நாணயவியல்

சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். எனக்குப் பத்தடி முன்னால் அந்தப் பெண் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு குழந்தை இருந்தது. ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. தனது முந்தானைக்குள் அதனைச் சுருட்டி இடுப்பில் அமர வைத்திருந்தாள். நல்ல வெயில் வேளை. செருப்புக் கூட இல்லாமல் எப்படி அவளால் தார்ச் சாலையில் நடக்க முடிகிறது என்று நினைத்தேன். சட்டென்று பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன்.

இரண்டு ரூபாய் நாணயம் ஒன்று இருந்தது. அதைத் தவிர ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது. அந்த நாணயத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டேன். சிக்னல் மாறுவதற்குள் அவள் என் பக்கம் வந்தால் போட்டுவிடலாம்.

ஆனால் நெடுநேரமாக சிக்னல் மாறாமலேயே இருந்தது. யாரோ பிரமுகருக்காக நூற்றுக் கணக்கானோர் காத்திருக்க வேண்டியதாகிறது. அவள் மேலும் சிறிது நகர்ந்து முன்பக்கம் போய்க்கொண்டிருந்தாள். ஒவ்வொரு காரின் கண்ணாடிக்கும் குனிந்து வணக்கம் சொல்லிப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள். சிலர் காசு போட்டார்கள். பெரும்பாலானவர்கள் வேறு புறம் திரும்பிக்கொண்டதைக் கவனித்தேன். கையில் சில்லறையாகக் காசு இல்லாதபோது நானும் அப்படித்தான் செய்வேன். இப்போது இரண்டு ரூபாய் இருக்கிறது. ஆனால் அவள் என் பக்கம் வருவதாகத் தெரியவில்லை.

இரண்டு ரூபாயில் வாங்கக்கூடிய பொருள் என்று ஏதுமில்லை. இருபது பேர் இரண்டு ரூபாய் தந்தால் ஒருவேளை அவளுக்கு உணவுக்கு ஆகும். ஒவ்வொரு முறை பிச்சை இடும்போதும் அந்த நாணயம் ஒரு சிறு குற்ற உணர்வைத் தரும். ஏனோ பளிச்சென்று ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்துப் போடத் தோன்றியதே இல்லை. ஒன்றும் சொத்து அழிந்துவிடப் போவதில்லை என்றாலும் கை வருவதில்லை. இது ஒரு மனநிலை. கஞ்சத்தனம் இல்லை. பழக்கத்தில் வந்துவிட்ட குணம். பெட் ரோல் பங்க்குகளில் காற்றடிக்கும்போதும் இரண்டு ரூபாய் நாணயத்தைத் தான் தருவேன். முன்பெல்லாம் பதில் சொல்லாமல் வாங்கிக்கொள்ளும் பெட் ரோல் பங்க் ஊழியர்கள் இப்போது சிணுங்குகிறார்கள். ‘அஞ்சு ரூபா குடுங்க சார்’ என்று சிலர் கேட்கவும் செய்கிறார்கள். காற்று இலவசம் என்றுதான் போர்ட் வைத்திருப்பார்கள். ஆனால் சேவை செய்பவருக்கு எதையாவது செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

சட்டென்று தோன்றியது. அஞ்சு ரூபா குடுங்க சார் என்று அந்தப் பிச்சைக்காரி கேட்டால் என்ன செய்வேன்? அதை அநியாயம் என்று என்னால் நினைக்க முடியாது. ஆனாலும் ஒரு சிறு கோபம் வரலாம் என்று தோன்றியது. கோபப்பட்டுவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படுவேன் என்றும் உடனே தோன்றியது.

அந்தப் பெண் இப்போது திரும்பி நான் இருக்கும் இடம் நோக்கி வந்துகொண்டிருந்தாள். இன்னும் மூன்று ஸ்கூட்டர்களைத் தாண்டினால் என் வண்டியை நெருங்கிவிடுவாள். நாணயத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால் அதற்குள் சிக்னல் விழுந்து, வண்டிகள் நகர ஆரம்பித்துவிட்டன. நெரிசலில் அவள் அடிபட்டுக்கொள்ளாமல் ஓரத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று கவலையாக இருந்தது. ஆனால் வாகன ஓட்டத்தை சட்டை செய்யாமல் அவள் கடந்து போய்க்கொண்டிருந்தாள்.

