அருள் கூடிப் பொங்கிப் பொழிதல்

அவரை நினைக்கும்தோறும் அப்பா என்றுதான் மனத்துக்குள் அழைப்பேன். ஏன் என்று தெரியாது. தோற்றத்தில் என் அப்பா அவரைப் போன்றவரில்லை. வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. என் அப்பாவுக்கு சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றித் தெரிந்திருந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் எனக்கு அப்பா உறவுதான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதனை எழுத அமரும்போது காரணம் யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பாவைப் போல என் சிறுமைகளைச் சகித்துக்கொண்டவர்கள் யாருமில்லை. நிபந்தனையின்றி என்னை நேசித்தவர்கள் யாருமில்லை. சுவாமிகள் அப்படித்தான். எந்தத் தகுதியும் அற்றவன் என்றாலும் அழைத்தால் உடனே எப்படியாவது உதவிவிடுவார். பக்தனாக இருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. சும்மா கூப்பிட்டால் போதும். அவர் பெய்யெனப் பெய்யும் இனம்.

சேஷாத்ரி சுவாமிகளைக் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக நண்பர் சத்யப்பிரியன் சொன்னபோது எனக்கு உண்மையில் திகைப்புதான் ஏற்பட்டது. ஏனென்றால் சிலவற்றை நாம் தீர்மானம் செய்து செய்ய முடியாது. என்ன முட்டி மோதினாலும் மனித சக்திக்கு உட்படாத சில உண்டு. சத்யப்பிரியன் தேர்ந்த எழுத்தாளர். அவரால் கவனமாகத் தகவல்களைத் திரட்டவும் தொகுக்கவும் முடியும். வாசக மனத்தின் கதவுகளை அநாயாசமாகத் திறந்து உள்ளே போகும் கலை அறிந்தவர். உட்கார்ந்தால் ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்துவிடக் கூடியவர்தான். ஆனால் அதெல்லாம் மற்றவற்றில் முடியும். இம்மாதிரியான பணிகளில் அல்ல. ஒரே ஒரு எளிய உதாரணத்தைச் சுட்டினால் நான் சொல்ல வருவது புரியும். சுவாமிகளை நான் அப்பா என்று சொன்னேன். இன்றுவரை அவரைக் குறித்த ஒரு புத்தகம் எழுதும் வக்கு எனக்கு வாய்த்ததில்லை. அப்படி ஒரு எண்ணம்கூட வரவில்லை. முடியாது என்பதோ, தெரியாது என்பதோ, விரும்பாதது என்பதோ அல்ல. எனக்கு அந்த அருள் கூடவில்லை. அவ்வளவுதான். சத்யப் பிரியனுக்கு அது வாய்த்திருக்கிறது. அவன் தாள் வணங்கவும் அவனருள் வேண்டும் என்பதன் நீட்சியாகவே இதனைக் கொள்ளலாம்.

நிற்க. ஒரு சித்தர், ஒரு மகான், ஒரு ஞானியிடம் இருந்து நாம் பெறக்கூடியதென்ன?

என்னைக் கேட்டால் ஆசியைத் தாண்டி வேறெதுவும் இல்லை. அவர்கள் வாழ்வில் இருந்து நாம் பயில முடியுமா என்றால் முடியாது. அவர்கள் போதித்தவற்றைப் பின்பற்ற முடியுமா என்றால் முடியாது. அவர்கள் இருந்து சென்றதன் நோக்கத்தைக்கூட நம்மால் உணர இயலாது. மனித குலத்தினைப் போன்றதொரு மொண்ணையான படைப்பு வேறில்லை. நமது சிந்தனை எல்லைக்கு உட்பட்டவற்றை மட்டும்தான் நாம் சிந்திக்கிறோம். பேசுகிறோம். நமக்குப் புரியாதவற்றை அர்த்தமற்றது என்று எளிதில் ஒதுக்கிவிடுகிறோம். கண்ணுக்குத் தெரியாதவரை கடவுள். தென்பட்டுவிட்டால் அறிவியல். எவ்வளவு எளிமையான மன அமைப்பு! பல சமயம் எண்ணிக்கொள்வேன். சிந்திக்கத் தெரியாத மிருகமாக ஒரு நாளேனும் இருந்து பார்க்கலாம் என்று. குறைந்தபட்சம் தவறாகச் சிந்திக்கும் அவலமாவது நேராதிருக்கும்.

புலம்பி என்ன பயன்? இந்த நூலில் ஓரிடத்தில் இது வருகிறது:

‘இந்த மலையை நீ பார்த்திருக்கிறாயா?’

‘ஆம். அது தோன்றிய காலத்தில் இருந்தே.’

இந்த ஒரு வரியைப் புரிந்துகொள்ள ஒரு பிறவி போதாது. எத்தனைப் பிறவிகள் எடுத்தாலுமே அனுக்கிரகம் இல்லாமல் இது புரிய சாத்தியமில்லை. சேஷாத்ரி சுவாமி இதனால்தான் தன் வாழ்நாள் முழுதும் பெரிதாகப் பேசியதே இல்லை. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று சொல்லப்படுபவையுமேகூட எனக்குப் பெரிய விஷயங்களாகத் தோன்றவில்லை. ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து நான்கு தோசைகளைப் பிய்த்துப் போட்டுவிட்டுப் போவார்; பின்னாலேயே நாநூறு இட்லி தோசைகளுக்கு ஆர்டர் வரும் என்பதெல்லாம் படிக்கும்போது திகைப்பை அளிக்கலாம். ஆனால் அவர் செய்ததன் காரணம் அதுவாக, அது மட்டுமாகவா இருக்கும்? எறும்புகள் ஏறிக் கடந்து செல்லத் தனது தேகத்தை அவர் அளித்தார் என்று படிக்கும்போது நம் மனத்துக்குள் நம்மை நாம் எறும்பாகக் காண இயலாது போனால் இந்தப் புத்தகம் படித்தும் பலனில்லை என்றே பொருள்.

மனித குலத்தின் மாபெரும் பிரச்னை, தத்துவங்களின் பிடியில் சிக்குண்டு உழல்வது. ஒரு புறம் லௌகீகம். அது இருக்கவே இருக்கிறது. அது தரும் சிக்கல்களும் மீளாத் துயரும். மறுபுறம் இந்தத் தத்துவங்கள் படுத்தும் பாடு. சேஷாத்ரி சுவாமிகளைப் போன்ற சித்தர்கள் இந்த இரண்டின் கோரப் பிடியில் இருந்தும் மனித குலம் விடுபட வழி தேடியவர்கள். குப்பைகளை மூட்டையாகக் கட்டித் தனது தோளில் ஏற்றிக்கொண்டு நம்மை சுதந்தரமாகக் கைவீசி நடந்து செல்ல வழி செய்து தருபவர்கள். மூளையைக் கொண்டு முறுக்குப் பிழியவே வேண்டாம். எளிய வழி. நம்மை ஒருவன் கண்காணிக்கிறான். அந்த நினைவின் அடித்தளத்தில் நமது வாழ்வை அமைத்துக்கொண்டுவிட்டால் போதும். பிசிறுகள் இல்லாமல் இராது. பிழைகளை நாம் அவசியம் செய்வோம். என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் நாம் புருஷோத்தமனாகிவிட முடியாது. நாம் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றுதான். அவனுக்கு நெருக்கமான இவர்களைப் பிடித்துக்கொண்டு விடுவது. சொன்னேனே. பக்திகூட அவசியமில்லை. பொறுப்பைத் தூக்கித் தலையில் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருந்துவிடலாம். சேஷாத்ரி சுவாமிகளைப் போன்ற தெய்வ புருஷர்கள் நம்மைத் தாங்கிப் பிடிக்கவே அவதரித்தவர்கள். தெய்வம் தன்னால் நேரில் வர இயலாத தருணங்களில் தாய் தந்தையரை அனுப்பி வைக்கும் என்று சொல்லக் கேட்டிருப்போம். சுவாமிகள் இந்த மண்ணின் தந்தையருள் ஒருவர்.

சத்தியப்பிரியனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இதைவிட அழகாக இந்த வாழ்க்கையை இன்னொருவர் எழுதிவிட முடியாது. அருள்கூடிப் பொங்கிப் பொழிந்திருக்கிறது அவருக்கு. பெரிய கொடுப்பினை. இதனை எழுதியதும் வாசிப்பதும்.

(சத்யப்பிரியன் எழுதிய ‘பொற்கை சுவாமி’ நூலுக்காக எழுதிய முன்னுரை)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!