ஜெயமோகன் பத்ம விருதை மறுத்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுற்றுச்சூழலைப் போல் தமிழ்ச்சூழல் எத்தனை மாசுபட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்விருதைப் பெற அனைத்துத் தகுதிகளும் உள்ளவர் அவர். ஆயினும் காழ்ப்புக் கசடுகளை மனத்தில் கொண்டு இதனை மறுத்திருக்கிறார்.
படைப்பு சார்ந்தும் படைப்புக்கு அப்பாலும் அவர்மீது யாருக்கும் என்னவிதமான விமரிசனமும் இருக்கலாம். எனக்கே நிறைய உண்டு. ஆனால் ஒரு தொடர் செயல்பாட்டாளராகக் கலை, கலாசார தளத்தில் அவரது பங்களிப்பு நிராகரிக்க முடியாதது. சினிமாவோடு ஓய்ந்திருக்கக்கூடிய இத்தலைமுறையின் ஒரு பகுதியை படைப்பிலக்கியத்தின் பக்கம் திருப்பியது அவரது முக்கியமான சாதனை. எழுதுவது மட்டுமல்லாமல் வாசிப்பும் ஒரு இலக்கிய சாதகமே என்பதை இடைவிடாது அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவர்மூலமாகவே நவீன இலக்கியத்தின் இதர கிளைகளுக்கு நகர்ந்த பலபேரை நானறிவேன்.
இந்த விருது மறுப்புக்கான காரணத்தை ஜெயமோகன் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதை வாசித்தேன். வருத்தம்தான். காழ்ப்புகளும் பொறாமையும் அவதூறுகளும் தமிழ்ச் சூழலுக்கு மட்டுமே உரிய கல்யாணகுணம் என்று நான் நம்பவில்லை. இங்கு சற்று அதிகமாக இருக்கிறதோ என்னவோ. எப்படியானாலும் ஜெயமோகன் அவற்றைப் புறந்தள்ளியிருக்கவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஏனெனில் தகுதிமிக்க ஒருவருக்கு வழங்கப்படும் விருது அவரை மட்டுமே சார்ந்ததல்ல. அவர் புழங்கும் மண்ணுக்கும் சேர்த்தே அளிக்கப்படுவதுதான். ஜெயமோகன் போன்றவர்கள் இம்மாதிரியான நியாயமான அங்கீகாரங்களை மறுத்துக்கொண்டிருக்கும்வரை வி.ஜி. சந்தோஷம் போன்றவர்கள் குத்தாட்டம் போட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.