அவளுக்கு உதவ நினைத்தும் முடியாதது பற்றிச் சிறிது வருத்தமாக இருந்தது. மறுநாள் அதே இடத்தில் அவளைப் பார்த்தால் ஐந்து ரூபாய் தர வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் மறுநாளும் என்னிடம் அதே இரண்டு ரூபாய் நாணயம்தான் இருந்தது. ஐந்து ரூபாய் தர முடியாத குற்ற உணர்வில் வேறு புறம் பார்த்தபடி வண்டியை ஓட்டிச் சென்றேன்.

Share

13 comments

  • படித்து முடித்தவுடன் சிரித்து விட்டேன். அடுத்த முறை வீட்டை விட்டு கிளம்பும் போது நாலு நோட்டுகளை பாக்கெட்டில் வைத்திருப்பது நலம்….. பத்து வரியில் கதை எழுதினாலும் எட்டு வரி விறுவிறுப்பாகதான் போகுது

  • எதையாவது செய்து தன்னையும் தன் மனதையும் ஆசுவாசப்படுத்தி, அது தான் நம் வாழ்கையின் அர்த்தமுள்ள தீட்சை என எண்ணுவது ஒரு விதத்தில் அபத்தம் தான். குழந்தை, வெயில், ஏழ்மை, பசி, பிட்சை, இந்த சொற்கள் தனியே நமக்கு கொடுக்கும் அழுத்தத்தை விட, எல்லாம் கூடி கண் முன் வருகையில் நம் இடது வலது மூலையில் நிரம்பி வழிபவை குற்ற உணர்ச்சி மட்டுமே.

  • சிக்னலில் எதிர்படும் கைக்குழந்தைக்காரிகள் கொஞ்சம் நம்மை பதற வைக்கத் தான் செய்கிறார்கள்

  • கையில் பணமில்லாத‌ பல நேரங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது ஒருவகையான பரிதாப உணர்ச்சி இருந்தாலும் அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய இயலாத குற்றவுணர்வும் கூடச் சேர்ந்து கொள்ளும். கையில் சில்லறையாகப் பணம் இருக்கும் போது அவர்கள் நம் கண்ணிலோ அல்லது நாம் அவர்கள் கண்களிலோ சிக்குவதில்லை.

  • இனி எல்லோரும் பத்து ரூபாயாவது
    போடும் மனநிலைக்கு மாறுவதற்கு
    இந்தக் கதை ஒரு உந்துதலாய் இருக்கும்

    அது எழுத்தின் வெற்றி

    வாழ்க பல்லாண்டு

  • நான் முடிந்த அளவு பிச்சையிடுவதாக இருந்தால் பத்து ரூபாயாகத்தான் தருகிறேன்.ஆனால் இப்போதெல்லாம் பிச்சைகாரர்களை பாரத்தால் நம்மை ஏமாற்றுபவர்களாகவே தெரிகிறார்கள்.அவர்களை பற்றிய செய்திகளும் அதற்க்கு காரணம்.உண்மையாகவே தேவைக்கு பிச்சை எடுப்போர் யாரென்றே தெரியவில்லை.புதிதாக திருநங்கைகள் வேசத்தில் சிலர் பிச்சை எடுக்க புறப்பட்டிருக்கிறார்கள்.டிராப்பிக் சிக்னலில் இவர்கள் போன்றோர்தான் பிச்சை எடுக்கின்றார்கள்.

  • ஒவ்வொரு முறையும் எதற்காகவாவது காத்திருக்கும் போது இப்படித்தான் நான் எண்ணத்தை ஓட விடுவேன். என்ன நடக்கும் என எண்பது வகையில் யோசித்து விடும் என்னையே அப்படியே பார்த்தது போல இருந்தது. அருமைங்க.

  • அருமை அனைவரின் மனதிலும் எண்ணங்கள் ஒன்றே காசு விசயத்தில்

  • பார்க்காமல் கடந்து விடலாம், ஆனால் குற்ற உணர்ச்சியை எளிதில் கடக்க முடிவதில்லை…

  • //ஒவ்வொரு முறை பிச்சை இடும்போதும் அந்த நாணயம் ஒரு சிறு குற்ற உணர்வைத் தரும். ஏனோ பளிச்சென்று ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்துப் போடத் தோன்றியதே இல்லை.// நாணயவியல்- மனித மனதை புரிந்து கொள்ள முடிதாதது. குற்ற உணர்வு செயலில் மாற இயலாதது. செய்ய நினைத்தாலும் செய்ய இயலாதது. வாழ்க்கையின் இரு பக்கங்கள்

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!