எழுபத்திரண்டு சீன், முற்றும்.

கடந்த நாலு தினங்களாக நான் ஊரில் இல்லை. திடீரென்று கிளம்ப நேர்ந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ள அவகாசம் இல்லை. போன இடத்தில் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ய நேர்ந்ததால் யாருடனும் பேசவும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று வியக்குமளவு, வந்து மெயில் பார்த்தபோது ஏராளமான விசாரிப்புகள். ஊரில் இல்லையா, உடம்பு சரியில்லையா, வேறு பிரச்னையா – இன்னபிற. அனந்த பத்மநாபனிடம் பணம்தான் இருக்கிறது. எனக்கு எத்தனை நல்ல நட்புகள் இருக்கின்றன! சற்று நெகிழ்ந்துதான் போனேன்.

விஷயம் இதுதான். ஓர் இயக்குநருக்குக் கதை சொல்லி, அது ஏற்கப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இன்னும் எழுதிக் கொடுக்காமல் டபாய்த்துக்கொண்டிருந்தேன். தின்னத்தகாத சின்னக் கவலைகளும் அன்றாட வாழ்வின் அவசர அவஸ்தைகளும் ஆபீஸ் வேலைகளுமாக நாள்கள் சேர்ந்து வருடமாகிவிட்டது. சென்னையைவிட்டு எங்காவது போய்விடுங்கள், எழுதிவிடலாம் என்றார் இயக்குநர். எனக்கும் ஒரு மாறுதல் வேண்டியிருந்தது. ஒப்புக்கொண்ட மறுகணம் ஏற்பாடுகள் முடித்து, புறப்படு என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

ரொம்ப தூரமில்லை. சிற்பத் தொகுதி எம்.எல்.ஏ அடிக்கடி போய்வரும் மாமல்லபுரம்தான். ஆனால் எனக்கு ஏற்பாடாகியிருந்த ரிசார்ட், சிற்பத் தொகுதியை விட்டு ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. மிகவும் கடலோரம். கையெட்டும் தூரத்தில் ஒரு பல்லவர் காலக் குறுங்கோவில். கண்ணெட்டும் தூரத்தில் கப்பல்கள். அமர்க்களமாக இருந்தது, அந்தப் பிராந்தியம். ஏராளமான மரங்களும் மெத்தென்ற புல் தரையும் பளிச்சென்ற நீச்சல் குளமும் அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களுமாக அந்த ரிசார்ட்டுக்கும் ஒரு பாரம்பரியம் இருப்பதாகச் சொன்னார்கள். கல் காப்பியத்துக்கு உரை போட்டவர்களும் தொல்காப்பியத்துக்கு உரை போட்டவர்களும் விரும்பி வந்து தங்குகிற இடம். பிரசித்தி பெற்ற இயக்குநர்கள் சிலர் முன்னதாக அங்கே வந்து உட்கார்ந்து யோசித்து தேசிய விருதுத் திரைப்படங்களை எழுதியிருக்கிறார்கள். தவிரவும் நகரச் சந்தடி இல்லை. அதைவிட முக்கியம் இணையம் இருக்காது.

‘முடிக்காம வந்துராதிங்க’ என்றார் இயக்குநர். எழுதவேண்டிய விஷயம் மனத்தில் சரியாக உருப்பெற்று, எழுதும் மூட் இருந்தால் எனக்கு எழுதி முடிக்க எப்போதுமே அதிக அவகாசம் வேண்டியிருந்ததில்லை. கீ போர்டில் கையை வைத்தால் பேக் ஸ்பேஸ் அடிக்காமல் ஒரு மணிநேரம் தொடர்ந்து எழுதுபவன். பக்கத்தில் இருந்து பார்த்த சில நண்பர்களுக்கு இது தெரியும். எனவே அவருக்கு நம்பிக்கை சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். உதவி இயக்குநராகப் பணியாற்றும் என் நண்பர் தனபால் துணைக்கு வர ஒப்புக்கொண்டார். தனபால், பேரரசுவிடம் பல்லாண்டு காலம் பணியாற்றியவர். கனகவேல் காக்கவின்போது எனக்கு நட்பானவர். ஒரு கதையைப் பேசிப் பார்க்க வேண்டிய தருணங்களுக்கு மிகச் சரியாக ஈடு கொடுக்கக்கூடியவர்.

இந்தத் தினங்களை இப்படி வகுத்துக்கொண்டேன். தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து ஆறு மணிவரை அறையில் எழுதுவது. பிறகு எழுந்து சென்று நீச்சல் குளத்தருகே அமர்ந்து எழுதுவது. அதன்பின் கடலோரம் ஒரு மென் நடை. மீன்பிடி விசைப் படகுகள் கரையைத் தொட்டு லாகவமாக மணலில் வழுக்கி வந்து திரும்பி நிற்கும் காட்சி ஒரு பெரிய கவிதை. வலை நிறைந்த மீன்களுக்கு வட்டமிடும் காகங்கள். எப்படா விடியுமென்று காத்திருந்து இரண்டு கர்ச்சிப்புகளை மேலொன்றும் கீழொன்றுமாகக் கட்டிக்கொண்டு கடலுக்கு ஓடிவந்து குதித்துவிடும் வெள்ளைக்கார சுற்றுலாப் பெண்களும் அவர்தம் காதல் இணைகளும்.

கற்கோயில் வரை நடந்துவிட்டுத் திரும்பவும் ரிசார்ட்டுக்கு வந்து ஒரு காப்பி. அதற்குள் நீச்சல் குளத்தை சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். நான் குளத்தில் குதித்துப் பலகாலம் ஆகிவிட்டது. குரோம்பேட்டையில் இருந்தபோது தினசரி வழக்கமாக இருந்தது. கோடம்பாக்கம் அந்த இன்பத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டது. இங்கே நீச்சல் குளத்தைப் பார்த்ததும் உண்டான பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வலது தோள்பட்டை சுளுக்கிக்கொள்ளுமளவு கொண்டாடித் தீர்த்தேன். நண்பர் தனபால் குளத்தைவிட்டு எழுந்து வரவே மறுத்துவிட்டார். ‘யோவ், வெள்ளைக்கார அழகிகளுடன் உதவி இயக்குநர் நீச்சல் குளத்தில் ஜலக்ரீடை’ன்னு தினத்தந்தி வெள்ளி மலருக்கு நியூஸ் குடுத்துடுவேன்’ என்று மிரட்டித்தான் கிளப்பவேண்டியிருந்தது.

நல்ல பசியுடன் காலை ஒன்பது மணிக்கு உணவரங்கத்துக்குப் போனால் சுய சேவைச் சிற்றுண்டி வகைகள். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை, ஒரு தம்ளர் ஜூஸ். அல்லது வெண்ணெய் தடவி இரண்டு பிரட், ஒரு தோசை, ஒரு தம்ளர் ஜூஸ். இந்த வெள்ளைக்காரர்கள் சாப்பிடும் லாகவம் எப்போதும் எனக்குப் பொறாமை தரக்கூடியதாகவே இருக்கிறது. அவர்களைப் போல் என்னால் கத்தியில் வெண்ணெய் எடுத்து பிரெட்டில் தடவ முடிவதில்லை. முதலில் பாத்திரத்திலிருந்து வெண்ணெய்க் கட்டியை எடுக்கும்போதே டொபுக்கென்று உருண்டு விழுந்துவிடுகிறது. எத்தனை முறைதான் அந்தச் சீனப் பெண் என்னைப் பார்த்துச் சிரிசிரியென்று சிரிப்பாள்? நானும் வெண்ணெய் தடவி, ஜாம் தடவி, மேலே உதிராமல் கடித்துச் சாப்பிடக் கடுமையான முயற்சியெல்லாம் செய்து பார்த்தேன். ம்ஹும். மேலே உதிர்த்துக்கொள்ளாமல் சாப்பிட என்ன செய்வதென்று யோசித்து, இறுதியில் ஒரு வழி கண்டுபிடித்தேன்.

வட்ட வடிவில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த அன்னாசிப் பழங்களில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொண்டேன். வெண்ணெய்க் கட்டியைக் கையால் எடுத்து அதன் நடுவே தேய் தேய் என்று தேய்த்து, கொஞ்சம் ஜாமும் சேர்த்து, இடையில் ஒரு துண்டு வெள்ளரிக்காய் வைத்துச் சாப்பிட்டேன். நன்றாகத்தான் இருப்பதுபோல் பட்டது. இந்த வினோதக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சில வெள்ளைக்காரர்களும் நான் போனபிற்பாடு இதனை முயற்சி செய்திருக்கக்கூடும். கூம்பு வடிவத்தில் தோசையை மடித்துக் கொடுத்தாலே இந்தியக் கலாசாரத்தை வியக்கிறவர்கள். இதையும் கலாசாரத்தின் ஓரம்சமாக எடுத்துக்கொள்ள மாட்டார்களா என்ன?

சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்து பத்து மணிக்கு எழுத ஆரம்பிப்பேன். ஒரு மணிவரை இடைவிடாமல் எழுத்து. பிறகு மதிய உணவு. துரதிருஷ்டவசமாக அந்த ரிசார்ட்டில் நல்ல சைவ [அல்லது வைணவ] உணவுகளுக்குப் பஞ்சம். பெரும்பாலும் வெளிநாட்டினர் மட்டுமே வந்து தங்கும் இடமென்பதால் கடல் உணவுகளுக்கே முக்கியத்துவம் தந்தார்கள். புலவனில்லையென்றாலும் எனக்கு தினசரி வாய்த்தது வெஜிடபிள் புலவ்தான். சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் மாலை வரை சுகமான உறக்கம். ஆறு மணிக்கு சுடச்சுட ஒரு காப்பி. திரும்பவும் ஒரு சிறு நடை. தனபாலோடு விவாதம். ஏழு மணிக்கு எழுத ஆரம்பித்து பதினொன்று வரை எழுதினேன். அன்று எழுதியதை ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டுப் படுத்தால் மீண்டும் அதிகாலை நாலு மணி.

தனபாலுடன்

இன்று காலை எழுதி முடித்து முற்றும் போட்டபோது கிடைத்த சந்தோஷத்தை விவரிக்கவே முடியாது. இது ஒவ்வொரு முறை எதையாவது எழுதி முடிக்கும்போதும் கிடைக்கிற சந்தோஷம். ஒரு நிமிஷம் அப்படி இருக்கும். தலை கிர்ர்ரென்று சுற்றி, உடம்பு முழுக்க ஒரு கிளுகிளுப்பு ஓடி, எழுந்து டான்ஸ் ஆடச் சொல்கிற சந்தோஷம். எழுதுவது என்பதே இதற்குத்தான். இன்னொருத்தர் படிப்பது என்பது கூடுதல் போனஸ். அது நன்றாகவும் அமைவதென்பது எம்பெருமான் திருவருள்.

சிற்பங்களைப் பார்க்க அவகாசம் இருக்குமா என்று ஒரு ஓரத்தில் சிறு எண்ணம் இருந்தபடியே இருந்தது. ஆனால் இல்லை. புறப்படும் கணம் வரை வேலை சரியாக இருந்தது. குடும்பத்தோடு திரும்பவும் ஒருநாள் வந்து தங்க நினைத்திருக்கிறேன். என் மகத்தான கண்டுபிடிப்பான அன்னாசிப் பழ சாண்ட்விச்சை அவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

Share

15 comments

  • // எத்தனை முறைதான் அந்தச் சீனப் பெண் என்னைப் பார்த்துச் சிரிசிரியென்று சிரிப்பாள்? நானும் வெண்ணெய் தடவி, ஜாம் தடவி, மேலே உதிராமல் கடித்துச் சாப்பிடக் கடுமையான முயற்சியெல்லாம் செய்து பார்த்தேன். ம்ஹும். மேலே உதிர்த்துக்கொள்ளாமல் சாப்பிட என்ன செய்வதென்று யோசித்து, இறுதியில் ஒரு வழி கண்டுபிடித்தேன்.//

    ஓவர் டு லக்கிலுக்!

  • சொல்லி இருந்தா நாங்களும் வந்து ஜலகீரிடை பண்ணி இருப்போம்

  • நானும் அந்த ரிசார்ட்டில் தங்க வேண்டும் போல இருக்கிறது!

  • உங்கள் உருவமும்,அனுபவமும் விஐய் மல்லையாவுக்கு நிகராக இருக்கிறது.

  • பொன்னர் சங்கர், இளைஞன் உள்ளிட்ட ஏராளமான திரைக்காவியங்கள் உருவாகிய இடத்தில் இருந்து எழுதியிருக்கிறீர்கள்.

    அந்த காலத்தில் ‘வசனம் : மு.கருணாநிதி’ என்று திரையில் எழுத்து பளிச்சிடும்போது திரையரங்கின் கூரை அதிருமாம். அவ்வகையிலான வரவேற்பு தங்களது வசனத்துக்கும் கிடைக்கும் காலம் வெகுதூரமில்லை!

  • என்ன படமோ தெரியவில்லை ஆனால் ஹீரோ கரண். அதுமட்டும் நிச்சயம்.

    கூகுளில் “pineapple sandwich” என்று தேடிப் பார்த்தேன், பலவகையான செய்முறை கிடைத்தது உங்களது செய்முறை தவிர. சீக்கரமே உங்களது “pattern”ஐ பதிவு செய்துகொள்ளுங்கள். “நீலக்காக சாண்ட்விச்” என பெயர் வைத்துக் கொள்ளலாம் 🙂

  • அழ்கு!நடை!!வேறு என்ன சொல்ல …போங்க வெண்னை மாதிரி!!!

  • congrats pa.ra ippadi thavam mathiri ukarnthu ezutha kodupinai venum.ennala mudinchathu perumoochu mattum than….

  • “பொன்னர் சங்கர், இளைஞன் உள்ளிட்ட ஏராளமான திரைக்காவியங்கள் உருவாகிய இடத்தில் இருந்து எழுதியிருக்கிறீர்கள்.”

    ஏதும் உள்(வெளி/மேல்/கீழ்/பக்கவாட்டு)குத்து இல்லைன்னு நினைக்கிறேன்.

  • இது தெரியாமல் நான் உங்களை தொடர்பு கொள்ள முயன்றேன்.நீங்கள் சிக்கவில்லை என்பதால் ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படத்திற்கு வசனம் எழுத ஒரு ரைட்டரை பிடித்துக் கொடுத்தேன்.

  • ஐயா…சில நாட்கள் முன்பு சாருவுக்கு கிடைத்தது போல எனக்கு யாரும் ஸ்பான்சர்ஸ் இல்லையே என்று கேட்டிருந்தீர்.அது இப்போது நடத்து விட்டது.கட்டுரை அருமை.

  • எழுத்துலகில் தாங்கள் ஜொலித்தது போல் திரையுலகிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்பது என் போன்ற ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஆவல். தங்களின் திரைக்கதை வசனத்துக்காகவே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தங்கள் எழுத்தை விரும்பும் வாசகர்களுக்கு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் திரையுலகில் உள்ள நெளிவு சுளிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டு தொடருவீர்களா ? உங்களை தேடிவரும் வாய்ப்புக்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சரிதானே ?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி