உறவே பயம்

பலகாலமாக எனக்கு உறவுக்காரர்களாக இருப்போரில் சிலர் கூடி வாட்சப்பில் ஒரு குழு ஆரம்பித்தார்கள். உறவுக்காரர்களிலேயே உத்தமனான ஒரு அயோக்கியன் என்னை அந்தக் குழுவில் சேர்த்துவிட்டான். இன்னொரு பரம அயோக்கியன் என் மனைவியையும் அதே குழுவில் சேர்த்துத் தொலைத்தான்.

மேற்படி வாட்சப் குழுவானது ஆரம்பத்தில் மிகவும் போரடித்தது. கூடி கும்மியடிக்கும் அத்தனை பிரகஸ்பதிகளும் தம்மை எம்பெருமானார் ராமானுஜரின் செகண்ட் எடிஷன் என்று காட்டிக்கொள்வதற்கு ரொம்ப மெனக்கெட்டு, படு பயங்கர பக்தி மேட்டர்களாகப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஏதோ ஒரு நல்ல நேரத்தில் குழுவில் இருந்த இளைய தலைமுறைப் பெண்கள் சற்றே சுவாரசியம் சேர்க்கத் தொடங்கினார்கள்.

ரசமான ஃபார்வர்ட் மெசேஜ்கள், ஆடியோ க்ளிப்பிங்குகள், நகைச்சுவைத் துணுக்குகள், டிபி மூலம் கோடிங் செய்யப்பட்ட ரகசியத் தகவல்கள் என்று குழு சுவாரசியமடையத் தொடங்கியது.

எனவே இதனை மேலும் ரசமாக்கலாமே? இன்னொரு நல்ல நாளில் குழு உறுப்பினரான ஆதிகாலத்து உறவுக்காரன் ஒருத்தன் ஓர் அறிவிப்பை வெளியிட்டான். நமது குடும்பத்தின் இளைய தலைமுறைக் குழந்தைகளைக் கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்ன?

மேற்படி நிகழ்ச்சியானது குடியரசு தினத்தன்று நடத்தப்படலாம் என்று முடிவானது. குடும்பத்தின் மூன்று மற்றும் நான்காம் தலைமுறைக் குழந்தைகள் ஒன்றிணைந்து பாரதி பாடல்களைப் பாடுவது. இந்நிகழ்ச்சியைக் குடும்பத்தின் அதிமூத்த உறுப்பினரின் முன்னிலையில் நிகழ்த்துவது. என்ன பிரமாதமான யோசனை!

சம்மந்தப்பட்ட பழங்காலத்து உறவுக்காரன் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக உள்ளவன். எனவே தனது பள்ளியின் குடியரசு தின விழாவோடு இதைச் சேர்த்து ரொம்ப அழகாக வடிவமைத்துக் கொடுத்தான்.

ஆயிற்று. திட்டம் தயார். எடுத்து நடத்த ஆட்கள் தயார். பாடுவதற்குக் குழந்தைகளும் தயார். பயிற்சி ஆரம்பிக்க வேண்டுமே?

வாரம் ஒருவர் வீட்டில் ஒரு மாலை வேளை அனைவரும் ஒன்றுகூடி பாடல் பயிற்சி அளிப்பது என்று முடிவானது. மூன்று மணிநேரப் பயிற்சி. பயிற்சிக்குப் பின் சுவையான உணவு.

பயிற்சியும் உணவும் ருசித்ததைவிட, பன்னெடுங்காலமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியே மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான உறவுக்காரர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்குவதற்கு இந்தச் சந்தர்ப்பம் பேருதவி செய்தது. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எனக்கு என் அப்பா – அம்மா இரு தரப்பு உறவுக்காரர்களின் மூன்றாம் நான்காம் தலைமுறைக் குழந்தைகளின் பெயர்கள்கூட அநேகமாகத் தெரியாதிருந்தது. அவரவர் உத்தியோகம், சொந்தக் கவலைகள், பிரத்தியேகப் பாடுகள் அவரவருக்கு. இதில் கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் பாட ஏது நேரம்?

அப்படியொரு நேரத்தை உருவாக்க இந்த வாட்சப் குழு உதவி செய்ததை மறக்க முடியாது.

நிற்க. விஷயம் அதுவல்ல. இந்தக் குழு இயங்கத் தொடங்கியபிறகுதான் குடும்பங்களுக்குள் பன்னெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் உள்நாட்டு அரசியல் யுத்தங்கள், சி.ஐ.ஏ. ரக ரகசியத் தாக்குதல்கள் போன்றவையும் தெரியத் தொடங்கின.

ஆனால் அதெல்லாம் நமக்கெதற்கு? நாம் புதிய தலைமுறை. நமக்குள் எந்த சண்டை சச்சரவுகளும் கிடையாது. துடைத்துப்போட்டுவிட்டு அடுத்தத் தலைமுறைக்கு உறவைக் கடத்திச் செல்வோம்.

இது விஷயத்தில் எங்கள் குடும்பத்துக்கு மருமகள்களாக வந்து சேர்ந்த – என் மனைவி உள்ளிட்ட அனைத்துப் பெண்களின் தீவிரம் உண்மையிலேயே பிரமிப்பளித்தது. வாழவந்த வரலட்சுமிகள் ஒன்று சேர்ந்து குழுவுக்குள் குழுவாக இன்னொரு மகளிரணியையும் உருவாக்குமளவுக்கு உறவு படு தீவிரமாக வளரத் தொடங்கியது.

ஆச்சா? நிகழ்ச்சியில் என் மகளும் பாடுவதென்று முடிவானது. எனவே பயிற்சிக்கு அவளை அழைத்துக்கொண்டு என் மனைவியும் போய்வரத் தொடங்கினாள். ஒரு வாரம் என் வீட்டிலேயே அந்தப் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினேன். வரலாறு காணாத விதமாக அன்று என் வீடு உறவுக்காரர்களால் நிரம்பி வழிந்தது. என் மனைவி அத்தனை சந்தோஷப்பட்டாள். சந்தேகமில்லை. உறவு சுகம்தான்.

குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் இறுதிப் பயிற்சி ஏற்பாடானது. அது அந்த உறவுக்காரத் தாளாளர் வீட்டிலேயே நடந்தது. அன்றைக்கு திருவல்லிக்கேணி பெருமாள் ஈக்காடுதாங்கல் வழியே சைதாப்பேட்டை வரை ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். எனவே பிராந்தியத்தில் வசிக்கும் பிற உறவுக்காரர்கள் சிலரும் [இவர்கள் குழுவில் இல்லாத உறவுக்காரர்கள்] பெருமாள் சேவிக்க அந்தப் பக்கம் வந்திருந்தார்கள்.

பயிற்சியின் நடுவே ஒரு பிரேக் விட்டுவிட்டு, கோயிலுக்குப் போய்வரலாம் என்று குழு உறவுக்காரர்கள் கிளம்பினார்கள். போனது, சேவித்தது, திரும்பியது – மொத்தமாக அரை மணி இருக்குமா?

மறுநாள் என் அம்மாவைப் பார்க்க ஓர் உறவினர் வந்திருந்தார். ‘நேத்து பெருமாள் சேவிக்கப் போயிருந்தேன் மாமி. அங்க பாத்தா உங்க மூத்த மாட்டுப் பொண்ணு அவ பொண்ணோட வந்திருக்கா. என்னடான்னு பாத்தா அவா, —- இவாளோட சேந்து எதோ கும்மியடிச்சிண்டிருக்கா. இதெல்லாம் நன்னாவா இருக்கு? எனக்குப் பாக்கவே பிடிக்கல. அப்படியே பத்திண்டு வந்துடுத்து. இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சி நடக்கறதா, தெரியாம நடக்கறதான்னே தெரியல. அவாள்ளாம் என்னிக்காவது உங்கள மதிச்சிருக்காளா? உங்காத்துக்கு வந்திருக்காளா? இருக்கியா செத்தியான்னு கேட்டிருக்காளா… உங்களுக்கே வேண்டாத சொந்தமெல்லாம் உங்க மூத்த மாட்டுப் பொண்ணுக்கு எதுக்குங்கறேன்?’

ஆ! பாலிடிக்ஸ்! அடுத்த சில மணி நேரம் தீவிரமாக யோசித்துப் பழைய தருணங்களை நினைவில் கொண்டுவரப் பார்த்தேன். யாருக்கும் யாருக்கும் எப்போது என்ன சண்டை வந்திருக்கிறது? என் அம்மா யார் கட்சியில் அப்போது இருந்தாள்? எதிர்க்கட்சியில் யார் யார்? எந்தெந்தத் தருணங்களில் உறவுக் கூட்டணிகள் மாறியிருக்கின்றன? அவற்றின் நோக்கமும் பின்புலமும் எத்தகையது? கடைசியாக யார் யார் என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்கள்? வந்தபோது பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததா? அப்போது என் மனைவி என்ன செய்துகொண்டிருந்தாள்? அவளுக்கும் என் அம்மாவுக்கும் அன்றைய தினத்து உறவுநிலை எப்படி இருந்தது?

அபத்தமே என்றாலும் ஃபேமிலி பாலிடிக்ஸை யோசித்தால் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் மேற்படி குழுவில் இல்லாத உறவுக்காரர் வந்து கொளுத்திப் போட்டுச் சென்றதை
அம்மா நேரடியாக என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தெரியப்படுத்த நினைத்ததை வேறு ரூட்டில் தெரியப்படுத்திவிட்டாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. மேற்படி குழு விரோத உறவுக்காரருக்கு ஒரு ரிசர்வ் தொகுதி ஒதுக்கியாவது குழுவில் சேர்த்துவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

என்னவானாலும் எதிர்க்கட்சிக்காரர் என்றொருவர் இருந்தால் சபை இன்னும் களைகட்டுமல்லவா?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter