கோவிந்தசாமியைச் சாகரிகா வெறுத்தாலும் அவள் மீது தீராக் காதலுடன் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவள் மூலம் தனக்குக் குழந்தை வேண்டுமென எண்ணுகிறான். தன் சாட்சியாக ஒரு பிம்பம் வேண்டுமென எண்ணுகிறான். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்தும் அவனால் அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. அவன் எண்ணும் எதுவும் நிறைவேறாது என்பதை ஷில்பா கூறினாலும் தன் முடிவை அவன் மாற்றிக்கொள்ள எண்ணவில்லை. இதற்கு முந்தைய அத்தியாயங்களில் ஷில்பாவை பற்றி எண்ணியது வேறு. ஆனால், இந்த அத்தியாயத்தில் கோவிந்தசாமிக்கு உதவி புரியும் கதாப்பாத்திரமாக வலம் வருகிறார் ஷில்பா.
சாகரிகாவின் பதவிக்கு உலை வைக்கும் விதமாக வெண்பலகையில் வரும் செய்திகளை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. முழுமை இல்லாத செய்தியை முழுமையாக்கியவர் யார் எனக் குழம்புகிறாள். ஒரு செய்தியைச் தொடர்ந்து செவி வழியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவை உண்மை என மனம் நம்பத் தொடங்கி விடும். அதுபோல்தான் செம்மொழிபிரியா, பதினாறாம் நரகேசரி இருவரின் பதிவுகள் சாகரிகாவைக் கதிகலங்கச் செய்கிறது.
எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள் இந்த அத்தியாயத்தில் அனைத்துக் கதாப்பாத்திரங்களையும் ஒரு சேர நம் கண் முன் கொண்டு வந்துள்ளார்.