ஒரு நாள், ஒரு பண்டிகை

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

ஓர் இறை நம்பிக்கையாளனாக, செயல்கள் அனைத்தையும் என்னால் அறிய முடியாத ஒரு பெரும் சக்தி கண்காணித்துக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். தெரியாமல் எந்தத் தவறும் செய்வதில்லை. தெரிந்து செய்யும் தருணங்கள் வராதிருந்ததில்லை. தவறிழைக்கும்போதும் மனத்துக்குள் என் கடவுளுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். மன்னித்துவிடு என்று கேளாமல் இருப்பதில்லை. அதுவும் மன்னிக்காதிருப்பதில்லை என்ற நம்பிக்கையே இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்க வைத்திருக்கிறது. என்ன இப்போது? நான் இப்படித்தான். வேறெப்படியும் இருக்க முடிவதில்லை.

ஆனால் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன். வயது காரணமா, அனுபவம் காரணமா என்று சரியாகத் தெரியவில்லை. இறை நம்பிக்கை இறுக்கம் கொள்ளக் கொள்ள, சடங்கு சம்பிரதாயங்களின் மீது அவநம்பிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவை மதத்திலிருந்து தோன்றியவை என்பது காரணமாக இருக்கலாம். என் கடவுளுக்கு மதமில்லாததால் எனக்கும் அது இல்லை என்று தெளிவதில் சிக்கல் இல்லை. ஆனால் கோயில் தூண்களில் ஆயிரமாண்டுகளாகத் தேய்த்த புளியோதரைப் பிசுக்கினைப் போலப் பிறந்தது முதல் சிலதெல்லாம் ஒட்டிக்கொண்டு உடன் வந்திருக்கின்றன. என்ன தேய்த்தாலும் முற்றிலும் போகாது. வேண்டுமானால் கொஞ்சம் தேய்த்துவிட்டுச் சுண்ணாம்பு அடிக்கலாம். ஆனால் பெருமாள் கோயில் தூண்களுக்குச் சுண்ணாம்புதான் தாற்காலிகமே தவிர புளியோதரைப் பிசுக்கல்ல.

பெரும்பாலான பண்டிகைகளை இப்போதெல்லாம் வெறும் சடங்காகவே பார்க்க முடிகிறது. எதிலும் அர்த்தமில்லை என்று எப்போதும் தோன்றுகிறது. ஆனாலும் வீட்டாருக்காக எல்லாம் செய்கிறேன். எதையும் மறுப்பதில்லை, விமரிசனம் செய்வதில்லை, எதிர்க்கருத்தாக எதையும் தெரிவிப்பதில்லை. என் தந்தைக்கு நம்பிக்கை உண்டு என்கிற ஒரே காரணத்துக்காக ஆண்டு தோறும் அவருக்குத் திவசம் செய்வது போல.

எண்ணிப் பார்த்தால், என் சொந்த விருப்பத்தின்பேரில் நானே முனைந்து கொண்டாடும் பண்டிகை சரஸ்வதி பூஜைதான். சடங்காக அல்லாமல் இது ஒரு கடமையாக மனத்தில் தங்கியிருக்கிறது. இத்தனைக்கும் சிறு வயதில் இது சும்மா வந்து போகும் பண்டிகைதானே தவிர, வீட்டில் பெரிய கொண்டாட்டங்கள் இருந்த நினைவில்லை. கூடுதலாக ஒரு வடை பாயசம் இருந்தால் கொண்டாட்டம்தான் என்றால், அந்த விதத்தில் சரியே. ஆனால் நான் குறிப்பிடுவது அதுவல்ல.

பண்டிகைக் கொண்டாட்டம் என்பது அடி மனத்தில் ஒரு புத்தம்புதிய சுடர் போல உதிக்க வேண்டும். மெல்ல மெல்ல அது உருப் பெருத்து, சிந்தனை மொத்தத்தையும் நிறைக்க வேண்டும். ஏற்பாடுகளைப் பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க வேண்டும். பண்டிகை நாள் விடியும்போதே குதூகலமும் பரபரப்பும் மிக வேண்டும். சொல்லித் தரப்பட்ட சடங்குகள் அனைத்தையும் ஆர்வம் மேலோங்கச் செய்து நிறைக்க வேண்டும். பிறகு விருந்து, ஓய்வு, இன்ன பிற.

தீபாவளி உள்பட எந்தப் பண்டிகையிலும் எனக்கு இந்தளவு ஈடுபாடு வருவதில்லை. பண்டிகை வருகிறது, வீடு தயாராகிறது, நானும் இருக்கிறேன், அவ்வளவுதான்.

ஒருவேளை சரஸ்வதி அறிவுடன் நேரடித் தொடர்புடைய தெய்வமாக வடிவமைக்கப்பட்டது காரணமாயிருக்கலாம். அது இன்றுவரை முக்கியமாகத்தான் இருக்கிறது. ஆர்வத்துடன் அனைத்தையும் செய்கிறேன்.

நேற்று கடைக்குச் சென்று பூ வாங்கி வந்தேன். இரண்டு ரக ரோஜாக்கள். சாமந்தி. மாலை கட்டத் தனி, பூஜைக்குத் தனி. இன்று காலை பண்டிகைச் சமையலுக்கு உகந்த காய்கறிகள் வாங்கி வந்தேன். மாவிலை பறித்து வந்தேன். குளித்துத் தயாராகி, ராகு காலம் முடியும்வரை காத்திருந்து பூஜைக்கு ஆயத்தமானேன். புத்தகம், நோட்டு, பேனா, ஐபேட், அதன் பென்சில் என்று கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து பூஜையில் வைத்தேன். ஒவ்வொரு சரஸ்வதி பூஜையன்றும் கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியைப் பாராயணம் செய்ய வேண்டும் என்று அப்பா இருந்தபோது எப்போதோ சொன்ன நினைவு இருக்கிறது. ஆனால் அவர் முழுக்கப் படித்த நினைவில்லை. ஒன்றிரண்டு பாக்களை மட்டும் சொல்லுவார்.

நான் ஒவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் சரஸ்வதி அந்தாதியை முழுக்கப் படிக்கிறேன். ஒவ்வொரு நான்கு வரிகள் முடியும்போதும் பூவிட்டு அர்ச்சனை செய்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் எழுத வராமல் போய்விட்டால் அதன்பிறகு நான் ஒன்றுமில்லை. ஒருவேளை அந்த அச்சத்தின் விளைவாகவும் இருக்கலாம். மனிதனின் சுயநலம் கடவுள் வரை நீளக்கூடியதுதான். சந்தேகமேயில்லை.

நம்பிக்கைகளுக்கும் அவநம்பிக்கைகளுக்கும் இடையில் ஊஞ்சலாடியே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இதையும் அந்தப் பெருந்தெய்வத்தின் விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்று பூஜை முடிந்ததும் என் மகளிடம் சொன்னேன். நீ என்ன படித்து, எவ்வளவு பெரிய ஆளாகி, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சரஸ்வதி பூஜையை மட்டும் விடாதே. கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியைப் படிக்காதிருக்காதே.

இது நவராத்திரி நேரம். மனைவிக்கும் மகளுக்கும் புதுத் துணி ஏதாவது வாங்கித் தரவேண்டும் என்று கூடத் தோன்றாமல் பிசாசு போல நாளும் பொழுதும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டுமே இருந்திருக்கிறேன். அவர்களும் கேட்கவில்லை. சண்டை போடவில்லை. இவன் இப்படித்தான் என்று எப்போதோ சமாதானமடைந்திருக்க வேண்டும்.

ஆனால் நான் விரும்பிக் கொண்டாடும் ஒரே பண்டிகை என்பதால் என் மனைவி எனக்குப் புத்தாடை வாங்கி வைத்திருந்தாள். அணிந்துகொண்டபோது கொஞ்சம் வெட்கமும் நிறைய குற்ற உணர்வும் தோன்றின. சொன்னேனே. இதையும் அந்தப் பெருந்தெய்வத்தின் விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter