காலம் ஒண்ணும் கண்டிப்பா வரும். ஆனா ஒண்ணு. நீங்க உங்க மகளுக்கு, மனசு எரிய சாபம் எதுவும் குடுத்துடாதிங்க” என்று எனக்குத் தெரிந்த அளவில் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

எனக்கும் அப்போது ஒன்றும் பெரிய வயதில்லை. பதினெட்டு வயதுப் பெண்ணின் தந்தை ஒருவரின் மனம் இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் என்ன விதமாகத் துடிக்கும் என்று கற்பனைதான் செய்ய முடியுமே தவிர, வலியின் நிஜமுகம் தெரிய சாத்தியமில்லை.

ஓரிரண்டு மாதங்களில் அவர் அந்தப் பழத்தோட்டத்தைக் கூட யாரோ வெளியூர்க்காரர்களுக்கு விற்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பொற்கொடி ஃப்ரூட்ஸ் என்கிற தகர போர்டு மட்டும் மேலும் கொஞ்சநாளைக்கு அங்கே இருந்தது. பிறகு அதுவும் காணாமல் போய் வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.

முதலியாரை நினைத்தால் மிகவும் வருத்தமாக மட்டுமே இருந்தது.

அந்த வருட ஆடித்திருவிழாவுக்கு முதலியார் வழக்கம்போல் முதல் நன்கொடையாக ஐந்நூறு ரூபாய் அளித்தார். விநாயகர் சதுர்த்தி சமயம் ஒருவாரம் அருகம்புல் விநாயகர் ஆலயம் அமர்க்களப்படத்தான் செய்தது. பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் ஒரு பகுதியைப் பழுதுபார்க்க வேண்டி தலைமை ஆசிரியர் அணுகியபோது, தயங்காமல் மூவாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

வேதனை இருந்தாலும் முதலியார் சமாளித்துக்கொண்டுவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் பலபேர் சொன்னதுபோல் பொற்கொடியும் இஸ்மாயில் கனியும் இருக்கிற இடம் தெரிந்துவிட்டதாகவெல்லாம் தெரியவில்லை. அவர்கள் சென்னையிலோ அல்லது வேறெங்காவதோ – சந்தோஷமாகவோ, கஷ்டப்பட்டுக்கொண்டோ வாழ்ந்துகொண்டிருப்பதற்குச் சாட்சியாக ஒரு சிறு தகவல் அல்லது வதந்தி கூட அந்த கிராமத்தை எட்டிப் பார்க்கவில்லை. முதலியார் முயற்சி செய்யாமல் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் அப்படி எங்கே தான் போயிருப்பார்கள்?

0

பணி மாற்றம் வந்து நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேறு பல ஊர்களுக்குப் போகவேண்டியிருந்தது. தையூர் முதலியார், ஓடிப்போன அவரது இரண்டாவது பெண் எல்லோரும் என் நினைவிலிருந்து இயல்பாக உதிர்ந்துவிட்டிருந்தார்கள். வாழ்வில் எத்தனையோ விஷயங்களுக்கு எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு சமயத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். காலம் நகர்ந்து போகும்போது எல்லாமே சாதாரணமாகிவிடுகிறது. உண்மையில் அறிவையல்லாமல், உணர்ச்சியைத் தொட்டுப்பார்க்கும் எல்லாமே சாதாரணங்கள்தானா? காதல் உள்பட?

ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பொற்கொடியை நான் சென்னையில் வைத்துத்தான் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. சற்றும் எதிர்பாராவிதமாக அடையாறு மத்திய கைலாஷ் பிள்ளையார் சந்நிதி அருகே.

நான் அவளை அடையாளம் கண்டுகொண்டது போலவே அவளும் என்னைப் பார்த்தமாத்திரத்தில் தெரிந்துகொண்டுவிட்டாள். “வணக்கம் சார்” என்றாள் உடனே.

“நல்லா இருக்கியாம்மா?” என்றேன்.

கேட்டிருக்கவே வேண்டாம். அவளை நான் பிள்ளையார் கோயிலில் சந்தித்திருந்தேன். நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். திருமணமான முஸ்லிம் பெண்கள் அணியும் கருகமணித் தாலியும் அணிந்திருந்தாள். கையில் ஐந்து வயதில் ஒரு சிறுவனைப் பிடித்திருந்தாள். இடுப்பில் ஒரு பெண் குழந்தை இருந்தது. முகத்தில் நிம்மதியின் பரிபூரணமான சுவடுகள் இருந்தன. அவள் ஒரு குடும்பத்தலைவி. திருமதி இஸ்மாயில் கனி.

“பையன் பேர் அப்துல்லா. பொண்ணு பேர் லட்சுமி சார்” என்றாள்.

டெய்லராக இருந்தால் என்ன? இஸ்மாயில் கனி நல்லவன். தெரிந்துதான் பொற்கொடி அவனைக் காதலித்திருக்கிறாள். பிரச்னை, அவள் காதலித்ததில் இல்லை. சொல்லாமல் உடனோடி வந்துவிட்டதில்தான். ஆனால் பத்து வருட இடைவெளியில் பேசுவதற்கு மீண்டும் அந்தக் கதையைத் தானா தேர்ந்தெடுக்க வேண்டும்?

“இஸ்மாயில் என்ன பண்றாம்மா?” என்றேன்.

“அதே வேலைதான் சார். ஆனா கொஞ்சம் பெரிய அளவுல செய்யறார். இங்கதான் பக்கத்துல அடையாறு சிக்னல்கிட்ட கடை வெச்சிருக்கார். ஆறுபேர் வேலை பார்க்கறாங்க. ஒரு துணிக்கடை ஆரம்பிக்கிற வேலையிலேயும் மும்முரமா இருக்கார்” என்றாள்.

அடையாறு சிக்னல் அருகில் கடை. எனக்கு அந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. சந்தேகமில்லாமல் பொற்கொடி சௌக்கியமாகத்தான் இருக்கிறாள்.

என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தேன். அவள் புறப்பட்டுப் போனதை அந்த அதிகாலை வேளையில் நான் பார்த்தது பற்றி. அன்றைய தினம் கிராமமே அத்தகவலால் பற்றி எரிந்தது பற்றி. வரதராஜு முதலியார் அடைந்த பரிதவிப்புகள் பற்றி. பொற்கொடி ஃப்ரூட்ஸ் தோட்டத்தை அவர் விற்றுவிட்டது பற்றி. கிளம்பும்போதுதான் அதைக் கேட்டேன். “அப்புறம் உங்க அப்பாவை சமாதானப்படுத்தினிங்களாம்மா? தங்கைக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? அவ எங்க இருக்கா?”

“அவ ஸ்டேட்ஸ்ல இருக்கா சார். அவ வீட்டுக்காரர் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்”

நான் கவனமாக இருந்தேன். என் கேள்வியின் முதல் பகுதிக்கு அவள் பதில் சொல்லியிருக்கவில்லை. ஆகவே மீண்டும் அதையே கேட்டேன். “உங்க அப்பாவை சமாதானப்படுத்தினிங்களா?”

அவள் சிரித்தாள்.

“சமாதானப்படுத்த என்ன இருக்கு சார்? அவர்தானே ஊர்ல இருந்தா பிரச்னை வரும்னு எங்களை மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சார்? வாரம் ஒருநாள் அப்பாவும் அம்மாவும் வருவாங்க சார். காலைலேருந்து சாயங்காலம் வரைக்கும் பிள்ளைங்களோட விளையாடிக்கிட்டு இருப்பாங்க. கிளம்பிடுவாங்க. சந்தோஷமா இருக்கோம் சார்” என்றாள் பொற்கொடி.

Share

18 comments

  • அட்டகாசமான கதை! கடைசி வரி அனைத்தையும் புரட்டிப் போட்ட விதம் பிரமாதமாக இருந்தது.

  • Para sir,

    /“சமாதானப்படுத்த என்ன இருக்கு சார்? அவர்தானே ஊர்ல இருந்தா பிரச்னை வரும்னு எங்களை மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சார்? வாரம் ஒருநாள் அப்பாவும் அம்மாவும் வருவாங்க சார். காலைலேருந்து சாயங்காலம் வரைக்கும் பிள்ளைங்களோட விளையாடிக்கிட்டு இருப்பாங்க. கிளம்பிடுவாங்க. சந்தோஷமா இருக்கோம் சார்” /

    excellent..

    • சங்கர்: எல்லா கதைகளுமே முன்னர் பிரசுரமானவைதான். என்னிடம் 5 கதைகள் மட்டுமே தட்டச்சு செய்யப்பட்டு உள்ளது. அவற்றை இங்கே பிரசுரிக்கிறேன். இந்தப் பழைய கதைகளை இப்போது மீள் பிரசுரம் செய்ய ஒரு காரணம் உள்ளது. 5 கதைகளையும் வெளியிட்ட பிறகு அதைச் சொல்கிறேன்!

  • படித்து முடிக்கும் வரையில் இப்படி ஒரு முடிவு இருக்கும் என்று தோன்றவில்லை. அட்டகாசம்.

  • ஓஹோ! ஒரு ஊகம் இருக்கிறது…எவ்வளவு தூரம் சரி என்று பொறுத்திருந்து பார்க்கிறேன் 🙂

  • இந்த கதையின் முடிவைப்போல் பல குடும்பங்களில் நிகழ்வதில்லை. அவர்களின் பெற்றோர்களுக்கு அவர்களின் உறவுகளைபற்றி தெரிவது இல்லை. அவர்கள் போன பின்னல் கடுமையான மன உளைச்சலுக்கும் சமுகத்தின் ஏளனத்துக்கும் ஆளாகிறார்கள்.

    இருந்தாலும் கதை சிறப்பாக இருக்கிறது.

  • கற்பனையில் தோன்றும் கதைதான் எத்தனை சுவையானது. ஆனால், நிஜம்?

    எங்கள் ஊரின் மிகப் பிரபல டாக்டரின் பையன் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் எனப் பெரும் பிடிவாதம். வருடம்தோறும் போட்டுக்கொள்ளும் ஐயப்ப மாலையோடு டாக்டர் சம்பந்தம் பேசப்போனார். அவரது குடும்பமே இஸ்லாமிற்கு மாறவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டு ரோஷத்தோடு வந்து விட்டார்.

    ஒரு மாதத்தில் பையன் முஸ்லீமாக மாறி நிக்கா செய்துகொண்டான். ஷாதி எல்லாம் நடக்கவில்லை. அதிக லாபம் ஈட்டித் தரும் தோட்டத்தை மரியாதையாக எனக்குக் கொடுக்காவிட்டால் கோர்ட்டில் கேஸ் போடுவேன் என்றான். முடியாது என்று சொல்லிவிட்டு டாக்டர் படுத்த படுக்கையானார். ஆஸ்பத்திரி மூடிக்கிடந்தது. அவர் ஓரளவு தேறியபின் வக்கீல் நோட்டிஸ் வந்தது. சண்டைபோட தெம்பில்லை. சொத்தை எழுதிக்கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறார்.

    நடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பேரன் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் என்று சொல்லி சிரிக்கக்கூடச் செய்கிறார். குடியா முழுகிவிட்டது?

    கல்யாணமாகாத பிரம்மச்சாரியின் பாத்ரூம் சேட்டைகள்போல உங்கள் கதைகள் நிம்மதியை அளிக்கின்றன.

  • காதலுக்கு மரியாதை செய்த வரதராஜு முதலியார் பாராட்டப்படவேண்டியவர்.

  • வரதராஜுக்கள் காதலுக்கு மரியாதை செய்வதில் ஆச்சரியமில்லை. மதம் மாற்றிக்கொண்டால் மட்டுமே மணம் நடக்கும் என்று ”லவ் ஜிஹாத்” செய்பவர்கள், மனம் திருந்தி காதலுக்கு மரியாதை செய்தால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

  • இந்த கதையை ஒரு விகடன் தீபாவளி மலரில் படித்திருக்கிறேன். தலைப்பைப் பார்த்தவுடனே பா.ராகவன் என்றதுமே தெரிந்துவிட்டது!!!(இப்போ இங்க படிக்கலை!!) என்றோ படித்திருந்தாலும் இன்றும் என் அடிநாக்கில் அழன்று கொண்டிருக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று!!!

    இன்னும் சொல்லப்போனால் நான் கதை படிக்க ஆரம்பித்த காலத்தில் வெகுவாக கவர்ந்த கதை!!!

  • அருமையான கதை பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி