இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஓர் இணையத்தளம் இருக்கிறதல்லவா? கவிக்கோ, கொக்கோ போல அதன் பெயர் டாஞ்ஞெட்கோ. அதில்தான் பல வருடங்களாக மின் கட்டணம் செலுத்தி வருகிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால், ஒவ்வொரு முறை நான் லாகின் செய்யும்போதும் கடவுச் சொல் தவறு என்று சொல்லும். சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிடும். அதுவும் ஒரு சங்கேதக் குறி போலவென நினைத்துக்கொண்டுவிடுவேன்.
இந்தப் பல்லாண்டு கால வழக்கத்தை இன்று அந்தத் தளம் மாற்றிக்கொண்டுவிட்டது. வழக்கம் போலக் கடவுச் சொல் தவறு என்று சொன்னது. ஆனால் வழக்கம் போல உள்ளே அழைத்துச் செல்லவில்லை. புதிய கடவுச் சொல்லுக்கு மின்னஞ்சலைப் பார் என்று சொன்னது. அப்படி எந்த மின்னஞ்சலும் வரவில்லை. சிறிது நேரம் போராடிவிட்டு அதே டாஞ்ஞெட்கோவுக்கு ஐஓஎஸ் ஆப் இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது. அதை டவுன்லோட் செய்து என் பழைய கடவுச் சொல்லையே போட்டுப் பார்த்தால், லட்டு மாதிரி உள்ளே அழைத்துப் போய்விட்டது.
அடடா இது இவ்வளவு நாளாகத் தெரியவில்லையே என்று பூரித்துப் போய் கணக்குப் பக்கத்தைத் திறக்கப் பார்த்தால் எல்லாம் ஒரே வெள்ளை அறிக்கைகள். ஆப்பின் அனைத்துப் பக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன (காண்க-படம்). சரி, புகார் நகரத்துப் பெருங்குடி மகனாக ஒரு கடுதாசி போட்டு வைக்கலாம் என்று பார்த்தால், அந்தப் பக்கமும் வெள்ளை அறிக்கை.
அது என்ன ராசியோ தெரியவில்லை. கோ-வின் ஆகட்டும், டாஞ்ஞெட்கோவாகட்டும், வேறெதுவாகட்டும். நமது அரசாங்கத்துக்கு இணையத்தளம் கட்டிக் கொடுப்பவர்கள் மட்டும் பணம் கொடுத்து பாஸ் பண்ணி பட்டம் வாங்கியவர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் என்ன வளர்ந்து எவ்வளவு உயர்ந்தால் என்ன. இந்தத் தளங்கள் எப்போதும் திராபையர் குலத் திலகங்களாகத்தான் இருக்கின்றன.