பொலிக! பொலிக! 101

ஹேவிளம்பி வருடத்தின் சித்திரை பிறந்தது. அன்று சனிக்கிழமை. வளர்பிறை திரயோதசி. ஹொய்சள தேசமே விளக்கொளியிலும் மங்கல வாத்திய அணிவகுப்புகளிலும் வாண வேடிக்கைகளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தது. பஞ்ச நாராயணர்களின் கோயில்களிலும் ஒரே முகூர்த்தத்தில் விக்கிரகப் பிரதிஷ்டைக்குத் திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். பொறுப்பு முதலியாண்டானிடம் தரப்பட்டிருந்தது. முன்னதாக அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் ராமானுஜருக்கு நூறு வயது நிறைந்திருந்தது. தொண்ணூறு நிறைந்திருந்த முதலியாண்டான்தான் அந்நாளையும் திருவிழாவாக்கிக் கொண்டாடினார்.

‘முதலியாண்டான்! நமக்கு இதனைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி, பேலூரைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் அனைத்து சமணர்களையும் நீர் வைணவராக்கி வைத்ததுதான். அது நடந்ததால்தான் பஞ்ச நாராயணர் கோயில்களை அங்கே நிறுவ முடிந்தது!’ என்றார் ராமானுஜர். 

‘சுவாமி, அடியேன் தங்கள் பாதுகை. இதைத் தாங்களே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்க நான் சென்று சாதித்தேன் என்று சொல்லுவதில் நியாயமே இல்லையே? உங்களை நெஞ்சில் ஏந்திச் சென்றது ஒன்றே என் பணி.’ என்று கரம் குவித்தார் முதலியாண்டான்.

உடையவர் அவரைத் தோளோடு அணைத்து ஆசீர்வதித்தார். காஞ்சியில் சன்னியாசம் ஏற்ற கணத்தில் ‘முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அது உணர்ச்சி வயத்தில் சொன்னதல்ல. முதலியாண்டானை எப்படித் துறக்க முடியும்? தான் மட்டுமல்ல; வைணவ உலகமே தலைமேல் ஏந்திச் சீராட்ட வேண்டிய சுத்த ஆத்மா அல்லவா!

‘நீங்கள் சொல்லுவது சரி. முதலியாண்டான் இல்லாது போனால் ஆலயக் கட்டுமானமும் இன்றைய விக்கிரகப் பிரதிஷ்டையும் இத்தனைக் குறுகிய காலத்தில் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்த்து வந்த அத்தனை சமணர்களையும் அவர் தனியொருவராக வாதில் வென்று பணியவைத்த காட்சி இப்போதும் என் கண்ணில் நிற்கிறது சுவாமி!’ என்று பரவசப்பட்டுச் சொன்னான் விஷ்ணுவர்த்தன்.

அது மிகப்பெரிய காரியம். பல்லாண்டு காலக் கடும் உழைப்பு. ஆயிரமாயிரம் பேர் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்ததன் பலன். ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தனின் குறைவற்ற பக்தி சாத்தியமாக்கிய திருப்பணி. அனைத்துக்கும் மேலாக முதலியாண்டான் அங்கே முன்னால் நின்றிருந்தார். இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டிருந்த அத்தனை பேருடனும் தொடர்பில் இருந்தார். ஆகமம் பிசகாமல், இலக்கணம் வழுவாமல், புனித பங்கம் ஏதும் நேராமல், ஒரே சித்தமாகச் சுழன்று சுழன்று உழைத்துச் சாத்தியமாக்கிய திருக்கோயில்கள்.

அன்று ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை விமரிசையாக நடந்தேறியது. எங்கும் நாராயண கோஷம். இனி என்றென்றும் ஹொய்சள மண்ணில் வைணவம் தழைத்து வாழும் என்ற முழு நிறைவு உடையவர் நெஞ்சில் உண்டானது.

போதும். திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு ஹொய்சள தேசத்துக்கு வந்து தங்கத் தொடங்கிப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. ஒரு மாபெரும் துயர காலத்தைக் கடந்து செல்ல இந்த மண் பேருதவி செய்திருக்கிறது. அனைத்து முகங்களும் புதியவை. அத்தனை பேரும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் தங்கள் மண்ணின் தவப்புதல்வன் போலவே ஏந்தியெடுத்துச் சீராட்டியவர்கள்.

‘மன்னா இதில் ஒரு செய்தி இருக்கிறது. நாம் போதிக்கும் சித்தாந்தம், நாம் பிரசாரம் செய்யும் கருத்து சரியானதாக, இயற்கையானதாக, உண்மைக்குச் சற்றும் வெளியில் நில்லாததாக இருக்குமானால் மக்கள் அதை அங்கீகரிப்பதில் எந்தச் சங்கடமும் நேராது.’ என்றார் ராமானுஜர்.

‘உண்மைதான் சுவாமி. ஆனால் யார் செய்கிறார்கள் என்பதும் இங்கு முக்கியமாகிறது. தங்களின் இருப்பு ஒன்றே அனைத்துக் காரியங்களையும் குறைவின்றி நிறைவேற்றியிருக்கிறது என்பதை மறுக்காதீர்கள்!’ என்றான் விஷ்ணு வர்த்தன். அவனுக்கு அடி மனத்தில் அச்சம் எழுந்துவிட்டிருந்தது. சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்டான் என்ற செய்தி வந்தபோதே அவன் கலக்கமடைந்தான். எங்கே ராமானுஜர் தன் தேசத்தை விட்டுப் போய்விடுவாரோ என்கிற கலக்கம். இழுத்துப் பிடித்து உட்கார வைக்க அவனுக்குப் பஞ்ச நாராயண ஆலயக் கட்டுமானப் பணிகள் கைகொடுத்தன. அவை சிறப்பாக உருவாகி, குடமுழுக்கு நடைபெறும்வரை உடையவர் கிளம்பமாட்டார் என்று நிம்மதி கொண்டிருந்தான்.

காலம் என்று ஓய்வுகொண்டிருக்கிறது? கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அது நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதோ கோயில்கள் எழுந்துவிட்டன. விக்கிரகப் பிரதிஷ்டை முடிந்துவிட்டது. பாண்டிய தேசம் சென்ற உடையவரின் சீடர் சிறியாண்டானும் சோழ தேச நிலவரம் கண்டறிந்து வந்திருக்கிற நடாதூர் ஆழ்வானும் ஒரே தகவலைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

குலோத்துங்கனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்திருக்கிற விக்கிரம சோழன், தனது தந்தையின் தவறுகள் புரிந்து தெளிந்தவனாக இருக்கிறான். திருவரங்கம் ஆலயத்துக்கும் உடையவர் சமூகத்துக்கும் செய்த பிழைகளை மன்னிக்கக் கோரியிருக்கிறான். உடையவர் மீண்டும் திருவரங்கம் வரக் கோரிக்கை விடுத்திருக்கிறான்.

ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு கண்ணைத் திறந்து பேச ஆரம்பித்தார். ‘விஷ்ணுவர்த்தா! என்னைத் திருவரங்கத்தில் இருந்து கிளப்பி அனுப்பியது குலோத்துங்கன் என்றா கருதுகிறாய்? நிச்சயமாக இல்லை. இது அரங்கன் சித்தம். பாரத தேசமெங்கும் வைணவ நெறியைப் பரப்பவே என்னை அவன் படைத்தான்.’

‘உண்மைதான் சுவாமி. ஆனால் இன்று குலோத்துங்கன் இறந்துவிட்டானே! தாங்கள் கிளம்புகிறேன் என்கிறீர்களே! வைணவருலகில் குலோத்துங்கன் இறப்புக்காகக் கவலை கொள்பவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்!’

உடையவரும் சீடர்களும் சிரித்தார்கள். ‘புரிகிறது விஷ்ணுவர்த்தா. அவன் மறைவு என்னை மீண்டும் திருவரங்கத்தை நோக்கி இழுப்பதை எண்ணிப் பேசுகிறாய். ஆனால் இதை நீ ஏற்கத்தான் வேண்டும். அரங்க நகரைவிட்டு நான் பிரிந்து பல வருடங்களாகிவிட்டன. என் வயதும் நூறைத் தொட்டுவிட்டது. இனியும் நான் தாய்மடியை விட்டு விலகியிருப்பது சரியல்ல.’

ராமானுஜர் அங்கிருந்து போகவே கூடாது என்று மன்னனோடு மக்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள். என்ன சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்துவது என்று அவர் யோசித்தார். ‘சரி, என் திருமேனி ஒன்றைச் சிலையாக வடித்து வாருங்கள்.’

சிலை வந்தது. அச்சு அசல் ராமானுஜரை அப்படியே ஒத்திருந்தது. கலையும் பக்தியும் கைகோத்த தருணம். உடையவர் அச்சிலையை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். தமது அருளையும் தெய்விக சக்திகளையும் அதில் சேர்த்து இறக்கிவைத்தார்.

‘இனி என் இடத்தில் இது இருக்கும். இதனுள்ளே நான் இருப்பேன். என்றென்றும் இதன் வாயிலாக உங்களுடனேயே இருப்பேன்!’ என்று சொன்னார். ‘தமர் உகந்த திருமேனி’ என்றழைக்கப்பட்ட அச்சிலை திருநாராயணபுரத்தின் அடையாளமாயிற்று.

ராமானுஜர் தமது சீடர்களுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி