பொலிக! பொலிக! 78

அது நள்ளிரவுப் பொழுது. மடத்தில் ராமானுஜரோடு தங்கியிருந்த சீடர்கள் அத்தனை பேரும் உறங்கியிருந்தார்கள். அவர் மட்டும்தான் விழித்திருந்தது. ஆனால் விழித்திருப்பது தெரியாமல் படுத்து, கண்மூடியே இருந்தார். மனத்துக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாசுரத்தின் ஒரு வரி, பிள்ளானுக்கு எப்படித் தெரிந்தது?

‘பிள்ளான், உள்ளே வா!’

அறைக்குள் வந்தவன் பணிவுடன் கைகூப்பி நிற்க, ‘எப்படிச் சொன்னாய்? எனக்கு உள்ளே ஓடுகிற பாசுரம் உனக்கெப்படித் தெரிந்தது?’

‘தெரியவில்லை சுவாமி. இந்தப் பொழுதில் உங்கள் மனத்தில் இதுதான் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று தற்செயலாகத் தோன்றியது. நான் சொன்னது சரியா?’

‘மிகவும் சரி. மாலிருஞ்சோலையில் கள்ளழகரைச் சேவித்துவிட்டுக் கிளம்பியதில் இருந்து அதே நினைவு. திருநகரிக்கு வந்து நம்மாழ்வாரை தியானிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் உள்ளுக்குள் இன்னும் திருமாலிருஞ்சோலைப் பாசுரம்தான் உருண்டுகொண்டிருக்கிறது.’

பிள்ளான் புன்னகை செய்தான். ‘எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமி. எப்படியோ உங்கள் மனம் உணர்ந்தவனாக இருக்கிறேன்.’

ராமானுஜர் அவனைப் பாசத்துடன் நோக்கினார். பெரிய திருமலை நம்பியின் மகன். இனி உங்கள் சொத்து இவன் என்று சொல்லி நம்பி ஒப்படைத்த கணத்தில் இருந்து உடையவருடன் கூடவே இருப்பவன். யார் யாரிடமெல்லாம் தாம் படிக்கச் சென்றோமோ அவர்களுடைய வாரிசுகளெல்லாம் தம்மிடம் பயில வந்ததில் ராமானுஜருக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. பெரிய நம்பியின் மகளும் மகனும் முதலில் வந்தார்கள். திருக்கோட்டியூர் நம்பி தமது மகனான தெற்காழ்வானை அனுப்பிவைத்தார். திருமாலையாண்டானின் மகன் பிறகு வந்தான். அரையருக்கு வாரிசு இல்லை. அவர் தமது தம்பியை அனுப்பிவைத்தார். பெரிய திருமலை நம்பி பிள்ளானைத் தந்தார். ஒரு ஞானத் தலைமுறையை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு தன்னைச் சேர்ந்திருப்பதை ராமானுஜர் விழிப்போடு அறிந்தார். பொறுப்பும் பொறுமையுமாக அவர்களுக்கெல்லாம் தாம் கற்ற அனைத்தையும் போதித்துக்கொண்டிருந்தார்.

‘அது எங்கள் கொடுப்பினை சுவாமி. உங்கள் நிழலில் வசிப்பது ஒரு பாதுகாப்புணர்வைத் தருகிறது. இது எனக்கு வேறெங்கும் கிட்டியதில்லை’ என்றான் பிள்ளான்.

‘பிள்ளான், நீ கவனமாகக் கற்கிறாய். தெளிவாகப் புரிந்துகொள்கிறாய். புரிந்ததைத் துல்லியமாக எடுத்துச் சொல்லவும் அறிந்தவனாக இருக்கிறாய்.  முதலியாண்டான், கூரத்தாழ்வானுக்குப் பிறகு மொழியில் ஆளுமை கொண்டவனாகவும் இருக்கிறாய். ஒன்று செய்கிறாயா?’

‘உத்தரவிடுங்கள் சுவாமி!’

‘நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஓர் உரை செய்ய வேண்டும் என்பது எனது ஆசாரியர் ஆளவந்தாரின் இறுதி விருப்பங்களுள் ஒன்று. இன்றுவரை அதற்குப் பொருத்தமான நபர் என்று ஒருவர் என் மனத்தில் தோன்றாமலே இருந்தது. இப்போது உன்னைப் பார்க்கும்போது நீ ஏன் அப்பொறுப்பை ஏற்றுச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறது.’

‘சுவாமி!’ பரவசத்தில் சட்டென்று விழுந்து வணங்கினான் பிள்ளான்.

‘இல்லை. நான் முடிவு செய்துவிட்டேன். நீதான் சரி. வேதசாரமான நம்மாழ்வாரின் வரிகளுக்குக் காலம் கடந்து நிற்கக்கூடிய ஓர் உரை அவசியம். உன் வாழ்நாள் பணியாக ஏற்று அதை நிறைவேற்று.’

‘உத்தரவு சுவாமி! இது அடியேன் செய்த பாக்கியம்.’

‘உன்னை நான் இனி திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்றே அழைப்பேன். உலகமும் அவ்வண்ணமே அழைக்கட்டும்!’

‘இப்படியொரு கௌரவமா! அடியேன் இதற்குப் பாத்திரமானவன்தானா?’

‘சந்தேகமில்லை பிள்ளான். குருகூர் சடகோபன் பொன்னடி நிழலில் வசிப்பவர்கள் நாம். நம் அனைவருக்கும் அவரது அருளும் ஆசியும் என்றும் உண்டு.’

மறுநாள் காலை சீடர்களுக்கு விவரம் தெரிந்தது. பிள்ளானைக் கட்டியணைத்துக் கொண்டாடினார்கள்.

‘வாருங்கள். ஆற்றுக்குக் குளிக்கப் போவோம். குளித்துவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும்’ என்றார் ராமானுஜர்.

சீடர்கள் புடைசூழ அவர் தாமிரவருணியை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளி எதிரே வந்தான். ராமானுஜரைச் சற்றே குழப்பமும் சந்தேகமும் கலந்த பார்வையில் பார்த்துக்கொண்டே இருந்தவன், சட்டென்று ஒரு கணத்தில் அடையாளம் கண்டுகொண்டு அருகே ஓடி வந்து, ‘சாமி, நீங்க உடையவர் தானே?’

‘ஆமப்பா!’

‘ஐயா கும்புடறேனுங்க. உங்கள பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். இப்பிடி எங்கூருக்கே வந்து தரிசனம் குடுப்பிங்கன்னு நினைக்கலிங்கய்யா. ஒரு நிமிசம் இருங்க…’ என்று பரபரத்தவன் எங்கோ பார்த்துக் குரல் கொடுத்தான். ‘டேய் சடகோபா! வகுளாபரணா! காரிமாறா! ஓடியாங்கடா… உடையவர் சாமி வந்திருக்காருடா நம்மூருக்கு!’

ராமானுஜர் வியந்து போனார். என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? இந்த சலவைத் தொழிலாளி யாரை இப்படி அழைக்கிறான்? சடகோபன். வகுளாபரணன். காரிமாறன். எல்லாமே நம்மாழ்வாரின் பெயர்கள். ஒருவரையே இப்படி மூன்று பேர்களில் அழைக்கிறானா அல்லது மூன்றும் வேறு வேறு நபர்களின் பெயர்களா?

‘ஐயா எம்புள்ளைங்கதாங்க.. அந்தா வரானுக பாருங்க!’

அவன் கைகாட்டிய திசையில் மூன்று சிறுவர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

‘டேய், சாமிய கும்புட்டுக்கங்கடா.. பெரிய மகான் இவரு. இப்ப புரியாது உங்களுக்கு. அப்பால இவரு யாரு, எப்படிப்பட்டவருன்னு சொல்லித்தாரேன்.’ என்றதும் மூன்று சிறுவர்களும் உடையவரின் பாதம் பணிந்து எழுந்து வணங்கினார்கள்.

‘அப்பனே, இவர்கள் மூவரும் உன் மகன்களா?’

‘ஆமா சாமி!’

‘மூன்று பேருக்கும் நம்மாழ்வாரின் திருநாமங்களையே வைத்திருக்கிறாயே அப்பா! நீ அவரை வாசித்திருக்கிறாயா?’

‘நாம படிக்காத தற்குறிங்க! ஆனா இந்தூருக் காத்துல திருவாய்மொழி கலந்திருக்குது பாத்திங்களா? அது மூச்சுக்காத்தா உள்ள போயிடுதே! அதான்.’

பிரமித்துவிட்டார் ராமானுஜர்.

வெகுநேரம் அவருக்குப் பேச்சே எழவில்லை. பிறகு நிதானத்துக்கு வந்ததும் பிள்ளானிடம் சொன்னார். ‘புரிகிறதா பிள்ளான்? நம்மாழ்வாரும் அவரது திருவாய்மொழியும் மூச்சுக் காற்றேபோல் உலகம் முழுதும் உள்ளோர் உள்ளத்தில் சென்று நிறைய வேண்டும். நீ எழுதப் போகிற உரை அதற்கு உதவவேண்டும்.’

ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரின் சன்னிதிக்குச் சென்று வெகுநேரம் உடையவர் கண்மூடி நின்றிருந்தார். அது புறப்பட்ட இடம். ஊற்றின் மையக் கண். காலமும் இடமும் கணப் பொழுது தடம் புரண்டு ஜாலம் காட்டுகிற பேரற்புதம். ராமானுஜரின் மனத்தில் மகாலஷ்மியுடன் இணைந்த விஷ்ணுவின் தோற்றம் ஒரு கணம் வந்து நின்றது. சட்டென்று அது மாறி, மகாலஷ்மித் தாயார் தனியே வந்து நின்றாள். அவள் இருந்த இடத்தில் நம்மாழ்வார் நின்றார். பிறகு நாதமுனி வந்தார். உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி என்று வரிசையாக ஆசாரியர்கள் அத்தனை பேரும் நினைவில் வந்து உதித்து நின்றார்கள்.

பணிவில் அவர் மனம் குவிந்தது. தன்னை நம்மாழ்வாரின் பாதங்களாக பாவித்துக் கனிந்தார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter